வலிநீக்கி மாத்திரைகளுடன் வாழும் போர் கால விதவைப் பெண்கள் - கத்தோலிக்க குருக்கள்

வடக்கில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட கொடுர ஆக்கிரமிப்புப் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்களில் 40,000 இற்கும் மேற்பட்டோர் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அபிவிருத்தி அமைப்பினால் (UNIDO) இனங்காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்படாது மேலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் விதவைப் பெண்கள் இருக்கலாம் என நம்பப்படும் பின்னணியில், அடையாளம் காணப்பட்ட விதவைப் பெண்கள் வலிநீக்கி மாத்திரைகளுடன் (பனடோல், பரசிற்றமோல்) தமது அன்றாட வாழ்வைக் கழித்து வருவதாக, வடக்கிலுள்ள கத்தோலிக்க குருக்கள் பலரை ஆதாரம்காட்டி பன்னாட்டு கத்தோலிக்க இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க குருக்கள் 20 பேர் வரையில் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, குறிப்பாக விதவைப் பெண்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

போரினால் கணவனை இழந்து பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் உள்ளுர் கடைகளில் வலிநீக்கி மாத்திரைகளை நாளாந்தம் இலகுவாகப் பெறுவதாகவும், அவற்றின் மூலம் உளவியல் தாக்கத்தில் இருந்து அவர்கள் மீள முற்படுவதாகவும் மீளக் குடியேறிய மக்கள் மத்தியில் பணியாற்றிவரும் கத்தோலிக்க குருக்களில் ஒருவரான ஈ.எஸ்.சி.மரியதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

எற்கனவே போரினால் பாதிப்பட்டு, கணவனை இழந்துள்ள இளம் பெண்கள் பலர் பாதுகாப்பற்ற சூழலில் தற்பொழுது மீளக்குடியேறி இருப்பதால், அவர்களின் உளவியல் தாக்கம் மேலும் அதிகரித்து வருவதை பதிவு இணையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அத்துடன், சிறீலங்கா படையினரது பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தொடர்ந்து வருவதும், பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்வதும் இந்தப் பெண்களின் உளவியலை மேலும் பாதிக்கின்றது.

பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் தனிமையில் வாடும் இளம் பெண்கள் மீண்டும் திருமணம் முடித்துக்கொள்ள விரும்பின்றிக் காணப்படுவதாகவும் மரியதாஸ் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் சமூகத்தில் குறிப்பாக ஒருசில ஆண்கள் மத்தியில் காணப்படும் மனோநிலை காரணமாகவே அவர்கள் இவ்வாறு மறுமணத்திற்குப் பின்னிற்கின்றனர்.

வன்னியில் மீளக்குடியேறியுள்ள விதவைப் பெண்கள் உட்பட ஒவ்வொருவரும் மாறி மாறி தம்மிடம் வந்து தமது கவலையை, இழப்பை, கோபத்தை நாளாந்தம் வெளிப்படுத்தி வருவதாகவும், விதவைப் பெண்கள் 620 பேரையும், பெற்றோரை இழந்த சிறார்கள் 25 பேரையும் தான் பணியாற்றும் இரண்டு கிராமங்களில் பராமரித்துவரும் மரியதாஸ் அடிகளார் குறிப்பிட்டார்.

சிறிய தற்காலிக குடிசைகளுக்குள் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் காணப்படுவதாகவும், சில வேளைகளில் இரவு நேரங்களில் எழுந்து கதறி அழுவதாகவும் இந்த அடிகளார் தெரிவித்துள்ளார்.

Comments