அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையில், ஈழம் என்ற சொற்பதத்தை தான் பயன்படுத்துவதில்லை என்றும், அது சிங்கள மொழியில் இருந்த உருவாகிய சொல் என்றும், அதனை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தவறாகக் கையாண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழ்நாட்டவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக்கொள்வது போன்று, தானும் தன்னை இலங்கையன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.
உண்மையில் ஈழத்தில் இன்று மிஞ்சியிருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க மூத்த அறிஞர்களில் ஒருவராக பேராசிரியர் சிவத்தம்பி திகழ்வதை நாம் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் இத்தனை காலமும் ஈழம் என்ற சொற்பதத்தை மறுதலிக்காது அமைதி காத்து வந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், திடீரென அதனைத் தவறான சொற்பதமாக சித்தரிக்க முனைவதும், தன்னை இலங்கையர் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவதும், அவரது உள்நோக்கங்கள் தொடர்பான சந்தேகங்களை உலகத் தமிழர்களிடையே எழுப்பியிருப்பதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதற்கு அதிகாரபற்றற்ற தடையை கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் அரசாங்கம் விதித்திருப்பதும், ஈழத்தமிழர்களை அடிக்கடி இலங்கைத் தமிழர்கள் என்று கருணாநிதி விளிப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. தற்பொழுது இதனை ஒப்புவிக்கும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பி கருத்து வெளியிட்டிருப்பது சிங்கள - இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு பேராசிரியர் சிவத்தம்பியும் இரையாகிவிட்டாரோ என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
ஈழத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் தமிழர்கள் திகழ்ந்தாலும், அது தொடர்பாக ஈழத்தில் இருந்து உருவாகிய புராதனகால எழுத்துமூலப் பதிவுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இருந்த பொழுதும், ஈழத்தில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தமிழர்கள் வாழ்ந்ததை உறுதிசெய்யும் பதிவுகளை தமிழகத்தில் பண்டைக்கால இலக்கியங்கள் தம்மகத்தே கொண்டுள்ளன.
ஈழத்தில் சிங்கள இனம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட பல்வேறு சங்க கால இலக்கியங்களில், ஈழம் என்ற சொற்பதம் அடிக்கடி கையாளப்பட்டிருப்பதோடு, அங்கு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சி செய்ததை உறுதிசெய்யும் பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றைவிட கடந்த ஆறு தசாப்தகாலப் பகுதியில் ஈழத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்கள், அங்கு வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு தமிழர்கள் வாழ்ந்ததையே உறுதி செய்கின்றன. அதேநேரத்தில் இலங்கை என்ற சொற்பதம் பண்டைக்கால தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் அறியப்படாத ஒன்றாகவே விளங்குகின்றது.
வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணம் ஈழத்தீவை லங்காபுரி என்ற வர்ணிப்பதோடு, அதன் மறுவாசிப்பாக இடைக்காலத்தில் (சங்க காலத்திற்குப் பின்னரான பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்) கம்பரால் எழுதப்பட்ட இராமாயணம், இராவணனை இலங்கை வேந்தன் என்று விளிக்கின்றது. இந்த வகையில் இலங்கை என்ற சொற்பதம்; லங்கா என்ற வடமொழி சொற்பதத்தில் இருந்தே பிறந்ததாக நாம் கொள்ள முடியும்.
மேலைத்தேயத்தவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தீவை சிலோன் என்று வெள்ளையர்கள் அழைத்த பொழுது, அதற்கு மாற்றீடான தமிழ்ச் சொல்லாடலாக இலங்கை என்ற சொற்பதத்தை அப்போதைய மேலைத்தேய ஆட்சியாளர்களுக்கு அடித்தொண்டு செய்த தமிழ் ‘புத்தக’ஜீவிகள் கையாண்டிருந்தனர். இதன் விளைவாக ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவர்களிடம் கைமாறிய பின்னரும், இலங்கை என்ற சொற்பதம் அரச பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதேநேரத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவர்களிடம் கைமாறுவதற்கு முன்னரே தமிழ்த் தேசிய அரசியலில் கையாளப்பட்டு வந்துள்ளது. 1920களில் தமிழீழம் என்ற சொற்பதம் கையாளப்பட்டமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளை, கடந்த 2006ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் பொழுது, தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் கேணல் ச.வெ.தமிழேந்தி அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்தமிழீழம் என்ற பெயருடன் பண்டைக்காலத்தில் ஈழத்தில் அரசு எதுவும் முன்னர் இயங்காத பொழுதும், ஈழத்தீவு முழுவதும் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலப்பகுதிகள் பலவற்றை, தமிழகத்தின் இலக்கியங்கள் மட்டுமன்றி சிங்கள வரலாற்று நூல்கள் கூட பதிவுசெய்துள்ளன.
இதில் உதாரணமாக அனுராதபுரத்தை தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த எல்லாளன் என்ற ஈழத்தமிழ் மன்னனை நாம் குறிப்பிடலாம். எல்லாளனை சோழர் குலத்தை சேர்ந்த தளபதி என்று மகாவம்சம் குறிப்பிடுகின்ற பொழுது, பண்டைக்கால தமிழ் இலக்கியங்கள் எவையும் சோழர் குலத்தில் எல்லாளன் என்ற பெயரில் தளபதி ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்தது தொடர்பான பதிவுகளையோ, அன்றி படையெடுப்பின் மூலம் ஈழத்தை அவ்வாறான பெயருடைய ஒருவர் கைப்பற்றியமை தொடர்பான தகவல்களையோ கொண்டிருக்கவில்லை. அதாவது எல்லாளன் என்ற மன்னன் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன் என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது என்பதே வரலாற்று அறிஞர்கள் பலரது கருத்தாக விளங்குகின்றது.
இதேபோன்று எல்லாளனுக்குப் பின்னரான காலப்பகுதியில் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு, சேனன், குத்திகன் என்ற இரண்டு தமிழ் மன்னர்கள் ஈழத்தீவை ஆட்சி செய்தமை தொடர்பான பதிவுகளையும் மகாவம்சம் கொண்டுள்ளது. இவர்கள் இருவரையும் தமிழகத்தை சேர்ந்த குதிரை வணிகர்கள் என்று மகாவம்சம் சித்தரிக்கின்ற பொழுதும், வெறும் குதிரை வணிகர்களால் ஒரு தீவின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.இடைக்காலத்தில் ஈழத்தீவில் தமிழர்களின் ஆட்சியென்பது தற்பொழுது தமிழீழம் என்றழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாநிலங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாண இராச்சியமாகவும், வன்னிப் பெருநிலம் முதல் புத்தளம் உள்ளடங்கலாக அம்பாறை வரையான வன்னிமைகள் என்ற குறுநிலங்களாக விளங்கிய பொழுதும், சிங்கள இராச்சியங்களின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திமிக்கவர்களாக தமிழர்களே விளங்கியுள்ளனர்.
இதற்கு உதாரணமாக ஆறாம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னனால் தத்தெடுக்கப்பட்ட பண்டைத் தமிழகத்தின் சேர சமூகத்தை சேர்ந்த செண்பகப்பெருமாள் (சப்புமல் குமரய என்று சிங்களத்தில் அழைக்கப்படும் இளவரசன்) என்பவரையும், கண்டி இராச்சியத்தை இறுதிவரை ஆட்சி செய்த மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்த கண்ணுச்சாமி (விக்கிரமராஜசிங்க என்று சிங்களவர்களால் அழைக்கப்படும் மன்னன்) என்பவரையும் நாம் குறிப்பிட முடியும். இவ்வாறாக ஒருகாலத்தில் ஈழத்தீவு முழுவதையும் ஆட்சிசெய்த தமிழர்கள், இன்று தமக்கான அரசை பெருந்தன்மையுடன் வடக்குக் கிழக்கு மாநிலங்களுடன் மட்டுப்படுத்தியுள்ளனர் எனக்கூறின் அது மிகையில்லை.
உண்மையில் ஈழத்தீவு முழுவதையும் உரிமை கோரும் தகமை தமிழர்களுக்கு உண்டு. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு அடிக்கடி சோழர்களின் படையெடுப்புக்கள் இடம்பெற்ற பொழுதும், காலம்காலமாக ஈழத்தீவை ஈழத்தமிழர்கள் ஆட்சிசெய்திருப்பதை பல்வேறு கல்வெட்டுக்களும், அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கின்றன.1948ஆம் ஆண்டு ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் சிங்களவர்களிடம் கைமாறிய பின்னர் எழுதப்பட்ட சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஈழம் என்ற சொற்பதத்தை உள்ளடக்கியிருப்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதேநேரத்தில் 1972ஆம் ஆண்டு குடியரசாக ஈழத்தீவை சிங்களவர்கள் மாற்றியமைத்த பொழுது, அதன் மேலைத்தேயப் பெயரான சிலோன் என்பது கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக சிறீலங்கா என்ற பெயர் சூட்டப்பட்டது.
பௌத்த மதத்தை முதன்மை மதமாக வரையறுக்கும் சிறீலங்காவின் அரசியலமைப்பு, சிறீலங்கா என்ற சொற்பதத்திலேயே தனது இனவெறியைக் கக்குகின்றது.அதாவது சிறீ என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் புனிதமானது என்பதாகும். இந்த வகையில் சிறீலங்கா என்று பெயர்சூட்டியதன் மூலம், ஈழத்தீவை பௌத்த மதத்தின் புனித பூமியாகவே சித்தரிப்பதற்கு சிங்களம் முற்பட்டுள்ளது. இந்தப் புனித பௌத்த லங்கா அல்லது சிறீலங்கா என்ற சொல்லாடல், கிறிஸ்துவிற்குப் பின் 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ‘தம்மதீப’ என்ற சிங்கள-பௌத்த பேரினவாதக் கோட்பாட்டின் மறுவடிவமாகவே திகழ்கின்றது.
எனவே, தம்மை ‘சிறீலங்கன்’ அல்லது ‘சிறீலங்கன் ரமிள்’ என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு ஈழத்தமிழனும், தம்மை புனித பௌத்த லங்காவின் குடிமகன் என்று அடையாளப்படுத்தி, தமது தலையில் தாமே தூர்வாருகின்றனர். இதிலிருந்து ஓரளவுக்கு விதிவிலக்குப் பெற்ற சொற்பதமாக இலங்கை என்ற சொல்லாடலை நாம் கருதினாலும் கூட, லங்கா என்ற வடமொழி சொற்பதத்தின் தமிழ் வடிவமாகவே இதனை நாம் கொள்ள முடியும். இந்த வகையில் ஈழம் என்பதும், தமிழீழம் என்பதும், ஈழத்தமிழர் என்பதுமே, ஈழத்தீவில் எமது அடையாளத்தை என்றென்றும் நாம் தக்கவைப்பதற்கான சொற்பதங்களாக விளங்குகின்றன என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
ஈழம் என்ற சொற்பதமும், சிங்களத்தில் கலந்துள்ள எலுவடிவத் தமிழும் (சிங் எல) ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்ற பொழுதும், ஈழம் என்பது எலுவடிவம் தோற்றம் பெறுவதற்கு முன்னரே புராதன தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்த சொற்பதமாகும். இதனைத் திரிவுபடுத்தி ஈழம் என்பது சிங்களத்தில் இருந்து உருவான சொற்பதம் என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது நகைப்புக்கிடமானது.
ஈழத்தீவை சிங்கள மயப்படுத்தும் தனது நிகழ்ச்சித்திட்டத்தின் ஓரங்கமாக ‘நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், நாமெல்லாம் சிறீலங்கன்கள்’ என்ற சொல்லாடலை அண்மைக் காலங்களில் அடிக்கடி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவதை நாம் அவதானிக்க முடியும். அதாவது மகிந்தரின் வார்த்தைகளில் கூறுவதாயினும், ‘இங்கு சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை.
எல்லோரும் சிறீலங்கன்கள், அதனால் எல்லோரும் பெரும்பான்மையினர்.’ என்கின்றார் மகிந்தர். இது ஈழத்தீவில் தமிழினத்தின் வரலாற்றையும், இருப்பையும் மறுதலிப்பதற்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் கையாளும் மிகவும் நுண்ணியமான சூழ்ச்சியின் கோட்பாட்டு வடிவமாகும். இதற்குத் துணை போகும் வகையில் ‘நான் ஒரு இலங்கையன்’ என்று கூறி பேராசிரியர் சிவத்தம்பி பெருமிதம் கொள்வது, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் அவரும் சிக்கியிருப்பதையே சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு புத்திஜீவிகள் தேவைதான்.
ஆனால் அவ்வாறான புத்திஜீவிகள் பௌத்தத்தின் வெற்றுப் ‘புத்தக’ஜீவிகளாகி சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகும் பொழுது, அவர்களுக்கு வரலாறு நிச்சயம் பாடம்புகட்டியே தீரும் என்பதில் ஐயமில்லை.
- சேரமான்
நன்றி்:ஈழமுரசு
Comments