தமிழீழ விடுதலைப் போர் இன்று பல்வேறு நெருக்கடிக்குள் சிக்குண்டு செல்லும் திசை தெரியாது ஸ்த்தம்பித்து நிற்கின்றது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது நேசநாடுகளின் அணியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகக்கடுமையானதும் கொடுமையானதுமான இராணுவ நடவடிக்கையை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளமுடியாது மிகுந்த நெருக்கடிக்குள் சிக்குண்டோம். அதன் பின்னரான நிகழ்வுகளை ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கும் மேலான காலத்தில் நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.
இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா படையினரிடம் தஞ்சமடைந்த எம்மக்களினதும், சிறிலங்கா படையினரிடம் சரணாகதி அடைந்த எம் வீர மறவர்களினதும் நிலை கண்டு நம் மக்கள் வேதனையில் ஆழ்ந்திருக்க, சர்வதேசமெங்கிலும் வெற்றிதோல்விகளுக்கான விமர்சனங்களும், கதைகளும் தொடர்ந்துகொண்டுள்ளன.
தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இல்லை என்கின்ற நிலைகண்டு சர்வதேமெங்கிலும் எம்மக்கள் வேதனையில் ஆழ்ந்திருக்க, மறுபுறம் எப்போதும் போலவே போராளிகளையும், தேசியத்திற்கு ஆதரவாக செயலாற்றியவர்களையும் சிலர் மற்றும் ஊடகங்கள், சில அமைப்புகள் கொச்சைப்படுத்தின. தங்களையே இந்த விடுதலைக்காக அர்ப்பணித்த பல உத்தமர்களை துரோகிகளாக்க சிலர் முயற்சிக்கின்றனர். அதனையும் செய்தனர்.இன்றும் இந்நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. சந்தர்ப்ப சூழல் சிலரை நெருக்கடிக்குள் தள்ளியது உண்மைதான். தற்போதுள்ள நிலையில் தமிழ் ஊடகங்கள் மிக்க பொறுப்புடன் செயற்படவேண்டிய காலகட்டம் என்பதனை தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியம் மட்டில் பல்வேறு சந்தேகங்களும் வாதப்பிரதிவாதங்களும் உலகெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மக்களை அனைவரையும் அரவணைத்து இலக்கு நோக்கி பயணிக்கச் செய்யவேண்டும். அதனை விடுத்து குட்டையைக் குழப்பி தாம் இலாபம் அடைய நினைப்பது வேதனையளிக்கின்றது. இதனை சாதகமாகப்பயன்படுத்தி சிறிலங்கா அரசு இலாபம் அடைகின்றது. சிறிலங்கா அரசு இலாபம் அடைவதற்கு நாம் களம் அமைத்துக்கொடுப்பதுதான் வேதனையான விடயம். அற்ப சலுகைகளுக்காக உரிமைகளை இழக்கும் இனமாக நம் இனம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டுள்ளது.
தமிழ்த்தேசியம் கடந்த மூன்று தசாப்த கால வரலாற்றில் கண்ட சோதனைகள் அனுபவித்த வேதனைகள், துரோகங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. ஆரம்ப காலகட்டங்களில் அவ்வாறான துரோகங்களுக்கு தவிர்க்க முடியாத நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், கால நீரோட்டத்தில் மாற்றுக்கருத்துக்களை கொண்டவர்களையும் அரவணைத்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்த தலைமை அதற்காக வாயில்களை அகலத்திறந்தது. எல்லோரினதும் கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. அவைகள் சிந்திக்கப்பட்டன. அவ்வாறான கருத்துக்களை கொண்டவர்களை அரவணைக்கும் பணிகளும் நடந்தன.
இன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் மக்கள் தாயகத்தில் வாழும் மக்களையும், தமிழ்தேசியத்தின் போக்கினையும் நினைத்து மிகவும் வேதனை கொண்டவர்களாக இருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. விடுதலைப்போர் மௌனித்து நிற்கின்ற நிலையில் கடந்து வந்த பாதையில் நாம் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நமது பணத்தை தொடவேண்டும். நமது இலக்கினை எவ்வழியிலாவது அடையவேண்டும்.
ஆனால், நாம் இன்னும் பழையவற்றை நினைத்து சிந்தித்துக்கொண்டுள்ளோம். இன்று நம் முன் ஏகப்பட்ட பணிகள் காத்துக்கிடக்கின்றன. வி;மர்சனங்களுக்கும் துரோகிகளாக பட்டம் சூட்டுவதற்கும் இது தகுந்த நேரமல்ல.
அரசியல் ரீதியாக நமது உரிமையை மீட்ட நாம் ஒன்றுபடவேண்டிய காலமிது. உலகெங்கிலும் வாழும் எம்மக்களை ஒரு மித்த கருத்தில் கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான். வரலாற்றில் நாம் ஒன்றுபட்டிருக்காமையினால் வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை நாம் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் நமது ஒன்றுமை என்பது அவசியமானதாக இருக்கின்றது.
அரசியலாளர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை சார்ந்தவர்கள், தாயகத்திலும், புலம்பெயர்தேசமெங்கிலும் வாழும் எம்மக்கள், எம்மக்களுக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்கள் தனிமனிதர்கள் என நாம் அனைவரையும் ஒன்றுபடுத்தி செய்படவேண்டிய காலமிது. இந்தப் பயணத்தில் எவருமே புறக்கணிக்கப்படக்கூடாது. ஓதுங்கிக்கொள்ளவும் கூடாது.
நாம் ஒன்று பட்டு செயற்படுவவோமானால் அதுவே எம்வெற்றிக்கான முதல்படியாக அமையும்.
தமிழ் வெகுஜன ஒன்றியம்.
மட்டக்களப்பு மாவட்டம்.
Comments