முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா?

நல்ல சினிமா இயக்குனராக அறியப்பட்ட செந்தமிழன் சீமான், பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்த கண்ணியமான இளைஞரானதால் தமிழர்களின் அடக்குமுறையை சகிக்க முடியாமல். தன்சுயமான சொகுசு வாழ்வைத்துறந்து, ஏழை எளியவர்களுக்கு குரல் கொடுக்கும். “நாம்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளராகவும் இருந்து வருகிறார்.

நேற்றய முந்தினம் சீமான் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சீமான் கைது செய்யப்படுவதற்கான காரணமாக அமைந்தது. தமிழகமீனவரான செல்லப்பன் கடந்தவாரம் கடலில்வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதை ஆட்சேபித்து. ஆற்பாட்டம் நடத்தி உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் சுட்டும், வெட்டியும், அடித்தும், கொல்லப்பட்டுவருவதை மத்திய, மானில, அரசுகள் கவனத்தில் கொள்ளாததால் சீமானின் நாம்தமிழர் இயக்கம் வீதியிலிறங்கி நியாயம் கேட்டுப்போராடியிருக்கிறது.

சீமானின் கைதுக்கு காட்டப்பட்டிருக்கும் காரணங்கள். இறையாண்மையை மீறிச்செயற்பட்டதாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசினார் என்று சொல்லப்படுகிறது.

தமிழகமீனவர்கள் 600, பேர், சென்றவாரம்வரை கொல்லப்பட்டதற்கு. 2020 ல் தான் ஒரு வல்லரசு நாடு என கூறும், பாரத நாட்டின் மத்திய மானில அரசுகள் நடவடிக்கை எடுத்து கொலைகளை தடுக்க சிறுமுயற்சிகூட செய்யவில்லை. இலங்கை இராணுவத்தை காப்பாற்றுவதற்காக தமிழன் கொலைகளை கணக்கிலெடுக்காமலேயே தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் வந்திருக்கின்றன.

அரசுகள் சரியான தருணத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மிகச்சிறிய கட்சியான நாம்தமிழர் இயக்கம் வீதியில் இறங்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இயலாமை, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இந்தக்கைது நடந்திருப்பதாக இதயமுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்,

இறையாண்மையை மீறி சீமான் பேசியதாக குற்றம் சுமத்தும் முதல்வர், எவ்வளவு இழிதரமான வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் மேல் பலமுறை பிரயோகித்திருக்கிறார்.

சென்றவருடம் 2009 ல் வட இந்திய தொலைக்காட்சியான N TV.யின் ஆங்கிலச்சனல் ஒன்று, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன். சம்பந்தமான கேள்வியொன்று கேட்டபோது. தனது மகள் கனிமொழியை அருகில் வைத்துக்கொண்டு, pirabakaran is my friend ,he is not terrorist. என ஆங்கிலத்தில் பதிலளித்தார், அந்தக்கூற்று இறையாண்மையை மீறியதாக அமையாதா. மறு நாள் சுதாகரித்து தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை N TV, தி மு க வுக்கு எதிரானது, செய்தியை திரித்து வெளியிட்டுவிட்டனர் என தன்னிலை விளக்கமும் கலைஞர் தொலைக்காட்சி மூலம் தந்திருந்தார். அரசுக்கட்டில் இருந்தால் எதுவும்பேசலாம் என்றுதானே பொருள்.

இவை அரசியலில் சகசமாக இருந்தாலும். தந்திரசாலியான முதல்வர் தனதும், தனதுவாரிசுகளின் இருப்புக்கும். பங்கம் வந்துவிடக்கூடாதென்பதற்காக. மீனவர்களின் படுகொலைகள் பற்றி மத்திய அரசிடம் எந்த நெருக்கடியையும் கொடுத்திருக்கவில்லை.பதவிகளுக்காக மத்திய அரசுக்குதுணை போய்க்கொண்டே இருக்கிறார், இந்த மோசமான பலவீனம்தானே சீமான் போன்றவர்களை வீதிக்கு கொண்டு வரக்காரணமாகியிருந்தது.

அரசின் கவலையீனங்கள்தானே இவை எல்லாவற்றிற்கும் ஊற்றுவாய், நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு,

சீனிமாவில் நல்லவருமானமும் புகழும் சந்தோசமும் உள்ள வாழ்க்கையைத்துறந்து, இனமானத்திற்காக துடிப்புடன் தமிழர்களுக்காக சேவைசெய்யும் சீமான், கடலில் கொல்லப்பட்டவர் அப்பாவி ஏழைத்தமிழன் என்பதால், தொடரும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் படுகொலைகளை சகிக்க முடியாமல், உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இவையனைத்தையும் அறிந்தும் தமிழ்நாட்டின் பொது அமைப்புக்களும், சீமான் சார்ந்திருக்கும் பலமிக்க சினிமா உலகமும், மெளனமாக இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். இன உணர்வுடன் தட்டிக்கேட்கக்கூடிய தகுதியிலிருக்கும், பலமிக்க மூத்த சினிமா தமிழ் மைந்தர்களான பாரதிராஜா,
சகோதரர் மணிவண்ணன், செல்வமணி, சத்தியராஜ், இளைஞர் சூர்யா, போன்றவர்கள் தொடர்ந்தும் மெளனமாகிப்போனால் அது தமிழனின் இயலாமையாகவே கவலை கொள்ளவைக்கிறது,

இங்கு முதல்வர் கருணாநிதியை எவரும் எதிர்க்க வேண்டுமென்பதில்லை, நியாயமாக அப்பாவித்தமிழனின் படுகொலைக்கு கொதித்த சீமானின் கைதை கண்டித்து பக்கத்துணையாக குரல் கொடுக்கத்தவறிவிட்டனர் என்பதுதான் உறுத்துகிறது,

முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா?

- கனகதரன்

Comments