சவால்களைக் கடந்து இலட்சியத்தை நோக்கிப் பயணிப்போம்

எத்தனை சவால்களிற்கு முகங்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்.

வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.’ என்று 2008 மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இக்கட்டுரையை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வேதனைகளும்; பெருமூச்சுகளும் நிறைந்த உணர்ச்சிமயமான காலமொன்றில் தமிழீழத் தமிழர்கள் நிற்கின்றார்கள.; முள்ளிவாய்க்காலில் எமது தேசிய ஆயுதப்போராட்டம் அனைத்துலக கொடூர கழுகுகளின் துணையுடன் மௌனிக்கப்பட்ட பின் ஆயிரமாயிரம் வீரவிழுதுகளால் கட்டிவளர்க்கப்பட்ட எமது விடுதலைத் தழல் அக்கினிப் பிரசவிப்புக்காக புலம்பெயர் தேசங்களில் அடைகாக்கப்பட்டுவருவது யாவரும் அறிந்தது.

ஆனால் நாம் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் உயிர்விலை கொடுத்து, அளப்பெரிய தியாகங்களைப்புரிந்து கண்ணீருடனும், வேதனைகளுடனும் போராடினோமோ, எத்தகைய மலைபோல இடர்கள் தொடர்ச்சியாக வந்தபோதும் எதற்கும் சளையாது இலட்சிய உறுதியுடனும் அளவிடற்கரிய நம்பிக்கையுடனும் கட்டிவளர்த்தோமோ, அந்த விடுதலைப் பெருநெருப்பு இன்று, புலத்திலிருந்துகொண்டு உலக ஓட்டம் காலம்விட்ட வழி என மேதாவித்தனமாகவும் அவநம்பிக்கைத்தனமாகவும் கதையளந்துகொண்டிருக்கும் அவநம்பிக்கையாளர்கள் எமது விடுதலைப்போராட்டத்தின் நெடிய வரலாற்றிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

இந்த வரலாற்று மீட்சியை அண்மை மாதங்களிலிருந்து ஆரம்பிப்பதே காலத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கும். தாயக விடுதலைப்போராட்டம் ஆபத்துக்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கின்றபோதெல்லாம் எமது தேசியத்தலைமை நம்பிக்கையுடன் எடுக்கின்ற முடிவானது போராட்டத்தின் ஆணிவேரினை பாதுகாத்திருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தை அழிவிலிருந்து பாதுகாத்து மீளெழவைத்திருக்கிறது. தொடர்ந்தும் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியிருக்கிறது.

துயர் தரும் இடர்களிலிருந்து மக்களையும், போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.

அது எமது போராட்டத்தின் இருண்ட காலம். 1987 ஒப்பரேசன் லிபரேசன் என்ற பெயரில் சிறீலங்கா அரசு தனது ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி, விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் எம் மக்கள் மீது ஒரு முற்றுகைப்போரை தொடங்கியது. அப்போது சிறீலங்கா இராணுவ இயந்திரத்தைவிட மிக்குறைந்த ஆளணி, ஆயுத வளங்களை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் மக்களையும், போராட்டத்தையும் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமைக்குள் தள்ளப்பட்டனர்.

இந்தக்கட்டத்தில் தேசியத்தலைமை எடுக்கப்போகின்ற முடிவை உலகம் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தது. எந்தநேரத்திலும் எதற்கும் கலங்காத தேசியத்தலைமை, அன்று எமது போராட்டத்திற்கு புதிய வடிவமான உயிராயுதத்தை கையில் எடுத்தது. போராட்டம் பாதுகாக்கப்பட்டது.

1987இல் உலகின் நான்காவது வல்லரசு இந்தியா தனது விசேட துருப்புக்களையும் நன்கு பயிற்றப்பட்ட அனுபவசாலிகளான தளபதிகளையும் வைத்துக்கொண்டு ஆயிரத்திற்குள் அடங்கலான விடுதலைப்புலிகளை மூன்று நாட்களிற்குள் அழித்துவிடுவோம் என கங்கணங்கட்டிக்கொண்டு புறப்பட்டபோது, மலைபோன்ற இந்தியப்படைகளுடன் சிறு துரும்புபோன்ற புலிகள் மோதி அழிந்து விடுவார்கள் என எல்லோரும் எதிர்வு கூறியபோது, தேசியத்தலைமை தனது கொள்கைமீது வைத்த அளவிடற்கரிய நம்பிக்கை இந்திய – புலிகள் போராக வெடித்தது.

எதற்கும் கலங்காத தலைமையையும், அவர் தலைமையில் உயிர் கொண்டு கருவாகிய இலட்சியத்தையும் எந்த வல்லரசுகளாலும் ஒன்றும் செய்யமுடியாதென உலகம் உணர்ந்துகொண்டது. விடுதலைப்புலிகளின் மீதும தலைமையின் மீதும தமிழ்மக்கள் மீதும் ஒரு பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் ஏற்பட்டது.

இப்படித் தமிழர்களுடைய தாயக விடுதலைக்கான நெடிய ஆயதப்போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு கட்டங்களிலும் தேசியத்தலைமை தான் தனித்து நின்று, மக்கள் மீதும் போராளிகள் மீதும், யாராலும் விலைபேசமுடியாத் தன் கொள்கைமீதும் வைத்த அளவிடற்கரிய நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் அவர் எடுத்த நிதானமான, வித்தியாசமான, புதிரான, தீர்க்கமான முடிவுகளாலும் எல்லா இடர்களையும் தாண்டி, சத்தியசோதனைகளை வென்று, புதிய பரிமாணங்களைக்கடந்து எமது போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியது.

எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒருமுக்கிய திருப்புமுனையில் நாம் நிற்கின்ற காலம் இது. மிக நீண்ட கடினமான நெருக்கடிகளும; தோல்விகளும், ஏமாற்றங்களும், துரோகங்களும் நிறைந்த வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து கொண்டு நிற்கிறோம். உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத சரித்திர சவால்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் சந்தித்து நிற்கின்ற இந்தச் சூழலில், எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு நம்பிக்கை என்ற அபூர்வ பலத்தில் கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் தற்காலிக வெற்றிடமொன்றை நிரப்புவதற்காக இன்று, புலம்பெயர் தமிழீழ மக்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, அதைச் சரியான திட்டமிடலுடன் அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னரே, எம் மத்தியில் எதிரிகளால் திட்டமிட்டு உள்நுழைக்கப்பட்ட துரோகிகளாலும், அவநம்பிக்கை வாதிகளாலும், சுயநல விசமிகளாலும் அவநம்பிக்கை விதை வீசப்பட்டு எம்மக்களின் இலட்சிய உறுதிப்பாட்டை கருக்கும் நாச வேலை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது கண்கூடு.

எத்தனையோ பெரிய பலம்வாய்ந்த எதிரியாலும், உலக வல்லரசுக் கழுகுகளாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களிற்கு அடிபணியாது, இலட்சிய உறுதியில் அசைக்கமுடியாத நம்பிக்கை என்ற ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும்வைத்து, உயிரை விலையாக்கி தமிழீழத்தனியரசு என்ற இலட்சியக்கோட்பாடு கட்டியெழுப்பட்டது. உலகத்தாலும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களாலும் அதன் சாத்தியப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேளையிலும் கூட, சில புல்லுருவிகளின் வஞ்சகத்தனமான செயற்பாடுகள் இன்று எம் போராட்டத்தை முன் நகர்த்திச் செல்லப்போகும்; மக்கள் மத்தியில், எமது இலட்சியத்தின் சாத்தியப்பாடுகள் குறித்த அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

எமது எதிரியாலும், தமிழீழத்தனியரசு அமைவதை விரும்பாத நாசகார சக்திகளாலும், எம்மத்தியில் ஊடுருவியுள்ள புல்லுருவிகளாலும் எமது போராட்ட இலட்சிய உறுதிப்பாட்டைக் குலைக்கும் நாசகார நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஆனால் போராட்டத்தின் நீண்ட காலகட்டங்களில் தளராது போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்த மக்கள் கூட்டமாகிய நாம் தேசியத்தலைமை கூறியதுபோல ‘விடுதலைக்காக இறுதிவரை எத்தகைய துன்பங்களையும் சுமக்கத்தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றெடுக்கும்ளூ என்ற அசையாத நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம்.

- மாதுளன்

Comments