நீங்கள் யாரும் உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை, ஒன்றை செய்யுங்கள்… நஞ்சாவது வாங்கித் தாருங்கள்….

எங்களுக்கு நீங்கள் யாரும் உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை, ஒன்றை செய்யுங்கள்… நஞ்சாவது வாங்கித் தாருங்கள்….அதை வாங்கக் கூட எம்மிடம் காசு இல்லை…நாங்கள் நிம்மதியாகத் தூங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது….மரணத்தில் ஆவது எமக்கு நல்ல தூக்கம் வரட்டும்…” இப்படி அவரின் வார்த்தைகளை மிகவும் பலவீனமான குரலில் உதிர்த்தார் முருகன் (வயது 61).

ஒரு மனிதன் அவனுடைய ஆயுள் காலத்தில் எவ்வளவு துன்பங்களை அடைய முடியுமோ அவ்வளவு துன்பங்களையும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மனதில் சுமந்து வரும் ஒரு குடும்பத் தலைவனின் வார்த்தைகள் வேறு எப்படித்தான் இருக்க முடியும். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவுக் கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்தான் முருகன் .

இவரும் இவரின் குடும்பத்தினரும் அன்றாட கஞ்சிக்கே தள்ளாடும் நிலையில் சுமார் இரு வருடங்களுக்கு முன் புதிய வாழ்க்கையைத் தேடி வவுனியா மாவட்டத்தில் இரணைமடுக் கிராமத்தை சென்றடைந்தார்கள். கடந்த 15 மாதங்களுக்கு அந்தப் பயங்கரம் நடந்தது… மனிதாபிமான நடவடிக்கை என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசின் யுத்த நடவடிக்கை…. உயிரை காப்பாற்றிக் கொள்ள கையில் கிடைத்தவற்றை பொறுக்கி எடுத்துக் கொண்டு பாதுகாப்புத் தேடி ஓடிய குடும்பங்கள். முருகனின் குடும்பத்தின் நிலையும் அதுதான்.

கோழிக் குஞ்சுகளை வேட்டையாட வானத்தில் பறந்து தெரியும் பருந்துகள்… அந்தப் பருந்துகளிடம் இருந்து குஞ்சுகளை காப்பாற்ற முயலும் தாய்க் கோழி. நான்கு பிள்ளைகள், இரண்டு மருமக்கள், மனைவி, மூன்று பேரப்பிள்ளைகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு புகலிடம் தேடினார் முருகன். ஆனால் கிபீர் விமானங்களின் குண்டு வீச்சில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலி ஆகினர். பிள்ளைகளைகளில் தியாகராசா (28). கோமதி (திருமணம் ஆகாதவர்-வயது 25), யசோதரன்(24) ஆகியோரும் ஒரு மகளின் கணவரான கா.செல்வராசா என்பவருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.

பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது என்று சொல்வார்கள்.அதே கதிதான் முருகனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும். முள்ளிவாய்க்கால் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு மகளான வசந்தியின் ஒரு கால் இராணுவத்தின் செல் தாக்குதலில் பறி போய் விட்டது. ஏனையோர் பலத்த காயங்களை அடைந்தார்கள். ஒருவாறு உயிரை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து திரிந்து வவுனியா மனிக் பாம் முகாமை வந்தடைந்தார்கள். இதனிடையில் நொண்டி மனைவி வசந்தியையும்,மூன்று பிஞ்சுகளையும் நட்டாற்றில் கைவிட்டு விட்டு நழுவிப் போய் விட்டார் வசந்தியின் கணவர்.
யேசு தனியொருவராக பாவிகளின் பாவங்களைச் சுமந்தமை போல் அவருடைய குடும்பத்தின் அத்தனை அல்லல்களையும் தனியொருவராகச் சுமந்துகொண்டு ஒருவாறு மனிக் பாமை விட்டு வெளியேறி காரைதீவை வந்தடைந்தார் முருகன். பாவம் அங்கு குடியிருக்கின்றமைக்கு சொந்தக் காணியும் இல்லை.. ஒரு குடிசையும் இல்லை. ஆரோ ஒரு சொந்தக்காரப் புண்ணியவானின் கருணையில் இரவல் காணி ஒன்றில் குடிசை என்று ஒன்றை போட்டுக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு அரசினால் எந்தவொரு நிவாரணமும் சரி, நட்டஈடும் சரி வழங்கப்படவே இல்லை.

அரச சார்பாற்ற நிறுவனங்களும் கருணை காட்டவே இல்லை. வசந்திக்கு செயற்கை கால் பொருத்திக் கொடுக்க எவருடைய மனிதாபிமானமும் இடம் கொடுக்கவே இல்லை. அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறலாம் என்றால் கூட போக்குவரத்துச் செலவுக்கு கையில் பணம் இல்லை. எல்லோராலும் சட்டம்தான் பேச முடிந்தது. ஆனால் ஒரேயொரு ஜீவன் மாத்திரம் உதவி செய்ய முன்வந்தது. பள்ளி செல்ல வேண்டிய வயத்தில் குடும்ப பாரத்தில் ஒரு பங்கை சுமந்து வருகிறது இந்த 14 வயதுப் பிள்ளை.

ஆம் அவர் வேறு யாரும் அல்லர் முருகனின் பேரன். வசந்தியின் மூத்த மகன். வயலில் தொட்டாட்டு வேலை செய்து கிடைக்கின்ற கொஞ்சக் காசைக் கொண்டு வந்து தாயிடம் கொடுக்கின்றான். கிபீர் தாக்குதலில் கணவனை இழந்த முருகனின் மகள் ஒருவரும் ஆதரிக்க வேறு யாரும் இல்லாமையால் பிள்ளைகளுடன் தகப்பன் வீட்டிலேயே தங்கி இருக்கின்றார்.

30 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் முருகனின் இன்னொரு மகள். எதிர்கால சந்ததியினரைக் கூட எறிகணை சும்மா விட்டு விடவில்லை. வசந்தியின் எட்டு வயது குழந்தையின் உடலில் இன்னமும் சன்னங்கள் அடையாளச் சின்னங்களாக இருக்கின்றன. கடவுள்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.

Comments