உலக வல்லரசுகளின் மாற்றத்தை சாதகமாக்கி விடுதலையை விரைவுபடுத்துவோம்.

களத்தில் போர் ஓய்ந்து போனபின்னர் பிராந்திய உலக வல்லரசுகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சாதகமாக்கி விடுதலையை விரைவுபடுத்துவோம்.

துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் காதைப்பிளக்கும் ஆட்லறி பீரங்கி வெடிஓசைகளும் இரவைப் பகலாக்கும் பல்குழல் பீரங்கி வெடிப்புக்களும் காற்றைக் கிழித்துக் கொண்டு வானமேறிவரும் வான் வல்லூறுகளின் குண்டுவீச்சுகளும் கடந்த ஆண்டு அணிவகுத்து தமிழீழ மண்ணை சல்லடைபோட்ட போது விழிதிறந்த உறக்கத்தில் இருந்து கள்ள மௌனம் காத்த பிராந்திய உலக வல்லரசுகள் இன்று சிங்களத்துடன் உறவாடுவதும் எச்சரிப்பதுமாக ஆர்ப்பரித்து நிற்கின்றன.

இதன் வெளிப்பாடாக ஒரு அணியினர் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி உதவி என்ற போர்வையில் கோடிகளாக கொட்டிவருவதும் மற்றைய அணியினர் பொருளியில் இராசதந்திர ரீதியில் அழுத்தங்களை மேற்கொண்டுவருவதும் சிறிலங்கா அரசியலில் தினசரி நடந்தேறும் நிகழ்வுகளாகிவிட்டது.

மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது எமக்கு சாதகமாக பிராந்திய உலக வல்லரசுகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக தோற்றம் பெறலாம். ஆனால் அது உண்மையல்ல என்பதே கள யதார்த்தமாகும்.

பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா ரைசியா போன்றன கோடிகளில் சிங்களத்தை குளிப்பாட்டி தமது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிசெய்து கொள்ள முயன்றுவருகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தினர் பொருளியல் இராசதந்திர ரீதியில் நெருக்கடிகளை கொடுத்து மிரட்டி தமது காத்திரமான பங்கினை தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முற்பட்டு வருகின்றனர்.

wereயுத்தத்தின் பின்னரான சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்காக சீனா பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்து வருகின்றது. குறிப்பாக நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும் பணியை ஆரம்பித்த சீனா தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அதைவிட நாட்டின் ஏனைய பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து செயலாற்றி வரும் சீனா வன்னிப் பிரதேசத்தை முழுமையாக இராணுவப்பிடிக்குள் கொண்டுவருவதற்காக பாரிய நிரந்த இராணுவ முகாம்களை நிறுவிவருகின்றது.

இதன்படி கடந்த 22ம் (சூலை) திகதி சுதந்திரபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சீனாவின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந்த இராணுவத்தளம் கடந்த ஆண்டு எமது மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய போரில் பெரும் பங்காற்றிய 68ஆவது டிவிசன் படையணியின் செயற்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே மாங்குளம் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசஙய்களில் நிரந்தர இராணுவத் தளங்களை அமைத்துள்ள சிங்களம் வன்னியின் ஏனை முக்கிய பிரதேசங்களிலும் நிரந்தர இராணுவ முகாம்களை அமைக்கும் முயற்சிகளிலும் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றது. வடபகுதியில் நிரந்தர இராணுவ முகாம்கள் அறுபதினை அமைக்க சிங்களம் திட்டமிட்டுள்ள தகவல் இதனால் மேலும் உறுதிப்படுத்துகின்றது.

எமது பாரம்பரிய தாயக பூமியை சிங்களத்தின் நிரந்தர இராணுவ முற்றுகைக்குள் கொண்டுவரும் நாசகார சதித்திட்டத்திற்கு, உலக வல்லரசுகளுக்கே சவால்விடக் கூடிய வகையில் இராணுவ பொருளாதார நிலையில் பலம்பெற்றுவரும் சீனா நேரடியாக சகல உதவிகளையும் வழங்கிவருகினறது.

வடபகுதியில் நிலைகொண்டுள்ள ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரது குடும்பங்களை வன்னியின் முக்கிய முக்கிய நகரங்களை மையப்படுத்தி குடியேற்ற சிஙகள அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.இதனால் ஏற்படும் அரசியல் பூகோள ரீதியிலான ஆபத்துக்கள் குறித்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குடியேற்றப்படும் சிங்களக் குடும்பம் ஒன்றிற்கு அரை ஏக்கர் காணி சொந்தமாக வழங்கப்படுவதுடன் சகல வசதிகளும் நிறைந்த வீடும் கட்டிக்கொடுக்க கொடுக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரும்பணியை சிரமேற் கொண்டு செயலாற்றுவதும் சீனாதான். இரண்டு அறைகள் சமயலறை வரவேற்பு அறை என சிங்களர்களுக்கான வீட்டினை அமைக்கும் பணியில் சீனர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முருகண்டிப் பகுதியல் ஐயாயிரம் ஏக்கர் காணியினை 12ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்றுவதற்காக சிங்கள அரசு கையகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வன்னியின் கடற்பகுதியை வேறு சீனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ள சிங்களம் பெறுமதிவாய்ந்த மீன் இனங்கள் அதிகமாக உள்ள நந்திக்கடல் பகுதியையும் தாரைவார்த்துள்ளது.

இவைதவிர வீதி அபிவிருத்தி புகையிரதப்பாதை அமைத்தல் போன்ற அடிப்படை கட்டுமாண பணிகளில் 25ஆயிரம் சீனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடும் தண்டனை பெற்ற சிறைக்கைதிகள் ஆவார்கள். ஏனையவர்கள் சீன உளவாளிகளும் இராணுவத்தை சேர்ந்தவர்களும் ஆவார்கள். இது போதாதென்று கண்ணிவெடி அகற்றும் பணிக்கு என மேலும் சீன இராணுவத்தினர் சிறிலங்காவின் களமிறக்கப்பட இருக்கின்றனர்.

நாட்டின் பெரும் பகுதியை சீனாவிற்கு தாரைவார்த்துவிட்ட சிங்கள அரசு வடக்கில் சில இடங்களை இந்தியாவின் பொறுப்பில் விட்டுள்ளது. பலாலி விமானத்தள புனரமைப்பு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அபிவிருத்தி மற்றும் புகையிரதப் பாதை அமைக்கும் பணியென வரையறுக்கப்பட்ட பணிகளையே இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

இது கடந்த ஆண்டு தமிழின அழிப்பு யுத்தம் இறுதிபெறுவதற்கான முழு ஒத்துழைப்பினை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக வாய்வழியாக வழங்கியிருந்த வாக்குறுதியினை காட்டிலும் மிகச் சொற்பமானவை என விடயமறிந்த வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்தியத் தரப்பு தன்னை ஏமாற்றிய மகிந்தவிற்கு பாடம் புகட்டுவதற்காக மேற்குலகத்தின் போர்குற்ற நடவடிக்கைகளுக்கு குறுக்கே நிற்பதில்லை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

கடந்த ஆண்டு யுத்தம் உக்கிரம் அடைந்தபோது ஐ.நா.மன்றத்தின் பாதுகாப்பு சபையில் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நேரிடையாக தடுத்து நிறுத்தி சிங்களத்தை காத்து நின்றது இந்தியாதான் என்பது உலகறிந்த உண்மையாகும்.

இவ்வாறு பலதடவை சிங்களத்தை மேற்குலக நடவடிக்கையில் இருந்து காத்த இந்தியா இன்று ஐ.நா.சபை அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு வழியேற்படுத்தி ஒதுங்கியிருப்பது தன்னை ஏமாற்றிய சிங்களத்திற்கு பாடம் புகட்டவே.

வடக்கே எல்லையைத் தாண்டி அச்சுறுத்திவரும் சீனாவின் அத்துமீறலை வெளிப்படையாக கண்டிக்கவோ எதிர்க்கவோ முடியாது இருந்த இந்தியா தென்கோடியில் அமைந்துள்ள சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கினால் விழிபிதுங்கி நிற்கின்றது.

எம் தேசியத் தலைவர் தொடர்ச்சியாக மாவீரர் நாள் உரைகளிலும் மற்றும் வாய்புக்கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை எமது நட்பு சக்தியாகவே பார்த்து வருகின்றோம் எனக் கூறிவந்தார்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒரு போதும் பகைசக்தியாக கருதியதில்லை.

இந்தியாவை எமது நட்புசக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள் என கடந்த 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டியிருந்தார்.

ஆனால் இந்தியா இதனை தவறாகவே உணர்ந்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமிழந்து வருகின்றார்கள் அதன் வெளிப்பாடே இந்த நிலைக்கு காரணம் என கருதியிருந்தது. பிராந்திய வல்லரசை அனுசரித்துப் போகவிரும்பியதை பலவீனமாகக் கருதிய இந்தியா தேசியத்தலைவர் நீட்டிய நேசக்கரத்தை புறங்கையால் தட்டிவிட்டதன் பலனை இன்று அனுபவிக்கின்றது.

அமைதிப்படைக் காலத்திலும் இவ்வாறே தேசியத்தலைவர் அப்போதைய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்திக்கு எழுதிய கடிதங்களில் அமைதியாக போகவே விரும்புவதாகவும் சண்டையினைத் தவிர்த்து இணக்கமான சூழலை ஏற்படுத்துமாறு கோரியிருந்தார். பலவீனமான நிலையில் கூறப்படும் கருத்தாக(ஆலோசகர்களாக அருகில் இருந்தவர்களின் தவறான வழிநடத்தலினால்) கருதி அந்த வாய்ப்பினையும் புறக்கணித்திருந்தமையால் ஈழமண்ணில் இருந்து கசப்பான அனுபவங்களுடன் இந்தியப்படை திரும்ப நேர்ந்தது.

அன்றுபோல் இன்றும் இந்தியா தேசியத்தலைவர் நீட்டிய நேசக்கரத்தினை பற்றிக் கொள்ள மறுத்ததால் அதன் தென்கோடியில் பகை தேசமான சீனா பல்லாயிரக்கணக்கில் இராணுவத்தினரை அபிவிருத்தி பணியாளர்கள் என்ற பேர்வையில் களமிறக்கிவருதை தடுக்க முடியாமல் விழிபிதுங்கி விக்கித்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு இந்தியாவிற்கு மாத்திரமல்ல உலக வல்லரசுக்களான அமெரிக்காவிற்கும் ஜரோப்பிய நாடுகளிற்கும் ஏற்புடையதாக இல்லாததன் வெளிப்பாடே தற்போதைய சிங்களத்துடனான மோதல் போக்கிற்கு பிரதான காரணமாகும்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்பகுதியில் வராது வந்த மாணிக்கம் போல் அமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிறிலங்காவை ஆளுகைககுள் வைத்திருப்பதற்கான போட்டியின் காரணமாகவே கடந்த ஆண்டு எமது இனம் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட போது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பினை வழங்கி இருந்தன இந்த சமாதானம் பேசும் நாடுகள்.

தமக்குத் தேவை என்றால் அரவணைத்துக் கொள்வதும் இல்லை என்றால் பொருளியல் இராசதந்திர நெருக்கடிகளை கொடுத்து மிரட்டுவதுமே இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் வேலையாகும்.

பேரழிவு ஆயுதங்கள் தயாரித்து மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டி ஈராக்கை ஐ.நா.சபையின் அறிவுறுத்தலையும் மீறி துவம்சம் செய்த அமெரிக்கா தற்போது ஈரான் வடகொரியாவுடன் மோதுவதற்கு வாய்ப்பான தருணத்தை எதிர்பார்த்திருக்கின்றது.

பேரழிவு ஆயுதங்கள் பயண்படுத்தினால்தான் இவர்கள் எதிர்பார்க்கும் அழிவு ஏற்படும். ஆனால் ஈரான் வடகொரியா வசம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றமைக்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளதுடன் நேரடி யுத்தத்திற்கு நேரம்பாரத்து காத்திருக்கும் இந்த அமெரிக்காவும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் மேற்குலக நாடுகளும் எமது இனம் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்காலில் கொன்றொழிக்கப்பட்டதை தமது தொழில் நுட்ப சாதனைகள் மூலம் கண்டு ரசித்துக் கொண்டிருந்து விட்டு இன்று வரிச்சலுகை நிறுத்தம் போர்க்குற்ற விசாரணைக் குழு அமைப்பு என பச்சோந்தித்தனமான நிலைப்பாடு எடுப்பது அவர்களது சுயலாபத்திற்காகவே அன்றி எமக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்ற கருணையினால் அல்ல என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருப்பினும் பிராந்திய உலக வல்லரசுகளின் இந்த சிங்களத்துடனான எதிர் நிலைப்பாட்டினை சாதகமாக பயன்படுத்தி எமது தேச விடுதலையினை நாம் வென்றெடுக்க வேண்டும்.

ஓய்ந்து போயிருக்கும் நாம் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கையில் போராட்டத்தின் அடுத்தகட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை எமது தேசியத்தலைமை இட்டுச் சென்றதை ஒவ்வொரு புலம்பெயர் தமிழர்களும் நினைவில் நிறுத்திக் கொண்டு செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

எமது இனம் கொன்றொழிக்கப்படுவதை தடுப்பதற்காக நாம் எவ்வாறு மேற்குலக நாடுகளின் அதிகாரமன்ற வாசல்களையும் பிரதான வீதிகளையும் நாகரீகமன முறையில் பொறுப்புணர்வுடன் முற்றுகையிட்டோமே அவ்வாறான களப்பணியை முழுவீச்சோடு ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தனது சுயநல அரசியலுக்கா சிங்களத்தின் கழுத்தை நெரிக்க முற்பட்டுள்ள பிராந்திய உலக வல்லரசுகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க விடக்கூடாது.

ஆறாண்டுகால சமாதான காலத்தில் எவ்வாறு சர்வதேசத்தின் வழியில் சென்று சிங்களத்தின் பொய் முகத்திரையினை கிழித்தெறிய தலைவர் போராடினாரோ அதே போன்று சர்வதேசத்தின் வழியில் நாம் நடைபோடுவோம். எமக்கான நீதியை வென்றெடுப்போம்.

அதற்கு கடந்த காலத்தை போலன்றி புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அத்தனை தமிழர்களும் ஓரணியில் திரழவேண்டியது அவசியமாகும்.

எனக்கு வேலை இருக்கின்றது நாட்டிய வகுப்பு இசைவகுப்பு இருக்கு அவைதான் முக்கியம் என்று புறக்கணிக்காதீர்கள்

இவை அனைத்தும் தாயகக் கனவுடன் வீரகாவியமான முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட எமது சொந்தங்களினதும் தியாகத்திற்கு முன்னால் அற்பமானவையே.

மக்களை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் என்ன செய்யவேண்டும் அடுத்த ஈழ அதிர்வில் பார்ப்போம்.

தொடரும்….

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்

Comments