பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா?

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர்.



'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து கே.பி. அவர்கள் வெளியிட்ட அறிவித்தலும், தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவிக்கு உரிமை கோரியதும் தமிழ் மக்கள் மத்தியில் அவர்மீதான சந்தேக தளத்தை உருவாக்கியது.

கே.பி. அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகப் புலம்பெயர் தேசங்கள் எங்கும் காத்திருந்த அவரது விசுவாசிகளாலும் தேசியத் தலைவர் அவர்களது இருப்புக்கு எதிரான அறிவிப்புக்கள் கிளம்ப ஆரம்பித்தது. கே.பி.யின் விசுவாசிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, தேசியத் தலைவர் அவர்களது இருப்பை நிராகரிப்பவர்கள் தமிழ்ச் சமூகத்தால் நிராகரிக்கப்படும் அபாய நிலையை அடைந்ததனால், அவர்களால் இந்த முயற்சியினைத் தொடர முடியாமல் போய்விட்டது.

தேசியத் தலைவர் அவர்கள் குறித்த கே.பி.யின் அறிவிப்பையும், அஞ்சலியையும் ஒளிபரப்புச் செய்த ஜி.ரிவி தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்களிப்பின் காரணமாக, அவர்களிடம் அதே தொலைக்காட்சியில் பகிரங்க மன்னிப்புக் கோரி, தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

கே.பி.யின் இந்த இரு அவசர அறிவிப்புக்களும் அவர் குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை விம்பத்தை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. அதனால், மலேசியாவில் வைத்து கே.பி. கைது செய்யப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் வெளிவந்த செய்திகள் அவர்களை சலனத்துள் தள்ளவில்லை. புலம்பெயர் நாடுகளில் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலை உருவாகும் என்ற சிங்கள தேசத்தின் எதிர்பார்ப்பும் 'புஸ்' வாணமாகப் போய்விட்டது.

கே.பி.யின் கைது விவகாரம் ஒரு ஆடு குட்டி போட்டது போன்ற செய்தியாகவே கவனிப்பாரற்றதாகிவிட்டது. இந்த நிலையிலும், திரு. உருத்திரகுமாரன் அவர்கள் மீதான தமிழ் மக்களது நம்பிக்கையே கே.பி. மீதான அதிருப்தியையும் மீறி, நாடு கடந்த தமிழீழ அரசை தேர்தல் வரை நகர்த்தியது. அந்தத் தேர்தல் சிறப்பாக நடைபெற தமிழ்த் தேசியத்தின் அத்தனை தளங்களும் முன் நின்று உழைத்தன.

2010 மே 02 ஆம் திகதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு குழுவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்குமானது. எனவே, அந்தத் தேர்தலில் போட்டியிடும், வாக்களிக்கும் உரிமை அனைத்துத் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அணி சாராது குரல் எழுப்பினார்கள்.

இதனை, கே.பி. குழுவினர் எதிர்த்தனர். கே.பி. அவர்கள் கைது செய்யப்படுவதற்கு? முன்னதாகவே, அனைத்து நாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொறுப்பாளர்களாகத் தனது விசுவாசிகளையே நியமித்திருந்தார். இதன்படி, பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொறுப்பாளராக விடுதலைப் புலிகளின் முன்நாள் செயற்பாட்டாளராகிய வேலும்மயிலும் மனோகரன் நியமிக்கப்பட்டார். தனது பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத 'கைப்பிள்ளை'களைத் தெரிவு செய்து, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நிரந்தர ஜமீந்தாராக வலம்வர நினைத்திருந்த மனோகரனுக்கு இது அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

தன்னால் 'நியமிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் களம் இறங்கப்படாது' என்ற அவரது முடிவுக்கு எதிராகக் களம் இறங்கப் பலர் தயங்கினார்கள். சிலர் அச்சுறுத்தல் கலந்த அறிவுறுத்தல் காரணமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட முன்வந்த இருவர் பின்வாங்கினார்கள். பிரான்சின் வடக்கிலும், தெற்கிலும் தன் சார்பாக நிறுத்த வேட்பாளர் கிடைக்காததால் அங்கு மனோகரனது விருப்பத்திற்கும் மாறாக இருவர் போட்டியின்றித் தெரிவாகும் நிலையை அவரால் தவிர்க்க முடியவில்லை.

தேர்தலில் யார், எங்கு வெல்வார்கள் என்ற கணக்கின்படி இறுதி நேரத்தில் போட்டியாளர்களின் தொகுதி மாற்றமும் இடம் பெற்றது. இருந்தாலும், மனோகரனது கணிப்பையும் மீறி, 92 தேர்தல் தொகுதியில் திரு. திருச்சோதியும், 93 தேர்தல் தொகுதியில் செல்வி. கிருஷாந்தியும், 75 தேர்தல் தொகுதியில் திரு. பாலச்சந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு, திரு. மனோகரனின் பேராசையில் மண் போட்டனர்.

2010 மே 02 இரவு அனைத்துத் தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர், அவசரம், அவசரமாக மனோகரன் குழுவினர் கூடி, அடுத்து என்ன செய்வது என்று ஆராய்ந்தார்கள். திரு. திருச்சோதி, செல்வி கிருஷாந்தி, திரு. பாலச்சந்திரன் ஆகியவர்களது தெரிவை இரத்துச் செய்வதாக முதலில் முடிவு எடுத்த அவர்களுக்கு, இன்னுமொரு சிக்கல் அதன் இலவச இணைப்பாகத் தொடர்வது உறைத்தது.

திரு. பாலச்சந்திரன் அவர்களது தெரிவை நிறுத்தினால், அவருடன் சேர்ந்து வெற்றி பெற்ற திரு. மகிந்தன் அவர்களது தெரிவும் இயற்கையாகவே இரத்தாகிவிடும். பிரான்சுக்கான நாடு கடந்த தமிழீழ அரசின் துருப்புச் சீட்டாக மனோகரன் அவர்களால் முன்நிறுத்தப்பட்ட இவரை இழக்க மனோகரன் விரும்பாததால், திரு. பாலச்சந்திரன் அவர்களது தலை தப்பியது.

திரு. மனோகரன் அவர்களது திட்டப்படியும், விருப்பப்படியும் திரு. உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவராக பேராசிரியர் சுகிர்தராஜ் எனப்படும் திரு. ஜுலியா அவர்கள் நியமிக்கப்பட்டார். ஜுலஜயா மாஸ்டர் என்று பிரஞ்சுத் தமிழ் மக்களால் அறியப்பட்ட பேராசிரியர் சுகிர்தராஜ் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமானவர். விடுதலைப் புலிகளின் பல மேடைகளில் தமிழீழ விடுதலையை ஆதரித்துப் பேசியவர், பல தளங்களில் தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

ஆனாலும், முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட நாட்களில் அவர் மேற்கொண்ட சுயநல அரசியல் நகர்வினால் பிரஞ்சுத் தமிழர்களிடம் ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகச் சேர்க்கப்பட்ட 65,000 ஈரோக்கள் பாழாகிப் போனது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் திரு. ஜுலியா மாஸ்ரர் அவர்கள் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கான தேர்தலில் போட்டி இடுவதற்கான அவரது விருப்பம் விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அறிவுறுத்தல் விடுதலைப் புலிகளின் பிரஞ்சுக் கிளைக்கும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 'இப்படித்தான்' என்ற வரையறை விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், அதன் பின்னரான காலத்தில் விடுதலைப் புலிகள் தமது தளப் பிரதேசங்கள் பலவற்றை இழந்துவிட்டிருந்தனர். மக்கள் அவலத்தையும், இழப்பையும் சந்தித்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் வந்த இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெருந்தொகை பணத்தை வாரி வழங்குவது என்பது சாத்தியமற்றது.

திரு. ஜுலியா மாஸ்ரர் அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக நின்றிருந்தால், வென்றிருக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் அந்த அரசியல் கட்சியினரின் அறிமுகமும், தமிழீழ விடுதலைத் தளத்திற்கான அவர்களது ஆதரவும் கிட்டியிருக்கும். ஆனாலும், திரு. ஜுலியா மாஸ்ரர் தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டதோடு, தனது பணம் 5 பைசாவையும் செலவழிக்காமல் தமிழீழ மக்களுக்கான பணம் 65,000 ஈரோக்களை செலவு செய்ய நிர்ப்பந்தித்து, தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார்.

தான் தோல்வியைத் தழுவினாலும், அடுத்து வரும் பிரஞ்சு பிராந்திய சபைத் தேர்தலில் தான் வேட்பாளராகி வெல்லப்போவதாக அறிவித்தார். திரு. ஜுலியா மாஸ்ரர் அவர்களது தன்னிச்சையான அரசியல் முடிவுகளை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ரசிக்கவில்லை. ஜுலியா மாஸ்ரர் என்ற தனி மனித விருப்பங்களுக்காக ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை பிரஞ்சு மண்ணில் புதைத்துவிட விரும்பாத தமிழ்த் தேசிய உணர்வாளாகள் ஜுலியா மாஸ்ரர் எதிர்பார்த்த பிரஞ்சு பிராந்திய சபைக்கான தேர்தலில் எது வித செலவும் இல்லாமல் பச்சைக் கட்சி சார்பாக செல்வி கிருஷாந்தி அவர்களை நிறுத்தி, முதல் சுற்றில் வெற்றி பெறவும் வைத்தனர்.

இந்தத் தேர்தலில் தன்னை நிறுத்தாதது தனக்குச் செய்த அவமானமாகக் கருதி, பழிதீர்க்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த திரு. ஜுலியா மாஸ்ரருக்கு திரு. மனோகரனின் நிலைப்பாடு அவலாகக் கிடைத்தது. செல்வி கிருஷாந்தியையும், அவரை முன்நிறுத்திய திரு. திருச்சோதியையும் பழிவாங்க இந்தத் தருணத்தை வரப்பிரசாதமாக எண்ணி, திரு மனோகரனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.

இவர்கள் இருவரது இந்தத் திட்டத்திற்குத் துணையாக மூன்றாவதாக வாய்த்தவர் திரு. சிவா சின்னப்பொடி அவர்கள். முன்னாள் புளொட் உறுப்பினராகிய திரு. சிவா சின்னப்பொடி அவர்கள் எவர் கை ஓங்குகின்றதோ, அங்கு ஒதுங்குகின்றவர். விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் அங்கு கரை ஒதுங்கியவர், விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என். உச்சத்தில் இருந்த காலத்தில் அங்கு கோலோச்சியவர். அங்கு பிரச்சினை உருவாக்கப்பட்டு, அது மூடப்பட்டதும் அரசியல் தளத்திலிருந்து காணாமல் போனார்.

முள்ளிவாய்க்காலின் பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசு என்ற தளத்தின் பிரான்சுக்கான பொறுப்பாளராக திரு. மனோகரன் அவர்கள் கே.பி.யால் நியமிக்கப்பட்டதன் பின்னர், அவருடன் கை கோர்த்துக்கொண்டார். அந்தக் கப்பலும் தடுமாறினால், அவர் காணாமல் போவது மட்டும் உறுதி. அதுவரை திரு. மனோகரனின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் தாய்நிலத்திற்கு ஆசிரியராக காலத்தை ஓட்டுவார். இந்த மூவர் கூட்டுத்தான் பிரான்சுக்கான நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவிதியை அபாய கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

பிரான்சில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்த முக்கூட்டுத் தரப்பினர் நேர்மையாகச் செயற்பட மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் திரு. உருத்திரகுமாரன் அவர்களிடம் முறையிடப்பட்டது. திரு. உருத்திரகுமாரன் அவர்கள் திரு ஜுலியா மாஸ்ரர் அவர்களிடம் (அப்பத்தைக் கொடுத்துப் பகிரச் சொன்னார்) மிண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பைக் கொடுத்தார்.

மகிந்த போர்க் குற்ற விசாரணைக்கு குழுவை நியமித்தது போலவே, திரு. ஜுலியா மாஸ்ரர் அவர்களால் தன்னிச்சையாக அவரது நண்பர்கள் சிலர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அது குறித்த அதிருப்தியை பாதிக்கப்பட்டவர்கள் திரு. உருத்திரகுமாரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு சென்றும், அதில் மாற்ற எதுவும் ஏற்படவில்லை. மகிந்த நியமித்த ஆணைக்குழு போலவே, இந்த ஆணைக்குழுவும் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறாமலேயே 42 பக்கங்கள் கொண்ட தமது நீதியான? விசாரணை அறிக்கையை திரு. உருத்திரகுமாரனிடம் கையளித்துள்ளது.

இந்த நிலையில், திரு. கே.பி. குறித்த தகவல்களும், தகடுகளும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த கடும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான தனது தரப்பு செயற்பாடுகளுக்கு பிரான்சிலுள்ள வேலும்மயிலும் மனோகரனே தலைமை தாங்குகிறார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ள நிலையில், திரு. மனோகரன் அது குறித்த மறுப்பு எதுவும் வெளியிடாத நிலையில், மனோகரன் எப்படி நாடு கடந்த தமிழீழ அரசின் பிரான்சுக்கான பொறுப்பாளராகவும் உள்ளார்? என்ற கேள்வி பிரஞ்சுத் தமிழர் மத்தியில் எழுந்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் கே.பி. அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள திரு.உருத்திரகுமாரன் இந்தப் புதிய சர்ச்சை குறித்தும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்களால் நடாத்தப்பட்ட ஓரங்க நாடகம் ஒன்று முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வருகின்றது.

திரு. மனோகரன் அவர்களது விருப்பத்தின்படி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களாகிய திரு. திருச்சோதி, செல்வி கிருஷாந்தி ஆகியோரது தெரிவு இரத்துச் செய்யப்படும் பட்சத்தில், அவர்கள் மக்களிடம் நீதி கோரிச் செல்லவேண்டிய அவசியத்தினுள் தள்ளப்படுவார்கள்.

அது நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து மக்களிடம் எஞ்சியிருக்கும் நம்பிக்கையையும் சுக்கு நூறாக உடைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் திரு. உருத்திரகுமாரன் அவர்களது கைகளிலேயே உள்ளது.

- பாரிசிலிருந்து சிவபாலன்

Comments