ஐயகோ கிளிநொச்சியே! உன்நிலை இதுதானா?

vanni_2
தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது.

கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் கிளிநொச்சி நகரின் மையத்திலமைந்திருக்கும் பொது விளையாட்டு மைதானம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிங்களவர்கள் நிறைந்திருந்தார்கள். இது என்ன சிங்கள நகரமோ என எண்ணுமளவிற்கு சிங்களவர்களதும் சிங்களப் படைகளதும் பிரசன்னம் அங்கிருந்தது.

அருகே சென்று என்னவென விசாரித்தபோதுதான் விடயம் புரிந்தது. பொசன் பண்டிகை எனப்படும் பொசன் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களே அவை. அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு புத்த பகவானின் உருவப் படத்தினைத் தாங்கிய பாரிய 'கட்டவுட்டுக்கள்' அங்கு வைக்கப்பட்டிருந்தன. பொசன் பண்டிகையின் பிரதான நிகழ்வு இடம்பெறும் மிகிந்தலை மலையினை ஒத்த கட்டமைப்பொன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டுவரப்பட்ட நிகழ்வு அலங்காரக் கோபுர வடிவில் கட்டப்பட்டிருந்தது.

இந்த மூன்று நாட்களும் இரவு ஏழு மணி தொடக்கம் இரவு 11 மணி வரைக்கும் இங்கு வந்தவர்களுக்கு கொத்தமல்லித் தேநீரும், கடலையும் அன்னதானமும் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஊறுஊ ராஜகுரு இந்தப் பொசன் பண்டிகையைத் தலைமையேற்று நடத்தியிருந்தார். அனைத்தையும் படையினரே ஒழுங்குசெய்திருந்தார்கள். இதுபோலவே அண்மையில் இடம்பெற்ற வெசாக் பண்டிகையின் போதும் கிளிநொச்சி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
kilinochchi3
கொமர்சியல் வங்கி, செலன் வங்கி போன்ற தனியார் வங்கிகளும் இலங்கை வங்கி மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி போன்ற அரச வங்கிகளும் அனைத்து வசதிகளுடனும் கூடிய தங்களது கிளைகளைக் கிளிநொச்சி நகரத்தில் திறந்திருக்கிறார்கள். ஏ.ரி.எம் எனப்படும் தானியங்கி இயந்திரத்தின் ஊடாக தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து விரைவாகப் பணத்தினைப் பெறும் வசதிகளும் இந்த வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அவசியமான அடிப்படை அம்சங்கள்தான் இவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் கிளிநொச்சியின் வளர்ச்சி அல்லது நிலைமாற்றம் என்பது மேற்குறித்த இந்த விடயங்களுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. ஒரு சமூகத்தினைச் சீரழிக்கும் அல்லது திட்டமிட்ட வகையில் அழிக்கும் திரைமறைவு நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன. கிளிநொச்சி எவ்வாறு இப்படி மாற்றம் கண்டதோ அதே போலவே கிளிநொச்சி மக்களும் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றார் கிளிநொச்சியில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர். எது எவ்வாறிருந்தாலும், கிளிநொச்சி அபாயகரமான மாற்றத்தினை நோக்கி நகர்கிறது என்பதுதான் உண்மை.
kilinochchi2
2009ற்கு முற்பட்ட காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் சுய ஒழுக்கமும் மிக்க ஒரு சமூகமே அங்கிருந்தது. ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாக்கப்பட்டு விட்டன. நீலப்படங்கள், தணிக்கைக்கு உட்படுத்தவேண்டிய மோசமான ஆபாசப்படங்கள் என அனைத்தும் இப்போது கிளிநொச்சியின் கறுப்புச் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. இதனை விநியோகிப்பவர்கள் வேறு யாருமல்ல, படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் குறிப்பிட்ட சில தமிழ் இளைஞர்களும்தான்.

எல்லாவற்றையும் விட மோசமான விடயமாக மாறியிருப்பது மானத்தை விற்றுப் பிழைக்கும் ஒரு கூட்டம் அங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியினை அறிந்தபோது இது பொய்யாக இருக்கக் கூடாதோ என ஏங்கினேன். ஆனால் தீர விசாரித்தபோது நெஞ்சைப் பிழியும் சில உண்மைகள் வெளிவந்தன. இவர்களது வாடிக்கையாளர்கள் வேறு யாருமல்ல, அங்கு கடமையில் இருக்கும் படையினரும் கட்டட வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் நாட்டினது தெற்குப் பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் சிங்களவர்கள்தான்.

இவர்களைக் கூட்டி விடுபவர்கள் யாரென்று தெரியுமா? வெட்கம்! இராணுவத்துடன் இணைந்து செயற்படும் எங்கள் தமிழ்ச் சகோதரர்கள்தான் தமிழ்ச் சகோதரிகள் தவறிழைப்பதற்குத் துணைபோகிறார்கள். வறுமை, போரின்போது தன்துணையினை இழந்த கொடுமை, பிள்ளைக்குச் சோறுபோட வழியேதுமற்ற நிலைமை, இவை தான் எங்கள் சகோதரிகளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இதனை அறிந்தபோது உண்மையிலேயே கண்கள் பனிக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிட்டவேண்டுமெனக் களத்தில் போராடி மடிந்த ஆயிரம் ஆயிரம் வீரர்கள் எதிர்பார்த்த சமூகம் இதுதானா? இதுபோன்றதொரு சமூகம் உருவாவதற்காகத்தான் இவர்கள் வீழ்ந்தார்களா?
vanni_3குறிப்பாக வன்னிப் பகுதியில் குடியமர்த்தப்பட்டிருப்பவர்கள் மத்தியிலுள்ள இளம் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாலியல் இம்சைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அண்மையில் கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சிக்குச் செல்லும் வீதியில், வயல் வெளிக்கு மத்தியிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றில் கடமையிலிருந்த படையினன் ஒருவன் கிளிநொச்சி நகரில் பணிமுடித்து மாலை 5.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களை வழிமறித்து அவர்களது கையைப் பிடித்து இழுத்திருக்கிறான்.

ஆனால் அதிஸ்ரவசமாக அந்த வீதி வழியாக இன்னொரு வாகனம் வந்ததையடுத்து கிடைத்த இடைவெளியினைப் பயன்படுத்திய இந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறார்கள். இதுபோன்று இழிசெயலில் ஈடுபடும் கறுப்பாடுகள் படையினர் மத்தியில் அதிகரித்துச் செல்கிறது. தாங்கள் மக்களுடன் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் பழக முனைவதாக பகலில் காட்டிக்கொள்ளும் படையினர், இருள் சூழ்ந்த பின்னர் கொடூரமும், குரூரமும் கொண்ட வெறியர்களாக மாறிவிடுகிறார்கள்.

தங்களுக்கு நடந்த இதுபோன்ற இழிசெயல் வெளியே தெரியவந்தால் தமது எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காகவே பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக வெளியே எதுவும் கூறுவதில்லை. இவ்வாறாக கண்ணுக்குத் தெரியாத பயங்கரத்திற்கு எங்கள் தமிழ்ப் பெண்கள் தினமும் முகம்கொடுத்து நிற்கிறார்கள்.
vanni_1
இன்னொரு கதையைக் கேளுங்களேன். கிளிநொச்சியில் கடமைபுரிந்துவரும் மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய சிங்களப் படைவீரனுக்கும் கிளிநொச்சியைச் சோந்த 14 வயதுடைய தமிழ்ச் சிறுமிக்குமிடையில் காதலாம். குறிப்பிட்ட இந்தச் சிறுமியை அந்தப் படையினன் மாத்தறையிலுள்ள தனது உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். கடந்த யூன் 29ஆம் திகதி மாத்தறை பேருந்து நிலையத்தில் வைத்து இந்தக் 'காதலர்கள்' கைதுசெய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காக இச்சிறுமி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநேரம், அந்தப் படையினர் மாத்தறை நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்.

கொடூரமாகத் தொடர்ந்த போரின் நடுவே சிக்கி தந்தை இறந்துவிட, தாயோ பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்கு வழியற்றுத் தவிக்க, வழிகாட்டுபவர் எவருமற்ற இந்தச் சிறுமியின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? இதுதான் கிளிநொச்சியின் இன்றைய நிலை. இவ்வாறு சிங்களப் படையினரும் இளவயதுத் தமிழ்ப் பெண்களும் 'காதல்' வசப்படும் சம்பவங்கள் கிளிநொச்சியில் இப்போது அதிகம். சிங்கள வெறியர்கள் காதல் என்ற பெயரில் தமிழ்ச் சிறுமிகளின் கற்பைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் அவளைத் தவிக்க விட்ட கதை ஏராளம், ஏராளம்.

கிளிநொச்சி எலும்புக்கூட்டு நகரமாகிவிட்டதோ என எண்ணுமளவிற்கு கடந்த சில மாதங்களாக கிளிநொச்சியின் பல பாகங்களிலும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. கணேசபுரத்திலும், கிளிநொச்சி மாகாவித்தியாலயத்தின் பின்புறத்திலுமிருந்து இந்த எலுப்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

தாங்கள் சிங்கள மயமாக்கப்படுகிறோம் என அறியாமலேயே கிளிநொச்சி மக்கள் மாயையான ஒரு உலகத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேறியிருக்கும் மக்களின் எண்ணிக்கையினை விட அங்கு நிலைகொண்டிருக்கும் படையினரின் எண்ணிக்கைதான் அதிகம் என்கிறது ஒரு புள்ளி விபரம். முறுகண்டியின் கிழக்குப் பகுதி, இரணைமடுக் குளத்தினை அண்டியிருக்கும் சாந்தபுரம், செல்வபுரம் மற்றும் இந்துபுரம் ஆகிய கிராமங்களின் மக்கள் குடியேறுவதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
vanni_4இந்தப் பகுதிகளில் படையினர் தங்களது நிரந்த முகாம்களை அமைத்திருக்கிறார்கள். தவிர ஏ9 வீதிக்கு அண்மையாக உள்ள முறிகண்டி தொடக்கம் கொக்காவில் வரையிலான பகுதிகளில் படையினரின் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் திட்டம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. வன்னியில் படையினருக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படப்போகிறதாம் என்ற செய்தி மூன்று மாதங்களுக்கு முன்னரே அரசல்புரசலாக ஊடகங்கள் வாயிலாகக் கசிந்திருந்தபோதும், கடந்த வாரம் சிறிலங்காவினது இராணுவத் தளபதி இச்செய்தியினை உறுதிப்படுத்தியிருந்தார். வடக்கில் குடியமர்த்தப்படும் படையினரது குடும்பங்களுக்கு வயல்காணிகள்கூடப் பகிர்ந்தளிக்கப்படுமாம் என்கிறார் அவர்.

பொசன் பண்டிகையை முன்னிட்டு கண்டி மகாநாயக்கர்களிடம் ஆசிவாங்கச் சென்ற வேளையிலேயே இந்தக் தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார். தமிழ் மக்கள் தற்போது பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சில மாவட்டங்களிலும் அவர்களைச் சிறுபான்மையினராக்சிச் சிங்களமயப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தினை இராணுவத் தளபதியே பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்திருக்கிறார்.

இது தவிர கிளிநொச்சி, முறிகண்டி மற்றும் ஏ9 வீதியின் முதன்மையான இடங்களிலுள்ள அரச காணிகள் அரசினால் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக முறிகண்டியின் கிழக்குப் பகுதியில், விடுதலைப் புலிகளின் நிதித்துறையினர் அமைத்திருந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக, நான்கு மாதங்களுக்கு முன்னர் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசிலினது பணிப்பின் பெயரில் இரண்டு ஏக்கர் நிலம் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஏ9 வீதியினை அண்டியதாக இருக்கும் இந்தப் பகுதியில் முதல்தர உணவு விடுதி ஒன்றை நிர்மாணிக்கும் பணி தற்போது துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோலவே கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் விலைகொடுத்து வாங்கிய காணிகளை இனங்கண்டு அப்பகுதிகளிலும் சிங்களவர்களின் வர்த்த நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராணுவத் தளபதிகளின் உறவினர்களே இந்தக் காணிகளைத் தமதாக்கியிருக்கிறார்கள்.kilinochchiகிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இதுபோன்றதொரு காணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முதன்மைத் தளபதி ஒருவர் புலிகள் விலைகொடுத்து வாங்கிய காணி ஒன்றில் நட்சத்திர விடுதியொன்றை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருகிறார். கிளிநொச்சியில் தமிழர் வளங்களைச் சுருட்டும் இதுபோன்ற முனைப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, போரினால் அழிந்துபோன, அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களதும் வணக்கத் தலங்களை மீளவும் கட்டியெழுப்புவதற்குப் பொறுப்பாக தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் துமிந்த திசநாயக்கவினை மகிந்த அரசாங்கம் நியமித்திருக்கிறது. வணக்கத் தலங்களை மீளக் கட்டியெழுப்புதல் என்ற போர்வையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கான முன் முயற்சிகளே இவை. கபடத்தனத்துடன்கூடிய சிங்களமயமாக்கல் திட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தச் செயற்பாட்டினை நாம் கருத முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 'அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப்பணிகளை', அதாவது மாவட்டத்தின் சிங்கள மயமாக்கல் திட்டங்கள் அனைத்துமே மகிந்தவினது புதல்வர் நாமல் ராஜபக்சவின் தலைமையில், அவரது நேரடிக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகள் மற்றும் தொழில்துறைகள் என பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், உள்ளூர் இளைஞர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. மாறாக தென்பகுதிகளிலிருந்தே வேலையாட்கள் கொண்டுவரப்படுகிறார்கள். ஏன் கட்டடத் தொழிலாளர்கள் கூட தெற்கிலிருந்துதான் வரவழைக்கப்படுகிறார்கள்.

கிளிநொச்சியில் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் கிளிநொச்சிக்கு இந்த நிலையா? சிங்கள ஆட்சியாளர்கள் கிளிநொச்சியினை வடக்கின் பெரும் பொருளாதார மையம் ஆக்கப் போகிறார்களாம். அப்படியாயின் தனது சுயத்தினை வேகமாக இழந்துவரும் கிளிநொச்சியும் இன்னொரு திருகோணமலை ஆகிவிடுமா?

1930 களில் திருகோணமலை நகரத்தில் ஒரேயொரு சிங்கள அப்பக்கடைதான் இருந்ததாம். ஆனால் இன்று திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களே பொரும்பான்மையாக வசிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலப்பகுதியில் தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற கிளிநொச்சி இன்று, தனது சுயத்தினை இழந்து தவிக்கிறது, மாயையான, ஆபத்துநிறைந்த எதிர்காலத்தினை நோக்கி அது மெல்ல நகர்கிறது. கிளிநொச்சிக்கு மட்டுமல்ல, தமிழன் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களினதும் இன்றைய நிலை இதுதான்.

- யாழினி

Comments