இலங்கையிலிருந்து இன்னொரு குண்டு!

''அந்நிய நாட்டில் 15 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறோம். எங்களை நம்பி இருக்கும் குடும்பங்களைக் காப்பாற்ற வழி இல்லை. எங்கள் உயிராவது சொந்த மண்ணில் போகுமா?'' என கடல் தாண்டி வந்த கடிதம் நெக்குருகவைக்கிறது!


தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் இருந்து வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் சென்ற 37 பேர், வழக்குகளில் சிக்கி... சிறைகளில் இருக்கிறார்கள். அவர்கள் மீது போடப்பட்டிருப்பவை, போதைப் பொருள் கடத்தல் வழக்குகள். இதற்கான சிறைத் தண்டனை 20 ஆண்டு சிறைவாசம், ஆயுள் தண்டனை!

சிறைவாசிகளில், ராமநாத புரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், தஞ்சை, நெல்லை, நாமக்கல் மற்றும் மும்பையைச் சேர்ந்த 32 தமிழர்கள் மற்றும் கேரள மாநிலம் காசர்கோடு, கொல்லம், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 மலையாளிகளும் அடக்கம்.

வெலிக்கடை ஆண்கள் சிறையில் 22 பேர், வெலிக்கடை பெண்கள் சிறையில் 4 பேர் தண்டனைக் கைதிகளாகவும் நீர்க்கொழும்பு ஆண்கள் சிறையில் 5 பேர், பெண்கள் சிறையில் ஒருவர், அனுராதபுரம் சிறையில் 5 பேர் விசாரணைக் கைதிகளாகவும் அடைபட்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனுப்பிய கண்ணீர்க் கடிதங் களில், ''சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக, சில முகவர்களால் ஏமாற்றப்பட்டு எந்த ஆதரவும் இன்றி சிறையில் வாடுகிறோம். எங்களையேநம்பி இருக்கும் எங்கள் குடும்பங்கள் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்றன.

எங்களுக்கு என ஒரு வழக்கறிஞரைவைத்து வாதாட முடியா மல், குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவிக்கிறோம். இங்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. அதனால், சிறையில் இருந்த ஐந்து இந்தியர்கள் இறந்துவிட்டனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 28 பேர் போதைப் பொருள் வழக்கில் சிறையில் இருந்தனர். அந்த நாட்டு அரசு, இலங்கை அரசுடன் உயர்மட்டப் பேச்சு நடத்தி, அனைவரையும் மீட்டுச் சென்றுவிட்டது.

எனவே, எங்களின் கஷ்டத்தைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி எப்படியாவது எங்களை மீட்டு, இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். எங்களது துயர நிலையை உணர்ந்து, சிறையைவிட்டு மீட்டு, விடிவுகாலம் பிறக்க வழி செய்வீர்கள் என நம்புகிறோம்...'' என்கிற பரிதாபக் கெஞ்சல் வார்த்தை கள் அடங்கிய கடிதம் அது.

குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா, முன்னாள் - இந்நாள் முதலமைச்சர்கள் எனப் பலருக்கும் கைதிகள் சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. 'போதைப் பொருள் வழக்கு என்பதால் இதில் தலையிட முடியாது' என்பதுதான் மத்திய அரசின் பதில்.

கடைசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குத் தகவல் வந்துள்ளது.

அவரிடம் பேசியபோது,

''வியாபாரத்துக்காகப் போனவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து, போதைப் பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளனர். இது மாபெரும் அநியாயம். வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பி உள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி இந்தியர்களை மீட்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால், இதற்காக இலங்கை அரசுடன் ஒரு சிறப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்!'' என்றார் வேகமாக!

அப்பாவிக் குடிமகன்களின் துயர் துடைப்பதுதானே ஒரு நல்ல அரசுக்கு அழகு!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி: விகடன்

Comments