புலிகள் தோற்றது.. அல்லது தோல்வியை தேடிக் கொண்டது.. தமிழீழத்தை அடைவதற்கான மாற்று வழியை தேடுங்கள் என்று சொல்லவே அன்றி.. தமிழீழத்தை கைவிடுங்கள் என்றல்ல.அல்குவைடாவின் செப் 11 தாக்குதலின் விளைவுகளை புலிகள் உணர்ந்திருந்தார்களா இல்லையா..??!
2001 செப்ரம்பர் 11 இல் நடந்த அல்கைடாவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னாலான உலக மாற்றத்தை புரிந்துகொள்ளாமலும், பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையீனத்துடனும் சாணக்கியமற்றதன்மையுடன் நடந்துகொண்டதன் விளைவு என்று KP சொல்லுகின்றார். அவரும் குழிதோண்டினாரா?
"தமிழினம் பரிதாபத்திற்குரிய இனமாக இருப்பதை விருப்பவில்லை"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் --காணொளி
புலிகள் வலிந்து போருக்குச் செல்ல முடியாத ஒரு சூழலை.. அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்காவும் அதன் சார்ப்பு மேற்குலகும் தங்களுக்கு சார்ப்பான ஆக்கிரமிப்பு யுத்தங்களை தொடுத்த போதே புலிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
அதனால் தான் பேச்சுக்களின் போது சிறீலங்கா ஏனோ தானோ என்று நடந்து கொண்டதற்கு தமது அதிருப்தியைக் காட்ட.. பேச்சுக்களில் இருந்து வெளியேறினாலும் தமது அரசியல் இலக்கை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உலகுக்கு கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மீண்டும் போருக்குள் செல்லவில்லை.
சந்திரிக்கா பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை செய்த போதும் புலிகள் போருக்குச் செல்ல விரும்பவில்லை. புலிகள் தாங்களாக போரை ஆரம்பிக்க முடியாத சூழலில் தான் சிங்களம் கருணாவையும் பிளவு படுத்தி புலிகளை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் இறங்கியது.
புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க இந்தியாவும் இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டது. புலிகளின் இராணுவ ரீதியான வெற்றிகளும் பொறிமுறைகளும் சர்வதேச தீவிரவாதத்தை பெரிதும் கவர்ந்து கொண்டதால்.. அது அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தல் என்று மேற்குலகும் முடிவு கட்டிக் கொண்டது. புலிகளின் கரும்புலித் தாக்குதல் வடிவத்தை கைவிடும் படி அமெரிக்கா பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது.
இதனை எல்லாம் புலிகள் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருமுறை பொட்டம்மான் பேசும் போது.. கரும்புலிகளை அனுப்புவதில் எமக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவர்களே எமது மக்களின் தடை நீக்கிகள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ தொழில்நுட்பத்தை புலம்பெயர்ந்த மக்கள் வழங்க முன் வர வேண்டும் என்றார்.
அதுமட்டுமன்றி.. எனி ஒரு யுத்தம் வந்தால் அது இறுதி யுத்தமாகவே இருக்கும். எனியும் இந்த யுத்தத்தை நீட்டிக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்தையும் விடுதலைப்புலிகளின் தலைமை வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமன்றி சிறீலங்கா இராணுவம் கிழக்கை பிடித்த பின்னரும் கூட வன்னியில் மக்கள் யுத்தத்தை ஆரம்பிக்கும் படி தேசிய தலைவருக்கு கடிதம் எழுத வேண்டிய ஒரு நிலை வன்னியில் நிலவியது. ஆனால்.. புலிகள் அப்படியொரு நிலையை முன்னர் எப்போதுமே வைத்திருந்ததில்லை. ஈழப்போர்களின் வரலாற்றில் புலிகள் தான் பேச்சுக்களின் பின் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாமே ரகசியமானதாகவே இருந்துள்ளன.
இங்கு மக்கள் கடிதம் எழுதியது என்பது சர்வதேசத்துக்கான செய்தியாகவே இருந்தது. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை.. மக்கள் மீது யுத்தம் திணிக்கப்படுவதால் மக்கள் எம்மீது யுத்தப் பணியை திணிக்கின்றனர் என்று சொல்ல முற்பட்டனர் புலிகள்.
ஆனால் எதிரி தன்னை மிகவும் பலப்படுத்திக் கொண்டிருந்ததால்.. புலிகள் வலிந்து போய் சமர் செய்யும் நிலையை தவிர்த்து பெரும் ஆளணி, படைப்பலத்தால் உயர்ந்திருந்த எதிரியை முன்னேறி வரும் போது எதிர் கொண்டு சமராடுவது என்று மட்டும் நிறுத்திக் கொண்டனர்.
இதனை இரண்டு வடிவில் புலிகள் கையாண்டனர். ஒன்று யுத்தத்தை இருக்கும் படைப்பலத்தைக் கொண்டு எதிர்கொள்வது. இரண்டாவது தாங்களா யுத்தத்தை விரும்பவில்லை.. தொடரப்பட்ட யுத்தத்துக்கான எதிர் சமர்களையே செய்கிறோம் என்பதை உலகுக்கு சொல்வதாக இருந்தது.
அதுமட்டுமன்றி சிங்கள அரசு யுத்தத்தை தீவிரப்படுத்திய போதும் புலிகள் யுத்த நிறுத்தம் செய்து கொண்டிருந்தனர். இவையெல்லாம் புலிகள் தங்களைச் சுற்றி வலுவான இராணுவ சுற்றிவளைப்பொன்றை உலகம் செய்து விட்டதை உணர்ந்ததன் விளைவுகளே ஆகும்.
அதுமட்டுமன்றி வழமையாக மாவீரர் தின உரைகளில் போருக்கு முக்கியமளிக்கும் தலைவர் பிரபாகரன்.. கடந்த சில ஆண்டுகளில் போர் பற்றியே பேசியதில்லை. மாறாக தெற்காசியாவில் சர்வதேச மையம் கொள்ளல்கள்.. பொருண்மிய வளர்ச்சிகள்.. அதற்கேற்ப தமிழீழம் செயற்பட வேண்டிய வழிமுறைகள்.. ஒருவேளை போராட்டம்.. இக்கட்டுக்குள் போனால்..(வெளிப்படையாக அதைச் சொல்லா விட்டாலும்..) அதனை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு.. அதனைப் புலம்பெயர் மக்களே செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.
புலிகள் புலம்பெயர் மக்களிடம் எதிர்கால போராட்டத்துக்கான முழுப் பணியையும் ஒப்படைக்கும் அறிவிப்பை செய்த போதே அவர்கள் தம்மைப் பற்றிய முடிவை எடுத்துவிட்டனர். இருந்தாலும் இறுதிவரை போரை எதிர்கொள்வது என்ற முடிவில் இருந்தும் அவர்கள் மாறவில்லை.
புலிகள் முற்றாக தோற்பதை விரும்பாத சக்திகளும் புலிகள் பலவீனமாவதை கண்டு அவர்களை முற்றாக அழிப்பதையே விரும்பினர். புலிகளின் இருப்பை தமக்கான அச்சுறுத்தலாகவே பல நாடுகள் பார்த்தன.
அது எவ்வளவு உண்மை என்பதை இன்று காண்கிறோம். இன்று எமது மண்ணில் சீன இராணுவம் நிற்கிறது.. இந்திய இராணுவம் நிற்கிறது.. அமெரிக்க இராணுவம் நிற்கிறது.. பாகிஸ்தான் விமானப்படை நிற்கிறது.. இத்தனையும் மனிதாபிமானப் பணி.. கண்ணி வெடி அகற்றல் பணி.. இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் பணி என்று வந்து நிற்கின்றன.
இவ்வளவு படைகளுக்கும் இடைஞ்சலாக இருந்தவர்கள் புலிகள். இதனை விட பிற இராஜதந்திர நகர்வுகளை தடுக்க அல்லது தாமதப்படுத்தக் கூடிய சக்திகளாக புலிகளின் இராணுவக்கட்டமைப்பு தெற்காசியாவில் வளர்ந்திருந்தது. குறிப்பாக இல்மனைட் தோண்டிய ஜப்பான் கப்பல்களுக்கு புலிகளோடு பேரம் பேசியே அவற்றை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.
இலங்கையின் வடக்குக் கிழக்கை நேரடியாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இருந்தன உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும். புலிகளின் விமானங்களால் தனது அணு உலைகளுக்கே ஆபத்து என்றது இந்தியா.
எந்த பிராந்திய வல்லரசும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத கண்காணிக்கப்பட முடியாத ஒரு பிராந்தியம் இருப்பதை விரும்பாது. ஏனெனில் அதனூடு தனக்கு ஆபத்து எப்போதும் வரலாம் என்பதை அது அறியும். புலிகள் இந்தியாவோடு நேரடிப் பகமை காட்டா விட்டாலும்.. அவர்கள் காட்டிய நட்பை இந்தியா நம்பவில்லை. மாறாக புலிகளும் இந்தியாவை முழுமையாக நம்பவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து 1995 யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்ட போது பெரும் நிம்மதி பெருமூச்சை விட்ட நாடு இந்தியா. அதனை ஆதரித்து அறிக்கையும் விட்டுக் கொண்டது. தமது கண்காணிப்புக்குள் இல்லாத பிரதேசத்தை புலிகள் பரிபாலனம் செய்வதை எந்த உலக நாடும் விரும்பவில்லை.
அதன் பின்னணியில் எழுந்தது தான் புலிகள் மீதான கூட்டு இராணுவ நடவடிக்கை. அதனை சிறீலங்கா தனக்கான பலமாக்கி தனக்கான வெற்றியாக்கி இன்று அந்தக் கூட்டு இராணுவ பலத்தை அளித்த சில நாடுகளோடு பகைத்துக் கொண்டாலும் பிற நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து தனது சிங்களப் பேரினவாதத்தை தமிழர் தாயகம் எங்கும் நிலைநாட்டி வருகிறது.
உண்மையில்.. கே பி சொன்னது போல் புலிகளுக்கு அல்குவைடா தாக்குதலின் பின் அச்சுறுத்தல் இருந்தது என்பது சரி. ஆனால் அதனை தேசிய தலைவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது பொய்.
கே பி புலிகள் அமைப்பில் இருந்த போது முழு நேர அரசியல் பணி செய்தவரல்ல. அன்ரன் பாலசிங்கம் அண்ணா தான் அதைச் செய்தவர். அவர் 2007 வரை இயக்கத்துக்காக உழைத்தவர். அவர் சர்வதேச மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து அதற்கேற்ப தலைவருக்கு ஆலோசனை வழங்கியவர்.
புலிகள் 2000ம் ஆண்டு யாழ்ப்பாணம் கச்சேரியை அடைந்த போது.. அமெரிக்கா B-52 போர் விமானங்களை அனுப்பி நிலைமையை கண்காணிக்கும் அளவிற்குச் சென்றது. இந்தியப் படைகள் திருவனந்தபுரத்தில்.. இலங்கையில் ஒரு தரையிறக்கத்துக்காக தயாராக வேண்டி இருந்தது.
இந்த ஒரு நிலையை உலக வல்லாதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பி இருக்கவில்லை. தமது நிம்மதியான இராஜதந்திரத் திட்டங்களை நிலைதடுமாறச் செய்யும் சக்தியோடு புலிகள் இருப்பதை எந்த வல்லாதிக்க சக்தியும் விரும்பவில்லை. இதனை புலிகள் நன்கு அறிந்திருந்தனர். யோகி அண்ணன்.. பாலகுமார் அண்ணன் போன்றோரின் பேச்சுக்களில் இருந்து இதனை அவதானிக்க முடிந்தது.
இருந்தாலும்.. விடுதலைப்புலிகளின் சக்திக்கு மீறிய வகையில்.. உலக நாடுகளின் சக்தி அமைந்ததும்.. போரியல் ரீதியில் வன்னி பெரும் படை வலுப் பிரயோகத்துக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய பூகோள அமைப்பைக் கொண்டிராததும்.. இராணு வழங்கலால் தனிமைப்பட்டுப் போகக் கூடியதுமான போர்க்களத்தில்.. புலிகள் இறுதியில் சரணடைவுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானதே அன்றி புலிகள் தம்மால் இயன்ற வரை போராடியே இருந்தனர். இதுதான் உண்மை..!
இன்று எல்லாம் முடிந்த பின்.. தமது பிழைப்புக்காக பொய் சொல்பவர்கள்.. பலவாறு பலவும் சொல்வார்கள். கடந்த கால நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்திருந்தால்.. இவர்களின் அண்டப்புழுகுகளை அப்பட்டமாகக் காணலாம்.
புலிகளை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உலகம் எடுத்திருந்தது என்பது தான் புலிகளின் அழிவுக்கு காரணமானது. அதற்கு அல்குவைடாவின் தாக்குதலும் ஒரு காரணமே அன்றி அதுவே முழுக் காரணம் அல்ல. புலிகள் உலகத்தின் சக்தி மிக்க நாடுகளின் கண்காணிப்புக்களை மீறி இலங்கையின் வடக்குக் கிழக்கில் நிலத்தை பரிபாலனம் செய்ததே அவர்களின் அழிவுக்குக் காரணமானது. அதாவது பிரகடனப்படுத்தாத தமிழீழத்தை புலிகள் நிறுவியதே அவர்கள் செய்த குற்றம்.
இன்றும் புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக காட்டுக்குள் இருந்து மட்டும் செயற்பட்டுக் கொண்டிருந்திருந்தால்.. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவர்களுக்கு தேடி வந்து உதவி இருக்கும். ஏனெனில் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிராந்தியத்தில் தமது செல்வாக்கை இராஜதந்திர நகர்வுகளை செய்ய அவர்கள் புலிகளைப் பாவித்திருப்பர்.
தலைவர் மக்களுக்காக விரைந்து தமிழீழம் மீட்கப் போய் தான் இன்று அழிந்து போனார் என்பதே உண்மையின் தரிசனம். புலிகள் காட்டுக்குள் பதுங்கி இருந்திருந்தால்.. இன்றும் இப்போதும் இந்தப் போராட்டம் நீண்டிருக்கும். ஆனால் தமிழீழம் பெறப்பட்டிருக்காது. தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருக்கும்.
எனவே புலிகள் தோற்றது.. அல்லது தோல்வியை தேடிக் கொண்டது.. தமிழீழத்தை அடைவதற்கான மாற்று வழியை தேடுங்கள் என்று சொல்லவே அன்றி.. தமிழீழத்தை கைவிடுங்கள் என்றல்ல.
ஆனால் நடப்பதோ.. தலை கீழாக. அது தான் வருத்தமானது. இதனை எப்போதுதான் மக்கள் (தாயக மற்றும் புலம்பெயர் மக்கள்) உணரப் போகின்றனரோ தெரியவில்லை..!
-குண்டுமணி-
Comments