நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா?

கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது. எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு. மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழரை அரவணைத்து அவர்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி பிரஷாவுரிமையும் வழங்கி, சமத்துவத்தை பேண வழிகாட்டிக் கொண்டிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாடு இன்று ஒரு மாபெரும் சோதனை ஒன்றை சந்தித்திருக்கின்றது.

பல மாதங்களாக கப்பலில் பிரயாணத்தை செய்து இந்த வாரம் கனேடிய எல்லையை அடையும் ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிவிட வேண்டுகோள் விடும் சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் சில கனேடிய ஊடகங்கள்இ அகதிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அவர்களை எப்படியேனும் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றார்கள். இதற்கு கனேடிய அரசு துணைபோகுமா அல்லது கனடாவின் நன்மதிப்பை காற்றில் பறக்க விடுமா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி.

490 தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு தாய்லாந்தை சேர்ந்த கப்பலான எச்.வி.சன் சீ கப்பல் கடந்த ஏப்ரல் மாதமளவில் புறப்பட்டது. இந்த கப்பலில் வந்தவர்களின் இலக்கு ஆஸ்திரேலியாவை சென்றடைவது தான். ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான போக்கினால் இந்த கப்பல் திசைமாற்றப்பட்டு பசிபிக் சமுத்திரத்தினூடாக பயணிக்க தொடங்கியது. பல மாதங்களின் பின்னர் இந்த கப்பலை நோட்டமிட்ட உளவாளிகள், இந்த கப்பல் வட அமெரிக்காவை நோக்கி செல்வதாக அறிவித்திருந்தார்கள். இதனடிப்படையில், அமெரிக்க மற்றும் கனேடிய பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கையானார்கள். இதனை கேள்விப்பட்ட சிறிலங்கா அரசு இவர்களை எப்படியேனும் திருப்பி அனுப்ப செய்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் களம் இறங்கினார்கள்.

பல இடர்களுக்கு மத்தியில் இந்த கப்பல் கனடாவை வந்தடைந்துவிட்டது. அத்துடன் கனேடிய அரசும் இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவும், நோய் வாய்ப்பட்டிருக்கும் நபர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்கனவே நடவடிக்கையில் இறங்கி செயல்வடிவம் கொடுக்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் புலனாய்வாளர்கள் இந்த தமிழ் அகதிகளுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் வாயிலாக எழுதியும் விவாதங்களையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் நயவஞ்சக போக்கை முறியடித்து, கடந்த அக்டோபர் மாதம் ஓசன் லேடி என்ற கப்பலில் வந்த 76 ஈழ அகதிகளை ஏற்று அவர்களின் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கின்றார்களோ அதைப்போலவே இதனையும் கனடா செய்யும் என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் இன்றும் இருக்கின்றது. இவர்களின் கனவை கனேடிய அரசாங்கம் அழிக்காது என்பதை கனேடிய தமிழர் நம்புகின்றார்கள்.

கயவரின் சூழ்ச்சியை தவுடுபொடியாக்கி கனடாவின் பாரம்பரிய பண்பாட்டை கனேடிய அரசாங்கம் செய்யும் என்று நம்பும் கனேடிய தமிழர், ஈழத்தமிழரை வஞ்சிக்க நினைக்கும் வக்கிரப்போக்காளர்களுக்கு கனேடிய அரசு தக்க பதிலை கொடுப்பதன் மூலம் சிறிலங்காவின் சூழ்ச்சி வலையை கிழித்தெறிவதன் மூலம் மனித நேயத்தை காப்பாற்றும் கனடாவின் மதிப்பை போற்றி, கனடா நிலத்தால், வளத்தால் மட்டுமல்ல இதயத்தாலும் உயர்ந்தவர்கள் என்று தமிழ் மக்கள் என்றும் கடமைப்பாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஓட ஓட துரத்தும் சிறிலங்கா

ஈழத்தில் தமது பாரம்பரிய மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, எப்படி குருவிக்கூட்டை கல்லால் அடித்து நொறுக்கி, அனாதையாய் ஆக்குவதைப்; போலவே தான் தாமும் தமது வாழ்க்கையும் என்று இருந்த ஈழத் தமிழருக்கு வந்த சோகம் என்பது சொற்களால் வர்ணிக்க முடியாதது. இரவு பகல் பாராது வானூர்திகள் மூலம் குண்டு மழை பொழிவதும், எறிகணைகளை வீசி தமிழரை வகை தொகையின்றி அழிப்பதுமாக இருந்த சிறிலங்கா பயங்கரவாத அரசு, கடந்த சில வருடங்களாக நடைபெற்று பின்னர் கடந்த வருடத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்காம் ஈழப் போர் 30,000-க்கும் அதிகமான ஈழத் தமிழரை கொன்று அவர்களை சின்னாபின்னமாக்கி அவர்கள் இன்று என்ன செய்வதறியாது அகதிகளாக உள்நாட்டிலேயே அலைந்து திரிகின்றார்கள். மேலும் சிலர் வெளிநாடுகள் சென்று தமது வாழ்வை புதிப்பிக்கலாமென்று ஓடும்பொழுதும் அவர்களை பின்தொடருகின்றது அவர்களைப் பிடுத்திருக்கும் சனியன்.

பல நூற்றுக்கணக்கான தமிழர் இன்றும் சிங்கள அரசினால் புலி என்ற சந்தேகத்தில் தொடர்ந்தும் கைதாகி அரசாங்கப் படையினரால் பிடித்து அடைக்கப்படுகின்றார்கள். ஏற்கனவே 10,000-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் மறைமுகமான இடங்களில் தடுத்து வைக்கப்படிருக்கின்றார்கள். இப்படியாக உள்நாட்டுக்குள்ளேயே துன்பங்களை அனுபவிக்கும் தமிழர், எப்படியேனும் நாட்டை விட்டு தப்பி புதுவாழ்க்கையை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் செல்லும் இவர்களையும் சிறிலங்கா விட்டு வைப்பதாக தெரியவில்லை. இதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல லட்சம் டாலர்களை செலவழித்து தமிழர்களை உலக அரங்கில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரை இல்லாதொழித்து பிரச்சார வேலைகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கடந்த வாரம் சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பிடத்தக்க விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் குடியேற்றவாசிகளும் செல்வதாகவும் புலிகள் சிறிலங்காவில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் மேற்கொண்டு வருகின்ற ஆட்கடத்தல் நடவடிக்கை இது எனவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகளின் வலையமைப்பை அழிக்க, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், விடுதலைப் புலிகள் தமது வலையமைப்பை பலப்படுத்திக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசின் அடிவருடியாக செயல்படும் ரோஹான் குணரத்ன என்ற கல்விமான், பணத்திற்கு ஆசைப்பட்டு சிறிலங்கா அரச தரப்பினர் எழுதிக்கொடுக்கும் அறிக்கையை தமக்கு நெருங்கிய ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவருவதன் ஊடாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றார். இதில் கணிசமான வெற்றியையும் கண்டுள்ளார். குறிப்பாக, கடந்த வாரம் ஒரு அறிக்கையை விட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது: “தமிழ் அகதிகளுடனான எம. வீ.சன் சீ கப்பலைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அகதி கப்பல்கள் கனடா நோக்கி செல்லவிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது…தற்போது அவர்கள் தமது பயணத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், எனினும் சன் சீ கப்பலில் உள்ள அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை அவதானித்து, அதன் அடிப்படையிலேயே அவர்கள் எந்த நாடு செல்வதென்று முடிவு எடுப்பார்கள்.”

தான் ஒரு பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் என்று மார்தட்டும் ரொஹான் குணரத்ன, பல உண்மைக்கு புறம்பான அறிக்கையூடாக தனது பிழைப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றார். தனக்கு இருக்கும் சிறிலங்கா அரசுடனான செல்வாக்கினூடாக, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் சார்ந்த பாடங்களை பல்கலைக்கழகங்களில் போதிக்கும் இவர், பொய்யைச் சொல்லியே சம்பாதிக்கும் இவரை இன்றும் உலகின் முன்னோடி ஊடகங்கள் முன்னுரிமை தருவது ஊடகத்துறைக்கே விழுந்திருக்கும் சாவுமணி என்று தான் சொல்லவேண்டும். பொதுவாகவே ஒரு கல்விமானின் அறிக்கையில் ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால், இவரோ உண்மைக்கு புறம்பாக பல பொய்க்குற்றச்சாட்டுக்களை பல வருடங்களாக தமிழருக்கு எதிராக அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

கடந்த அக்டோபர் மாதம் வந்தடைந்த 76 ஈழ அகதிகள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்றும் அவர்களை கனேடிய அரசு நாட்டை விட்டு அனுப்பவேண்டும் என்று அறிக்கை விட்ட இந்த குணரத்னாவின் கூற்றை ஏற்க மறுத்தது கனேடிய அரசு. பல மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், அனைத்து ஈழ அகதிகளும் உண்மையிலேயே அகதிகள் தான் என்றும் இவர்கள் புலிகள் அமைப்பினரை சேர்ந்தவர்கள் இல்லையெனவும் கனேடிய அரசு தெரிவித்து இவர்களின் அகதி விண்ணப்பத்தை இரு வருடங்களிற்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது. இன்று, அதே போன்றே குணரத்ன கூறுகின்றார், இந்த கப்பலை ஓட்டி வருபவர் விடுதலைப்புலிகளின் கப்பலோட்டியெனவும் இவர்களை கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனவும் கூறுகின்றார்.

சிறிலங்காவின் சூழ்ச்சி வலைக்கு பலிக்கடாவான ‘நேஷனல் போஸ்ட்’ என்ற ஆங்கில நாளேடோ தனது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த ஈழ அகதிகளை ஏற்றிக்கொண்டு வரும் கப்பலை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று கனேடிய அரசிற்கு ஆலோசனை கூறுகின்றது. இந்த பத்திரிக்கை பல வருடங்களாக தமிழர் விரோத செய்திகளுக்கு முன்னுரிமை தரும் நாளேடு என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பெருமையை சிறுமைப்படுத்த அனுமதிக்கக்கூடாது

கனேடிய வரலாறு என்பது கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரபலமானது என்றாலும், அதன் வரலாறு என்பது சில சம்பவங்களைத்தவிர மாசற்றது. குறிப்பாக, கறுப்பினத்தவரை அமெரிக்க வெள்ளையினத்தினர் கொடுமைப்படுத்திய வேளையில், தப்பி கனடாவிற்குள் வந்தார்கள். அவர்களை வரவேற்று மனித நேயத்துடன் பழகினார்கள் கனேடிய மக்கள்.வெறுப்புணர்வுகளுக்கோ அல்லது வேறெந்த காழ்ப்புணற்சிகளுக்கோ முன்னுரிமை தராது மனிதநேய பண்புடன் வாழ்ந்துவருபவர்களே கனேடிய மக்கள்.

கனேடிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா என்ற மாநிலத்தை சென்றடைந்து விட்டார்கள். இவர்கள் நேரடியாகவே நின்று ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட இருக்கும் செயல்திட்டங்களை அரச அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலையில் ஏற்கனவே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஈழ அகதிகளை சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என ஏற்கனவே கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் இது குறித்து தெருவிக்கையில்: “சன் சீ கப்பலை தமது அதிகாரிகள் பல வாரங்களாக அவதானித்து வருகின்றார்கள். அத்துடன் இந்த விடயம் குறித்து எந்தவொரு பாரதூரமான நடவடிக்கை எடுக்க எத்தனித்து உள்ளதாக நாம் கருதவில்லை…எனினும், இந்த கப்பலில் உள்ளவர்கள் யார்…எந்த காரணத்திற்காக அவர்கள் கனடா நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றனர் என்பதை அறிய நாம் கரிசனை கொண்டுள்ளோம்.”

கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தமிழர் மனங்களில் சற்று ஆறுதலாக இருந்தாலும், கனேடிய அரசு இவர்களை உண்மையான அகதிகளாக கருதி பல மாதங்கள் பயணித்து வரும் மக்களை கருணை அடிப்படையில் அணுக வேண்டுமென்பது அனைவரினதும் அவா. இரு முன்னோடி சம்பவங்களை சாட்சியாக வைத்து இந்த சம்பவத்தை நோக்கலாம்.
முதலாவது சம்பவம் என்னவென்றால், 1914-ஆம் ஆண்டு 376 சீக்கியரை ஏற்றிக்கொண்டு கொமகட மறு என்ற ஜப்பானில் பதியப்பட்ட கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வங்குவர் கரையை வந்தடைந்த பொழுது, கனேடிய அதிகாரிகள் இந்த கப்பலை திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்தியா திரும்பிய இந்த சீக்கியர்களில் 19-பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், 2008-இல் 96 வருடங்களுக்கு பின்னர் அனைத்து கனேடிய மக்கள் சார்பிலும் தனது மன்னிப்பை சீக்கியரிடத்தில் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததொரு சம்பவம் என்னவென்றால், 1939-இல் 900 யூத இனத்தவரை ஏற்றிக்கொண்டு ஜேர்மனியில் பதியப்பட்ட செயின்ட் லூயிஸ் என்ற கப்பல் கியூபா மற்றும் அமெரிக்க நாடுகளினால் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தை வந்தடைந்தது. ஆனால் கனேடிய அரசோ, இவர்களை ஏற்க மறுத்து கப்பலை திருப்பியனுப்ப, இந்த கப்பலோ பெல்ஜியம் நாட்டை சென்றடைந்தது. பின்னர், இவர்களில் 200-பேருக்கும் அதிகமானவர்களை ஜேர்மனியின் நாஷியினர் கொன்றார்கள். இதற்காக சமீபத்தில் கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மன்னிப்பு கோரியதுடன், கடந்த கால கனேடிய அரசின் நிறவெறி கொள்கையை சுட்டிக்காட்டி இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

இப்பொழுது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பழைமை தழுவும் கட்சியின் இரு முன்னணி தலைவர்கள் கூறிய கூற்று பொய்யாகக்கூடாது என்றால் நிச்சயம் வந்திருக்கும் ஈழ அகதிகளை அரவணைத்து அவர்களை உள்வாங்கி கனேடிய குடிமக்களாக ஏற்;கவேண்டுமென்பது தான் கனேடிய தமிழர் தமது அரசாங்கத்திடம் வைக்கும் கோரிக்கை.

அன்று சீக்கியருக்கு மற்றும் யூத இனத்தவருக்கு நேர்ந்த நிலைமை நாளை தமிழ் அகதிகளுக்கு நேர்ந்து விடக்கூடாதென்பது தான் மனித நேயத்தை நேசிக்கும் அனைவரினதும் கோரிக்கை. வந்தவர்களை நாட்டை விட்டு அனுப்புவதை விடுத்து, சிறிலங்காவில் நிரந்தர அரசியல் உரிமையுடன் சமாதான வாழ்க்கையை தமிழர்கள் தமது தாயகத்தில் தொடர கனேடிய அரசாங்கம் சிறிலங்கா மீது அழுத்தத்தை கொடுத்து புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சனையை தீர்ப்பதுவே தமிழர்கள் அகதிகளாக வருவதை நிறுத்த முடியும். அதைவிடுத்து சிறிலங்காவின் பொய் பிரச்சாரத்தை கேட்டு தமிழரை மேலும் பல இன்னல்களுக்கு ஆளாக்க முனைய கனேடிய அரசு துணைபோகக் கூடாது.

இன்று 15,000-க்கும் அதிகமான மைல்களுக்கு அப்பால் இருந்து கனடாவின் கதவை தட்டியிருக்கும் இந்த அகதிகளே போதும் கனேடிய அரசு தமிழர் விடயத்தில் தலையிட்டு பிற நாடுகளுடன் சேர்ந்து ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப்பெற்றுத்தர. அதைவிடுத்து, புலி என்ற வார்த்தையைப் பாவித்து அப்பாவி தமிழரை குழிக்குள் தள்ளிவிட எத்தனிக்கக் கூடாது கனேடிய அரசு.
கனடாவின் கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி, கனடாவிற்கு அவப்பெயர் வராமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கனேடிய அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துடன் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களுக்கு கனேடிய தமிழர் தம்மாலான எதிர்ப்புக்களை நாகரிகமான முறையில் கடிதங்களினூடாகவோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்வதனால் நிச்சயம் எதிரியின் சூழ்ச்சியை முறியடித்து தர்மமே இறுதியில் வெல்லும் என்பதை நிலைநாட்ட முடியும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments