நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு

சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.

இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடியதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, நின்று விடாது புலிகள் ஒரு போராட்ட அமைப்பு என்றும் அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கிவருவதாகவும் கூறியுள்ளார். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டபோதும், நியூசிலாந்து அதற்கான முஸ்தீபில் இறங்கியவேளை நியூசிலாந்து தமிழர்களால் எடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களால் அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் லட்சக் கணக்கில் தமிழர்கள் வாழும் நாடுகளில் புலிகள் இயக்கம் தடை பெய்யப்பட்டுள்ளதும், பல அமைப்புகள் இது குறித்து மௌனம் காப்பதும் கவலைக்குரிய விடயம். தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் ஆவன செய்யவேண்டும். தமிழர் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இல்லாத போராட்டம் கிடையாது, அவர்களைப் புறம் தள்ளி தேசிய கொடியை ஏந்திச் செல்ல, அரசு அனுமதித்தாலும், அதனை போராட்ட இடங்களுக்கு கொண்டுவரவேண்டாம் எனச் சிலர் கூறிவருவது முதலில் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கை அரசின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது, அவர்கள் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து பல உலக நாடுகளில் அதனை தடைசெய்ததே ஆகும். நாம் முதலில் அத் தடையை உடைத்தெறிந்தால், அது தான் நாம் சிங்களவனுக்கு கொடுக்கும் முதலடியாக இருக்கும். பின்னர் அரசியல் நகர்வுகள் தாமாகவே நகரும். இருப்பினும் தம்மைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில புலம்பெயர் தற்குறிகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்திவரவேண்டாம் எனக் கூறிவருகின்றனர். எந்த ஒரு அமைப்பும் அதனை முன் நிலைப்படுத்த தயார் இல்லாதபோது, மக்கள் இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்துவது நல்லது. புலிகள் இல்லாத தமிழீழப் போராட்டம் என்றுமே நிறைவடையாது, அதுபோல புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்று அன்னியப்படுத்தும் முயற்சிகளை நாம் உடனே முறியடிக்கவேண்டும்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விடயம் தமிழ் தலைவர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பதே ஆச்சரியம், இல்லை புரிந்தும் புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா என்ற சந்தேகமும் உருவாகிறது. புரியவில்லை என்றால் இனிவரும் காலங்களில் மக்கள் அதனை மிக நன்றாக விளக்குவார்கள்....

Comments

Unknown said…
This is very good to hear such news.