சீமானை விடுதலை செய்யக்கோரி கனேடியத் தமிழ் மக்கள் போராட்டம் காணொளி

சீமானை விடுதலை செய்யக்கோரி கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் நேற்று (27.08.2010) வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது.

இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இவைதவிர இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்த இந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டிக்கும் பதாகைகளும் அங்கு வந்திருந்த மக்கள் ஏந்தியிருந்தனர். இவற்றோடு, கைதுசெய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் சீமானின் படங்களும் பலர் கைகளில் காணக்கூடியதாகவிருந்தது.

இதில் கலந்துகொண்ட சிலர் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான செய்திகள் உள்ள துண்டுபிரசுரங்களை அந்தவழியாக சென்றுகொண்டிருந்த வேற்றினமக்களுக்கு விநியோகித்தார்கள். பலர் இவற்றை ஆவலுடன் வாங்கிச்சென்றதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ஏழு அணியளவில் போராட்டம் மிகவும் உணர்வெழுச்சியுடன் நிறைவுற்றது.



Comments