இலங்கை விவகாரத்தில் இந்தியா இரண்டையும் இழக்கப் போகிறதா?



ஈழத்தமிழர் நிலையென்ன?

ஈழத் தமிழ் மக்களின் அவலம் என்பது சிறப்பானதொரு வெளியுறவுக் கொள்கையை வகுக்காததன் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. 1980ஆம் ஆண்டுகளின் மத்தியில் இதற்கான ஆய்வுபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் உணர்ச்சி வசப்பட்ட பார்வைகளினாலும், எழுந்த மாத்திரத்திலான அணுகுமுறைகளினாலும் அவை உரிய கொள்கை வகுப்பை ஈட்ட முடியாது போனது.

தந்திரி மலையை அனுமன் பெயர்த்தெடுத்துக் காவிச் சென்றது போல் இலங்கைத் தீவை இந்தியாவிற்கு அருகாமையிலான அதன் அமைவிடத்தில் இருந்து பெயர்த்தெடுத்து, வேறொரு தொலைதூர இடத்தில் அதனை அமைவிடப்படுத்த முடியுமாயின் எமக்கான வெளியுறவுக் கொள்கையை அவ்வப்போதைக்கு நாம் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இலங்கைத் தீவின் அமைவிட யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டே நாம் எமக்கான வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியும்.

அவ்வப்போது ஏற்படக்கூடிய அலை பாய்தல்களுக்குள் அகப்பட்டு வெளியுறவுக் கொள்கையை அதன் முழுநீளப் பார்வையில் இருந்து பிரித்து எம்மை நாம் பலியிட்டுவிடக் கூடாது.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது அடிப்படையில் ஓர் இந்தியப் பிரச்சினையாகும். இந்து சமுத்திரத்தின் நடுவே இந்தியாவின் வாசற்படியாய் இலங்கை அமைந்திருப்பதனால் இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தியும், இந்து சமுத்திர கடல்சார் போக்குவரத்துடன் சம்பந்தப்படுத்தியும் இலங்கை பார்க்கப்படுவதனால் அதன் பரப்பளவை விடவும் அதன் அரசியல், இராணுவ வரலாற்றுப் பருமன் மிகப் பெரிதாக உள்ளது. எனவே பரப்பளவாலும், மக்கள் தொகையாலும் இதனைப் பாராது இதன் அரசியல், பொருளாதார, இராணுவ கேந்திர முக்கியத்துவத்தினால் இது அளவீடு செய்யப்பட வேண்டியதாய் உள்ளது.

சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களை இந்தியாவின் நீட்சியாகப் பார்க்கின்றனர். இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாக இவர்கள் ஈழத் தமிழ் மக்களை வர்ணிக்கின்றனர்.

இத்தகைய அறிவையே சிங்கள உயர் குழாத்தினர் தமது அரசியல், மத ஆதிக்க தேவைகளின் நிமித்தம் சிங்கள பாமர மக்களுக்கு ஊட்டியுள்ளனர். ஆதலால் இனப்பிரச்சினை என்பது சிங்கள மக்களிடம் காணப்படும் இந்திய எதிர்ப்பு வாதத்தின் வெளிப்பாடே ஆகும்.

இன்னொரு வகையிற் சொன்னால் இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களவர் புரிகின்றனர். அதாவது ஈழத் தமிழ் மக்களைத் தோற்கடித்துவிட்டால் இலங்கையில் இந்திய ஆதிக்கத்திற்கு வாய்ப்பில்லாது போய்விடும் என்பதே அவர்களின் கண்ணோட்டமாகவும், மனப்பாங்காகவும் மாறிவிட்டது. இத்தகைய மனப்பாங்கு பாமர சிங்கள மக்களின் அடிமனத்தில் ஊறிவிட்டதால் இதனை இலகுவில் யாராலும் அகற்ற முடியாது. அந்த அளவிற்கு அது ஒரு நீண்ட கால வளர்ச்சியையும், அதற்கான ஐதீக நம்பிக்கையும் கொண்டு பலம் பெற்றுவிட்டது. இனிவரும் காலங்களில் இதனை மாற்றலாம் என்று நினைப்பது வரலாற்று வளர்ச்சிக்கு எதிரான ஒரு வெறும் கற்பனையாகவே இருக்க முடியும்.

இத்தகைய அடித்தள விளக்கத்தை வைத்துக் கொண்டுதான் ஈழத் தமிழ் மக்களின் விவகாரத்தையும், இலங்கைத் தீவின் அரசியலையும் நோக்க வேண்டும். நீண்டதூரப் பார்வையின்றி அவ்வப்போதைய கையாளல்கள் மூலம் சிங்கள ஆட்சியாளரையும், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையையும் கையாளலாம் என்று நினைப்பது முற்றிலும் எதிர்மறை விளைவிற்கே இட்டுச் செல்லும்.

இலங்கைக்கு உரித்தான அதன் தனித்துவ அரசியல் போக்குகளை ஆழமாகப் புரிந்து கொள்ளாது மேலெழுந்த வாரியாக அவ்வப்போதைக்கு ஏற்றவாறு மேற்கொள்ளப்படும் உடனுக்குடன் கையாளல்கள் விபரீதமான அரசியல் முடிவுக்கு வழிவகுக்கும்.

இந்தியா, மேற்குலகம், சீனா என அலைபாயும் கருத்துக்கள் இப்போது ஈழத் தமிழ் மக்களின் பக்கம் முன்னெழுந்துள்ளன. இதில் உணர்ச்சி வசப்படாத, அறிவுபூர்வமான, யதார்த்தத்திற்கு பொருத்தமான ஒரு திட்டவட்டமான பார்வை அவசியம். விருப்பு வெறுப்புக்கு அப்பால் இதனை நாம் ஆராய வேண்டும். இது தமிழீழத் தரப்பினருக்கும் சரி, இந்தியத் தரப்பினருக்கும் சரி ஒரே மாதிரிப் பொருந்தும்.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஆட்சி இலங்கையில் அமைக்கப்பட்ட போது முக்கியமான பண்பு ரீதியான மாற்றத்தை இலங்கைத் தீவு அடைந்தது. அதற்கு நேர் முன்னிருந்த பண்டாரநாயக்க அரசாங்கம் பெயரளவிலாயினும் இந்து சமுத்திர அமைதிக் கோட்பாடு, கலப்புப் பொருளாதாரம் என்ற கொள்கைகளை கொண்டிருந்தது.

ஆனால், அக் கொள்கைகளைத் தெளிவாக எதிர்த்தவாறு பனிப்போர் கால அமெரிக்கத் தலைமைக்கு பொருத்தமான திறந்த பொருளாதாரக் கொள்கையை நேரடியாகப் பிரகடனப்படுத்தி, வெளிப்படையாக மேற்குலகச் சார்புக் கொள்கையை ஜே.ஆர். பின்பற்றத் தொடங்கினார். அதுவும் திட்டவட்டமாக திறந்த பொருளாதாரக் கொள்கை என்பது அரசியல் யாப்பில் அழுத்தம் கொடுத்து வரையப்பட்டது. எனவே பின்வரக் கூடிய அரசாங்கங்கள் எதுவும் அதிலிருந்து வழுகிச் செல்ல முடியாதவாறு யாப்பு ரீதியான உத்தரவாதம் வகுக்கப்பட்டிருந்தது.

இப் பாதையில் அடியெடுத்து வைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இனப்பிரச்சினை யுத்தத்தின் பெயரால் சிங்கள மக்களின் பேராதரவுடன் அமெரிக்க சார்பை பலப்படுத்த முற்பட்டார். யுத்தம் – தமிழின எதிர்ப்பு – இந்திய எதிர்ப்பு என மூன்றையும் ஒன்று திரட்டி அதற்கான அமெரிக்க ஆதரவு என்ற சூத்திரத்தை சிங்கள மக்கள் மத்தியில் அவர் உருவாக்கிக் கொண்டார்.

இந் நிலையில், பனிப்போர் சூழலில் இலங்கையின் அமெரிக்க சார்பை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. சோவியத் யூனியனது தேவையும் இதுவாகவே இருந்தது. இந்தியாவின் பிராந்தியத் தலைமையின் கீழ் சோவியத் யூனியன் பின்னணியாக நின்று இதனைக் கையாளும் வியூகம் மேற்படி இரு அரசுகளுக்கும் இடையே வகுக்கப்பட்டது. அப்போதைய இரு மைய உலக அரசியலில் சிங்கள அரசின் அமெரிக்க சார்பு நிலையே இந்திய அரசை ஈழத் தமிழ் மக்களின் பால் திரும்ப வைத்தது.

ஈழத் தமிழ் மக்களின் துணை கொண்டு சிங்கள ஆட்சியாளரை அதன் அமெரிக்க சார்பில் இருந்து விலக்கி இந்தியாவுக்கு பாதகமற்ற ஒரு தற்காப்பு வியூகத்தை இந்திய அரசு வகுத்தது. இந்தியாவிற்கு சவாலாக எழுந்த அமெரிக்க அரசை மடக்க இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை 1987ஆம் ஆண்டு யூலை மாதம் இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களின் பெயரால் செய்து கொண்டது. இப்படி ஓர் ஒப்பந்தத்தால் அமெரிக்காவை தணிக்கவோ அல்லது விலகி நிற்க வைக்கவோ இந்தியாவால் முடிந்தது.

1980ஆம் ஆண்டுகளில் எழுந்த அமெரிக்க – இந்திய முரண்பாட்டில் இப்படி ஓர் ஒப்பந்தத்தால் இந்திய – அமெரிக்க சமரசம் சாத்தியப்பட்டது. ஆனால் 2010ஆம் ஆண்டுகளில் வளரக் கூடிய சீன – இந்திய முரண்பாட்டில் இப்படி ஓர் ஒப்பந்தத்தால் சீன – இந்திய முரண்பாட்டை சமரசம் செய்ய முடியாது என்பதே வரலாற்று வளர்ச்சியின் தீர்ப்பாய் அமையப் போகிறது.

அதாவது 1980ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இரு மைய அரசியலிலும், அன்றைய சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் அளவிலும் சாத்தியப்பட்டிருக்கக் கூடிய அமெரிக்க – இந்திய சமரசம் இன்றைய ஒற்றை மைய உலக அரசியலிலும், இன்று காணப்படும் உலகம் தளுவிய பொருளாதாரப் போட்டி வளர்ச்சி நிலையிலும் 2010ஆம் ஆண்டுகளில் சீன – இந்திய சமரசத்திற்கான வாய்ப்பு இலங்கைத்தீவின் விடயத்தில் இருக்க முடியாது.

இன்று ஏகாதிபத்தியம் என்பது வர்த்தக ஆதிக்கம்தான். பொருள் உற்பத்தியும், வர்த்தகமும் ஏகபோகத்தை அடைவதே ஏகாதிபத்தியம் என 1911ஆம் ஆண்டு வலதுசாரி ஆய்வாளர் ஒருவரால் கண்டறியப்பட்டது. இக் கோட்பாட்டையே பின்பு லெனின் விருத்தியாக்கி ‘முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம்’ என்ற கருத்தை நூல் வடிவில் முன்வைத்தார்.

அந்த வகையில் ஏகபோக வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு அரசும் ஏகாதிபத்திய அரசே ஆகும். இன்றைய உலக வர்த்தகம் என்பது மேற்படி ஏகபோக வர்த்தகமே ஆகும். ஆதலால் உலக வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு அரசும் அது சோஷலிச அரசாய் இருந்தால் என்ன, முதலாளித்துவ அரசாய் இருந்தால் என்ன ஏகாதிபத்திய அரசே ஆகும்.

இன்று முழு உலகமும், அனைத்து அரசுகளும் ஒரேயொரு ஏகாதிபத்திய முகாமிலேயே உள்ளன. இந்த ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான போட்டி தவிர்க்க முடியாத பொருளாதார நெருக்கடிகளால் முரண்பாடுகளாக முதிர்ச்சியடையும். இப் போட்டி முரண்பாடு சோஷலிசத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையேயான முரண்பாடாக அமையாது ஒரே ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போட்டி முரண்பாடுகளாகவே அமையும். முதலாம் உலக யுத்தமும், இரண்டாம் உலக யுத்தமும் சோஷலிசம் – முதலாளித்துவம் என்ற முகாங்களுக்கு இடையேயான யுத்தமாய் அமையவில்லை.

அப்படியே இனிமேல் வரக்கூடிய முரண்பாடுகளையும் சந்தைபிடி வர்த்தகப் போட்டி முரண்பாடுகளாக புரிந்து கொண்டால் சோஷலிசம், முதலாளித்துவம் என்ற வேறுபாடின்றி அமெரிக்கா, சீனா, ரஸ்யா, இந்தியா, ஜப்பான், மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்பற்றுக்கு இடையேயான வர்த்தக ஆதிக்கப் போட்டி அந்தந்த மட்டங்களில், அந்தந்தப் பிராந்தியங்களிற்கு ஏற்ப நிலவவே செய்யும்.

இத்தகைய பின்னணியில் இலங்கைத் தீவையும், சிங்கள அரசையும், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையையும் மேற்படி அரசுகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனியனாகவோ அன்றி அணிகளாகவோ பிரிந்து கையாளும்.

தற்போது சிங்கள அரசின் பக்கம் சார்ந்தும், சிங்களப் பிரதேசத்தைப் பெரிதும் சார்ந்தும், தனது அரசியல், பொருளாதார, வர்த்தகத் தளங்களை சீனா பலமாகப் போடத் தொடங்கிவிட்டது. சீனாவின் வளர்ச்சி வேகமும், சிங்கள அரசைச் சார்ந்த அதன் உறவும் பிரிக்க முடியாத வளர்ச்சியை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.

இந் நிலையில் ஈழத் தமிழ் மக்களின் விவகாரத்தை மேற்குலகம் இப்போது தன் கைக்கு எடுக்க விரும்புவதான சமிஞ்சைகளை பிரித்தானிய வெளியுறவுச் செயலரதும் (அமைச்சர்), பிரித்தானியப் பிரதமரதும் உலகத் தமிழ் பேரவையுடனான உறவின் வாயிலாக வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். இது ராஜபக்ச அரசின் சீன சார்புக்கு எதிரான ஓர் அபாய மணி அடிப்புத்தான்.

1980ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட அமெரிக்க – இந்திய முரண்பாட்டை ஈழத் தமிழ் மக்களின் பெயராலான ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவால் சமரசம் செய்ய முடிந்தது போல, 2010ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தீவை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரத்தில் எழக்கூடிய சீன எழுச்சிக்கு எதிரான முரண்பாட்டை இந்தியாவாலோ அன்றி அமெரிக்காவாலோ 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் போன்ற ஓர் ஒப்பந்தத்தினால் சமன் செய்ய முடியாது. அந்தளவிற்கு வரலாற்றின் முரண்பாட்டு வளர்ச்சி நிலை முன்னேறிவிட்டது.

1987ஆம் ஆண்டுச் சூழலில் இலங்கை அரசை அச்சுறுத்தி அதனை ஓர் ஒப்பந்தத்தை நோக்கிப் பணிய வைக்கத்தக்க வல்லமை அன்றைய இந்திய அரசுக்கு இருந்தது. ஆனால் இன்று அப்படி இலங்கை அரசை பணியவைக்க முடியாத அளவிற்கு அது தலையெடுத்துவிட்டது. குறிப்பாகத் தனக்குப் பொருத்தமான ஆசிய நாடுகளால் இலங்கை அரசு தன்னை அரணமைத்துக் கொண்டது. இலங்கையில் இந்தியாவிற்கு இலகுவான தெரிவுகள் இனியில்லை. காலப்போக்கில் கடுமையான தெரிவை நோக்கியே இலங்கை விவகாரம் நகர்ந்து செல்கிறது.

1980ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அமெரிக்கச் செல்வாக்கு தலையெடுத்த அளவை விடவும், 2010ஆம் ஆண்டுகளில் சீன செல்வாக்கு தலையெடுக்கும் அளவு பெரிதாக உள்ளது. 1980ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவை பின்வாங்க வைக்க இந்தியா கையாண்ட வழிமுறைகளைப் போல, 2010ஆம் ஆண்டுகளில் சீனாவைப் பின்வாங்க வைப்பதற்கான வழிமுறைகள் இந்தியாவிடம் இருக்காது. ஆதலால் சமரசத்திற்கு அப்பாலான பகை முரண்பாட்டை நோக்கியே நிலமை முதிர்ச்சியடையும் போல் தெரிகிறது.

இம் முரண்பாட்டில் சிங்களமும், சீனாவும் ஒரு பக்கம் நிற்கும். தனது பெருந்தொகையான செல்வத்தை சிங்கள அரசின் அனுசரனையுடன் தெற்கில் குவிக்கும் சீனா தெற்கைத் தனது ஆதாரமாக எண்ணியே செலவு செய்கிறது.

எனவே சிங்களத்தினதும், சீனாவினதும் இறுக்கமான உறவு மேலும் மேலும் வளரும்.

தந்திரோபாய ரீதியில் இந்தியாவிற்கு சிங்கள ஆட்சியாளர்கள் சில காலபோக விட்டுக்கொடுப்புகளைச் செய்தாலும், இறுதி அர்த்தத்தில் சிங்களம் சீனாவின் பக்கமே. நீண்ட உள்நோக்கத்துடன் தனது பெரும் செல்வத்தை தெற்கில் கொட்டிக் குவிக்கும் சீனா, கொழும்பை தனது பிடியிலிருந்து அசையவிடும் என யாரும் நினைத்தால் அது ஒரு மாபெரும் தவறாகும்.

இந் நிலையில், இந்தியாவின் முன் ஒரு கேள்வி எழுகின்றது. அது சிங்களத்தைச் சார்வதன் மூலம் இறுதியில் சிங்களத்தையும் இழந்து, தமிழையும் இழக்கப் போகிறதா? அல்லது தமிழை அரவணைத்து…?

அப்படியாயின் சீனாவுடன் போட்டியிடும் சக்திகள் சிங்களத்தை தம் தெரிவாகக் கொள்ள முடியாது. சிங்களத்தை அரவணைத்து போட்டியில் சில தணிப்புக்களை ஏற்படுத்தலாம். ஆனால் அது நீண்டகாலம் நிலைக்க மாட்டாது.

இறுதியில் சிங்களத்துடன் அணிசேரும் ஒரு பகுதி என்றும், ஈழத்துடன் அணிசேரும் இன்னொரு பகுதி என்றும் இரு பகுதிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தெளிவாகத் தோன்றிவிடும். அப்போது இந்த அணிகளின் முறுகல் நிலை முற்றும் போது 1987 போன்ற ஒப்பந்தங்களால் சமரசம் செய்ய முடியாத பிளவு மட்டுமே தீர்வாய் அமையும்.

இது விருப்பு, வெறுப்புக்கு அப்பாலான அரசியல், பொருளாதார, இராணுவ முரண்பாட்டு வளர்ச்சிகளின் தவிர்க்க முடியாத விதியாய் இருக்கும். இத்தகைய யதார்த்தத்தை சரிவரப் புரிந்தும், உள்வாங்கியும் விஞ்ஞான பூர்வமான முடிவை ஈழத் தமிழ் மக்கள் எடுக்க வேண்டும்.

Comments