சிறிலங்காவில் தமிழர்கள் “நாய்கள்"

பல தசாப்தங்களாக தமிழர் விடுதலையை சிறிலங்கா அரசு பல சொற்பதங்களினால் அழைத்து அவமதிப்பு செய்தும் அவர்களுக்கு உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்து முகமாக செயல்பட்டு வந்தார்கள். தம்மால் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஈழக் கனவும் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதியுடன் அழிக்கப்படுவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா இன்று பல ஆயிரம் முன்னால் போராளிகளை “நாய்கள்" என்று திட்டி தமிழர் விரோத செயல்பாட்டை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நாதியற்ற தமிழனாக இன்றும் சிறிலங்காவில் தமிழன் இருப்பதனாலேயோ என்னவோ சிங்களவனுக்கு தமிழரை இப்படி கூறுமளவு தைரியம் வந்தது.

தென் ஆபிரிக்காவில் இந்திய வம்சாவளியினரை “நாய்கள்" என்றே வெள்ளைக்காரர்கள் பழித்தார்கள். இன்றும் இந்தியரை (மன்னிக்கவும் தமிழரை) இப்படியாகவே கருதுகின்றார்கள் வெள்ளைக்காரர்கள். வெள்ளைக்காரர்கள் வதியும் இடங்களில் திராவிட சாதியைப் பார்த்து இப்படியாகவே அழைக்கின்றார்கள். பிரான்சில் பன்ஜாபியர் உரிமைகள் மறுக்கப்பட்டால் இந்திய நடுவண் அரசு தலையிட்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கின்றார்கள். ஆனால் பாவம் பட்ட திராவிடச் சாதியினர் உலகின் எந்த மூலையில் அடிபட்டாலும் வேண்டப்படாதவர்களாகவும் சூத்திரர்களாகவுமே பார்க்கப்படுகின்றார்கள்.

தென் ஆபிரிக்காவில் நடக்கும் சம்பவம் போலவே சிறிலங்காவில் நடைபெறுகின்றது. சிங்கள இனவெறி அரசு தமிழரை நாய்கள் என்று கூறுமளவு தைரியம் வந்துவிட்டது. விடுதலைப்புலிகள் களத்தில் நின்ற வேளையில் பயந்து கலங்கிய இனவெறி சிங்களவனுக்கு எல்லாம் இன்று தமிழர் நாய்களாக தென்படுகின்றார்கள்.

புனர்வாழ்வு என்ற பெயரில் இடம்பெறும் அத்துமீறல்கள்

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு புது வாழ்க்கை அமைத்து தருவதாக உலகை ஏமாற்றி அவர்களை கொடுமை செய்வதை பிரித்தானிய செய்திச் சேவை அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாம் முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், நாளாந்தம் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டே, அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் கைது செய்து புனர்வாழ்வு வழங்கல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், தமது கடிதத்தில், தாம் 'நாய்கள்" என அழைக்கப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

தாம் முகச் சவரம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், மின்சார கட்டணங்களை செலுத்துமாறும், சுத்திகரிப்பு பணிகளுக்கான பணத்தை செலுத்துமாறும் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தம்மிடம் பணம் இல்லை என கூறினால் தம்மை கொழும்பு பூஸ்ஸா முகாமிற்கு மாற்றிவிடுவதாகவும் அதிகாரிகளால் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகளை கைது செய்ததாக கூறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது இராணுவ முகாம்களிலும், பாடசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களை பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுமதி வழங்காமல் அரசாங்கம் தடை விதித்து வருகிறது. இவர்களுக்கு தற்போது தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அவ்வாறான அர்த்தமுள்ள பயிற்சிகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என தமது கடிதங்களில் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை பகுதியில் உள்ள முகாம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய செய்திச் சேவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிலர் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்படுகின்றனர். சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டு, இடைப்பட்டிகளால் தாக்கப்படுகின்றனர். தாக்குதலின் பின்னர் காயம் ஏற்படின் அவர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதுமில்லை என பிரித்தானிய செய்திச் சேவை அம்பலப்படுத்தியுள்ளது.

உண்மையைக் கூறினால் சிறிலங்காவிற்கு கசக்கிறது

தமிழ்ப் போராளிகளின் ஆதங்கத்தை கேட்டபின் பிரித்தானிய செய்திச் சேவை சிறிலங்காவின் அமைச்சர் டியூ குணசேகரவிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, இந்த முறைப்பாட்டு கடிதங்களை தமக்கு எழுதினால், அது தொடர்பில் பார்த்துக் கொள்வதாக கூறினார். இவரின் கூற்றில் இருந்து தெரிகின்றது சிறிலங்கா ஒருபோதும் உண்மையை ஏற்க தயாராகவில்லை என்று.

தமிழரைக் கொன்று அதற்கான தண்டனையை ஏற்க மறுக்கும் ஒரு அரசிடம் எப்படி நியாயத்தை கேட்க முடியும். ஆனாலும் பிரித்தானிய செய்திச் சேவை இரண்டு பகுதியினரின் கருத்தையும் கேட்டு உண்மையை அம்பலப்படிதியதானது தர்மம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்து இருக்கின்;றது.

அப்பாவித் தமிழரை கொழும்பில் பிடித்துவிட்டு புலியை பிடித்துவிட்டதாக பல காலங்களாக தம்பட்டம் அடிக்கும் இந்த சிங்கள இனவாத அரசிடம் எப்படி நியாயம் கேட்க முடியும். பத்து வயது இளைஞனை அல்லது யுவதியைப் பிடித்துவிட்டு விடுதலைப்புலிகளின் முக்கிய புள்ளிகளை குறிப்பாக மனிதக்குண்டுதாரர்களை பிடித்துவிட்டதாக கூறிவந்த சிறிலங்காவிற்கு தடுத்துவைத்திருக்கும் தமிழ் இழைஞர்கள் மூலமாக அரசியல் காய்நகர்த்தலை மேற்கொள்ள உதவியாக இருக்கும். அத்துடன் அரசாங்க பணத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் பரிதவிக்கும் இராணுவ மற்றும் காவல் துறையினருக்கு தமிழர்கள் பணம் வழங்கும் வங்கிகளாகவே இருக்கின்றார்கள்.

தமிழர்கள் சிறிலங்காவில் ஒரு அடிமைகளாகவும் சிங்களவர்களினால் நாய்கள் ஆகவும் பார்க்கும் காலம் ஏற்கனவே உருவாகிவிட்டது என்பதை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னால் போராளிகள் பிரித்தானிய செய்திச் சேவை ஊடாக அம்பலப்படுத்தியுள்ளார்கள். சிங்கள இனவெறி அரசுகள் தமிழருக்கு சுதந்திரத்தை ஒருபோதும் வழங்க மாட்டாது என்பதை இவ் நிகழ்வுகள் பறைசாற்றி நிற்கின்றது.

தமிழரின் விடுதலையை சிங்கள இனவெறி அரசிடம் இருந்து பெற முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் முட்டாள்த்தனம். இதை புரிந்து செயல்பட்டால் நயவஞ்சகனின் அரக்கத்தனத்தை வெளிக்கொண்டு வந்து தர்மத்தை நிலை நாட்டலாம். இதனை புரிந்து ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் தமிழச்சியும் செயலாற்ற வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம். இதனை மறப்போமானால் நாய்களிலும் கேடான வாழ்க்கை முறையை தமிழர்கள் சந்திக்க வேண்டிவரும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments