இலட்சியத்தைக் கைவிட்டவர்கள் ‘புலிகள்’ என்ற நாமத்தை உச்சரிக்கத் தகுதியற்றவர்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த காலம் முதல், தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளிடமும் பொது மக்களிடமும் தனது இலட்சியத்தை வலியுறுத்தும்போது,
‘நான் தமிழீழ இலட்சியத்தை எந்தக் காலத்திலாவது, என்ன காரணத்திற்காகவாவது கைவிட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், என்னை சுட்டுக் கொல்லத் தயங்க வேண்டாம்’ என்ற கட்டளையையும் விடுத்திருந்தார்.
அவரது அந்த ஆணை அவருக்கானது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்துடன் தமிழீழ விடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

தமிழீழ விடுதலைப் போர்க் களத்தை விட்டு வெளியேறும் ஜனநாயக உரிமையை யாருக்கும் யாரும் மறுதலிக்க முடியாது. அவ்வாறு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்ல விரும்பிய ஏராளமான போராளிகளுக்கு அதற்கான அனுமதியும் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டும் உள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால இறுக்கம் தளர்வுற்று, கால ஓட்டத்தில் பல ஜனநாயக விழுமியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், விடுதலைப் போராளிகளின் இந்த உரிமைக்கும் மதிப்பளிக்கப்பட்டது. ஏராளமான போராளிகள் போர்க் களத்தை விட்டு வெளியேறி, குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்கள்.

இந்த ஜனநாயக உரிமை தற்போதும் நடைமுறையில் உள்ளது. விடுதலைப் புலி என்பவன், தமிழீழம் என்ற இலட்சியக் கனவை நெஞ்சில் நெருப்பாகச் சுமப்பவன். அதற்காக எதையும் இழப்பதற்குத் தயாரானவன். அதற்காகவே, கழுத்தில் நஞ்சையும் நெஞ்சில் விடுதலை நெருப்பையும் ஒன்றாகவே சுமந்து செல்பவன். தனக்கான எல்லாவற்றையும் விடுதலை வேள்வித் தீயில் எரித்துப் போட்டவன். தேசியத் தலைவரையும், விடுதலைப் போராளிகளையும் மட்டுமே தனக்கான உறவுகளாய் வரித்துக் கொண்டவன். எதிரியின் வலையில் சிக்கிக் கொள்ள மறுத்துத் தன்னையே நெருப்பாக்கிக் கொடும் பகையை எரிப்பவன். அவன்தான் விடுதலைப் புலி.

தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிக் களம் வரை தமிழீழ இலட்சியத்தை யாருடனும் சமரசம் செய்து கொள்ளவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்கான யுத்த களத்தை இழந்த போதும், தான் கொண்ட அந்த தமிழீழ இலட்சியத்தை எதிரியிடம் இழந்துவிடவில்லை. விடுதலைப் புலிகள் ஒரு வேளை களத்தை இழக்க நேரிட்டாலும் தமிழீழ இலட்சியக் கனவை இழந்து விடக் கூடாது என்பதனாலேயே, தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கதரிசனமாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் போரை புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்திருந்தார். 2008 மாவீரர் தின உரையில் அதனைத் தெளிவாகவே எமக்குத் தெரிவித்திருந்தார்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழீழ மக்களும், ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விடுதலைப் புலிகளும் தங்களது இன்னுயிரை ஈந்து இதுவரை நகர்த்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் தடுத்து நிறுத்த முடியாத பிரவாகமாக புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை முன் நகர்த்தும் வல்லமை கொண்டது என்பதை முருகதாசன் திடல் நோக்கி நீண்ட நடை பயணம் அனைவருக்கும் உணர்த்துகின்றது.

வெற்றி மமதையுடன் விழா எடுத்த சிங்கள தேசம், தன் கைகளுக்குள் சிக்க மறுக்கும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளின் உறுதியால் அதிர்ந்து நிற்கிறது. துரோகிகளால் வீழ்த்தப்பட்ட தமிழீழப் போர்க் களம், புலம்பெயர் தமிழ் மக்களால் முன்னிலும் பார்க்க வேகமாக புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் உந்து சக்தியாக சிவந்தனின் நீதிக்கான நடை பயணம் அமைந்து விட்டது சிங்களம் எதிர்பார்க்காத பேரதிர்ச்சி. புலம்பெயர் தேசங்கள் எங்கும் சிங்களத்தால் விதைக்கப்பட்ட புல்லுருவிகள் சித்தம் கலங்கிப் போயுள்ளார்கள்.

‘தமிழீழ விடுதலை’ என்ற அந்த உன்னத இலட்சியத்தில் இருந்து தவறும் யாரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை. அதனைக் கைவிட்ட யாரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை உச்சரிப்பதற்கே யோக்கியதை இழந்தவர்களாகவே கருதப்பட்டதுடன், தமிழ் மக்கள் அவர்களை ‘துரோகிகள்’ என்றே அடையாளப்படுத்தி, அந்நியப்படுத்தினார்கள். புலம்பெயர் தேசங்களிலும், தமிழீழ இலட்சிய நெருப்பை அணைத்துவிடலாம் என்று சிங்கள அரசுடன் கைகோத்துள்ள கே.பி. குழுவினருக்கும் இதுவே பொருந்தும்.

தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து, கே.பி.யை புதிய தலைவராக்க முற்பட்டு தோற்ற இந்த நாசகார சக்திகள், புலம்பெயர் தமிழர்களைக் குழப்புவதிலும், புலம்பெயர் விடுதலைப் போராட்ட களத்தைச் சிதைப்பதிலும் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றார்கள்.

இதற்கான வழங்கல்கள் சிங்கள அரசால், கே.பி. ஊடாக புலம்பெயர் தேசங்களிலுள்ள அவரது அணியினருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் பல கே.பி. அணியினர் திடீர் பணக்காரர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்றம் பெற்று வருவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய செய்தி அல்ல.


இவர்களில் பலர், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் பல காலம் சேவையாற்றியதாக வேறு, தமது காரியங்களுக்கான காரணங்களைக் கூறும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தைக் கைவிட்டு, சிங்கள தேசத்துடன் கை குலுக்கி வாழலாம் என்று தீர்மானிப்பவர்கள், கருணா போல் போராட்ட காலக் கணக்கைக் காட்டுவது நகைப்பிற்குரிய விடயமாகவே உள்ளது.

நான் சிறு வயதாக இருந்த காலத்தில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தது. ஒரு சிறுமி, அவளது தந்தையாராலேயே கெடுக்கப்பட்டு, அவரது பிள்ளைக்குத் தாயாக்கப்பட்டிருந்த கொடூரம் நீதி மன்றத்திற்கு வந்திருந்தது. விசாரணையின் ஒரு கட்டத்தில் அந்த மிருகத் தந்தை நீதிபதியிடம் கேட்டான்,
‘நான் நட்டு வளர்த்த மாமரத்தில் நான் பழம் பறித்துச் சாப்பிட்டதில் என்ன தவறு?’ என்று. கே.பி. குழுவினரின் விடுதலைப் புலிகள் மீதான உரிமை கோரல்
அந்த வழக்கையே நினைவூட்டுகின்றது.

நண்பர் ஒருவர் சொன்னார், ‘கே.பி. தமிழ் மக்கள் மத்தியில் அம்மணமாகி, அசிங்கப்பட்டு நிற்கிறார். இப்போதும் கே.பி. குறித்து ஊடகங்கள் எதற்காக எழுதுகிறார்கள்?

கருணா போல், கே.பி. யையும் அசிங்கமாகக் கருதி விட்டுவிட வேண்டியது தானே’ என்று. அதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனாலும், சிங்கள தேசம் கருணா மூலமாகச் செய்ய முடியாத ஒன்றை கே.பி. மூலமாகச் செய்ய முனைகின்றது.

அதற்காக புலம்பெயர் நாடுகளிலுள்ள கே.பி. குழுவினருக்கு ஏராளமான நிதி வழங்கப்படுகின்றது. அதன் மூலமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கவும், பிளவுகளை ஏற்படுத்தவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சமீப காலத்தில், பிரான்சில் வேலையே அற்ற இரு மனிதர்களால் ஒரு பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது. 32 பக்கங்களும் வண்ணத்தில் அச்சிடப்படும் அந்தப் பத்திரிகையை வெளியிடும் அளவிற்கு அவர்களிடம் வளம் இருப்பதற்கான எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இலவசமாக வெளிவரும் அந்தப் பத்திரிகையில் தமிழீழ மக்களது அவலங்கள் திட்டமிட்ட வகையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதுடன், தமிழீழம், தமிழீழ மக்கள் என்ற சொற் பதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இது ஒரு நாசகாரத் திட்டமொன்றின் முன் முயற்சியாகவே நோக்கப்படுகின்றது. அடுத்த வேளைக்கும் அடுத்தவர்கள் கையை எதிர்பார்க்கும் நிலையில், தமிழீழம் சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பணம் செலவளித்து, இலவசமாக ஒரு பத்திரிகை வண்ணமயமாக்கப்பட்டு வெளியிடப் படுகின்றதென்றால், அதன் அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் அதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

- பாரிசிலிருந்து சிவபாலன்

Comments