தீவிரமடைந்துவரும் தென்னாசியா பிராந்திய பூகோள அரசியல் நெருக்கடிகள்

அரசியல் யாப்பு மாற்றங்கள், அனைத்துக்கட்சி குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையுடனான மோதல்கள், மேற்குலகத்தின் அழுத்தங்கள் என சிறீலங்கா அரசியலில் அதிக சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட வன்முறைகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரச அமைச்சர் விமல் வீரவன்சா கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பின்னனியில் சிறீலங்காவுக்கு ஆதரவான நாடுகளின் இராஜதந்திர நகர்வுகள் உள்ளதை மேற்குலகமும், ஐ.நாவும் துல்லியமாக அறிந்ததை தொடர்ந்து அவை எந்த விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக முன்னர் மூவர் கொண்ட அணியாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவிற்கு மேலதிகமாக 8 அங்கத்தவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சேர்ந்த ஜசிகா நூர்வேத் தொடர்பில் சிறிலங்கா அரசு தனது எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள நிலையில், ஐ.நாவின் ஆலோசனைக்குழு கடந்த 20 ஆம் நாள் தனது முதலாவது கூட்டத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த குழுவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்த மூத்த அதிகாரியான றிச்சார்ட் பெனற் என்பவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியமித்துள்ளார். பெனற் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவருவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேபாளத்திற்கான தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

நேபாளத்தில் மவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் அங்குள்ள மனித உரிமை சாட்டவாளர்களுடன் இணைந்து மனித உரிமைகளின் மேம்பாடுகள் குறித்த நடவடிக்கைகளில் பெனற் ஈடுபட்டுவருகின்றார். நேபாளத்தில் உள்நாட்டுபோர் நிறைவடைந்த பின்னர் 2006 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாடுகளை மாவோயிட் அரசு மதித்து நடக்கவேண்டும் எனபதுடன், அதில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதுடன், நீதித்துறையையும் முழுமையாக நடைமுறைப்படுத்த அவர்கள் முன்வரவேண்டும் என கடந்த 16 ஆம் நாள் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் பெனற் தெரிவித்திருந்தார். தென்ஆசியா நாடான நேபாளத்தில் பல தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டு போரில் 13,000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

தற்போது பெனற் சிறீலங்கா தொடர்பில் அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அதிகாரிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரசின் சிக்கல்களை மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள ஐ.நா முயன்றபோது, ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு அதனை முறியடித்திருந்தது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்து சேறடிப்புக்களை மேற்கொண்டு வந்த நிலையில் அவரின் அலுவலகத்தில் இருந்து இரு பிரநிதிகள் ஆலோசனைக்குழுவுக்கு ஆதரவாக நியமிக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரசை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை மற்றும் பொதுச்சபை போன்றவற்றின் அனுமதிகளை பெறாது அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவை கலைத்துவிட சீனா – ரஸ்யா – சிறீலங்கா அரசுகள் தொடர் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது வீட்டே அதிகாரங்களை பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆத்திரம் அவர்களுக்கு, எனவே தான் சிறிலங்கா அரசுடன் இணைந்து ஐ.நாவுக்கு எதிரான விமல் வீரவன்சாவின் வன்முறைகளுக்கு கொழும்பில் உள்ள ரஸ்யா தூதரகம் உதவியதாக கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரிகளின் இந்த கூற்றானது சிறீலங்கா குறித்த பிராந்திய பூகோள அரசியல் நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்து வருவதையே காட்டுகின்றது. சீனாவும் - ரஸ்யாவும் சிறீலங்கா விவகாரத்தில் தீவிரமாக செயற்பட்டுவருவதற்கு காரணம் உண்டு. அதாவது உலகில் அதிக எரிபொருட்களை உள்வாங்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது சீனா முன்னிலை வகிப்பதாக அனைத்துலக எரிசக்தி அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்துள்ளது. சீனாவின் அதிகரித்துவரும் தொழில்துறை இந்த எரிபொருட் தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடந்த 100 வருடங்களாக தனது தொழிற்துறைகளுக்கு தேவையான அதிக எரிபொருட்களை உள்வாங்கி முன்னிலையில் இருந்த அமெரிக்காவை சீனா தற்போது பின்தள்ளியுள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் சீனா அமைத்துவரும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாத்துக்கொள்ள சீனாவும் - ரஸ்யாவும் தீவிரமாக போராடி வருகின்றன. ஆனால் அதனை முறியடிப்பதில் மேற்குலகமும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. பான் கீ மூனின் செய்தியுடன் கொழும்புக்கான ஐ.நாவின் பிரதிநிதி நீல் பூனே இந்த வாரம் கொழும்பு வந்துள்ள நிலையில், அமெரிகாவின் தென்ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிராந்தியங்களுக்கான துணை வெளிவிவகார செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிறீலங்கா வந்தபோது, சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் சரத்துக்களை சிறீலங்கா அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா வலுவாக தெரிவித்துள்ளது. அதன் ஊடாக சிறீலங்காவில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சிக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும் மேற்குலகத்தின் இந்த நடவடிக்கையில் தமிழ் மக்களின் பங்களிப்புக்களும், பிரதிநிதித்துவமும் எத்தகையதாக இருக்கப்போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Comments