எக்பாவும் சீபாவும் அமெரிக்காவின் பேர்ள் துறைமுகமும்

பசுபிக் பிராந்திய கட்டளை மையத்திலிருந்து வருகை தந்துள்ள யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர் என்கிற அமெரிக்காவின் துருப்புக்காவி போர்க் கப்பல், திருமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள செய்தி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. செப்டெம்பரில் இன்னுமொரு போர்க் கப்பல் வருகிறது.

சிறிய தரையிறங்கு கலங்களை காவிச் செல்லும் இக்கப்பலில் 500 ஈருடக கொமாண்டோக்கள் பணியாற்றுகின்றனர். இதிலிருந்து தரையிறங்கியவர்கள், திரியாய் தமிழ் பாடசாலையில் வெள்ளை அடிக்கும் வேலையிலும் வளாகத்தை துப்புரவு செய்யும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு, அந்நாட்டின் தூதுவர்கள் அல்லது மனித நேய தொண்டுப் பணியாளர்கள் வருவது வழமையான விடயம்.ஆனால் அமெரிக்க போர்க் கப்பலின் வருகை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பொருண்மிய இராணுவ விரிவாக்கத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்டதென கருத இடமுண்டு.

சீனாவினது வளர்ச்சியானது இனிவரும் காலங்களில் அமெரிக்க சீன உறவில் பதட்ட நிலையை தோற்றுவிக்கும் வாய்ப்பினை உருவாக்குமென அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கில் தனது முழுமையான ஆளுமையை நிலை நிறுத்தியுள்ள அமெரிக்கா, அத்தகைய நிலையை கிழக்கில் சீனா பெற்றுவிடக் கூடாதென்பதில் அதிக கவனம் செலுத்தும். தைவான் உடனான சீனாவின் உறவு நிலை நெருக்கமடைவதால் ஒசீயானியா மற்றும் இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வலுவை அதிகரிக்க அமெரிக்கா அக்கறை கொள்கிறது.

ஜூன் 29 ஆம் திகதி சீனாவும் தைவானும் கைச்சாத்திட்ட வர்த்தக ஒப்பந்தம் தென் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வர்த்தக உறவு நிலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் தனது தேசத்தின் ஒரு பகுதியென தைவானைக் கருதி வந்த சீனா, மிக இறுக்கமான பொருளாதார வர்த்தக உடன்பாடொன்றில் அந்நாட்டுடன் கைச்சாத்திட்டது, அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் மேற்குலகில் உருவாக்கியது. இரு நாடுகளுக்கிடையே நிலவிய நம்பிக்கையீனத்தையும் பதட்ட நிலைமையையும் இவ்வொப்பந்தம் தகர்த்து விட்டதென்று கூறலாம். இது போன்ற ஒப்பந்தமொன்றிற்காகவே இந்தியாவும் காத்திருக்கிறது.
அதாவது இந்தியாவானது இலங்கையோடு செய்து கொள்ளத் துடிக்கும் சீபா ஒப்பந்தமும் ஏறத்தாள இந்த வகையைச் சார்ந்தது தான். எக்பா உடன்படிக்கையில், தைவானிலிருந்து ஏற்றுமதியாகும் 13.8 பில்லியன் டொலர் பெறுமதியான 539 பொருட்களின் சுங்கவரி குறைக்கப்படும். அதேவேளை சீனாவிலிருந்து தைவானுக்கு இறக்குமதியாகும். 2.86 பில்லியன் டொலர் பெறுமதியான 267 பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி குறைக்கப்படுகிறது. இவ் வரிக் குறைப்பு, தைவானின் பொருளாதார உயர்விற்கு சாதகமாக அமைவதை நோக்கலாம். அத்தோடு சீனாவின் வங்கி, காப்புறுதி, வைத்தியத்துறை, நிதித் துறை போன்ற 11 சேவைத் துறைகளில் தைவான் நுழையக் கூடிய வழிவகைகளும் இவ்வொப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வகையான சேவைத் துறைகளில் இந்திய உள்நுழைவு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியே சீபா ஒப்பந்தத்திற்கெதிராக அலரி மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததை நினைவிற் கொள்ளலாம். தைவானைப் பொறுத்தவரை மே 2008 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அதிபர் மா யிங் ஜியாவ் அவர்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களை புறந்தள்ளி இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான முழுமையான பொருண்மிய உடன்பாடுகள் தைவானின் இறைமையை சீனாவிற்கு தாரை வார்த்து விடுமென்று அஞ்சப்படுகிறது.

சீன எதிர்ப்புவாதிகளால் முன் வைக்கப்படும், அரசியல் நலன் சார்ந்த இத்தகைய எதிர்ப்பலைகளின் பின்னணியில் மேற்குலகமும் கிழக்காசியாவின் வர்த்தக துறை ஜாம்பவான்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இவ்வொப்பந்தம் ஊடாக 110 பில்லியனாக இருக்கும் இரு தரப்பு வர்த்தகம், மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அத்தோடு தைவானின் தேசிய உள்ளூர் உற்பத்தி (எஈக) 1.7 சதவீதமாக உயர்வடையுமெனவும் 2.6 இலட்சம் தைவானியர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. இது போன்ற பிரத்தியேக வரி விலக்குகள் மூலம் ஏற்கனவே தென் கிழக்கு ஆசியாவிலுள்ள 10 நாடுகளுடன் சீனா தனது வர்த்தக உறவினை வலுப்படுத்தி வருவதும் தைவானின் இந் நகர்விற்கான முக்கிய காரணியென்று பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

"சீனாவைப் பொறுத்தவரை, தனது அண்டைய நாடுகளுடனான பொருண்மிய உறவினை துரிதமாக வலுப்படுத்தும் அதேவேளை இந்தியாவினால் கைவிடப்பட்ட மியன்மாரிலும் இயலாமல் போன இலங்கையிலும் தனது முதலீடுகளை குவிக்க ஆரம்பித்துள்ளது. அரசு சார்பான வங்கிகளும் நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதால் இடைவெளி நிரப்பும் நகர்வுகளை மிக இலகுவாக சீனாவால் மேற்கொள்ள முடிகிறது. சீனாவின் ஒற்றையாட்சி முறைமையும் இறுக்கமான தலைமைத்துவமும் தீர்மானம் மேற்கொள்வதில் காலத்தை கடத்துவதில்லை. சீன தைவான் வர்த்தக ஒப்பந்தமானது புதிய பொருண்மிய வலு மையத்தை உருவாக்கப் போவதை அவதானிக்கலாம்.

சீன பெரு நிலப் பரப்பு தைவான் மற்றும் ஹொங்கொங் ஆகியவற்றின் 1.36 பில்லியன் நுகர்வோர் இணைந்து அதன் கூட்டு மொத்த உள்ளூர் உற்பத்தியின் அளவை 5.39 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பார்களென்று நம்பப்படுகிறது. இதன் எதிர்வினையானது, ஜப்பான், தென் கொரியா போன்ற மேற்குலக ஆதரவு நாடுகளைப் பாதிக்கும். அதாவது புதிய சுங்க வரிச் சலுகையால், சீனாவிலுள்ள தைவான் நிறுவனங்கள், அங்குள்ள ஜப்பான், தென் கொரியா நிறுவனங்களோடு போட்டியிடக் கூடிய வலிமையைப் பெற்றுவிடும். இவை தவிர இவ்வொப்பந்தமானது காலப் போக்கில், இரு தரப்பு வர்த்தக உறவுகளை நிறுவன மயப்டுத்துவதை ஊக்குவிக்குமென நம்பப்படுகிறது.வர்த்தக உறவுகள் நிறவன மயமானால் மேற்குலகின் இணைந்த பொருளாதார கட்டமைப்பு போன்று, ஆசியாவிலும் தனக்கான ஒரு பொருண்மிய சாம்ராஜ்யத்தை சீனா நிறுவி விடும்.

அதன் அடுத்த கட்டமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆசிய நாணய நிதிய உருவாக்கத்திற்கு புத்துயிர் கொடுக்கவும், பொது நாணயமொன்றினை உருவாக்கவும் சீனா எத்தனிக்கும்.ஆகவே அமெரிக்காவானது தைவானைக் கைவிட்டால் ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளோடு இந்தியாவும் அதன் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இத்தகைய சந்தேகங்களைப் போக்குவதற்குரிய நடவடிக்கைகளை இராணுவ நகர்வுகள் மூலம் வெளிக்காட்ட அமெரிக்கா விரும்புவது போலுள்ளது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், திறைசேரிகளே திவாலாகும் நிலை காணப்படுவதால் ஆசியாவில் முதலீட்டுப் போட்டியில் ஈடுபட அமெரிக்க நிறுவனங்களும் முன் வருவதில்லை.அமெரிக்காவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனத்தை சீனா கொள்வனவு செய்யவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் படைப் பலம் சார்ந்த முறுகல் நிலை தோன்றும் வாய்ப்பினை நிராகரிக்க முடியாதுள்ளது. அமெரிக்க போர்க் கப்பலின் வருகை ஆசிய அரசியலில் ஒரு சிறு புள்ளி போல் தெரிந்தாலும் புவிசார் அரசியல் என்கிற பூதக் கண்ணாடி, அதன் முழுமையான வடிவத்தை தெளிவாகக் காட்டுகிறது.

இதயச்சந்திரன்

நன்றி்:வீரகேசரி

Comments