சிறையில் எப்படி இருக்கிறார் சீமான்? - சிறப்புச் சந்திப்பு

எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.

இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு அதிகாலை நேரத்தில் கைலி கட்டியபடி சிறைவளாகத்திற்கு முன் அமர்ந்திருந்தபோது பத்திரிகையாளனாக அந்த இடத்தில் இருந்தேன். சிறைத்தண்டனை அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து வலுக்கட்டாயமாகத் துண்டித்து அவர்கள்படும் அவதியையும், காவல் நிலையத்தில் ஒருவருடைய குடும்பம் என்னென்ன இன்னல்களுக்கு ஆட்படக்கூடும் என்பதையும் விடிந்தும் விடியாத பொழுதில் இருந்து பார்த்த அனுபவம் இன்னும் நினைவில் கறை மாதிரிப் படிந்திருக்கிறது. மறைந்த முரசொலி மாறன் அன்றைக்கு அதிகாலை காவல் நிலையத்தில் பட்டபாட்டை நேரடியாகப் பார்த்த அனுபவம் முள் தைத்த வலியை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கலைஞர் சிறையிலிருந்து விடுதலை ஆனதும் கோபாலபுரம் வீட்டில் நான் முதலில் சந்தித்து வாரமிருமுறை இதழுக்காகப் பேட்டி கண்ட போது கொந்தளிப்புடன் அவர் சொன்னார். ''இனியும் கைதுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.'' அவர் அன்று அனுபவித்த வலி அந்தச் சொற்களை வரவழைத்திருக்கலாம்.

அந்த வலியை உணர ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, வயதானவர், இளைஞர், பெண், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என்கிற பேதங்கள் வேண்டியதில்லை. வலிந்து ஒருவரைச் சிறைக்குள் தள்ள முற்படுகிறபோது அடைகிற மனத்தத்தளிப்பை இன்றைய முதல்வரிலிருந்து பலரும் ஏதோ ஒரு கணத்தில் அழுத்தமாக உணர்ந்திருப்பார்கள். சராசரியான மனித உரிமை நசுங்கும்போது எழும் அழுத்தம் அது.


வேலூர் சிறைக்கு இதற்கு முன்னால் சிறைப்பட்டிருந்த வைகோவைச் சந்திக்க சின்னக்குத்தூசி அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறேன். சிறைக்குப் பக்கவாட்டில் இருக்கிற அறையில் ஜெயிலரின் கண்காணிப்பின்கீழ் பேசி விட்டு வந்த அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் அதே வேலூர் சிறை. முன்னால் அந்தக்காலத்தில் சிறைப்பட்டிருந்த தியாகிகளுக்கான உயர்ந்த நினைவுச்சின்னம். காலத்தின் பார்வையில் பின்னாளில் ஒருவர் தியாகியாக மதிக்கப்பட்டாலும் –சிறை வளாகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நபரும் கைதிதான்.

சிறை வாசலில் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்து இளைஞர்கள் கூடியிருந்தார்கள். வியாழக்கிழமை மட்டும்தான் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தது. வழக்கமான விசாரிப்புகள், கொண்டு போயிருந்த புத்தகங்கள் வரை சோதனையிட்ட பிறகு சிறை அதிகாரிகள் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சீமான் எழுந்து கை கொடுத்துத் தோழமையான புன்னகையுடன் வரவேற்றார்.

வழக்கமாக அணியும் கறுப்பு டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும்தான். சிறையில் இருந்த நடமாட்டங்களும், சுற்றிலும் கேட்டுக்கொண்டிருந்த கைதிகளின் ஆஜர் படுத்தும் சப்தங்களும், சற்றுத் தொலைவில் அதிகாரிகள் கண்காணிப்பும் சூழ்ந்த நிலையில் பேச்சை இயல்பானதாக மாற்றமுடியவில்லை.

''அரசு வசதியுடன் வைத்திருப்பதாக அறிக்கை எல்லாம் விடுகிறதே. இங்கே எப்படி இருக்கீங்க?" கேட்டதும் -முகம் சலித்தபடி சொல்கிறார் சீமான்.
''இப்போ மனுப்போட்டு மத்தவங்களைப் பார்க்குறதுக்காக வர்ற நேரத்தைத் தவிர மத்த நேரம் எல்லாம் தனி அறையில்தான் வைக்கப்பட்டிருக்கேன். காலையிலும், மாலையிலும் ஒருமணிநேரம் சிறை வளாகத்திற்குள் நடக்க அனுமதி கேட்டும் இதுவரை தரப்படலை.. என்ன சொல்ல?"

மற்றவர்களுடன் பேசுவதில் உற்சாகம் கொள்பவர்களைத் தனித்த அறையில் அடைப்பது சிறை என்கிற வளாகத்தின் மீதிருக்கும் இறுக்கத்தைக் கூட்டுகிறது.

அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த யாரையும் துன்புறுத்துவது -பகிர்ந்து கொள்ள யாருமற்ற தனிமைதான். சில நேரங்களில் தனிமை கூடத் தண்டனை மாதிரி ஆகிவிடுகிறது. முகம் நம்மைப்பார்த்தபடி இருந்தாலும் -அவருடைய கண்கள் அந்த அறையில் வந்து போகிறவர்களைக் கவனித்தபடி இருக்கின்றன. அடிக்கடி விரல்களால் முகத்தை நீவிவிட்டுக்கொள்கிறார்.

"தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பேசினதுக்காக -அதுவும் தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே கைது செய்யப்பட்டிருக்கேன். ஏதோ ஒரு காரணத்துக்காக - யாரையோ திருப்திப்படுத்த என்னைக் கைது பண்ணியிருக்காங்க. என் தரப்பு விளக்கத்தை தமிழ் மக்கள் கிட்டே சொல்ல முடியலை.. ஆனா.. நம்பிக்கை இருக்குங்க.. தமிழ் உணர்வாளர்கள் இருக்காங்க.. எத்தனையோ துடிப்பான இளைஞர்கள் இருக்காங்க.. தமிழ் உணர்வுள்ள ஊடக நண்பர்கள் இருக்காங்க.. அதனாலே அவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க..

முதலில் நான் கைது செய்யப்பட்டதும் கொஞ்ச நேரத்திலேயே என்னைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலே கைது செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. வெளியில் என்னை விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.. தனியா அடைச்சுட்டாங்க.. மத்த மனுசங்களைப் பார்த்துப் பேசுறதுன்னா இந்த மாதிரி நேரத்திலேதான் முடியுது"

பேசிக்கொண்டிருந்த அந்த அறைக்குள் கைதி உடையணிந்தவர்களை வரிசையாக அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "தமிழ் மொழியே தெரியாதவர்களால் என்னைப் போன்றவர்களின் பிரச்சினையைப் புரிஞ்சுக்க முடியுமா? நம்ம மீனவங்க தாக்கப்படுறதைக் கண்டிச்சுப் பேசுனது தப்பா?" பெருமூச்சுடன் கேட்கிறார்.

வருகிறவர்களிடம் வெளியுலக நிலவரங்களைப் பற்றிக் கேட்கிறார். அரசியல் நிலவரங்களைப் பற்றி விசாரிக்கிறார். திரைப்பட உலகில் தமிழ் அடையாளத்துடன் படம் தயாரிக்கப்பட வேண்டும் என்கிற தவிப்பைச் சொல்கிறார். உரிமையுடன் ஊடகங்களில் இருக்கும் நண்பர்களைக் குறிப்பிட்டு விசாரிக்கிறார்.

''நிலைமை மாறும்ங்க.. நம்பிக்கை இருக்கு.. நம்ம நண்பர்கள் இருக்காங்க.. நம்ம மக்கள் இருக்காங்க..பார்ப்போம்.." கையை அழுத்தமாகப் பிடித்தபடி விடை கொடுக்கிறார்.

அவருடைய முகத்தில் மறுபடியும் அந்தப் புன்னகை.
புன்னகைக்குப் பின்னிருக்கும் வலியை நாம் உணர்வோமா?

Comments