எம்மை நாமே அழிப்பதற்கு இனியும் துணை போகப் போகின்றீர்களா ?

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புலத்திலும் தலத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம்.

சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள்.

இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள்.

தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால்,

அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்),

தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால்,

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள்.

தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது.

தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது.

எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்.

எமக்கென்று ஒரு நாடு வேண்டும்.

அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும்.

யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.

மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது.

பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார்.

எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது.

நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலை செய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.

தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள்.

இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள்.

இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா?

அன்பான தமிழ் மக்களே!

ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம் ???


ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம் ???

தயவுசெய்து சிந்தியுங்கள் !!!!!!!!


முரளி நடேசன்

தணல்

Comments