ஆசியப் பிராந்திய கடலாதிக்கமே புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்

ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்யுத்த களத்தினை செய்மதியூடாகத் தரிசித்த வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது இறுதிப் போரில், கடற்புலிகளை வெற்றி கொண்ட சிங்களத்தின் போரியல் நுட்பங்களை அறிந்து கொள்ள உலக நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு படையெடுப்பதாகச் சிலர் தவறான கற்பிதம் கொண்டுள்ளார்கள்.

யுத்த களத்தினை செய்மதி ஊடாக தரிசித்த மாபெரும் வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது. செயற்கைக் கோள் வழிகாட்ட பிராந்திய கடற்படைகள் புடை சூழ நிகழ்த்தப்பட்ட இறுதி மோதலின் படை நகர்வுச் சூத்திரங்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு புதிதாக எதைக் கூறப் போகிறது இலங்கைக் கடற்படை? இந்த கப்பல் திருவிழாவை அண்மையில் ஆரம்பித்து வைத்தது இந்தியாதான். இந்தியப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். டெல்கியை கொழும்பு கடற்பரப்பில் நிறுத்தி விட்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார் அந்நாட்டின் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா.

அதனைத் தொடர்ந்து பசுபிக் பிராந்திய கட்டளை மையத்திலிருந்து அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர் என்கிற தரையிறங்கு கலங்களைக் கொண்ட போர்க் கப்பல் திருமலையில் நங்கூரமிட்டு பாடசாலைகளுக்கு வெள்ளையடித்தது. இனப்பிரச்சினைக்கு நல்லிணக்கமும் கடற்படைக்கு நல்லுறவும் பேணப்படுவதன் அவசியம் குறித்து, இனி உதவி இராஜாங்க அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அவர்கள் பிரசங்கம் செய்ய முற்படலாம்.போர்க் கப்பல்களின் உலா இத்தோடு முடிவடையவில்லை.

கடந்த 15 ஆம் திகதியன்று பங்களாதேஷின் போர்க் கப்பலான பி.என்.எஸ். அதுசாந்தன் கொழும்பை வந்தடைந்தது. அதில் வந்த கடற்படையினர், அலரி மாளிகைக்கு வெள்ளையடிக்க விரும்பலாமென்கிற குசும்புச் செய்தியும் கொழும்பில் உலா வந்தது.இவை தவிர, இன்னுமொரு ஐ.என்.எஸ். நிரூபக் என்கிற இந்திய போர்க் கப்பலொன்றும் திருமலைத் துறைமுகத்திற்கு வருகை தந்தது.இரண்டு தடவைகள் இந்தியப் போர்க் கப்பல்கள் மேற்கொள்ளும்பயணங்கள், கடற்புலிகளை வீழ்த்திய சூத்திரங்களை முதற் கப்பலில் வந்தோர் கிரகித்துக் கொள்ளவில்லை என்கிற அனுமானத்தை ஏற்படுத்தி விடும்.

இத்தோடு முற்றுப் பெறவில்லை போர்க் கப்பல்களின் பயணங்கள்.கடந்த வியாழனன்று, 42 அதிகாரிகளையும் 204 கடற்படையினரையும் கொண்ட "வாங் ஜியோன்' என்ற தென் கொரிய போர்க் கப்பலொன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொரிய வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையோடு இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போகும் தென்கொரியா, கடற் புலிகளை அழித்த ஸ்ரீலங்காவின் போர் உத்திகளைக் கற்றறிந்து வட கொரியாவோடு மோதத் தயாராகிறதென்றும் சில இராணுவ ஆய்வாளர்கள் கூற முற்படுவார்கள்.அதாவது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதற்கு ஸ்ரீலங்காவின் தனிப் பலமும் போர் உபாயங்களுமே காரணமென்று கூற முற்பட்டால், அது புவிசார் அரசியல் நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாததன் வெளிப்பாடாகவே இருக்கும்.

போரிற்கு உதவி செய்தவர்களைக் காப்பாற்றும் தந்திரமும் அவ்விவாதத்தில் கலந்திருக்கும். காசாவில் அவலப்படும் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் துருக்கிக் கப்பல்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை, இஸ்ரேலியக் கடற்படைக்கு இலங்கை கடற்படையினரே பயிற்சி அளித்ததாகவும் கூற முற்படுவார்கள். ஆகவே கடல் ஆதிக்கப் போட்டி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆரம்பமாகிவிட்டதென்பதையே, இப் போர்க் கப்பல் களின் உலாக்கள் எமக்கு உணர்த்துகின்றன.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் கிலாரி கிளின்டன் அவர்களின் கொரிய விஜயமும், அமெரிக்க கடற்படையின் வலுவினை நிலை நிறுத்த, தென் கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபடப் போவதாக அவர் விடுத்த அறிவித்தலும் ஆசியக் கடற் பிராந்தியத்தில் ஏற்படப் போகும் கடலாதிக்க வலுச் சமநிலை மாற்றத்தை எடுத்துக் கூறுகிறது. வருகை தந்த போர்க் கப்பல்கள் அனைத்தும் துருப்புக்களை தரையிறக்கும் கலங்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சடுதியான தரையிறக்கம் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் ஏற்படுமாயின் அதற்கு ஒத்திசைவான நிலைமை, இந்த துறைமுகங்களில் காணப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளவும் இப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இவை தவிர, கடற்புலிகளோடு மோதுவதற்கு அதிவேக டோறாப் படகுகளையும் புலிகளின் தரை, கடல் நகர்வுகளை முறியடிக்க 16 கிபீர் மிகையொலி போர் விமானங்களையும் வழங்கிய வள்ளல் இஸ்ரேலினை, அதன் இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா பாராட்டிய விடயமே, இலங்கை அரசியலில் தற்பேõது பேசப்படும் சூடான செய்தியாக இருக்கிறது

பாலஸ்தீனப் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக வர்ணித்துள்ள தூதுவர், பாலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டுமெனக் கூறுகின்றார்.பயங்கரவாதத்தைத்தோற்கடித்து விட்டதாக ஸ்ரீலங்காவுக்கு வாழ்த்துக் கூறிய பாலஸ்தீனத்திற்கு இது தேவைதான். இலங்கையைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்து, இலங்கையின் இறைமையைக் காப்பாற்றுவதல்ல, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசாளர்களின் நோக்கம்.

பயங்கரவாத ஒழிப்பு என்கிற போர்வையில், போர்ச் சுவாலைக்கு நெய் ஊற்றி, இலங்கையை தம்வசப்படுத்தலாமென்கிற பிராந்திய நலன்சார் அக்கறையோடுதான் இவர்கள் செயற்பட்டார்கள்.போர் நீடிக்குமாயின் சீனாவின் முதலீட்டு விரிவாக்கம் அதிகரிக்குமென்று மேற்குலகமும் இந்தியாவும் அச்சமடைந்தன.ஆனால் யுத்த வெற்றியை அரசியல் மூலதனமாக்கும் பேரினவாத ஆட்சியாளர்கள் குறித்து இவர்கள் கவலைப்படவில்லை. இனச்சிக்கலை தமது பிராந்திய நலனிற்காகப் பயன்படுத்த முனைந்த இந்தியா இன்று சீனாவின் காலூன்றலை தடுக்க முடியாமல் தவிக்கிறது.

சீன உள்நுழைவிற்கும் அதனால் உருவாகும் பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமே காரணமென்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமக்குள் பேசிக் கொண்டாலும் வெளிப்படையாக அதனைக் கூறுவதில்லை.பயங்கரவாத ஒழிப்பிற்கு உதவி புரிந்தோமென்று விளக்கமளிப்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.தமிழீழம் அமைந்தால், அது இந்தியாவிற்கான பாதுகாப்பு தடுப்பரணாக விளங்குமென்று, தமிழக தமிழின உணர்வாளர்கள் கூறுவதை பரிசீலிக்கும் கையறு நிலையும் இனி இந்தியாவிற்கு ஏற்படலாம்.

80 களில் அமெரிக்காவின் உள் நுழைவினைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுத போராட்டம், 2009 இல் சீனாவின் காலூன்றலைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒடுக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள திறைசேரி காலியாகும் ஆபத்தினால் யூரோ நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆகவே இதைச் சீர் செய்வதற்கு சீனாவின் பாரிய முதலீடுகளை ஜேர்மன் நாடு எதிர்பார்க்கிறது. அதாவது சீனாவின் அந்நிய நாணய நிதியத்தில் இருக்கும் 20 சதவீத அளவு யூரோவைக் குறி வைத்தே அம்மையாரின் வர்த்தக உடன்பாட்டு நகர்வு அமைந்துள்ளதென்று கருதுவது பொருத்தமாகவிருக்கும்.

சீனப் பிரதமர் வென் ஜியாபாவுடன் உரையாடல் நிகழ்த்திய அம்மையார், சீன சந்தையின் அந்தஸ்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்க தான் வழி செய்வதாகவும் அதேவேளை அதற்கான பிரதியுபகாரமாக ஜேர்மனிய தொழில் நிறுவனங்களுக்கு சீனாவில் சந்தை வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். ஆகவே சீனாவிற்கான கனிமப் பொருள் ஏற்றுமதியால் பொருண்மியம் உயர்வுறும் அவுஸ்திரேலியாவும் தனது அதியுயர் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை தேடும் ஜேர்மனியும் "சீபா' போன்ற முழுமையான பொருளாதார ஒப்பந்தங்கள் செய்த தைவானும் மேற்குலக அணியிலிருந்து விலகிச் செல்வது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது 1.24 ரில்லியன் மொத்த தேசிய உற்பத்தி கொண்ட இந்தியாவிற்கும் பல நெருக்கடிகளை ஆசியாவில் உருவாக்கப் போகிறது.

கப்பல் பயணங்கள் போன்று, இனி மேற்குலக இராஜதந்திரிகளின் பயணங்களும் அதிகரிக்கும். அண்மையில் சர்வதேச எரிசக்தி முகவர் அமைப்பு விடுத்த அறிக்கையில், கடந்த ஆண்டிற்கான சீனாவின் எண்ணெய்க் கொள்வனவு 2.2 பில்லியன் மெட்ரிக் தொன்களை எட்டி, அமெரிக்காவையே மிஞ்சி விட்டதென கூறப்பட்டுள்ளது.இதில் கொள்வனவாகும் 70 விழுக்காடு எண்ணெய், இந்து சமுத்திரக் கடற்பரப்பினூடாகவே சீனாவைச் சென்றடைகிறது.

இந்த எண்ணெய் விநியோகம் தடுக்கப்பட்டால், சீனாவின் அபரிமிதமான பொருண்மிய வளர்ச்சி, நிச்சயம் வீழ்ச்சியடையும். பின்னர் ஜேர்மனிய அதிபரும் அங்கு செல்லமாட்டார், தைவானின் உடன்பாடுகளும் செயல் இழந்து போகும். ஆகவே ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் எவர் கையில் செல்கிறதோ, அந்த வல்லரசே புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்.

இதயச்சந்திரன்

நன்றி:வீரகேசரி

Comments