![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiISZ2tIeFH26Mi0ldU7q5f1Cc-u4prpSKbhjaGdaNCkCixm9tI-ZPS6FpzA54crgDKVzTz2MO4DinDtCXcte1h_AVFicfre3lbttZ9H_1RJZl0wBjfwNGi_RbxHlhRYNBgG1mtrSOTfWWA/s400/india-srilanka-sonia.jpg)
கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த போரின் இறுதியான சில மாதங்களில் ஏறத்தாள 75,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு தெரிவித்திருந்தது. போரின் இறுதி மாதங்களில் 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சிறீலங்காவுக்கான ஐ.நாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கோடன் வைஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு தனது தரவுகளை போருக்கு முன்னர் வன்னியில் இருந்த மக்கள் தொகையுடன், தற்போது அரசு தெரிவித்துள்ள மக்கள் தொகையை ஒப்பிட்டு இந்த இழப்பு விபரத்தை தெரிவித்துள்ளது. இவற்றை விட பல ஆயிரம் மக்கள் காயமடைந்துள்ளனர், அங்கவீனமாகியுள்ளனர், பல நு£று பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட முறையில் இந்திய - சிறீலங்கா அரசுகளினால் கொல்லப்பட்ட இந்த மக்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது தமிழ் மக்கள் முன்வைத்து வரும் முதன்மையான கோரிக்கை.
கடந்த சனிக்கிழமை (24) பிரித்தானியா பிரதமர் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் அலுவலகம் நோக்கி கோபி சிவந்தன் (29) என்ற தமிழ் இளைஞர் மேற்கொண்டுள்ள நடைப்பயணத்தின் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று.சிறீலங்காவின் வரலாற்றில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கான அல்லது படுகொலைகளுக்கான நீதிகள் வழங்கப்படுவதில்லை. 27 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் மேற்கொண்ட நாடு தழுவிய தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிகள் கூட இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1956 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த படுகொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் தான் 2009 ஆம் ஆண்டு ஒரு குறுகிய நேரத்தினுள் பல பத்தாயிரம் மக்களை சிறீலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர்.
இன்று இந்த வன்முறைகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்கு என ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள குழுவே ஒரு சிறு நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அது ஒரு விசாரணைக்குழுவாக இல்லாது, ஆலோசனைக்குழுவாக இருக்கின்றபோதும், அதன் மூலம் எமது மக்களின் துன்பங்களை வெளியுலகிற்கு கொண்டுவரலாம் என்பது தமிழ் மக்களின் அவாவாக உள்ளது.எனினும் அதனையும் முற்றாகத் தடுப்பதற்கு சிறீலங்கா அரசு முயன்று வருகின்றது.
ஐ.நாவுக்கு எதிராக கொழும்பில் வன்முறைகளுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட சிறீலங்கா அரசு தற்போது அனைத்துலகத்தில் தனக்கு ஆதரவுகளை வழங்கும் ஆசிய நாடுகளின் உதவியுடன் இந்த ஆலோசனைக்குழுவை இல்லாது செய்ய முற்பட்டு வருகின்றது.சிறீலங்கா அரசின் இந்த முயற்சிக்கு இந்தியாவும் திரைமறைவில் உதவியே வருகின்றது. வன்னியில் நடைபெற்ற நாலாவது ஈழப்போரை முன்னின்று நடத்திய இந்திய மத்திய அரசு தற்போது அதில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அழித்துவிட சிறீலங்கா அரசுக்கு துணை நின்று வருகின்றது.வன்னியில் நடைபெற்ற போரில் சிறீலங்கா படையினருடன் இந்திய படையினரின் இணைந்த நடவடிக்கையானது வவுனியா வான்படை தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் அம்பலப்படுத்தப்பட்ட போதும், இன்று வரை இந்தியா தனது படையினரை சிறீலங்கா இராணுவத்திற்கு துணையாக அனுப்பியே வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்கா இராணுவத்தினருடன் கணிசமான அளவு இந்திய இராணுவத்தினர் போரின் போது களமுனையில் செயற்பட்டதாக தெரிவித்துள்ள இந்திய ஆய்வாளர் ஒருவர், அது தொடர்பில் சில புதிய தகவல்களையும் வழங்கியுள்ளார்.சிறீலங்கா படையினருடன் போரில் ஈடுபடுவதற்கு தமிழகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் இருந்தே இந்திய இராணுவத்தினர் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஆந்திரா பிரதேசத்தில் இருந்து சென்றவர்களும் அதிகம்.அவ்வாறு சென்ற இந்திய இராணுவத்தை சேர்ந்த ஒருவரின் உறவினர் ஒருவர் சில தகவல்களை தந்திருந்தார். தனது உறவினரும் சிறீலங்காவில் போரிட தெரிவு செய்யப்பட்டிருந்தார் என தெரிவித்த அவர், மேலும் கூறுகையில் தெரிவித்ததாவது:
சிறீலங்காவில் போரிட தெரிவு செய்யப்பட்டவர்கள் திருமணமாகாதவர்களாகவே இருத்தல் வேண்டும், இந்தியாவின் சிறப்பு படை மற்றும் கொமோண்டோ படைகளில் பணியாற்றியவர்களாக இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதுடன், ஒரு வருடம் தொடர் சேவை அதன் பின்னர் ஆறு மாதம் ஓய்வு, பின்னர் மீண்டும் ஒரு வருடம் தொடர் சேவை என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு மாத சம்பளமாக 25,000 இந்திய ரூபாய்கள் சிறீலங்கா அரசினால் வழங்கப்பட்டதுடன், போரில் இறந்தால் ஒரு கோடி ரூபாய்கள் வழங்குவதாகவும் ஒப்பந்தங்கள் இடப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கான உணவு, விமானக் கட்டணம், தங்குமிடம் என்பனவும் சிறீலங்கா அரசினாலே வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் முழுவதும் வன்னியில் பணியாற்றிய தனது உறவினர் ஆறு மாத ஓய்வின் பின்னர் தற்போதும் சிறீலங்கா சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்திய அரசு மேற்கொண்ட இந்த அழித்தொழிப்பு போருக்கான இராஜதந்திர ஆதரவுகளை ஐ.நாவின் ஊடாக அதன் அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியிருந்தார். அதாவது இந்தியாவின் முற்று முழுதான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைகளுக்கான நீதியை உலகில் தேடுவது என்பது மிகவும் கடினமான பணியாகவே தமிழ் மக்களுக்கு அமையப்போகின்றது. எனினும் அதனை தேடும் வல்லமை புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் உண்டு.
அதனைத் தான் சிவந்தன் ஆரம்பித்துள்ளார்.எனினும் அபிவிருத்தி, நிதி உதவி என இந்தியா எமது மக்களை திசை திருப்பி அவர்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்க முற்படலாம். அதற்கான நடவடிக்கையாகவே இந்தியா மேற்கொண்டுள்ள நிதி உதவியும், மன்மோகன் சிங் - கருணாநிதியின் கடிதப் பரிவர்த்தனைகளும் இடம்பெற்று வருகின்றன.எனினும் போரில் எம்மை அழிப்பதற்கு உதவிய இந்தியா, தற்போது வடக்கு - கிழக்கில் சிங்கள குடியேற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தமிழர்களின் மண் அழிப்பு, இன அழிப்பு போன்றவற்றையும் தடுத்த நிறுத்த முற்படவில்லை.
எனவே தமிழ் மக்களுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை என்பது போருக்கு முன்னரும், பின்னரும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றது.எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறைகள் நடவடிக்கையாக அல்லது செயற்திறன் மிக்கதாக மாற்றம் பெறும் வரை அதனை தூரவைப்பதே தமிழ் மக்களுக்கு அனுகூலமானது.
-வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி:ஈழமுரசு
Comments