காலம் எங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை!

கடந்த சில வாரங்களாக உலகப் பந்தைப் பரபரப்பாக கைத்திருந்த உலகக் கிண்ணத்திற்கான கால் பந்தாட்டப் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. ஜெர்மனியில் உள்ள ஒபர்ஹோசன் நீரியல் பூங்காவில் உள்ள ‘போல்’ என்ற ஒக்டோபஸ் கணவாயின் சோதிடக் கணிப்பின்படியே இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான கால் பந்துப் போட்டி ஆரம்பித்தது முதல் எந்த அணி வெல்லும் என்பதை இந்த ஒக்டோபஸ் கணவாய் ஒவ்வொரு தடவையும் கணித்துத் தெரிவித்து வந்தது. போட்டியிடும் இரு அணிகளதும் நாட்டுக் கொடி பதிக்கப்பட்ட பெட்டிகளில் அந்தக் கணவாய்க்குப் பிடித்த உணவுகளை இடுவார்கள். அந்த சோதிடக் கணவாயோ, வெல்லும் அணியின் கொடி பதிக்கப்பட்ட பெட்டியில் போய் உட்கார்ந்து கொள்ளும். அன்றைய போட்டி முடிவும் அதுவாகவே இருக்கும்.

இறுதிப் போட்டி வரை அதன் அத்தனை கணிப்பும் ஒரு தடவை கூடத் தவறியது இல்லை என்ற ஆச்சரியத்தில் உலகம் உறைந்து போயுள்ளது. உலகக் கிண்ணத்திற்கான கால் பந்துப் போட்டி முடிவடைந்து, ஸ்பெயின் நாடு வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட நிலையில், இப்போது எதற்காக இந்தக் கணவாய்க் கதை என்று கேட்கிறீர்களா? அந்தக் கதை இப்போதும் தொடர்கிறது என்பதுதான் நம்ப முடியாத புதிய செய்தி.

சோதிடத்தை அதிகம் நம்புபவர்கள் நம்மவர்கள். அதிலும் போட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள் சிங்கள அரசியல் தலைவர்கள். கேளை சோதிடத்திலும், திருப்பதி வெங்கடஜலாதிபதியிடமும் நம்பிக்கை வைத்திருந்த ராஜபக்ஷ சகோதரர்களது கவனம் தற்போது இந்த சோதிடக் கணவாய்மீது திரும்பியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது இன அழிப்புப் போரை நடாத்தி முடித்த திமிருடன், தற்போது ஐ.நா.வுடன் மோத ஆரம்பித்திருக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர் விமல் வீரவன்சவை ஏவிவிட்டு ஒரு முற்றுகைப் போரை நடாத்தினார்கள். சிறிலங்காவின் தலைநகர் கொழுப்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் விமல் வீரவன்ச குழுவினரால் சுற்றி வழைக்கப்பட்டு, பணியாளர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். அங்கே அவர்கள் முன் வைத்த கோரிக்கை ‘இலங்கையில் நடைபெற்ற போரின் போது மனிதாபிமான விதி முறைகள் மீறப்பட்டனவா என்பதை அறிந்து ஆலோசனை தெரிவிப்பதற்காக ஐ.நா. செயலர் பான் கி மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவை கலைக்க வேண்டும்’ என்பதே. அதை ஐ.நா. மன்றம் ஏற்க மறுத்ததால், விமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, அது பல தரப்புக் கண்டனங்களை எதிர் நோக்கிய காரணத்தால், அவரை ஏவிவிட்ட ராஜபக்ஷ சகோதரர்களே பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்கள்.

இருந்தாலும், ஐ.நா.வுடனான சிறிலங்காவின் மோதல் தொடர்கிறது. ஐ.நா.வுடன் ‘நீயா? நானா?’ போட்டியில் இறங்கியுள்ள சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதற்கு அதன் நேச நாடுகள் பலவும் தற்போது பின்னடிக்க ஆரம்பித்துள்ளன. ஏதோ ஒரு நெருக்குதல் நிலையை உருவாக்கி ஐ.நா. அமைத்துள்ள ஆலோசனைக் குழுவைக் கலைக்க முடியாத நிலை ஏற்படுமானால், ராஜபக்ஷ சகோதரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. இதிலிருந்து தப்ப முடியுமா? என்பதை சோதிடக் கணவாயிடம் பெட்டி போட்டுத் தெரிந்து கொள்ள ராஜபக்ஷ சகோதரர்களின் குழு ஒன்று ஜெர்மன் நாட்டிற்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

தமிழீழ மக்களை உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் பாவித்துக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், அதில் தப்பிப் பிழைத்த தமிழர்களை விலங்குகள் பொல் பட்டிகளில் அடைத்துக் கொடூரங்கள் புரிந்து, அதனை தன் இனத்தின் வெற்றியாகக் கொண்டாடிய ராஜபக்ஷ சகோதரர்கள், அந்த வெற்றி மமதையுடன் மேற்குலகுடனும், ஐ.நா.வுடனும் மோதுவதற்குத் தயாராகிவிட்டார்கள்.

அவர்களது புதிய போர்க் களத்திற்கும் பெரும்பான்மைச் சிங்கள இனம் பேராதரவு வழங்கி, அதற்கு ஆதரவான போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர். ஐ.நா.வின் விசாரணையை அனுமதிக்கப் போவதில்லை என்று சிங்கள எதிர்க் கட்சிகளும் வழக்கம் போலவே தமிழினத்திற்கு எதிராக அணி திரண்டுள்ளன.

ஆனாலும், நாம் எதையுமே கண்டு கொள்ளாதவர்களாக வாழ்வினைத் தொடர முற்படுகின்றோம். அனைத்தையும் இழந்து, அவமானப்பட்டுக் கூனிக் குறுகிப்போயுள்ள ஈழத் தமிழர்களுக்கான போர் ஆயுதமாக சிங்கள தேசத்திற்கு எதிரான ‘போர்க் குற்ற விசாரணைகள்’ எம் கைகளில் கொடுக்கப்பட்டுள்ள போதும், அதைக் கீழே வைத்துவிட்டு நாம் திசை மாறிப் பயணிக்க முற்படுகின்றோம்.

இப்போதெல்லாம், தமிழ் அமைப்புக்களால் நடாத்தப்படும் சிங்கள இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் நாம் பங்குபற்றுவது குறைந்துவிட்டது. இத்தனை கொடூரங்களும் நிகழ்த்தி முடித்த சிங்கள தேசத்தின் விமானங்களில் ஏறி, விடுமுறைப் பயணங்களை மேற்கொள்கின்றோம். சிங்களத்தின் இறக்குமதிப் பொருட்களை ஐரோப்பியர் நிராகரித்தாலும், நாம் வெட்கப்படாமல் வாங்கிச் சுவைக்கின்றோம்.

காலம் எங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. சந்தர்ப்பங்கள் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டப் போவதில்லை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் உலகத்தின் பல இனங்களும் காலத்தையும், சந்தர்ப்பங்களையும் தவறவிடாதபடியால் தங்களுக்கான தேசத்தையும், தேசிய உரிமைகளையும் காப்பாற்றி வைத்துள்ளார்கள். கொடூரமான இனவாத இனமான சிங்களர் கூடத் தமக்கான நாட்டைத் தமக்காக்கிக் கொண்டதுடன், எமக்கான நாட்டையும் கையகப்படுத்தி எம்மை அழித்து வருகின்றனர்.

ஆனாலும், நாம் எதை எண்ணியும் வெட்கப்படாதவர்களாக, எமக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சிறிய வாய்ப்புக்காக, எம் எதிர்காலச் சந்ததிக்கான ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் தேசியக் கடமையிலிருந்து தவறிச் செல்கின்றோம். நாம் இதிலிருந்து மீளவேண்டும். காலம் எமக்குக் கையளித்துள்ள தேசியக் கடமையை நிறைவேற்றும் பணியில் ஒன்றிணைய வேண்டும். எம் தேசத்தின் விடிவுக்காய்த் தம் உயிர்களைத் தானம் கொடுத்துவிட்டுக் கல்லறைகளும் அழிக்கப்பட்ட நிலையில் காத்திருக்கும் எங்கள் மாவீரச் செல்வங்களின் கனவுகளைக் கையேற்க வேண்டும்.

அதை விடவும், எம்மைக் கொன்ற, எம்மை எரித்த, எம்மைப் புதைத்த போர்க் குற்றவாளிகள் ராஜபக்ஷ சகோதரர்கள் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை இறுதிக் கணம்வரை எமக்காகக் களமாடிய அந்த வீர மறவர்கள், அவர்களைத் தாங்கி நின்ற எம் மக்கள் மீதான உறுதியாகக் கொண்டு நாம் களத்தில் போராட வேண்டும்.

- ஈழநாடு

Comments