சிறீலங்காத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் - வைகோ, நெடுமாறன் கைது

சென்னையில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தை மூடக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"பல இலட்சம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் எல்லைமீறி செயல்படுகிறது. மேலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்" போன்றவற்றை முன் வைத்தே தூதரகத்தை மூடுமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறீலங்கா அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள சிறீலங்காத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

அதன்படி ஆர்ப்பாட்டம் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிறீலங்காத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சிலர் சிறீலங்கா ஜனாதிபதியின் கொடும்பாவி உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் அனைவரும் சிறீலங்காத் தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர்.

பொலிசார் தடுத்தும் எவரும் நிற்கவில்லை.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.








படங்கள்: நக்கீரன்

தமிழகத்தில் இலங்கைத் துணைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்


சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் இலங்கைத் துணைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவலவன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து,

தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கண்மூடித்தனமாக சிங்கள அரசை ஆதரிக்கிறது நம் மத்திய அரசு. சீனாவை காட்டி மிரட்டி பணிய வைத்துக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

இப்படிப்பட்ட சிங்கள அரசின் ராசபட்சேவைத்தான் தமிழீழ மக்களின் இரத்தத்தால் உருவாக்கப்பட்ட சிவப்புக்கம்பளத்தால் வரவேற்றது இந்திய அரசு, மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட் மூவர் குழுவை கொழும்பில் இறங்க விடமாட்டேன் என ஐ.நா.பேரவையின் அலுவலகத்தை மூடிய ராசபட்சேவிற்கு எந்த அளவிற்கு நெஞ்சழுத்தம் இருக்கும்.

சர்வதேச சமூகத்தை அவமதித்த ராசபட்சேவின் இந்த செயல் இந்தியாவையும் சேர்த்து அவமதித்ததாகத்தனே அமையும். இந்த அவமதிப்பையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது நம் இந்திய அரசு.

இந்த அநாகரீக போக்கை கண்டிக்க வேண்டாமா? இந்திய அரசு. ராசபட்சே டெல்லி வந்த போது 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிகிறது. அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது தமீழீழ மக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டார்களா? அல்லது ஒட்டு தமிழக தமிழ் மக்களின் தலைவர் முதல்வர் அவர்களை கலந்தாலோசித்தார்களா? இல்லை.

எனவே, இனி வரும் காலங்களிலாவது இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் சம்மந்தமாக எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் தமிழக முதல்வர் அவர்களை கலந்தாலோசித்தப் பின் தான் முடிவெடுக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சிசார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும்உடனடியாக சென்னையில் உள்ள இலங்கைத்துணைதூதரகத்தை அப்புறப்படுத்தவேண்டும் எனவும் இந்த கண்டன ஆர்ப்பட்டம் மூலமும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம், என்றார் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்

Comments