‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம் வெதும்பிக் கிடப்பது மூடத்தனம்.அதனால்தான், அடிபட்ட புலியாய் மறுபடியும் ஆர்த்தெழத் தொடங்கி இருக்கிறது தமிழினம். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசு அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. சட்டத்துக்கு உட்பட்டு தமிழர்கள் எடுக்கும் இத்தகைய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் சிங்களத்தின் கழுத்தில் கயிறு வீசி இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒருசேர நாம் திரள்வதுதான் நம்மை சதிராடியவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். இதை தமிழகத் தமிழர்களும் தணியாத வேகத்தோடு கையில் எடுக்க வேண்டும்! ” என, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்கள் பயணம் சென்று வந்திருக்கும் கவிஞர் தாமரை தான் இப்படி தகிக்கிறார். உலகத் தமிழர்களின் உணர்வுகள் குறித்து அவரிடம் பேசினோம்.
”சிறப்புத் தூதர் அனுப்பச் சொல்லியும், மீள் குடியேற்றத்துக்கு உதவக் கோரியும் முதல்வர் கருணாநிதி எடுக்கும் முயற்சிகளை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கி றார்கள்?”
”கருணாநிதியை வசைபாடுகிறார் கள். ‘அவருக்கு நாங்க என்ன பாவம் பண்ணினோம்? அவர் நினைச்சிருந்தா, இந்த அழிவைத் தடுத்திருக்கலாமே! இத்தனை மக்கள் செத்தும் அவர் மனசில் இரக்கமே சுரக்கலையா?’ எனத் தாய்மார்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினார்கள். ஜெயலலிதாவை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. கடைசி நேரத்திலாவது எப்படியாவது தலையிட்டு கருணாநிதி போரை நிறுத்திவிடுவார் எனப் புலம்பெயர் தமிழர்கள் நம்பி இருந்தனர். ஆனால் , வெறுமனே உண்ணாவிரதம், கடிதம் என கருணாநிதி நடத்திய நாடகங்கள் அவர்களைப் பொங்கவைத்துவிட்டது. தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத பல உலக நாடுகள் ராஜபக்ஷேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கச் சொல்லி போராடி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம்கூட இயற்றாமல், இன்னமும் கடிதம் எழுதுவதை உலகத் தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை. இதற்கிடையில், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவம் உலகத் தமிழர்களைப் பெரிதாகக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. அவர்களின் அகராதியில் கருணாநிதி என்கிற பெயரைக்கூட இனி வைத்திருக்க மாட்டார்கள்!”
”முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு உலகளாவிய தமிழர்களிடம் என்ன எதிர்வினை?”
”செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாடு வாழ் தமிழர்களையும் நான் சந்தித்தேன். கவியரங்கம் என்ற பெயரில் நடந்த புகழார வைபோகங்களைச் சொல்லி, ‘இதுதான் செம்மொழிக்கான சிறப்பா?’ என வேதனைப்பட்டனர். தனது கறையைத் துடைக்க கருணாநிதி எடுத்த முயற்சியாகவே செம்மொழி மாநாட்டைப் புலம்பெயர் தமிழர்கள் பார்த்தார்கள்.
அந்த மாநாட்டின் மொத்த நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. மாநாட்டில் எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு குறைகள்தான். தமிழனின் சாதனைச் சின்னங்களாக 40 ஊர்திகளை அணிவகுக்கச் செய்தார்கள். அதில் 41-வது ஊர்தியாக ‘இப்படி எல்லாம் வாழ்ந்த தமிழனை எப்படி எல்லாம் காட்டிக்கொடுத்தோம்’ என்பதையும் அணிவகுக்கச் செய்திருந்தால், தமிழின வரலாறு முழுமை பெற்றிருக்கும். அடுத்து, மாநாட்டை முடித்துவைக்க ராஜபக்ஷேயை அழைத்திருக்க வேண்டும். தமிழினத்தை முடித்துவைத்ததுபோல், தமிழ் மாநாட்டையும் அவர் முடித்துவைத்திருந்தால் பொருத்த மாக இருந்திருக்கும். விட்டுத்தள்ளுங்கள் அந்த வீண் கச்சேரியை..!”
”சீமானின் கைது ஏதேனும் கவனிப்பைப் பெற்றிருக் கிறதா?”
”உலகளாவிய தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாகப் பார்க்கிறார்கள். அவர் வெளியில் இருந்து தொடர்ந்து போராட வேண்டும் என எண்ணுகிறார்கள். நான் சென்ற பல இடங்களிலும் அவருக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது. அதே நேரம், திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதைத் துரோகத்தின் துணையாகப் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்தாலும்கூட வைகோவை அவர்கள் மிகுந்த மரியாதையோடு பார்க்கிறார்கள்!”
”நடிகை அசின் தொடங்கி கருணாஸ் வரையிலான விவகாரங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் உங்களிடம் குமுறியதாக இணையதளங்களில் செய்தி வந்திருக்கிறதே?”
”ஈழத்தில் போர் நடந்தபோது இந்த அசின் எங்கே போனார்? இந்திப் பட ஷ¨ட்டிங்குக்காக இலங்கைக்குப் போனதாகச் சொல்லும் அசின், அங்கே தமிழர் களுக்குக் கருணையோடு உதவியதாகவும் படங்கள் வெளியிட்டிருக்கிறார். ராஜபக்ஷேயின் மனைவியோடு கை குலுக்கியபடி அவர் கருணைத் தாயாக மாறிய மர்மம்தான் தெரியவில்லை. ஷ¨ட்டிங் என்கிற பெயரில் இலங்கைக்கு செல்வதாகச் சொல்லும் திரைப்படத் துறையினர் ஓர் உண்மையைத் தயவுகூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். ஈழப் படுகொலைகளுக்கு தக்க விளைவாக இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை. இலங்கை அரசுக்குப் பிரதான வருமானம் சுற்றுலாதான். ஷ¨ட்டிங்குக்காகத் திரைத் துறையினர் அங்கே போனால், அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு நாமே உதவுவது போன்றதாகிவிடும். இந்த உலகில் ஷ¨ட்டிங் நடத்த வேறு இடமே இல்லையா? அசின் இந்திப் படத்தில் நடிக்கும் தைரியத்தில் தன் தரப்பை நியாயப்படுத்துகிறார். ஆனால், அவர் தமிழ்ப் படத்தில் தலைகாட்ட முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கிடைக்கும். சிங்களத்துக்குத் துணைபோகும் அத்தனை நட்சத்திரங்களையும் அடியோடு புறக்கணிக்க உலகத் தமிழர்கள் தயாராகிவிட்டார்கள்!”
”கலைக்கு மொழி கிடையாது என்றும், நட்சத்திரங்கள் இலங் கைக்குச் செல்லும் விவகாரத்தில் அவரவர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளில் தலை யிடுவது தவறு என்றும் அசினுக்கு ஆதரவாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சொல்லி இருக்கிறாரே?”
”கலைக்கு மொழி கிடையாது எனச் சொல்லும் சரத்குமாரை இந்தியில் போய் நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். கலைக்கு மொழி இல்லை என எவரும் சொல்ல முடியாது. தமிழ்ப் படத்தை தமிழர்கள்தானே பார்க்கிறார்கள். அசினுக்கு ஆதரவாக சரத்குமார் சொன்ன கருத்தில் உலகத் தமிழர்கள் ஒருவருக்கும் உடன்பாடு இல்லை. அவர் தன்னல நோக்கில் செயல்படுவதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அசின், கருணாஸ் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குச் செல்வதில் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன் என்கிற பின்னணியை உலகத் தமிழர்கள் நன்றாக உணர்ந்துவைத்திருக்கிறார்கள். தமிழ் நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்து பொருளாதார மேம்பாடு அடையத் துடிக்கும் சிங்கள சதிக்கு சரத்குமார் ஆளாகி விடக் கூடாது என்பதுதான் என் பதற்றம்.
தமிழ் ஒருங்கிணைப்பைக் குலைக்கும்விதமாக கோடான கோடிகளைக் கொட்டி வரும் இலங்கைத் தூதர் அம்சா, தமிழ் நட்சத்திரங்கள் சிலரை லண்டனுக்கு வரவழைக்கப்போகிற விஷயத்தையும் உலகத் தமிழர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால், நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடும், இன உணர்வோடும் செயல்பட வேண்டும். காரணம், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல… நடிகர் சங்கத் தலைவர்… ஒரு கட்சியின் தலைவர். அவர் மூலமாக தமிழ்த் திரையுலகையே இரண்டாக்க முடியும் என்பது சிங்கள அரசு போட்டுவைத்திருக்கும் திட்டங்களில் ஒன்று. அதற்கு சரத்குமார் ஒருபோதும் உடன்படக் கூடாது! கொல்லப்பட்ட மக்களின் பக்கமா… கொடூர ஆட்டம் போட்ட சிங்களத்தின் பக்கமா என்பதை தமிழ் நட்சத்திரங்கள் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது!”
”சுப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் தொடங்கி ஈழப் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களின் நிலைமை குறித்து தெரியவந்ததா?”
”தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மே – 17 வரை போர்க்களத்தில் இருந்து, எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம், ‘தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்’ என்கிற முழக்கத்தைத் தவிர்த்து, ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கப்பூர்வமான கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஒப்படைக்கும்!” – நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொல்கிறார் கவிஞர் தாமரை.
- இரா.சரவணன்
நன்றி-ஜூனியர் விகடன்
Comments