சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் - ஐ.நா அமைத்துள்ள ஆலோசனைக்குழு வரவேற்கத்தக்கது: கோல்ம்ஸ்

சிறீலங்காவில் நடைபெற்ற போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் நேற்று (7) தெரிவித்துள்ளார்.

நேற்று ஐ.நாவில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த செப்ரம்பர் மாதம் கினியா பகுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் அமைத்துள்ள விசாரணைக்குழுவும், கடந்த வருடம் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவும் வரவேற்கத்தக்கவை.

வன்முறைகளை மேற்கொண்டவர்கள் எங்கும் சென்று மறைந்துவிட முடியாது என்ற யதார்த்தத்தை அவர்கள் உணரவேண்டும்.

வன்முறைகள் தொடர்பில் சுயமாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள் ஐ.நாவுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் இருத்தலாகாது. வன்முறையாளர்களை தண்டிப்பதே பொதுமக்களை பாதுகாப்பதற்கான முதல் படி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை உட்பட 40 பேர் உரையாற்றியிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய அனைவரும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை வலியுறுத்தியே பேசியிருந்தனர்.

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் அங்கம் வகிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments