இந்தியாவை பகைக்க விரும்பாமையால் அழிந்து போன ஈழத்தமிழினம்

கடவுளை நம்பி வள்ளத்தை கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத்தமிழர் நிலை.

கடவுள் தன்னை எப்படியும் வந்து காப்பாற்றிவிடுவார் என்ற நினைப்பில் அருகில் வந்த படகையும் கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத் தமிழரின் நிலை.

எப்படியும் அருகில் இருக்கும் இந்தியா தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத்தமிழர்,

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நாட்டுடனும்.......இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வமான தொடர்பைப் பேணவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.

சீனாவுடன் நல்லதொரு தொடர்பை வைத்திருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர் இன்று சுதந்திர தமிழீழத்தை பெற்றிருப்பார்கள்.

ஏதோ வாய்க்கு வந்தபடி சீனாவையும் அதன் தோழமை நாடுகளையும் வசைபாடுவதனால் இந்திய சமுத்திரப் பிராந்திய பூகோள-அரசியலில் தமிழர் எதனையும் அடைந்துவிட முடியாது என்பதை மனதில் வைத்துச் செயல்பட்டிருந்தால் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழத்தைப் பெற்று இருந்திருப்பார்கள். ஆனால் ஈழத்தமிழர் அதைச் செய்யவில்லை. ஆனால் இலங்கை அரசோ இந்தியாவையும் அதன் பகைமை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் தன் தோழமை நாடுகளாக அரவணைத்தே வைத்திருந்தது.

ராஜீவ் காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி பல ஆயிரம் தமிழரை பழிவாங்கும் வேளையிலாவது தமிழீழத் தலைமை இந்தியாவின் பகைமை நாடுகளுடன் உறவை பேணியிருந்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை காரணம் இந்தியாவை அவர்கள் இறுதிவரை நம்பியே தமது கள நிலைமைகளுக்கு ஏற்ப திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக தென் இந்தியாவின் எதிர்ப்பை ஈழத்தமிழர் எப்பொழுதும் இழந்துவிடக்கூடாதென்ற கோட்பாட்டுடனேயே ஈழத் தலைமைகள் செயல்பட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவோ தனது வக்கிரப்போக்கினால் ஏதோ ராஜீவ் காந்தியின் மரணத்தை சாக்காக வைத்து ஈழத் தமிழரின் மானமிகு போராட்டத்தை அழிக்க உதவியது.

சாறம் கட்டிய பொடியன்களால் இந்தியாவை எதுவும் செய்து விடமுடியாது என்று அன்று சொன்னார் ராஜீவ். இழிச்ச வாய் தமிழர்களை எப்படியும் ஏமாற்றி விடலாமென்ற கைங்கரியத்துடன் களம் இறங்கியது இந்தியா. இதற்கு துணை போனார்கள் தமிழினக் காவலர்கள். கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரின் சுயநிர்ணயக் கோரிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்னராகவே இந்தியா ஊடாக பெற்றுக் கொடுத்திருக்க முடியும். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்திருந்தால் தனித் தமிழீழம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்திருக்கும்.

இந்தியாவிற்கு இலங்கை விடயம் ஒரு பெரும் பிரச்சனை அல்ல. சில நாட்களில் கிழக்கு பாகிஸ்தானை மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து சுதந்திர பங்களாதேஷ் என்ற நாட்டைப் பெற்றுத்தந்த இந்தியாவிற்கா குட்டி நாடான இலங்கை விடயத்தில் தலையிட்டு தமிழீழத்தை பெற்றுத்தரமுடியாமல் போய்விடும்.

மேற்கு வங்காளிகள் தமது அனைத்து விருப்பு வெறுப்புக்களையும் துறந்து சுதந்திர பங்களாதேஷை உருவாக்க துணை நின்றார்கள். மொழியால் ஒன்றிணைந்த இவர்களினால் இந்தியாவை தம் பக்கம் திருப்பி பல லட்சம் பாகிஸ்தான் இராணுவத்தை கைது செய்தும் கொன்றும் பங்களாதேஷை உருவாக்க முடியுமானால், ஏழு கோடிக்கு மேலிருக்கும் தமிழ் நாட்டு மக்களால் ஏன் ஈழத்தமிழரின் விடுதலையை இந்தியாவூடாக பெற்றுத் தரமுடியாமல் போய்விட்டது. அனைத்திற்கும் காரணம் தமிழ்நாட்டுத் தலைவர்களின் சொந்த நலன்களும் மற்றும் பரந்த இராஜதந்திர திட்டமிடல் இல்லாததுமே. ஆனால் இவர்களை நம்பிச் சென்று அனைத்தையும் துறந்தது தான் ஈழத் தமிழர் கண்ட பலன்.

சீனாவிற்கு தேவை நட்பைத் தவிர வேறொன்றுமில்லை

திறந்த பொருளாதாரக் கொள்கையில் இறுக்கமாக இருந்த சீனா, தனது சர்வாதிகார ஆட்சி ஊடாக மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கியது. எந்தவொரு மதத்திற்கும் முன்னுரிமை தராமல் ஆட்சி நடத்தும் சீனா, இன்று தன்னை விட எந்தவொரு நாடும் உலகத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலையில் பொருளியல் புரட்சியை செய்து கொண்டிருக்கின்றது. இதற்கு கடல் பிராந்தியம் மிக முக்கியமானது. இதன் பாதுகாப்பு இருப்பை பலப்படுத்த தேவையானது கடலை அண்டிய நாடுகளுடன் நட்புறவைப் பேணி அந்தப் பகுதிகளில் தனது இருப்பை உறுதியாக்கிக் கொள்வது.

சீனாவின் கனவுக்கு சளைக்காமல் தானும் சீனாவின் அரசியல் கொள்கையுடன் ஒத்துப்போவதாக கூறி, சிவப்பு சால்வயை அணிந்து சென்றார் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. பணம் கொடுக்காமலே ஆயுதங்களை மற்றும் போர் விமானங்களை வாங்கிக் குவித்தார் மகிந்தா. மேலும் ஒரு படிமேல் சென்று சீனா இலங்கைக்கு தனது போர் வீரர்களை அனுப்பி தமிழரை அழிக்க உதவி புரிந்தது. இவையெல்லாம் போதாதென்று இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பல வேலைகளை இலவசமாக செய்து கொண்டிருக்கின்றது. இருபதாயிரத்திற்கு மேலான சீனக்கைதிகள் இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் புனர்நிர்மாண வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த மாதம் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இறால் மற்றும் சிறு மீன்களை பிடிப்பதற்கு சீன மீனவர்களை இலங்கை அரசு அனுமதித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக சீனாவில் இருந்து குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சீன ராணுவ அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக சீனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆனால் இந்தியா வாய்மூடி மௌனியாகவே இப்பொழுதும் உள்ளது.

ஒரு சாமானியனாலேயே ஊகிக்க முடியும் எதற்காக சீனா இவையெல்லாவற்றையும் இலவசமாக இலங்கைக்கு செய்கின்றது என்று. குறிப்பிட்ட சில காரணங்களாவன: இந்தியாவை இலங்கையின் உள்விவகாரங்களில் இருந்து ஒதுக்க வேண்டும், இலங்கையில் குறிப்பாக தமிழர் கடல் பிராந்தியத்தில் உயிர்வாழும் விலை பெறுமதிக்க முடியாத அரிய மீன்வகைகளை பிடித்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்க வேண்டும், கடல் தொழிலாளர் என்ற பாசாங்கில் சீனாவின் உளவுத்துறையினரை அனுப்பி இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளை கண்காணிக்க வேண்டும், சீனாவின் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மற்றும சீனாவின் கடல்படையின் பலத்தை இந்தியச் சமுத்திரத்தில் நிரந்தரம் ஆக்க வேண்டும். இப்படியாக காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அருகில் இருக்கும் இந்தியாவோ, என்ன செய்வதென்றறியாது திணறிப்போய் இருக்கின்றது என்றால் மிகையாகாது. இன்று இந்தியாவைச் சுற்றி அதன் பகைவர்கள் பாதுகாப்பான பாசறைகளை அமைத்துக்கொண்டு இருகின்றார்கள். ஆனால் இந்தியாவோ ஏதோ தான் தீண்ட முடியாத நாக பாம்பு என்ற மமதையில் இருக்கின்றது. இதற்கு காரணம் இந்திய காங்கிரஸ் கட்சியின் தெளிவில்லாத வெளியுறவுக் கொள்கை. நேரு, இந்திரா காந்தியினால் கடைப்பிடிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை இன்று ஆளும் கட்சிகளினால் அடியோடு மாற்றப்பட்டு இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இந்தியாவை அடகு வைக்குமளவு நிலை மோசமாகிவிட்டது. இந்தியாவின் இன்றைய போராட்டம் என்னவென்றால் தானும் பொருளாதார ரீதியாக சீனாவைத் தோற்கடித்து விடவேண்டும் என்ற முழுமூச்சுடன் செயலாற்றுகின்றது என்பது தான் உண்மை. ஆனால் பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள தேவைப்படும் பிற காரணிகளை அடியோடு மறந்து செயலாற்றுகின்றார்கள் இந்திய ஆளும் வர்க்கத்தினர்.

இன்று சீனா இந்தியாவுடனும் சமரசப் போக்கையே கையாள முனைகின்றது. ஆனால் மறைமுகமாக பல சிறிய நாடுகளுடன் நட்பைப் பேணி பல வேலைத்திட்டங்களை செய்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக மாலைதீவு, பர்மா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் எப்படியும் கொண்டுவந்து விடவேண்டும் என்ற நிலையில் உள்ளது சீனா. இதன் பல முயற்சிகளிலும் வெற்றியும் கண்டுவிட்டது சீனா. ஆக சீனா தமிழரையும் வெறுப்பு இனமக்களாக வைத்திருக்க விரும்பவில்லை. அத்துடன் சிங்களவருடனும் நல்ல நட்பை பேணுகின்றது சீனா. இதற்கு தேவை நட்பாளிகளே தவிர பகையாளிகள் அல்ல.

சீனாவின் விருப்பை அறிந்து நட்பை பேணுமா தமிழினம்?

இக்கேள்விக்கான விடையை அறிந்து அடுத்த கட்ட காய்நகர்த்தலை ஈழத்தமிழர் செய்தால் நிச்சயம் கடந்த வருடம் இடம்பெற்ற பாரிய இழப்பை எதிர்காலத்தில் தவிர்த்து தமிழரின் தார்மீக அரசியல் கோரிக்கையை பெற்றுவிடலாம் என்பது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆக உலகம் அனைத்தும் விரிந்து பரந்து கிடக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களின் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தியாவையும் கைவசம் வைத்துக்கொண்டு அதன் பகை நாடுகளுடனும் மிக நெருங்கிய நட்புறவைப் பேணுவதன் மூலமாகத் தான் தமிழரின் கோரிக்கையை விரிவாக்க முடியும்.

தமிழர்கள் பல பரிமாணங்களில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுத வழிப்போரில் எப்படி பல பரிமாணங்கள் உண்டோ அதைப்போலவே தான் இராஜதந்திர வழிமுறையும். தமிழருக்கு சீனாக்காரன் எந்தக் காரணத்தினாலும் எதிரியல்ல. அதற்கான சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை. சீனத்துப்பட்டு வியாபாரத்தை சீனரும் தமிழரும் பண்டைய காலத்தில் செய்தார்கள். கராத்தே என்ற பண்டைய கலையை தமிழரிடத்தில் இருந்து கற்று அதனை உலகமயமாக்கினார்கள் சீனர்கள். ஆக யாருக்கும் யாரும் எதிரியல்ல.

அன்று சிவத்த சால்வையுடன் சென்று ஆதரவு திரட்டி தமிழரை அழித்தார் ராஜபக்ச. ஆனால் தமிழர்களோ இந்தியா மட்டுமே உற்ற நட்பு நாடு என்ற வகையில் செயல்பட்டார்கள். ஆகவே இந்தியாவின் பகை நாடுகளுடன் தொடர்பை பேணக்கூடாது என்பது தான் முட்டாள்த் தனமான தமிழர்களின் தவறு. அன்று தமிழனும் சீனாக்காரனுடன் நல்ல தொடர்பை பேணியிருந்தால் தமிழருக்கு எதிரான மனித உரிமைப் பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபைகளினால் விவாதிக்க்கப்பட்ட பொழுது சீனா மற்றும் ரஷ்யா வாய்மூடி மௌனியாக இருந்திருக்கும். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய குழு விசாரணையை வெற்றிகரமாக முடித்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இருக்கும் ஐந்து நிரந்திர உறுப்புநாடுகளின் ஆதரவு தேவை ஏற்படும். இந்த இரு நாடுகளின் எதிர்கால செயற்பாடு ஈழத் தமிழரின் பல விடயங்களில் பிரதிபலிக்கும் ஆகவே வரமுன் காப்போம் என்ற ரீதியில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள் ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். சீனா மற்றும் இந்தியா என்ன சொல்கின்றதோ அதைத்தான் ரஷ்யா செவிமடுக்கும். குறிப்பாக சீனாவின் வலது கரமாக தொடர்ந்தும் இருக்கின்றது ரஷ்யா. ஆக தமிழர்கள் சீனாவை நட்பாக்கிக் கொண்டால் நிச்சயம் ரஷ்யாவும் தமிழர் பக்கமே. இதனை புரிந்து அடுத்த கட்ட காய்நகர்த்தலை மேற்கொள்ளுமா தமிழினம் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

உலகத்தமிழர்களிடம் கிடைக்கப்பெற்று இருக்கும் அரிய செல்வாக்கு என்னவென்றால் அவர்கள் பல நாடுகளில் பரவி பல வேற்றின மக்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். சீனத் தலைவர்களுடன் பேச்சு நடாத்துவதற்கு உலகத்தமிழர்கள் பெரும் துணையாக இருப்பார்கள். சீனர்களின் ஆட்சியே சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. இந்த அரசில் பல தமிழர்கள் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். பல சீனத்து வணிகர்களுடன் பல ஈழத்தமிழர் தொடர்பை வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரினது தொடர்பே போதும் சீன நாட்டு தலைவர்களை சந்தித்து ஈழத் தமிழரின் தார்மீக அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற தேவையான ஆதரவைப் பெறுவதற்கு.

தற்பொழுது தமிழர்கள் துணிந்து எந்த வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளலாம். காரணம் அவர்களின் ஆயுதப் போராட்டம் ஓங்கியிருந்த வேளையில் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களுமாகவே தான் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் அடியோடு அழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்து இருக்கும் இவ்வேளையில் எதற்காக தமிழர்கள் அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை செய்ய தயங்குவது.

வெறுமனே சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை வசைபாடுவதை விடுத்து ஆக்கபூர்வமான இராஜதந்திர நடவடிக்கைகள் ஊடாக உலகின் அனைத்து நாடுகளையும் நேசக்கரம் கொண்டு அரவணைப்பதுடன் மிக நட்பை பேணுவதனூடாக தமிழரின் கடந்த கால அறவழி மற்றும் ஆயுத வழிப்போராட்டங்கள் ஒரு போதும் வீண்போகவில்லை என்பதை பறைசாற்ற முடியும். நான்காம் கட்டப்போர் உக்கிரமடைந்து, ஆயுதப் போராட்டம் தற்கால பின்னடைவை சந்தித்திருந்த வேளையில், ஈழத்தை வெல்லும் பொறுப்பை உலகெங்கும் பரந்து வாழும் தமிழரிடம் ஒப்படைத்தார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.

உலக நாடுகளை நேசநாடுகளாக வைத்திருப்பதன் மூலமாக ஈழத்தமிழரின் அரசியல் கோரிக்கையை விரைந்து பெற்றுவிடலாம். கடவுள் வந்து காப்பாற்றுவார் என்ற முட்டாள்தனமான கற்பனையில் மிதக்காமல், உலகத் தமிழருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் அரிய செல்வாக்குகளை பயன்படுத்தி எதிரிகளையும் நண்பர்களாக்கி தமிழர் கண்ட கனவை மெய்ப்பித்தல் செய்வதே சாலச் சிறந்தது.

nithiskumaaran@yahoo.com/
அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments