வல்லமை பொருந்திய - ஆற்றல் மிக்க சீமான் போன்றவர்கள் வீணாகிவிடக்க்கூடாது !!

SEEMAN__14540f

தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது பாதையை முற்றுமுழதாக ஜனநாய வழியில் மீளமைத்துக்கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் புலத்திலும் சரி களத்திலும் சரி விடுதலையை நோக்கிய மக்களது எழுச்சி எனப்படுவது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்படவேண்டிய கட்டாயத்தின்பால் தள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வாறான ஒரு வரலாற்றுப்புள்ளியில் தமிழினம் தற்போது ”உணர்ச்சிவசப்படுதலின்” ஒரு குறியீடாக தன்னை வரித்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு தூரம் தேவையான பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது இக்கால கட்டத்தின் விவாதப்பொருளாக உள்ளது.

தமிழீழ தேசிய தலைவனின் வழிகாட்டலில் பயணித்த ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் தமிழர்களின் சகல பரிமாணங்களையும் தொட்டுச்சென்றுள்ளது. முப்பதாண்டு காலமாக அந்த போராட்டம் தரிசித்த அனைத்து துறைகளும் தமிழர்களின் திறமையையும் அவர்களது வீரத்தையும் அவர்களது செழுமையையும் உலகின் மூலைமுடுக்கெங்கும் ஆழமாக பரப்பியிருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் வாழும் தமிழன் இன்று தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்ள வல்ல தன்னின உட்கிடக்கைகளை ஈழவிடுதலைப்போராட்டம் புடம்போட்டிருக்கிறது.

முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தனிப்பெரும் சக்தியும் லட்சக்கணக்கான உயிர்களை சொரிந்த தமிழினமும் அத்திவாரமிட்ட தமிழனின் சக்தியும் சரித்திரமும் எத்தனை நூறு ஆண்டுகளானாலும் எவராலும் அழிக்கமுடியாத தேசிய சொத்துக்கள்.

இவ்வாறிருக்கையில், இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினத்தின் போராட்ட வடிவம் என்பது - வெளிப்படையாக கூறப்போனால் மக்கள் மனங்களில் எழுந்துள்ள சில விரக்திகளால் எழுந்த முரண்பாடுகளாக இருப்பினும் - தமிழரின் இறுதி இலக்கு என்ன என்பதிலும் அதனை அடையவேண்டிய கட்டாயம் ஏன் என்பதையும் எல்லோரும் தெளிவாக உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

முப்பதாண்டு காலமாக மக்களோடு இரண்டறக்கலந்திருந்த போராட்ட வடிவம் முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய சதியின் ஊடாக சிதைக்கப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாதலால், அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து சரியான போராட்ட பாதை ஒன்றை அமைப்பதற்கு தேவைப்படும் காலஇடைவெளி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துவிடுகிறது.

ஆனால், தமிழர்களுக்கும் தமிழரின் போராட்டத்துக்கும் எற்பட்ட அவலங்களின் தாக்கங்களிலிருந்து தம்மை விடுவித்து, தொடர்ந்தும் போராட்ட பாதையில் தம்மை இணைத்து கொள்வதற்கு தமிழினத்தின் பெரும்பகுதி தயாராகிவிட்டனர் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. ஈழத்துக்கு வெளியே நின்று ஈழமக்களுக்காக போராட தலைப்பட்டுள்ள அனைவரும் - இதில் தமிழக அரசியல் தலைவர்களையும் குறிப்பிட்டாகவேண்டியுள்ளது - தமது போராட்ட வடிவங்களை எவ்வாறு கையாண்டாலும் அந்த அணுகுமுறையில் இருக்கவேண்டிய அடிப்படை தேவை என்ன என்பதை இங்கு வலியுறுத்தியே ஆகவேண்டியுள்ளது.

ஏனெனில், புதிய போராட்ட வடிவம் என்பது ஆரம்பத்திலேயே ஆரோக்கியமாக அமைக்கப்படுவது அதன் எதிர்காலத்தை செம்மையாக்கிக்கொள்வதற்காகன அவசியமான விடயமாகும். தமிழர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டுமே அன்றி உணர்ச்சிவசப்பட்டவர்களாக அல்ல என அண்மையில் தமிழின செயற்பாட்டாளர் ஒருவர் தனது கருத்தை பதிவுசெய்திருந்தார்.

அதாவது, உணர்ச்சி வசப்பட்ட ஒரு இனமாக - கடந்த கால இழப்புக்களின் மனக்குமுறல்களை எதிர்காலத்தில் பகிரங்கமாக கொட்டிவிடும் சமுதாயமாக - மனப்பக்குவத்தின் ஊடாக நடத்தவேண்டிய காத்திரமான காரியங்களை போட்டுடைக்கக்கூடிய மனவெளிப்பாடு உடையவர்களாக தமிழர்களின் அடுத்தகட்ட போராட்டத்தில் இணைந்துகொண்டு, அதன் மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடிய பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியுமா?

ஈழவிடுதலைப்போராட்டத்தின் புதிய பரிமாணத்திற்காக தன்னை செதுக்கிக்கொண்டுவிட்டதாக திருப்திகொள்ளும் ஒவ்வொருவனும் தன்னை தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய கேள்வி இது.

தமிழினம் போராட்டத்துக்கான தனது ஆன்ம வலுவை தவிர அனைத்தையும் இழந்த சமூகமாக உள்ள இந்தவேளையில் காலம் இட்ட கட்டளைகளை நேர்த்தியாக நிறைவேற்றவேண்டிய தருணம் இது. இவ்வாறான ஒரு கால கட்டத்தில், உணர்ச்சி வசப்பட்டவர்களாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எம்மை நாமே முட்டி மோதி ஆரம்பபுள்ளியிலேயே அடிபட்டுவிழ வைத்துவிடும் காரியங்களாகவே அமையும்.

இதற்கு தற்போது
தமிழகத்தின் உணர்ச்சி புயல் சீமானை உதாரணமாக கொள்ளலாம். சீமான் எனப்படுபவர் ஈழவிடுதலைக்காக தன் உயிரின் ஒவ்வொரு அணுவையும் ஆகுதியாக்கி போராடும் ஒரு பேச்சாற்றல் மிக்க போராளி. தமிழகத்திலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தனது திறன்மிக்க பேச்சாற்றலினால் மக்களுக்குள் எழுச்சித்தீயை அணையாது வைத்திருக்கும் வல்லமை மிக்கவர். இன்றைய காலகட்டத்தில் அது மிக மிக முக்கியமான ஒரு தேவை.

எல்லாமும் இழந்துவிட்டோம் என்ற விரக்தியிலுள்ள உள்ள தமிழினத்தின் உணர்வுகளுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய - அவர்களின் தமிழீழ தாகத்திற்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாகக்கூடிய - உணர்வாளர்களின் தேவை காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த வகையில், சீமானின் பணி என்பது மகத்தானது.
மறுபுறத்தில் பார்க்கப்போனால், ஈழவிடுதலைப்போராட்டத்துக்கான ஆதரவுத்தளம் என்பது தமிழகத்தில் அசையாத வளர்ச்சியை பெற்றுக்கொள்ளும்போதுதான், அது ஈழத்தமிழினம் நோக்கிய இந்தியாவின் சாதகமான பார்வைக்கு அடித்தளமாக அமையும். ஆகவே, தமிழகத்தில் உள்ள ஒரேமொழி பேசும் அந்த இனத்தின் மத்தியில்தான் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கான ஆதரவையும் அன்பையும் - ஏனைய பகுதிகளை விட - இலகுவாகவும் உரிமையாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

எம்.ஜி. ஆர். காலத்திலிருந்தது போன்ற ஒரு மாற்றத்தை தமிழக மக்களிடம் - இப்போதில்லை என்றாலும் - எப்போதாவது நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதற்கு ஈழத்தமிழினம் தமிழக மக்களுடன் தற்போதுள்ளதைவிட பல மடங்குகள் நெருக்கங்களை ஏற்படுத்தவேண்டும். உணர்வு ரீதியாக இறுக்கமான உறவினை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

அவ்வாறான ஒரு உணர்வை நாம் மற்றைய நாடுகளில் பெற்றுக்கொள்வதாக இருந்தால், அதற்கும் அந்த நாடுகள் தராசில் போட்டு விலைபேசிக்கொள்ளும் என்பது இன்று அனைவரும் புரிந்துகொண்ட விடயம்.

இன்று போர்க்குற்ற விசாரணை, சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றெல்லாம் ஐ.நாவும் ஏனைய நாடுகளும் போர்க்கொடி தூக்கியவண்ணம் நிற்கின்ற என்றால், அவையெல்லாம் தன்தேசப்பின்னணி உடையவே தவிர, ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடனோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் பாசமோ அல்ல.

ஆகவே, ஒரு இறுக்கமான தாய் - சேய் உறவினை ஏற்படுத்துக்கொள்ளவல்ல வலுவான தளம் ஒன்று ஈழத்தமிழர்களுக்கு வெற்றிடமாக உள்ளதென்றால் அது தொப்புள்கொடி உறவுடைய தமிழகமே ஆகும்.

அந்த மாற்றத்தை கொண்டுவரவல்ல போராட்டத்ததை முன்னெடுக்கக்கூடிய - தன்னலமற்ற - தமிழின உணர்வாளன் சீமான். ஆனால், இன்று அவருக்கு இடம்பெற்றுள்ளது என்ன?

இனிமேல் கடலில் தமிழக மீனவனை சிறிலங்கா கடற்படை கொன்றால், தமிழகத்திலிருந்து ஒரு சிங்களவன் உயிரோடு போகமாட்டான் என்று வீராவேசமாக முழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு அவரை சிறையில் தூக்கி போட்டுவிட்டது. சீமானின் சகோதரன் உயர்நீதிமன்றில் போட்ட வழக்கு இழுபட்டவண்ணமுள்ளது.

அவசியமானதா இது?

சிங்களதேசத்தின் கொடுமைகளையும் ஈழத்தமிழினத்துக்கு ஏற்பட்ட அவலங்களையும் தமிழக அரசும் இந்திய அரசும் அதற்கு மெளனிகளாக இருப்பதையும் சீமான் அக்கு வேறு ஆணிவேறாக கிழித்துப்போட்டார். தனது பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்களின் மனங்களின் தொடமுடியாத ஆழங்களையும் தொட்டார். நாம் தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்து நிறுவனமயப்படுத்திய தனது போராட்ட பாதையை தெளிவாக நகர்த்தினார். ஆனால், பேச்சில் காட்டிய அவரது உணர்ச்சிவசப்பட்ட தன்மை, வரம்புகளை கடந்து சென்று, அவரை இன்று சிறையில் கம்பி எண்ணவைத்திருக்கிறது.

சிங்களதேசம் தனது சீத்துவத்தை சர்வதேசத்துக்கு பறைசாற்றுவதற்கு கொழும்பில் நடத்திய சர்வதேச இந்திய திரைப்பட விழாவை இந்திய திரையுலகுமே புறக்கணிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்து அதில் மாபெரும் வெற்றியீட்டியவர் சீமான். இது போன்று எத்தனை விடயங்கள் சாதிக்கவேண்டியவையாக பட்டியல் நீண்டு கிடக்க, தான் செய்த பணி இனிப்போதும் என்று முடிவெடுத்தவர்போல இன்று சொல்லத்தேவையற்றதை சொல்லி சிறையில் போய் இருக்கிறார்.

யாருக்கு என்ன பயன்?

முன்னர் கனடா நாட்டுக்கு சீமான் அவர்கள் சென்றிருந்தபோதும் இத்தகைதோர் பேச்சினால், அவரால் ஏனைய நிகழ்வுகளில் பங்குகொள்ளமுடியாமல் இடையிலேயே திரும்பவேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பேச்சுக்களால் எமது போராட்டத்தின் உண்மையான நியாயத்தன்மையும் அடிபட்டுப்போகும் அபாயநிலையையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எத்தனையோ மக்கள் கொல்லப்பட்டபோதும் அதனை சிங்கள மக்களுக்கு எதிராக எந்தவித தாக்குதல்களையும் செய்யக்கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாகவிருந்த விடுதலை அமைப்பின் நிழலில் வளர்ந்தவர்கள், எமது போராட்டத்தின் தர்மத்தை நியாயத்தை எடுத்துச் சொல்லவேண்டும். அதன் ஊடாகத்தான் எமது கருத்தை மக்களுக்குள் கொண்டுசெல்லவேண்டுமே அன்றி, உணர்ச்சிவசப்பட்ட இவ்வாறான பேச்சுக்களால் அல்ல.

ஜனநாயக ரீதியாக நாம் தமிழர் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பணிகள், இந்திய மத்திய அரசில் உள்ளோரையும் தமிழக அரசியலில் உள்ளோரையும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை கொடுத்துவந்திருந்தது.

அதனால் சீமானை எப்படியாவது தூக்கி உள்ளே போட்டுவிடவேண்டும் என ஆட்சியில் உள்ளோர் முயன்றுவந்திருந்தார்கள். அவர்களுக்கு சரியான சந்தர்ப்பத்தை சீமான் உருவாக்கி கொடுத்ததாகவே இவ்விடயத்தை பார்க்கமுடியும்.

சீமான் இப்போது தனிமனிதர் அல்ல. அவரது வழிநடத்தலை ஏற்று ஆயிரமாயிரம் விடுதலைச் செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டில் அவரது தலைமையில் அணிவகுத்து நிற்கின்றார்கள். அவர்களுக்கான சரியான தலைமைத்துவத்தை வழங்கி நெறிப்படுத்தவேண்டிய பாரிய கடமை சீமானுக்கு உண்டு.

சீமான் மட்டுமல்ல அவரைப்போன்று ஈழத்தமிழர்களின் விடயத்தில் உணர்ச்சிவசப்பட்டு வீரம் காண்பித்து சிறையில் போய் இருப்பதற்கு இன்று தமிழர்களுக்கு ஆட்கள் தேவையில்லை. அதனால் ஏற்படும் இழப்புக்களை தாங்குவற்கு தமிழினத்துக்கு வலுவும் இல்லை.


வல்லமை பொருந்திய - ஆற்றல் மிக்க - சீமானை போன்றவர்கள் அரசியல் நெழிவு சுழிவுகளின் ஊடாக தந்திரோபாயமாக காய்களை நகர்த்தி தீர்க்கமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதேற்கே இன்று தமிழினம் அங்கலாய்த்து நிற்கிறது.

தேவைகள் வேறு இடத்தில் குவிந்து கிடக்கும்போது நாங்கள் தேவையில்லாத கதவுகளை தட்டுவதில் எந்த பயனும் இல்லை.

இந்த இடத்தில் ஆக்கபூர்வமான விடயத்தையும் சுட்டிக்காட்டிவேண்டியது அவசியமானது. ஈழத்தமிழினத்திற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் என்ற இளைஞன் மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். இது வரவேற்கப்படவேண்டிய விடயம். உலகின் புருவத்தை உயரவைத்துள்ள இந்த மனிதாபிமான நடைபயணத்தினால் என்ன நடந்துவிடப்போகிறது என்று யாரும் கேட்கலாம். அவர் நடைபயணத்தை முடிக்கும்போது, அவரது கைகளில் ஐ.நா. சபை தமிழீழத்திற்கான உறுதிப்பத்திரத்தை கொண்டுவந்து தந்துவிடப்போவதில்லைத்தான்.

ஆனால், அது இன்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வாக மாறியுள்ளது. பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்களை தொடர்நடையாக அவர் மேற்கொண்டுவருவதை ஐரோப்பிய ஊடகங்கள் முதல் அனைத்தும் செய்திகளாக தாங்குகின்றன. ஈழத்தமிழினம் இன்னமும் தனது ஓர்மத்தை இழக்கவில்லை என்பதையும் ஜனநாயக வழியில் தனது போராட்டத்தை மீளமைத்துக்கொண்டுள்ளதன் காத்திரத்தையும் சர்வதேசத்துக்கு புரியும் மொழியில் இந்த நடைபயணம் பறைசாற்றியிருக்கிறது.

இந்த விடயத்தை கூறுவதன் மூலம் சீமான் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களையோ மேற்கொண்டுவரும் தியாகங்களையும் ஒப்பிடவுமில்லை. கொச்சைப்படுத்தவுமில்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். வித்தியாசமான தளங்களில் வித்தியாசமான கோணங்களில் இடம்பெறும் போராட்டங்கள் அந்தந்த இடங்களுக்கு ஏற்ப சவால் மிக்கவை என்பது யதார்த்தம்.

ஆனால், மனப்பக்குவமுடைய அதிக உணர்வுவயப்படாத நிதானமான நகர்வுகளும் சின்ன அடிகளும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய காய்நகர்த்தல்களுமே தமிழினம் தற்போது பயணிக்கும் போராட்ட பாதையின் ஆரம்ப படிகளில் அவசியமானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும்.

தேசிய தலைவர் எவ்வளவு பொறுமையானவர் என்பதை அவரை சந்தித்த சீமானுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

தெய்வீகன்

Comments