புலம்பெயர்வாழ்வில் தடுமாறும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும்

Youthலண்டனில் ஒரு பையன் கலியாணம் முடிக்க யோசித்தான். ஊரிலிருந்துதான் பொம்பிளையைக் கொண்டுவந்து முடிப்பம் என்று அவனது அண்ணாவும் அண்ணியும் ஆலோசனை சொன்னார்கள். அவனுக்கும் அது நல்லதாகப்பட்டது.

உண்மையில் இங்குள்ள ஆண்கள் ஊரிலிருந்து பெண் பிள்ளைகளை வரவழைத்து திருமணம் முடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் காரணம் ஊரிலிருந்து வருகிற பெண்கள் தங்கள் சொல் பேச்சு கேட்டு இருப்பார்கள் என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆண் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது நடைமுறையிலும் சரியாக இருக்கிறது. இங்கு வளரும் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆண்கள் ஊரில் அம்மா, அப்பா இருந்ததுபோல குடும்பம் நடத்தவேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

அதாவது அப்பா நினைப்பதை அம்மா செய்து முடிப்பாவே அப்படி. பெற்ற பிள்ளைகளை வளர்த்து அம்மா ஆளாக்கினாவே அப்படி. அப்பாவின் குடும்பத்தினரையும் பார்த்துப் பராமரித்தாவே அப்படி.

இது ஆணதிகாரத்தனமா என்ற கேள்விக்கு அச்சொட்டான பதில் யாரிடமும் இல்லை. ஏனெனில் அம்மாவும் அப்பாவும் ஊரில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஒரு ஆண்பிள்ளை நினைக்கிறான். அதனால் அம்மாவைப்போல் பொறுமைசாலியான பெண் ஊரில்தான் கிடைப்பாள் என்று ஆண் பிள்ளை நினைக்கிறான். இங்கு பிறந்து வளர்ந்த பெண் பிள்ளைகள் அதீத சுதந்திரம் என்று கொண்டு புருஷன்மாரை மதிக்கிறார்களில்லை என்று இங்குள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

நான் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு நேரடி நிகழ்ச்சி செய்யும்போது இங்குள்ள குடும்ப முறைகள் சார்ந்த தலைப்புக்களை எடுக்கும்பொழுது பல விடயங்களை ஆண்களும் பெண்களும் கொட்டித் தீர்ப்பார்கள்.

ஒரு நிகழ்ச்சியின்போது தொலைபேசி எடுத்த ஒரு தமிழர் தான் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் பெண்ணை திருமணம் முடித்ததாகவும் அந்த இளம் பெண் இங்கு வெள்ளைக்காரர்போல ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சனிக்கிழமையும் பப்புக்கு போகவேண்டும். குடிக்கவேண்டும். டான்ஸ் ஆடி சந்தோசமாக இருக்கவேண்டும் என வற்புறுத்தியதாகவும் ஒரு வருடத்தில் தமது திருமணம் முறிந்து விவாகரத்துக்குப் போய்விட்டதாகவும் சொன்னார்.

வெள்ளைக்காரரின் வாழ்வியலோடு ஒன்றிப்போகவேண்டும் என்று இங்கு பிறந்த ஆண்களும் பெண்களும் நினைக்கிறார்கள். அது சரியா, தவறா என்பதற்குப் பதில் உண்மையில் தடுமாற்றமானதாகவே இருக்கிறது.

இங்கு வாழும்போது இருக்கிற சுதந்திர உணர்வை இளைஞர்களும் யுவதிகளும் முழுமையாக அனுபவித்துவிடத் துடிக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் தனிமனிதர் அங்கீகாரம் என்பதும் சுயாதீனம் என்பதும் மிகவும் முக்கியமானது. இங்கு உழைக்கும்போது எங்களிடமிருந்து பெறப்படும் வரி 65 வயதுக்குப் பிறகோ அல்லது வேலை இல்லாமல் போனாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது உடல் உள பாதிப்புக்கு உள்ளானாலோ திரும்ப அரசாங்கம் மாதா மாதம் கணிசமான ஒரு தொகையை பணமாக வாழ்வுக்குப் போதுமானதாகத் திருப்பிக்கொடுக்கிறது.

அந்தப் பணக் கொடுப்பனவு இங்குள்ள ஒவ்வொரு பிரஜையும் தலைநிமிர்ந்து வாழ வழிசெய்திருக்கிறது. யாருடைய தயவும் யாருக்கும் தேவை இல்லை எனும்பொழுது ஏற்படுகின்ற சுதந்திர உணர்வு இங்கு வாழுகின்ற எல்லோருக்கும் ஏற்படுகிறது. அதனால்தான் இங்கு வந்து வாழுகிறவர்கள் சிலோனில் வந்து வாழ விரும்புகிறார்களில்லை. என்ன இருந்தாலும் தாய்நாடு போல வருமா என்று சொல்வதெல்லாம் பொய். அவர்களைக் கேட்டுப் பாருங்கள் தாய் நாட்டில் வந்து வாழுங்கள் என்று. உடனே சொல்வார்கள் பிள்ளைகள் உங்கே வந்து வாழமாட்டார்கள். பிள்ளைகளுக்கு விருப்பமில்லை என்று. உண்மையில் அப்படி சொல்கிற பெரியவர்களுக்கு துளிகூட சிலோனில் வந்து வாழ விருப்பமில்லை என்பதுதான் உண்மை.

இங்குள்ள நேர்த்தி, ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றவர்களின் வாழ்வில் தலையிடாத பக்கத்து வீட்டுக்காரர் என்று சுகமாக சுதந்திரமாக வாழ்பவர்கள் சிலோனில் வந்து இருக்க துளியும் விரும்புவதில்லை. வேண்டுமென்றால் கொலிடேக்கு ஒரு மாதமோ இரண்டு மாதமோ இருந்துவிட்டு வருவதற்கு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் குடும்ப அமைப்புக்களையும் மாற்றிக்கொண்டு வாழ தமிழர்கள் பழகிவிட்டார்கள். அது வாழும் சமூக சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி ஆகிவருகிறது.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இளைஞன் ஒரு அப்பாவியான நல்ல பொடியன். எனக்குத் தெரியும்.

சிலோனில் ஒரு பெண் பிள்ளையை பார்த்துப் பேசி முற்றாக்கிப் போட்டார்கள் அவர்களின் உறவினர்கள். அந்தப் பெட்டையோடு லண்டனிலிருந்து தொலைபேசி, ஸ்கைப் என்று ஒரு வருடமாக உருகி உருகி காதலித்தான் அந்தப் பிள்ளை. அந்தப் பெடியன் மிகவும் நம்பிக்கையோடு காதலித்ததையும் நான் பார்த்திருக்கிறன். உருக்கமாக குழைந்து குழைந்து காதலித்தான் அவன். இங்கிருந்து பரிசுப் பொருட்கள் அனுப்பி வைப்பதும் காசு அனுப்புவதும் என்று காதலும் பரிமாறல்களும் ஒரு வருடமாக தொடர்ந்துகொண்டுபோனது.

பொடியன் நல்ல காசுக்காரன். பெட்டையை சிலோனிலிருந்து ஸ்பொன்சர் பண்ணி எடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் ஆசை ஆசையாக செய்தான். இங்கு பொடியனின்; அண்ணாவும் அண்ணியும் உதவி செய்தார்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். பெடியனோடு மிகவும் பாசமாக பழகுவார்கள். வாழ்க்கை என்பது எங்கெங்கெல்லாம் சுற்றி அலைகிறது பாருங்கள். சிலோனில் இருக்கும் பெண்ணை லண்டனுக்கு எடுத்து கலியாணம் முடிக்கும் ஏற்பாடுகள் வலு மும்முரமாக நடைபெற்றன. அது ஒரு சாதாரணமான விடயமல்ல. முதலில் ரூறிஸ்ட் விசாவில் எடுத்துவிட்டு பிறகு டிப்பெண்டன் அல்லது பேர்மனன் ஸ்ரே என ஏதாவது செய்வோம் என மாப்பிள்ளை பையன் விரும்பினான். அதன்படி காரியம் நடந்து சிலோனிலிருந்த பெண்ணுக்கு யு.கே. விசா கிடைத்துவிட்டது.

காதலி; இப்பொழுது மனைவி லண்டனுக்கு வரப்போகிறாள் என்று பெடியனுக்கு சந்தோசம் நிலைகொள்ளவில்லை. இங்கு எல்லோரிடமும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு ஓடித்திரிந்தான்.

சிலோனில் பெட்டை விமானம் ஏறிவிட்டாள். பெடியன் லண்டனில் குதூகலித்தான்.

இங்கு விமானம் இறங்கும் நேரத்துக்கு ஹித்ரோ எயாபோட்டிற்குப் போனால் பெண் வரவில்லை. விமானம் ஏறி இருக்கிறாள் கட்டுநாயக்காவில். ஆனால் இங்கு வரவில்லை. பிறகு அவன் தேடி தேடி விசாரித்து விசரன் போல அலைந்து கடைசியில் இரவு ஒரு மணிபோல தெரிந்துகொண்டான்.

வந்த பெண் வந்துதான் இருக்கிறாள். யு. கே. யில் இறங்கியது வேறு ஒரு எயாபோட்டில். என்ன சிக்கல் என்றால்.

இவனை காதலிப்பதுபோல நடித்து பரிசுப் பொருட்களையும் வாங்கி ஸ்கைப்பிலும் மொபைலிலும் பேசி இவரை சமாளித்துவிட்டு இவரிடம் பணம் இருப்பது தெரிந்து இவரைக்கொண்டு ஸ்பொன்சர் பண்ணிக்கொண்டு தான் நீண்ட நாட்களாகக் காதலித்த பெண் லண்டனில் இருக்க வேறொரு எயாபோட்டுக்கு டிக்கெட்டை போட்டு தனது காதலனோடு வந்து சேர்ந்துவிட்டாள். இப்படியும் புத்திசாலித்தனமாக சிலோனிலிருக்கும் பிள்ளைகள் வந்துசேரும் வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். இப்பொழுது அவளது காதலனோடு அவள் வாழுகிறாள்.

ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டு கலியாணம் முடிப்போம் என்று எண்ணி ஆசையாக இருந்தவர் நடைப்பிணம். உண்மையில் புலம்பெயர் நாடுகளில் வாழ்வு தொடர்பாக எவ்வளவு தெளிவு வேண்டும். எவ்வளவு சமரசம் வேண்டும்.

சிலோனில் இருந்து வந்து இங்கு படித்து முடித்துவிட்ட பெண்பிள்ளை ஒன்று சொல்கிறது அப்பா, அம்மாவிற்கு நான் படித்து பட்டம் பெறவேண்டும் என்ற ஆசை, அதனைச் செய்து கொடுத்து விட்டுடேன். இனி நான் விரும்பியதைச் செய்யலாம். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. 'அப்ப கலியாணம் முடிக்க யோசிக்கவில்லையோ' என்று பொதுவாகக் கேட்டேன்.

இங்கு குடும்ப வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையீனம் வர வர அதிகரிக்கிறது. வாழ்வு தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அவநம்பிக்ககள் தொடர்கிறதாகவே நான் கருதுகிறேன்.

இப்போது உள்ள ஆண்களும் சரி பெண்களும் சரி நாம் ஏன் ஒருவருக்கு கட்டுப்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் குடும்ப உறவில் பெரும் குழப்பம் வருகிறது. திருமணம் தங்களை கட்டிப் போடுவதாகவும் எண்ணுகிறார்கள். சுதந்திரமான வித்தியாசமான பாலியல் தேவைகள் தொடர்பாக இப்போதைய இளைய சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. புலம்பெயர் தமிழ் சூழலில் திருமணம் என்பது பொதுவாக நிச்சயமற்றதும் சந்தோசத்துக்குரியதுமான ஒன்றாக மாறி வருகிறது. சிலோனில் எமது ஊர்களில் வாழ்ந்த திருமண முறைக்கும் வெள்ளைக்கார நாடுகளில் இருக்கும் திருமண முறைக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று முடிவெடுக்கிறார்கள்.

இங்கு எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் சிலோனில் நிச்சயதார்த்தம் முடித்து லண்டனுக்கு முதலில் வந்து இறங்கிவிட்டார். கணவன் அல்லது வருங்காலக் கணவன் சிலோனில் இருந்தார். இங்கு லண்டனில் அவவோடு வேலைசெய்யும் அவவிலும் ஐந்து வயது குறைந்த பையனோடு சாதாரணமான பழக்கம்தான் ஆரம்பத்தில். ஆனால் அது பிறகு பாலியல் ரீதியிலான பழக்கம் வரை போய்விட்டது. என்ன இவனிடம் கார் இருக்கிறது. இங்கு லண்டனில் கார் என்பது மிக முக்கியமான ஒன்று. தேவைக்கு ஒரு கார் இருந்துவிட்டால் தனது எல்லா தேவைகளையும் உடனே முடித்துவிடலாம்.

கார் தேவைப்பட்ட நேரமெல்லாம் இவ இங்கே உள்ள பையனைக் கூப்பிட அவனும் உதவி செய்ய உறவு வளர்ந்துகொண்டே போனது. ஒரு நேரத்தில் அந்தப் பையன் என்னிடம் வந்து கேட்டான் வயது கூடிய இந்தப் பெண்ணை திருமணம் செய்தால் என்ன? ஏதாவது சிக்கல் வருமா என்று. ஏன் என்று விசாரித்தேன். இல்லை அவ சொல்கிறா நாங்கள் திருமணம் முடிப்போம் என்று.

இந்தளவிற்கும் சிலோனில் உள்ள தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிளையோடு இந்தப் பெண் தொடர்பில்தான் இருக்கிறா. ஏன் அவ அப்படி யோசிக்கிறா என்று கேட்டேன். ஊரில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆண் ஒரு கோபக்காரர். எதற்கும் எரிந்து விழுகிறவர் என்று தன்னிடம் தொன்னதாக இந்த வயது குறைந்த பையன் சொன்னார். அத்தோடு தன்னோடு செக்ஸில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும் அவ சொன்னதாக இந்தப் பெடியன் என்னிடம் சொன்னான்.

உடனே பதற்றப்படாமல் இவனுக்கு விளங்கப்படுத்தினேன். இப்பொழுது நீ பழகுவது எந்த தேவையுமற்ற வெறுமனே கார் உதவி, பிறகு செக்ஸ் தேவைகள் தொடர்பான பழக்கம். ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் கணவன், மனைவி என்ற பந்தம் வேறு விதமான உணர்வுகள், விட்டுக்கொடுப்புக்கள், வாழ்வு, பணம், தேவை என்று ஒரு பெரும் ஒழுங்குகள் கொண்டு போகவேண்டிவரும்.

அத்துடன் அவவுக்கு திருமணம் வேறு நிச்சிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட பெடியன் லண்டன் வந்தால் வீண் பிரச்சினைகள், சச்சரவுகள் வரும். எனவே இந்தத் திருமணம் ஒத்து வராது என்று சொன்னேன். அவனும் பிறகு யோசிக்க ஆரம்பித்தான்.

வயது கூடிய பெண் என்பதைத்தான் அவன் கூட யோசித்ததாகத் தெரிந்தது. ஆனால் அவவின் தேவைகளை அவனும் அவனின் தேவைகளை அவவும் தொடர்ந்தும் பூர்த்தி செய்துகொண்டுதான் இருந்தனர்.

திடீரென்று அவ என்ன யோசித்தாவோ தெரியாது, சிலோன் போய் அந்த தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெடியனைத் திருமணம் செய்துகொண்டு வந்தா. இப்பொழுது அவர்களுக்கு ஒரு அழகான பிள்ளை இருக்கிறது. புருஷன் கார் ஓடுவார். வாழ்வு நன்றாகப் போகிறது.

இங்கு நான் சொல்ல வருகின்ற விடயம் இப்படியான வாழ்வு முறைகள் தொடர்பான சிக்கல்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு காரணம் மிக மிக சுதந்திரமாகச் சிந்திக்க, செயற்பட புலம்பெயர் நாடுகள் வழிசெய்திருக்கின்றன.

அதனால் இளைஞர்கள் தங்கள் வாழ்வு தொடர்பாக என்ன முடிவெடுக்கலாம் என்ற சிந்தனைக்கு வரமுடியாமல் இருப்பது மற்றும் இங்கு தங்களைக் கவனிக்க யாருமில்லை என்ற துணிவு. அதாவது ஒரு தனிமைப் படுத்தப்பட்ட தூர தூரமான இடங்களில் வாழும்பொழுது இன்னொரு தெரிந்த கண் எங்களைப் பார்க்க மாட்டாது என்ற துணிவில் தேவையான அளவுக்கு தேவையான நபரோடு செக்ஸ் உறவுகளை பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கிறது.

முழுமையான திருப்தியான உறவு கிடைக்கும் வரை அல்லது வித்தியாசமான உறவுகள் மூலம் திருப்திப்படும் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் என்ற துணிவும் வருகிறது. இங்குள்ள இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் போக்கில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

ஒரு சிக்கலான காலச்சாரத்துக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது முற்று முழுதான் உண்மைதான். அதனை யாரும் இனிமேல் மறுக்க முடியாது. புலம்பெயர் வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டு போகக்கூடிய ஒன்றல்ல.

எங்கள் கைக்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைகளை கொஞ்சம் உறுக்க முடியாமல் இருக்கிறது. உடனடியாக வெடுக் என்று பேசி விடுகின்றனர். எங்களின் தமிழர் வாழ்வு, கலாச்சாரம் தொடர்பான விடயங்களை அவர்களிடம் சொல்ல முடியாமல் இருக்கிறது. திடீரென்று முகத்துக்கு நேரே சொல்கிறார்கள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று.

ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் வாழ்வு என்று சிந்திக்கும் பொழுது வெள்ளைக்காரர் வாழ்வுதான் சரி என்கிறார்கள். ஆலயங்கள் புதிது புதிதாக வருகின்றன. தமிழ் சங்கங்கள் புதிது புதிதாக வருகின்றன. கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழர் விளையாட்டுப் போட்டிகள் என்று என்னென்னவோ வருகின்றன. ஆனால் புலம்பெயர் தேசங்களில் தமிழர் கலாச்சாரத்தினைப் பாதுகாப்பதற்கு இவை ஒன்றுமே போதுமானவையாக இல்லை.

நாங்கள் ஒன்று நினைக்க தமிழ் பிள்ளைகளும் இளைஞர்களும் யுவதிகளும் வேறொன்றை நினைக்கிறார்கள். புலம்பெயர் வாழ்வு, தகவல் தொழில்நுட்பம், அவசர உலகம் என்பன தமிழர் கலாச்சாரத்தினை விழுங்கிக்கொண்டிருக்கின்றன என்று இங்கு ஒரு ஆசிரியர் என்னிடம் சொன்னார். அது உண்மைதான்.

-இளைய அப்துல்லா

Comments