ஹாய் அம்புலிமாமா கே.பி ,
நீங்கள் நல்லவரா? கெட்டவரா??
இது தான் தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நடைபெற்றுவரும் விவாதம்.
தங்களின் பொன்னான நேரத்தை இந்த வீணாய்ப்போன விவாதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் செலவு செய்வது தேவையற்றது.
ஏனென்றால், உனது நண்பன் யார் என கூறு, நான் உன்னைப்பற்றி கூறுகிறேன் என சொல்வதுண்டு. இந்த சிம்பிள் தத்துவம் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா.
உங்களின் உயிர் தோழனாக பிரதான போர்க்குற்றவாளி கோத்தபாயா ராஜபக்சா இருக்கும் போது. உங்கள் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு என்ன இருக்கிறது??
இருந்தாலும் சிறீலங்கா அரச ஊடகங்களுக்கு நீங்கள் திரித்துக் கூறும் நேர்காணல்களில் விடப்பட்ட, எனக்கு கிடைத்த தகவல்களையும், இங்கு ஆராய்ந்துவிடுவது பொருத்தமானது.
விடுதலைப்புலிகளின் ஆயுத வினியோக நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் 2002 ஆம் ஆண்டு வெளியேற்றப்படடிருந்தீர்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. நிதி மோசடி ஒரு காரணமாக இருந்தாலும், அதனை உங்களின் தனிப்பட்ட செலவு என நீங்கள் கூறியதை விடுதலைப்புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டிருந்தது.
வெளிநாடுகளில் பல பெயர்களில், பல கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் உங்களுக்கு செலவுகள் அதிகம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாத நிலையில் அவர்கள் இல்லை.
எனினும் அவர்கள் உங்களுக்கு ஓய்வு கொடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகம் செய்பவர் நீங்கள் என்பது பரகசியம், எனவே அனைத்துலகத்தினாலும் உற்று அவதானிக்கப்படும் உங்களை கொண்டு தொடர்ந்தும் ஆயுதங்களை தருவிப்பது ஆபத்தானது என்பது சிறுகுழந்தைக்கும் புரியும். அதனை தான் தேசியத் தலைவர் மேற்கொண்டிருந்தார்.
விடுதலைக்கு போராட புறப்பட்டவர்கள் பதவி நிலைகளுக்கு அப்பால் பட்ட உன்னதமான இலட்சித்தை கொண்டிருத்தல் வேண்டும் என்பது அடிப்படை விதி. தளபதி, பொறுப்பாளர் என்பது எல்லாம் அனுபவம், தேவை கருதி வழங்கப்படும் பதவி நிலைகளே தவிர விடுதலைப்போரில் அதனை கௌரவத்தின் சின்னமாகவோ அல்லது புகழின் உச்சமாகவோ கருத முடியாது.
தேசியத் தலைவரின் பிரதம பாதுகாவலராக விளங்கிய லெப். கேணல் இளங்கோ எல்லாளன் நடவடிக்கைக்கு சென்றதும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் நியூட்டன் இயக்கப் பணிகளுக்காக கொழும்பு சென்றதும் அதற்கான சிறு உதாரணங்கள்.
ஆறு மாதம் சமயல் கட்டில் பணிசெய்து கிடந்த கட்டளைத்தளபதி கேணல் ஜெயம், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு பழிவாங்க கோத்தாவின் காலை நக்க ஓடவில்லை.
சரி அதனை விட்டு நாம் நாலாம் ஈழப்போர் சம்பவங்களுக்கு வருவோம்.
ஈழப்போர் உக்கிரமடைந்து பூநகரி வீழ்ச்சி கண்ட காலப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் என நினைக்கிறேன் நீங்கள் ஒரு திட்டத்தை முன்வைத்திருந்தீர்கள்.
அதாவது சிறீலங்கா படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளாது விடுதலைப்புலிகளின் முழு கட்டமைப்புக்களும் சரணடைவது என்பதே அது.
தேசியத் தலைவர் உட்பட முதற் கட்ட தலைவர்களும், தளபதிகளும் நோர்வேயிடம் சரணைடைவது, இரண்டாம் கட்ட தளபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடன் வேறு ஒரு நாட்டிடம் சரணடைவது, இளநிலை தளபதிகளும், போராளிகளும் சிறீலங்கா அரசிடம் செஞ்சிலுவை சங்கததின் ஊடாக சரணடைவது என்ற திட்டத்தை நீங்கள் முன்வைத்திருந்தீர்கள்.
அது தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரிடம் இருந்து ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாக கிடைத்தது. அதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு மட்டுமல்ல ஒருவருக்குமே புரியவில்லை.
சிறீலங்கா இராணுவம் தனது இழப்புக்களை குறைப்பதற்காக முன்கொண்டுவந்த திட்டம் அது என்பது ஒருபுறமிருக்க, போர் நிறைவுபெற்றபோது ஐ.நா அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் ஆகியவர்களின் உத்தரவுகளுக்கு அமைய வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அரசியல் துறை பொறுப்பாளர் திரு பா. நடேசன், சமாதானச் செயலக பணிப்பாளர் திரு சி. புலித்தேவன், கட்டளை தளபதி ரமேஸ் ஆகியோர் கோரமாக படுகொலை செய்யப்பட்டபோது தலைவரின் புன்முறுவலின் அர்த்தம் எமக்கு மட்டுமல்ல உங்களுக்கும் புரிந்திருக்கும். அன்று விடுதலைப்புலிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்களும் சரணடைந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் நயவஞ்சகமாக கொல்லப்பட்டிருப்பார்கள், ஆனால் சிறீலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகள், இனப்படுகொலை என்ற அனைத்துலகத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பியிருக்கும்.
எனினும் உங்களை அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைக்கான பொறுப்பாளராக தலைவர் நியமித்தார், அது ஏன்??????????
ஒரு வாரம் இரு பக்கங்கள் மட்டுமே எனக்கு ஒதுக்கப்படுவதால் உங்களுக்கான இந்த நீண்ட கடிதம்
அடுத்த வாரமும் தொடரும்
--------------
அன்புள்ள பிரிகேடியர் கே.பி மாமாவுக்கு,
கடந்த வாரம் இடையில் விட்டுச் சென்ற நான் மீண்டும் வந்தபோது நீங்கள் பிரிகேடியர் ஆகி விட்டீர்கள், பரவாயில்லை நீங்கள் ஆசைப்படுவதை செய்ய கோத்தா உள்ளபோது உங்களுக்கு என்ன குறை. அடுத்த வாரம் நீங்கள் மேஜர் ஜெனராலாக (இரண்டு நட்சத்திர அதிகாரி) மாறினாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது.
நிற்க,
நீங்கள் குளறுபடிகள் செய்தபோதும், தலைவர் ஏன் உங்களை அனைத்துலக விவகாரங்களுக்கான பிரதிநிதியாக நியமித்தார் என்பது எல்லோருக்கும் புதிராகவே இருந்தது. ஆனால் அதன் நோக்கம் தெளிவானது.
அதாவது பல உளவு அமைப்புக்களின் முகவராக செயற்படும் உங்களை பயன்படுத்தி அந்த நாடுகளை ஏமாற்றவே அவர்கள் முயன்றிருந்தனர். கப்பலுக்கும், உலங்குவானூர்திக்கும் உங்களை நம்பி இருப்பதாகவே அவர்கள் காண்பித்துக் கொண்டனர்.
நீங்களும் கப்பலையும், உலங்குவானூர்தியையும் வாங்குவதாக நாடகம் போட்டீர்கள். உங்களுக்கு காவடி தூக்கும் நபர் ஒருவர் என்னுடன் கதைக்கும்போது கூறினார் (14.05.2009), அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை மையத்தின் கப்பல் தயாராக உள்ளதாகவும், ஆனால் அதற்கு உத்தரவுகளை வழங்கும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
அவர் விடுமுறையில் சென்றால் தனது பணிகளை செய்வதற்கு வேறு ஓருவரை நியமித்துவிட்டு தானோ போவார் என நான் கேட்டேன், அதற்கு அவர் கூறினார் அவரால் மட்டும் தான் அதனை மேற்கொள்ள முடியும் என்று.
என்???? எனக்கு எதுவும் புரியவில்லை
சரி, அவர் சென்ற நாட்டுக்கு தொடர்பை ஏற்படுத்தி அவரை தொடர்புகொள்ள முடியாதா? என நான் மீண்டும் அவரிடம் கேட்டேன் (இந்த உரையாடல் நடைபெற்ற சமயம் முள்ளிவாய்க்காவில் இறுதிச் சமர் ஆரம்பமாகியிருந்தது).
தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாத இடத்திற்கு அவர் சென்றுவிட்டதாக அந்த நபர் எனக்கு கூறினார். அதனை தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனுக்கும் அவர் தெரிவித்திருப்பார் என எனக்கு புரிந்தது.
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவானது, இந்த நாதாரி எனக்கும், விடுதலைப்புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு காதில் பூ சுற்றுகிறான் என்று. விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததும் இந்த நாதாரி தான் உங்களை (கே.பியை) விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக பிரகடனப்படுத்துவதில் முன்னிலை வகித்தவன்.
சரி மாமா, நீங்கள் சிங்கள ஊடகங்களுக்கும், அதற்கு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கும் நேர்காணல்களில் பல முரன்பாடுகளை தோற்றுவித்து வருகின்றீர்கள். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தை காப்பாற்ற நீங்கள் முயன்றபோது நெடியவன் உங்களுக்கு உதவவில்லை என உங்களின் அடிவருடி ஊடகவியலாளன் உளறிக் கொட்டுகிறான்.
உங்களின் நேர்காணல் என்ற பேர்வையில் தனது தமிழின விரோதத்தை கக்கி தீர்க்கிறான். ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. உங்களிடம் இருந்த ஆயுத வினியோகப் பணிகள் அகற்றப்பட்டு அதனை ஐயா அண்ணையிடம் வழங்கியதாகவே நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.
2002 ஆம் ஆண்டில் இருந்து வினியோகப் பணிகளை ஐயாவும், இளங்குட்டுவனும் மேற்கொண்டு வருவதாகவும் நீங்கள் தான் தெரிவித்திருந்தீர்கள். அப்படியானால் உங்களிடம் உலங்குவானூர்தியும், கப்பலும் கேட்கப்பட்டபோது, ஆயுதவினியோகங்கள் மற்றும் கொள்வனவுகளில் அதிக அனுபவம் வாய்ந்த ஐயாவை அல்லவா நீங்கள் தொடர்புகொண்டிருக்க வேண்டும்????
நான் நினைக்கிறேன், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் பிரதம கட்டமைப்புக்களின் தொடர்புகளை அவர்கள் உங்களுக்கு வழங்கவில்லை. புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைக்கான கட்டமைப்புக்களுடன் தான் உங்களுக்கு தொடர்புகள் இருந்துள்ளதை நீங்களே ஒப்புக்கொண்டுளீர்கள்.
எனவே முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு கஸ்ரோ அண்ணையையும், நெடியவனையும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்களையும் குறிவைத்து நீங்கள் தொடர்ந்து தாக்கி வருவதன் பின்னனியில் கோத்தாவின் வாசைன வருகின்றது.
பரவாயில்லை மாமா, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு சமரின் போது, குண்டுச் சிதறல்பட்டு இடுப்புக்கு கீழே இயக்கமற்று, சக்கர நாற்காலியில் இருந்தவாறு போராடிய கஸ்ரோ அண்ணா இயக்கத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், கோத்தாவின் மடியில் புரளும் நீங்கள் இயக்கத்தை காப்பாற்றுவதாகவும், தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாகவும் கூறுவது வியப்பானது.
அது மட்டுமல்லாது, நீங்கள் சேர்ந்துள்ள கூட்டணியும் வியப்பானது.
தொடரும்
நன்றி-ஈழம்செய்திகள்
Comments