இறுதி யுத்தத்தில் தம்மிடம் சரணடைந்த போராளிகளின் நல்வாழ்விற்கான செயற்திட்டங்கள் என்ற போர்வையில், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடமிருந்து பெரும் தொகையில் நிதியைத் திரட்டுவதற்கான திட்டம் ஒன்று, கே.பி குழுவினர் ஊடாக சிங்கள அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கே.பி அவர்களின் தலைமையில் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனத்தின் ஊடாகவே இதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
புகலிட தேசங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோர் யார்?
இவர்களின் பின்னணி என்ன?
சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் செயற்படுத்துவதன் சூத்திரம் என்ன?
போன்ற கேள்விகள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே எழுவது இயல்பானதே. இவற்றுக்குப் பதிலளிப்பதற்கான தெளிவூட்டல் களமாகவே இக்கட்டுரை விரிகின்றது.
கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் கிளிநொச்சியை ஆக்கிரமித்து, யாழ் - கண்டி நெடுஞ்சாலையை தமது முழுமையான ஆதிக்கத்தின் கீழ் சிங்களப் படைகள் கொண்டுவந்ததை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பாடல்களுக்கான வாய்ப்புக்கள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்தன.
போர் ஓய்வுக் காலப்பகுதியில் அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்தரப்பினருடன் பல்வேறு சந்திப்புக்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் நிகழ்த்தி வந்த பொழுதும், 2006ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் மாவிலாறு யுத்தம் தொடங்கிய பின்னர், வன்னிக்கு வெளிநாட்டு இராசதந்திரிகள் பயணம் செய்வதற்கான வாய்ப்புக்களை மகிந்தரின் அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.
இவ்வாறான பின்புலத்திலும்கூட, போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் போன்றோர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தமது தரப்புச் செய்திகளை நேரடியாகவே வெளிநாட்டு இராசதந்திரிகள் வழங்கி வந்தார்கள். எனினும் கிளிநொச்சியையும், யாழ் - கண்டி நெடுஞ்சாலையையும் சிங்களப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டதைத் தொடர்ந்து இதற்கான வாய்ப்புக்கள் முற்றாகவே அற்றுப்போயிருந்தன.
1995 முதல் 2002 ஆண்டு வரையான காலப்பகுதியிலும், ஏறத்தாள இதற்கு ஒப்பான சூழலே நிலவியிருந்தது. சூரியக்கதிர் நடவடிக்கையை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்ட பொழுது, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் ஊடாகவும், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களின் அதிகாரிகள் வாயிலாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மறைமுகத் தொடர்பாடல்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் பேணிவந்திருந்தார்கள்.
எனினும் 1998ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ சிகிச்சையின் நிமித்தம் வன்னியை விட்டு வெளியேறி இலண்டனை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வந்தடைந்ததை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்பீடத்துடன் தங்குதடையின்றி நேரடித் தொடர்பாடல்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் பேணுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆலோசகர் என்ற வகையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்ற காலப்பகுதியில் இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளை தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு அமைய வடிவமைத்த தத்துவாசிரியர் என்ற விதத்திலும், இயக்கத்தின் அரசியல்-இராசரீக மூலோபாய நடவடிக்கைகளில் முதன்மையான பாத்திரத்தை வகித்த இராசதந்திரி என்ற வகையிலும், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளை பேணுவது வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கு இலகுவாகவே அமைந்திருந்தது.
இதன்பின்னர் போர் ஓய்வுக் காலப்பகுதியில் வன்னிக்கு இராசதந்திரிகள் அடிக்கடி சென்று வருவதற்கு கிடைத்த வாய்ப்பு என்பது, இந்தத் தொடர்பாடலை மேலும் மேம்படுத்தியிருந்தது. எனினும், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவைத் தொடர்ந்தும், வன்னிக்கான தரைவழித் தொடர்புகளை மகிந்தரின் அரசாங்கம் முடக்கியிருந்த சூழலிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பாடல்கள் தடைப்பட்டிருந்தன.
இறுதிப் போர் உச்சகட்டத்தை எய்திய பொழுது, இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் என்பது தமிழீழ அரசியல்துறையினர் - தமிழீழ சமாதான செயலகத்தினர் ஊடான தொலைபேசித் தொடர்பாடல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதேநேரத்தில், யுத்தம் உச்சகட்டத்தை எட்டிய பொழுது, அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரம்பெற்ற போர்நிறுத்தத்தை விரைவாக ஏற்படுத்தி, சிங்கள அரசின் இனவழித்தொழிப்பு நடவடிக்கையில் இருந்து வன்னி மக்களை பாதுகாப்பதற்கான அவசர தேவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
இதற்கு ஏதுவான பணிகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக மேற்கொள்வதற்கான ஆளுமை மிக்க ஒருவருக்கு புகலிட தேசங்களில் வெற்றிடம் நிலவிய நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாடல்களுக்குப் பொறுப்பாக கே.பி அவர்களை நியமிப்பதற்கான முன்மொழிவு, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ஆகியோரால் தேசியத் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு முதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தயக்கம்காட்டிய பொழுதும், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, கே.பி அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிப்பதற்கு பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இணங்கியிருந்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், கே.பியின் நியமனம் என்பது போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதையும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்ததே தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமாக அமையவில்லை.
இதேநேரத்தில், இதனை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட கே.பி, போர் ஓய்வுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளில் இருந்து நீக்கப்பட்ட பலரை, இராசதந்திர தொடர்பாடல் நடவடிக்கைகள் என்ற போர்வையில் தன்னோடு மீண்டும் இணைத்துக் கொண்டிருந்தார்.
இவர்களுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவில் உதவியாளர்களாகப் பணியாற்றிய கலாநிதி ஜோய் மகேஸ்வரன், சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன் ஆகியோரும், இடைக்கால நிர்வாக வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சிலரும் இணைந்து கொண்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்ட பொழுது, தென்சூடானிற்கு அங்கீகாரம் கிடைத்தது போன்று, தமிழீழ நிழல் அரசுக்கும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை தம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று, வி.உருத்திரகுமாரன், கலாநிதி ஜோய் மகேஸ்வரன் ஆகியோர் தமிழீழ தேசியத் தலைவரிடம் வாக்குறுதியளித்திருந்தனர்.
இதேபோன்று இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது, கே.பியின் வழிகாட்டலில் அமெரிக்காவில் இருந்து செயற்பட்ட வி.உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களுடன் தாம் பேசிக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்க ஈரூடகப் படையினரின் உதவியுடன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் தாம் ஈடுபடுவதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். (இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கு எழுதப்பட்ட திறந்த மடலில் இக்கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.)
இது இவ்விதமிருக்க, கடந்த ஆண்டு மே 17ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கிய இறுதி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிங்களப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த இறுதிக்கணங்களில், பிரித்தானியாவின் சணல்-4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய கே.பி, ஆயுதங்களை கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக அன்று ஏறத்தாள நான்கு மணிநேரத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தான் தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறியிருந்தார்.
வன்னியில் இறுதிக் கணம்வரை நின்று களமாடிப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ள போராளிகளின் தகவல்களின் படி, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோருடன் மட்டுமே கே.பி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
இறுதிப் போரின் உச்சகட்டத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கும், கே.பி அவர்களுக்கும் இடையில் எவ்விதமான தொலைபேசித் தொடர்பாடல்களுக்கு இருக்கவில்லை என்பதை, இப்போராளிகள் அடித்துக் கூறுகின்றனர். இந்த நிலையில் நான்கு மணிநேரம் தலைவருடன் தான் உரையாடியதாக கே.பி கூறியது ஓர் அப்பட்டமான பொய் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது.
தவிர, நான்கு மணிநேரத்திற்கு தொடர்ச்சியாக செய்கோள் தொலைபேசியில் உரையாடுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்பது தொலைபேசித் தொழில்நுட்பம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இதற்கிடையே, மே 18ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாக சிங்களப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டதை தொடர்ந்து, புகலிட தேசங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, முழுவீச்சுடன் கே.பி தொடங்கியிருந்தார்.
இதன் முதற்கட்டமாக, 2003ஆம் ஆண்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளில் இருந்து முற்றாக நீக்கப்பட்ட பிரான்சை சேர்ந்த மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன், நோர்வேயை சேர்ந்த சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேஸ்வரன் போன்றோரையும், அதற்கு முன்னரான காலப்பகுதியில் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடாவை சேர்ந்த பேரின்பம் என்றழைக்கப்படும் பே.இன்பநாயகம், முரளி என்றழைக்கப்படும் நடராஜா முரளீதரன் போன்றோரையும், தனது முதன்மைக் கடலோடியாக விளங்கிய பிரான்சை சேர்ந்த கங்கா என்பவரையும் முன்னிலைப்படுத்தி, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கே.பி இறங்கியிருந்தார்.
இதில் மனோ, சர்வே ஆகியோர், 1992ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கே.பியின் இரண்டு கரங்களாகவே செயற்பட்டிருந்தனர். 1980களின் நடுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளராக கடமையாற்றிய மனோகரன், 1997ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னிக்கு லோறன்ஸ் கிறிஸ்ரி திலகர் அவர்கள் மீள அழைக்கப்பட்டதை தொடர்ந்து, கே.பி அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் அங்கீகாரம் இன்றியே, மனோ அவர்களை அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக கே.பி நியமித்ததோடு, இது தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிடமிருந்து விளக்கம் கோரப்பட்ட பொழுது, நீண்டகாலமாக இயக்க செயற்பாடுகளில் பிரான்சில் இருந்து செயற்படுபவர் என்ற வகையிலேயே மனோவை அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக தான் நியமித்ததாகவும், அவர் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் என்றும் கே.பி பதிலளித்திருந்தார்.
உண்மையில் 1997ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு நிர்வாகம் என்பது கே.பியின் முழுமையான ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. யுத்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி தென்தமிழீழத்தில் கருணா அராஜக ஆட்சிபுரிந்தமை போன்று, இக்காலப் பகுதியில் வெளிநாட்டில் கே.பியின் ஆதிக்கமும் அமைந்திருந்தது.
இதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே கிளையின் பொறுப்பாளராக விளங்கிய சர்வேயை, லெப்.கேணல் நாதன் அவர்களின் படுகொலையை தொடர்ந்து அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக கே.பி நியமித்திருந்தார். எனினும் போர்ஓய்வுக் காலப்பகுதியில் இவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினர் வன்னிக்கு அழைத்த பொழுது, தனது குடும்ப வாழ்க்கையையும், துணைவியாரையும் கைவிட்டு, தன்னால் தாயகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்க முடியாது என்று கூறி, இயக்க செயற்பாடுகளில் இருந்து விலகி ஒஸ்லோவில் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர்களை விட கனடாவை சேர்ந்த பேரின்பம் என்பரை, 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்துலக நிதிசேகரிப்பு நடவடிக்கைகளின் முதன்மையான ஒருவராகவே கே.பி ஈடுபடுத்தியிருந்தார். அப்பொழுது பிரான்சின் விலையுயர்ந்த பகுதி ஒன்றில் நிலச்சொத்துக்களை கொள்வனவு செய்திருந்த இவர், கனடாவில் நான்கு நகைக்கடைகளின் உரிமையாளராகவும் விளங்கி வந்தார்.
ரஞ்சன், குமார் போன்ற பெயர்களில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியா, யேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளை வலம்வந்த இவர், தான் தமிழீழத்தில் இருந்து வந்திருப்பது போன்ற பிரம்மையை உருவாக்கி, கே.பியின் நிதிசேகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கனக்கச்சிதமாக நடைமுறைப்படுத்தி வந்தார். இதேபோன்று, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்காக சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முரளி என்பரை தென்னாபிரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த கே.பி, பின்னர் அவர் கனடாவை சென்றடைவதற்கு உதவி புரிந்திருந்தார்.
இவ்வாறாக, மே 18இற்குப் பின்னர் புகலிட தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சி கைகூடாத நிலையில், மனோ, சர்வே, பேரின்பம், முரளி போன்றோரின் உதவியுடனும், தனது வார்த்தைக்கு கட்டுப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை ஒருங்கிணைத்தும், வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் போன்றோரின் ஆலோசனையைப் பெற்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டத்தை கே.பி வெளியிட்டிருந்தார்.
இதன் இணைப்பாளராக வி.உருத்திரகுமாரன் அவர்களை கே.பி நியமித்த பொழுதும், இதனை திரைமறைவில் இருந்து இயக்குவதற்கான பொறுப்பு, மனோ, சர்வே ஆகியோரிடமும், போர்ஓய்வுக் காலப்பகுதியில் சிரான் அமைப்பின் பணிப்பாளராக விளங்கிய செல்வின் அவர்களிடமும் கே.பி அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
இதேபோன்று தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகப் பிரகடனம் செய்து, தனது வார்த்தைகளுக்கு கட்டுப்படும் காகிதப்புலிகளைக் கொண்ட தலைமைச் செயலகமும் கே.பி அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த இரு கட்டமைப்புக்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதே கே.பியின் நோக்கமாக அமைந்திருந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசின் கைக்கூலியாக கே.பி செயற்படுவதை மருத்துவர் அருட்குமார் அவர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ள நிலையில், கே.பியின் இந்தத் திட்டத்தை மக்கள் யூகித்துக் கொள்வது கடினமானது அல்ல.
இதில் குறிப்பாக கடந்த ஆண்டு மே 23ஆம் நாளுக்குப் பின்னர் ஜி.ரி.வி, பி.பி.சி தமிழோசை போன்ற ஊடகங்களுக்கும், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயங்கும் தமிழ் வானொலிகளுக்கும் செவ்வியளித்த கே.பி, புதிய பாதையில் இனிமேல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயணிக்கும் என்றும், ஏனைய தமிழ் கட்சிகளுடனும், முன்னாள் போராளி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபடுவதாகவும் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், தனது இரு கட்டமைப்புக்களையும் நிறுவும் பணி பூர்த்தியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாத முதல்வாரத்தில் சிங்கள அரசிடம் கே.பி சரணடைந்திருந்தார். ஆரம்பத்தில் கே.பியின் சரணடைவு, சிங்கள அரசின் எல்லைதாண்டிய கடத்தல் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட பொழுதும், அது கே.பி அவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது தற்பொழுது வெள்ளிடைமலையாகியுள்ளது.
இதேநேரத்தில் கே.பியின் சரணடைவைத் தொடர்ந்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடிப்பதற்கு தன்னால் நிறுவப்பட்ட இரு கட்டமைப்புக்கள் ஊடாக கே.பி எடுத்த முயற்சி நிறைவேறவில்லை. கே.பியின் இந்த முயற்சிக்கு இடையூறாக புகலிட தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அமைந்ததோடு, தமிழீழ தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களும், நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தமிழ்த் தேசிய உணர்வாளர்களை மக்கள் தெரிவுசெய்தமையும், கே.பியின் சதிநோக்கத்தை தடுத்து நிறுத்துவதில் காத்திரமான பங்கை வகித்திருந்தன.
ஒருபுறம் தமிழீழ தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான புகலிட உறவுகள் உற்சாகமாக பங்கேற்றதோடு, தவறான சக்திகளின் கைகளில் நாடுகடந்த அரசாங்கம் என்ற பரப்புரைத் தளம் சென்றடைவதையும் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனால் சீற்றம் கொண்ட கே.பி குழுவினர், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாக்குமோசடிகள் இடம்பெற்றதாகப் பொய்யுரைத்து, தேர்தல் முறைகேடுகள் ஊடாக தமது கையாட்களை நாடுகடந்த அரசாங்கத்திற்குள் புகுத்தியிருந்தனர். இதனைவிட, பிரித்தானியாவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த நாடுகடந்த அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம், கே.பி குழுவினரின் தலையீடு காரணமாக இறுதிநேரத்தில் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் நாடுகடந்த அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெறும் பட்சத்தில், கே.பியால் நாடுகடந்த அரசாங்கத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட வி.உருத்திரகுமாரனை அகற்றி விட்டு, அவரது இடத்திற்கு சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நியமித்துவிடுவார்கள் என்ற அச்சமே, இவ்வாறான சடுதியான இடமாற்றத்திற்கு காரணியாக அமைந்திருந்தது.
இதில் திரைமறைவில் இருந்து காய்களை நகர்த்தியதில் முதன்மையாக செயற்பட்டவர் மனோ. இவ்வாறாக நாடுகடந்த அரசாங்கத்தின் ஊடாகவும், தனது காகிதப்புலிகள் ஊடாகவும், புகலிட தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களை சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சி கைகூடாத நிலையில், தற்பொழுது வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளில் கே.பி ஈடுபட்டு வருகின்றார்.
இதன் ஓர் அங்கமாக தனது குழுவினரின் உதவியுடன் புலம்பெயர்தேசங்களில் 'புத்திஜீவிகள்' என்று கூறிக்கொள்வோரை கொழும்புக்கு அழைத்து சந்திப்புக்களை நிகழ்த்திய கே.பி, தற்பொழுது சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்குமாறு கோரி, பகிரங்கமாகவே வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 31ஆம் நாளன்று கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட் நாளேட்டிற்கு செவ்வி வழங்கிய கே.பி, வெளிநாட்டில் தனது ஒருங்கிணைப்பாளராக பிரான்சில் உள்ள மனோ அவர்களே செயற்படுவதாக தெரிவித்துள்ளார். இதேநேரத்தில் கே.பியின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை கனடாவில் முன்னெடுத்து வரும் பேரின்பம் என்பவர், முன்னாள் போராளிகளை கே.பி சந்தித்துக் கலந்துரையாடும் காட்சிகளை இணையத்தளம் ஊடாக வெளியிட்டுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எனக்கூறிக் கடந்த காலத்தில் மும்முரமாக நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், 'சிறீலங்கா அரசுக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள்' என்று கூறி தற்பொழுது நிதிசேகரிப்பது வரலாற்றின் இன்னொரு நகைமுரண்.
இதேநேரத்தில், கே.பி அவர்கள் "சிறீலங்கா அரசின் ஒரு கைதி, சிறீலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதைய நிலையும் அப்படித்தான்" என்றுகூறி கே.பியை வி.உருத்திரகுமாரன் அவர்கள் நியாயப்படுத்துவது, அவர் தொடர்பாக ஏற்கனவே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே நிலவும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றது.
வி.உருத்திரகுமாரன் அவர்கள் கூறுவது போன்று கே.பி ஒரு 'சூழ்நிலைக் கைதியாக' இருக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கும் செவ்விகளை எவ்விதமாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் கற்பிதம் செய்து கொள்வது?
நாடுகடந்த அரசாங்கத்திற்கும் கே.பியிற்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று வி.உருத்திரகுமாரன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், வி.உருத்திரகுமாரனை இயக்கும் மனோவை தனது வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.பி நியமித்திருப்பதன் சூட்சுமம் என்ன?
கே.பி அவர்களின் தலைமையில் இயங்கும் தன்னார்வ நிறுவனத்திற்கான நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுக்கும் பேரின்பம் என்பவருக்கும், நாடு கடந்த அரசாங்கத்தில் வி.உருத்திரகுமாரனுக்கு உறுதுணையாக செயற்படும் எவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையா?
நாடுகடந்த அரசாங்கத்தை அமைப்பதில் வி.உருத்திரகுமாரனுக்கு சர்வே என்பவரால் எவ்வித ஆலோசனையும், ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லையா?
இவை புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளிடையே இயல்பாகவே எழும் கேள்விகள்.
இது இவ்விதமிருக்க, "சிங்கள அரசிடமிருந்து தப்புவதற்காகவே, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது போன்று கே.பி நடிக்கின்றார்" என்று கே.பி குழுவினர் சிலர் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவையாகவே இதனை நாம் கொள்ள முடியும்.
ஏனென்றால் கே.பி எவ்விதமான நடிகர் என்பதை கடந்த ஓராண்டில் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் நன்கு கண்டு களித்துவிட்டார்கள். எது எவ்விதமிருந்தாலும், சிங்கள அரசுக்கு நிதிதிரட்டும் கே.பியின் நிகழ்ச்சித் திட்டம் புகலிட தேசங்களில் விரைவில் மண்கவ்வுவது மட்டும் உறுதி.
- சேரமான்
- நன்றி: ஈழமுரசு
Comments