இந்தியா இலங்கைக்குச் சிறப்புத் தூதுவரைத் அனுப்புவது ஏன்? தேர்தல் வரும் பின்னே; நாடகம் நடக்கும் முன்னே!

அண்மையில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் அடுத்த மாதம் இலங்கைக்குச் சிறப்புப் பிரதிநிதியை அனுப்பி, தமிழர் பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நான்காம் கட்ட ஈழப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தியாவிலிருந்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட மூன்று முறை தனது பிரதிநிதிகளை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தும்கூட உலகத் தமிழர்கள் எதிர்பார்த்தது போல் போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை. மேற்குலக நாடுகளின் போர்நிறுத்த முயற்சிக்கும் இந்தியா தடையாகவே இருந்தது. மாறாக, பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் தமிழர்களைத் தாக்க மாட்டோம் என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த 4,50,000 த்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட, சுமார் ஒரு இலட்சம் பேர்கள் சிங்கள இராணுவக் குண்டுவீச்சால் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.

அந்தச் சமயத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 70,000 தமிழர்களை, புலிகள் விடுவிக்க வேண்டும் என மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதன் மர்மம் மீதமுள்ள தமிழர்கள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் உள்நோக்கமாக இருந்ததோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

தற்போது அனுப்பப்படும் சிறப்புத் தூதுவர் போர் முடிந்து 15 மாதங்களாகியும் இன்னும் வதை முகாம்களில் தடுத்து சித்திரவதைச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் 11,000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய வற்புறுத்துவார்களா? அதுபோல் முள்வேளி முகாம்களுக்குள் உள்ள சுமார் 80,000 தமிழர்களை விடுவித்து அவரவர் இருப்பிடங்களில் வாழ வழிவகை செய்வார்களா?

ஏற்கனவே மீள்குடியமர்த்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் சுமார் இரண்டு இலட்சம் தமிழர்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பப்படாமல் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்களை முல்லைத்தீவிற்கும், முல்லைத்தீவில் வாழ்ந்தவர்களை வேறு இடங்களுக்கும் மாற்றி அனுப்புகின்றார்கள் என்றும், தமிழர் வசிப்பிடங்கள் பல ஏற்கனவே சிங்கள இராணுவ முகாம்களாகவும் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதை யாராலும் கண்டிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்று இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரை அண்மையில் சந்தித்துப் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் 40 நிமிட நேர அந்தச் சந்திப்பில்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைப் பற்றி அதிக நேரம் குறைப்பட்டு புலம்பினாரே தவிர, ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களை தமிழக முதல்வர் காது கொடுத்து கேட்கவில்லையென ஒரு இலங்கை தமிழ் எம்.பி கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களின் பாதிப்புகளைவிட ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிடக் கூடாது என்கிற கவலைதான் அவரை பெரிதும் வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்துவது பற்றி ஆய்வு செய்திட நியமிக்கப்பட்ட ஐ.நா.வின் மர்சுகி தருஸ்மன் தலமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் அதிபர் இராஜபக்சே பற்றி இந்தியா இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாத போது, ஈழத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதில் இவர்கள் என்ன அக்கறை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்?

கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நடந்த கண்துடைப்பு நாடகங்கள்தான் மீண்டும் இப்போது சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழ்நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன.

மேற்குலக நாடுகள் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததற்காக ஜி.எஸ்.பி வரிச்சலுகை இரத்து, போர்க்குற்ற விசாரணை ஆகியவற்றில் இருந்து அதிபர் இராஜபக்சே கூட்டத்தாரைக் காப்பாற்ற இந்திய அரசும் சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமிழக எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி புனரமைப்புப் பணிகள் ஒழுங்காக நடைபெற்று வருவதாகக் கூறி உலகை ஏமாற்றினர். தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வருவதால் கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பாற்ற, சோனியா காந்தி இராஜகப்சே உதவியுடன் சிறப்புத் தூதரை அனுப்பி, தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

அன்று ஈழப்போராளிக் குழுக்களை ஆயதந் தாங்கிப் போராடச் செய்தது இந்திரா காந்தி. அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி ஈழப்போராளிகளின் தற்காப்பு ஆயதங்களைப் பறித்தது இராஜிவ் காந்தி. கடந்த ஆண்டு ஆயுதங்களை ஒப்படைத்தால் போர் நிறுத்தமும் பொதுமன்னிப்பும் அளித்திட இலங்கையை வலியுறுத்துவோம் என சிதம்பரத்தின் மூலம் அறிவித்தது சோனியா காந்தி. ஆனால் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை. இன்றுவரை பொதுமன்னிப்பும் வழங்கப்படவில்லை. வெள்ளைக் கொடியோடு சமாதானம் பேசவந்த அரசியல் ஆலோசகர் நடேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போராளிகளைச் சர்வதேசப் போர்விதிகளை மதிக்காமல், இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதைக்கூட இந்தியா தடுக்கவில்லை.

தற்போது இலங்கை செல்லவிருக்கும் இந்தியத் தூதுவர், போர் நடந்த பகுதிகளில் சர்வதேச ஊடகவியலாளர்களையும் தொண்டு நிறுவனங்களையும் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட அனுமதிப்பெற்றுத் தருவாரா? அல்லது போர்க்குற்ற தடையங்களை அழிப்பதற்கு ஆலோசனை சொல்லிவிட்டு வரப்போகிறாரா?

முதலில் இந்தியா இலங்கைக்கு எவ்வித ஆயத உதவிகளையும் செய்யவில்லை என மறுத்து வந்தது. பிறகு சீனாவையும், பாகிஸ்தானையும் காரணங்காட்டி இந்தியா இலங்கைக்குச் செய்த இராணுவ உதவியை மறைமுகமாக ஒப்புக்கொண்டது. அதுமட்டுமன்றி இலங்கையின் இராணுவ செயலாளர் கோத்தபய இராஜபக்சே, இந்தியாவுக்கான போரை அவர்களது ஆலோசனையின் பேரில் இலங்கை செய்து முடித்தது என்றும் இந்தியா உதவியிருக்கவில்லையென்றால் இலங்கையால் இப்போரில் வெற்றிபெற்றிருக்க முடியாது எனக்கூறியதால், இந்தியா தமிழர்களுக்குச் செய்த இரண்டகம் அப்போது வெளிப்பட்டது.

மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி பினாங்கு மாநில சட்டமன்றத்தில், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஆதரவுத் தீர்மானமொன்றை நடப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளது பாராட்டத்தக்கது. அதுபோல தமிழக முதலமைச்சர் கருணாநிதி இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடுவண் அரசு மூலம் ஐ.நா.வை நிர்பந்திப்பாரா?

காசா பகுதியில் சுமார் 17;00 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா போர்க்குற்ற விசாரணை செய்ய வந்ததற்கு இந்தியா வரவேற்றது. ஆனால் இலங்கையில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மேற்குலக நாடுகள் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை நடத்த எடுத்த முயற்சிகளை இந்தியா தலையிட்டு முறியடித்தது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதால்தான் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் என்று இலங்கை கடற்படையின் சட்டவிரோதச் செயல்களை இந்திய வெளியுறவுத்தறை அமைச்சரும், இந்தியக் கடற்படை தென்பிராந்திய தளபதியும் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். அண்மையில் எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த ஈரான் நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் விபத்துக்கு ஆளானபோது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை அவர்களை சுட்டுக்கொல்லாமல் பத்திரமாக மீட்டு ஈரானுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழர்கள் என்றாலே இலங்கைக்கு உள்ளேயும், வெளியிலும் சுட்டுக்கொல்வதை ஒரு வாடிக்கையாகவே கொண்டிருக்கும் இலங்கை அரசை இந்தியா இதுவரை தட்டிக்கேட்டது கிடையாது. கூட்டணி தர்மம் குலையக் கூடாது என்பதற்காக தமிழக மீனவர்கள் மீது நடைபெறும் அதர்மத்தைக்கூட தட்டிக்கேட்காமல் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.

பீகார் மாநிலத்தவர் சிலர் மும்பையில் தாக்கப்பட்டால், பீகார் மாநிலம் முழுவதுமே கொந்தளித்து எழுகிறது. உ.பி.மாநிலத்தில் நிலம் கையகப்படுத்த அரசு முற்பட்டபோது, 4 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்காக நாடாளுமன்றமே அமளி துமளி ஆனது. ஆனால், இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் சிறு சலசலப்பு கூட ஏற்படவில்லை என்பது வேதனைக்குரியது. இலங்கையும் இந்தியாவும் தமிழர்கள் என்றாலே, ஒரே மாதிரியாக, கிள்ளுக்கீரையாகக் கருதுகிறார்கள்.

இலங்கைத் தீவில் வாழ இயலாமல் தப்பித்து கப்பலில் வந்த ஈழத்தமிழர்களை விசாரித்து சில வாரங்களிலேயே அவர்கள் அனைவரையும் அகதியாக ஏற்றுக்கொள்ள முன்வருகிறது கனடா. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படி வரும் ஈழத்தமிழர்களை அகதியாகப் பார்க்காமல், தீவிரவாதிகளைப்போல் கருதி திருப்பியனுப்பும் இந்தியாவின் மனிதாபிமானமற்றச்செயலில் மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டிலேயே முன்பு வந்த ஈழத்தமிழரை சிறீபெரும்புதூர் சிறப்பு முகாமில் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தியா, இலங்கை சென்று தடுப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களையும், போர்க் கைதிகளையும் விடுவித்து புனர்வாழ்வு அளிப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். இதைப் பார்த்தால், தேர்தல் வரும் பின்னே, நாடகம் நடக்கும் முன்னே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனவே, மேற்குலக நாடுகளும் ஐ.நா.வும் தங்கள் முயற்சிகளிலிருந்து பின் வாங்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பது, கானல் நீh போல ஆகிவிடும்.

பேராசிரியர் தீரன்

Comments