நாங்கள் செய்ய விரும்பும் உதவிகளுக்கு இவர்கள் என்ன இடைத் தரகர்களா?

தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் முகை கொண்டது முதல், முடிவுக்கு வரும்வரை புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய பொருளாதார உதவிகள் தேசியத் தலைவர் அவர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்டப்படும் அளவுக்கு இருந்தது.

புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்திற்குப் பணம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் வாழும் தேசங்களின் சட்டத்தால் பல தமிழ்த் தேசிய செயற்பாட்டார்கள் தண்டனையும் பெற்றுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும், மனிதாபிமானம் கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், மனிதாபிமானம் மிக்க தமிழர்களும் உறக்கம் கொள்ளவில்லை.

அங்கு அல்லல்படும், அவதிப்படும் தமது உறவுகளைத் தேடி, இனம் கண்டு தம்மாலான பங்களிப்புக்களை நேரடியாகவே செய்து வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றையும் தத்தெடுத்துப் பராமரித்து வருகின்றனர். இந்த மனிதாபிமான உறவுப் பணியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளாகள் விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

எங்கள் உறவுகளை நாங்களே மீட்டெடுப்போம் என்ற சபதத்துடன் புலம்பெயர் தேசத்து உறவுகள் களம் இறங்கியுள்ளார்கள். சிங்கள அரசு நடாத்தி முடித்த இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஊனமாக்கப்பட்ட, உறவிழந்த, அநாதையான அத்தனை உறவுகளின் விபரங்களும் திரட்டப்பட்டு புலம்பெயர் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் அனைவரும் ஆத்ம திருப்தியடன் அந்த மக்களுக்கு உதவுவதைத் தமது கடமையாக எண்ணி அதை நிறைவேற்றி வருகின்றார்கள். இவர்கள் தமது உறவுகளுக்கு உதவி செய்வதற்கு புதிய புறோக்கர்கள் எதற்கு? இதற்கு எதற்காகக் கொலைகாரருடன் கூட்டு? இந்தப் புதிய ஒட்டுக் குழுக்களுக்கு கோத்தபாய வழங்கிய அறிவுரை என்ன?

கே.பி. தலைமையில் கோத்தபாய அமைத்துள்ள இந்தப் பதிய ஒட்டுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல. ஏற்கனவே பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். பிரான்சில் விடுதலைப் புலிகளுக்காகப் பணம் சேர்த்த இந்த ஒட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் அதே பணிக்காக கனடா சென்றார். சில நாட்களில் ஒரு நகைக்கடைக்குச் சொந்தக்காரரானார். வெற்றிகரமான அவரது மக்கள் பணியினால் அவரது நகைக்கடை குட்டி போட ஆரம்பித்தது.

முள்ளிவாய்க்கால் பெரவலத்தின்போது இந்த மக்கள் பணியாளர் மூன்று நகைக் கடைகளின் உரிமையாளராக இருந்தார். அதன் பின்னரும் அவரது நகைக்கடைகள் குட்டி போடுவதை நிறுத்தவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே நபரின் மக்கள் பணி இப்படி அவரைச் செல்வந்தராக்கியதாக இருந்தால், மற்றவர்களது மக்கள் பணியும் ஆராய வேண்டியது புலம்பெயர் தமிழர்களது கடமையாக உள்ளது.

கே.பி. குழுவினரின் கதை இப்படி விரிகின்றது என்றால், புலம்பெயர் நாடுகளில் கே.பி.யால் உருவாக்கப்பட்டு, உருத்திரகுமாரனால் இயக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரான்ஸ் நாட்டின் உறுப்பினர்கள் இன்னொரு அயோக்கியத் தனத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

லண்டனில் ஆரம்பித்து, பிரான்ஸ் ஊடாக ஜெனிவா நோக்கித் தியாக நடை பயணம் மேற்கொள்ளும் சிவந்தன் அவர்களிடமும் அரசியல் வியாபாரம் செய்யும் அயோக்கியத் தனத்தை அரங்கேற்றி வருகின்றார்கள். சிவந்தனின் தியாகப் பயணத்தில் இணைந்து 17 வயதுடைய ஒரு தமிழ்ச் சிறுவன் உட்பட பல பேர் நடை பயணத்தை மெற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது தலைகாட்டும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான உறுப்பினர்கள் உரிமையோடு படங்கள் எடுத்துத் தங்களை விளம்பரப்படுத்தி வரும் கொடுமையும் அரங்கேறுகின்றது.

ஒரு நாளாவது கூட நடந்தவர்கள், அவருக்கான செலவுகளில் பங்களிப்பு நல்கியவர்கள் கூட அந்த இளைஞனின் தியாகத்திற்குத் தலை வணங்கி நிற்கும்போது, இவர்களது சினிமாத்தனம் கூட நடை பயணம் மேற்கொள்பவர்களைக் கொபத்தின் உச்சியில் ஏற்றி வருகின்றது. தமிழ்த் தேசியத்திற்காக வாய் கிழியப் பேசும் ஈழநாடு ஆசிரியர் சி. பாலச்சந்திரன் உட்பட, நாடு கடந்த தமிழீ அரசுக்கான பிரான்ஸ் உறுப்பினர்கள் எவரும் சிவந்தனின் நடை பயணத் தியாகத்தில் இன்றுவரை பங்கேற்காதது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.

மக்களுக்கான பணியில் உள்ளவாகள் மக்களது துயரங்களிலும், துன்பங்களிலும், இழப்புக்களிலும், அவலங்களிலும் பங்கெடுத்து முன்நின்று பாடபட வேண்டுமேயொழிய, தங்களது சுய விளம்பரத்திற்காக மக்களுக்கான அடுத்தவர் தியாகங்ளை அநியாயத்திற்குப் பங்கு போடுவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம் தமவிர வேறொன்றும் இல்லை.

- பாரிசிலிருந்து சிவபாலன்

Comments