பதில்சொல்லப்படதாக கேள்விகள் பல உண்டு: பிரியாவிடையில் ஜோன் ஹோம்ஸ்

தனது பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் ஐ.நாவுக்கான மனிதாபிமான தூதுவர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் இறுதியாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை இன்று(26.08.2010) நடத்தியுள்ளார். அதில் அவர் பல நாடுகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜோன் ஹோம்ஸ், இலங்கை அரசை சாடியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போரைப் பொறுத்தவரை பல விடைகாணாத கேள்விகள் இன்னும் பாக்கியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

தான் அதிகாரியாக கடமையாற்றிய காலகட்டத்தில், இலங்கை பிரச்சனையாலேயே தாம் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஐ.நா சபை மீது உலகநாடுகள் பல அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவியரீதியாக புலிகளும் அதன் சகோதர அமைப்புகளாலும், இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளால், இலங்கை அரசு மீது தாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைதோன்றியதாகவும் தெரிவித்த அவர், புலிகளுக்கு எதிராக இலங்கை அரசும் கடும் பரப்புரைகளை மேற்கொண்டது என்று கூறியுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் தாம் எதிர்பார்த்த அளவு நிலமை முன்னேறவில்லை என்பதே தாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியது, வகைதொகையின்றி மக்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது, மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், போன்றவை இன்னும் கேள்விக்குறியாகவும், விடை காணப்படாதவையாகவுமே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூதூரில் 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு இன்னும் சரியான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் அவர் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.

தனது பதவிக் காலத்தில் பல தடவைகள் இலங்கை சென்றுவந்த ஜோன் ஹோம்ஸ் அவர்கள், இறுதி யுத்தத்தின்போது, யுத்தத்தை நிறுத்த பாடுபட்டதோடு, புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடியும் உள்ளார். இலங்கை அரசு பல குற்றச்செயல்களை இழைத்திருப்பதை, இவர் நன்கு அறிந்திருந்தாலும் ஐ.நாவின் அதிகாரியாக தாம் இருப்பதாலேயே, இவர் அதனை கடுமையாகச் சாடவில்லை என்பதே உண்மையாகும்.

Comments