சீமான் பழிவாங்கப்படுகின்றார் : பழ. நெடுமாறன்

ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த சீமான் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவரது சிறைத்தண்டனை ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டது.

இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக்கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும்.

ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழிவாங்கப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவான போராட்டங்கள் தொடரும். நிலைமை முற்றுவதற்குள் சீமானை விடுதலை செய்யும்படி வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

வியட்நாம், தென் ஆப்பிரிக்கா போல ஈழத் தமிழ் இனமும் வெல்லும்: நெடுமாறன்

வியட்நாம், தென் ஆப்பிரிக்கா ஆகியவை வெற்றி பெற்றதைப் போல ஈழத் தமிழினமும் விரைவில் வெற்றி பெறும், ஈழம் மலரும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில் பேசுகையில் நெடுமாறன் இவ்வாறு கூறினார்.

அவர் பேசுகையில், உலகத் தமிழர்களின் வரலாற்றில் இது மிகவும் சோதனைக்காலம். தமிழன் என்ற அடையாளமே தெரியாமல் தமிழர்களை அழிக்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த நாடுகள் சேர்ந்து இலங்கைப் போரில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய உதவின. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. எந்த ஒரு இனத்தையும் வல்லரசு நாடுகள் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் படைக்கு எதிரான போரில் வியட்நாமும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதைப் போல ஈழத் தமிழினமும் வெற்றிபெறும்.

இலங்கையில் நடந்து முடிந்த போர், உலகத் தமிழர் விடுதலைக்கான முதல் கட்ட போராட்டமாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி மலேசியா நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ பிற மாநிலத் தமிழர்களுக்கோ நேரலாம்.

இனியும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்து விட்டது என்றார் நெடுமாறன்.

Comments