சீமானின் கைது தமிழ் தேசிய விடியலுக்கான புள்ளி

இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார்.

ஆட்சியாளர்களாகிய இவர்கள் குற்றவாளிகளை தேடும் அழகினையும். அவர்களினை பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். இந்திய நீதிமன்றங்களால் கொலை ,கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான்.

கடமை உணர்வு மிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது.

யார் இதை கேட்பது..? இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..?

உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவித்த ராசபக்சே உல்லாச பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வழக்கு. போபால் விஷவாயு வழக்கில் முதன்மை குற்றவாளியான ஆண்டர்சனை அரசே விமானம் ஏத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது.

விமானத்தில் பாதுகாப்பாக ஆண்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி புன்னகை புகழ் நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்தியாவிற்கு வந்த‌ ட‌க்ளஸ் தேவான‌ந்தாவை கைது செய்ய‌க் கோரி, உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு இன்ன‌மும் வாய்தாவிற்கு வாய்தா என ந‌க‌ர்ந்து நிலுவையில் இருக்கிறது.

ஆனால் த‌ன‌து சொந்த‌ மீன‌வ‌ ச‌கோத‌ர‌னின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது. ஏனென்றால் சிங்களனைத் த‌ட்டிக் கேட்ப‌து என்ப‌து இந்திய‌ இறையாண்மைக்கு எதிரான‌ செயலாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிட்ட‌து. குற்ற‌வாளி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவைப் பிடிக்க‌ க‌டித‌ம் எழுதிய‌ த‌மிழ‌க‌ காவல் துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது.

அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனை காக்க துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே.. பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும் ,அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது எனவும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் தன் சொந்த காழ்புணர்ச்சியினாலும்..காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும். இவற்றை எல்லாம் பிரபாகரனை தன் ஆன்ம பலமாக கொண்டிருக்கும் சீமான் முறியடிப்பார்.

வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான...எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்த புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணர துவங்குவோம்.

நம் இன தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

நன்றி: தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

Comments