ஏதிலிகளாய்க் கப்பலில் வந்தோர் தொடர்பான தற்போதைய நிலை

கனடாவுக்கு ஏதிலிகளாகக் கப்பல் மூலம் வந்துள்ள சுமார் 490 ஈழத் தமிழர் பற்றிய விபரங்களை வழங்கிட கனடியத் தமிழர் பேரவை இன்று மாலை 3:30 மணியளவில் தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அதன் பணிமனையில் நடத்தியது.

அனைத்துக்கும் முதலில், ஈழத்தமிழ் ஏதிலிகளை ஏற்றி வந்த கப்பல் கனடாவிற் தரையிறங்க அனுமதித்த கனடிய அரசுக்கு எமது நன்றிகள். அத்துடன் ஏதிலிகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என உறுதியாக வலியறுத்திய லிபரல் கட்சித் தலைவர் திரு மைக்கல் இக்னாட்டியப் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அத்தோடு மாண்புமிகு திரு பாப் றே மற்றும் திரு ராப் ஒலிபன்ற் ஆகியோர் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி கூறுகிறோம். என் டி பி கட்சியின் தலைவர் திரு யக் லேடன் அவர்களது அறிக்கைக்கும் பாராளுமன்றத்தில் திருமதி ஒலிவியா சவ் அவர்கள் பன்னாட்டு மற்றும் கனடியச் சட்டங்களுக்கு அமையக் கனடா நடந்து கொள்ள வோண்டுமெனக் கொடுத்த அழுத்தையும் நன்றியோடு வரவேற்கிறோம். இவர்களோடு என் டி பி பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு பீற்றர் யூலியன் மற்றும் திரு டொன் டெவிசு ஆகியோகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். நீதியான முறையிலும் முன் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கருதாமலும் இவ் ஏதிலிகள் நடத்தப்பபட வேண்டும் என எடுத்துரைத்த புளக் கிபெக்குவாக் கட்சியின் தலைவர் திரு கையில்சு டூசெப் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். கனடியத் தமிழர் பேரவையானது தொடர்ச்சியான சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் தேசியக் கட்சிகள் அனைத்துடனும் ஏற்படுத்தி வருவதோடு வந்தடைந்துள்ள தமிழ் ஏதிலிகளுக்கான சகல உதவிகளையும் கனடிய மற்றும் பன்னாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கி வருகிறது என்பது மிக வெளிப்படையாது. அத்தோடு மட்டுமன்றிக் கடந்த மூன்று நாட்களாகத் தேசிய மற்றும் உள்ளுர் ஊடகங்களோடு இராப்பகலாகத் தொடர்பிலிருந்து பணியாற்றி, ஏதிலிகளின் வருகை தொடர்பான அவர்களதும் கனடியரதும் எண்ணத்தையும் நிலைப்பாட்டையும் மாற்றியமைப்பதில் பெரும் வெற்றியடைந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாகச் சர்வதேச மன்னிப்புச் சபை, ஏதிலிகளுக்கான கனடிய அமைப்பு, சீனக் கனடியத் தேசிய அவை, உலக சீக்கியர் அமைப்பு, ரொறன்ரோ யோர்க் பிரதேச தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளோடு இணைந்து செயற்பட்டு பல சாதகமான கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். கனடாவின் பல்வேறுபட்ட ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நேரடியாகப் பங்கேற்று தமிழ் ஏதிலிகள் பற்றிய சரியான கருத்துக்களை வழங்கி வருகிறோம். இவற்றோடு மட்டுமல்லாது பி பி சி, அவுத்திரேலிய ஒலிபரப்புச் சேவை, என் டி ரி வி மற்றும் அல் யசீரா போன்ற உலகெங்குமிருந்து வரும் பல்வேறு ஊடகங்களின் அழைப்பகளையும் ஏற்றுத் தகவல்கள் வழங்கி வருகிறோம்.

கடந்த 24 மணி நேரத்தில் தேசிய மற்றும் உள்ளுர் ஊடகங்களின் கருத்துக்கள் தமிழ் ஏதிலிகளுக்கும் கனடியத் தமிழருக்கும் சாதகமாக மாறியிருக்கின்றன என்பது வெள்ளிடை மலை. தேசிய ஊடகங்கள் இச் செய்தி தொடர்பாக நடுநிலையைக் கையாளும் நிலையை நாம் உருவாக்கியிருக்கிறோம். கனடியத் தமிழர் பேரவையின் பணியாளரும் தன்னார்வத் தொண்டரும் அனைத்துச் சந்தர்ப்பங்ளையும் சரியாகப் பயன்படுத்தி சாதகமான ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்தும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாது வெளிவிவகாரத் திணைக்களம், சீ பி எஸ் ஏ, ஆர் சி எம் பி, உள்ளுர் வைத்தியசாலைகள், சட்ட உதவிச் சேவை, குழந்தைகள் உதவிச் சேவை ஆகிய பல அரச அமைப்புகளின் உயர் அதிகாரிகளோடு தொடர்சியாகவும் மிக நெருக்கமாகவும் பணியாற்றி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டு ஓசன் லேடி கப்பலில் வந்தோருக்கு வழங்கியது போலவே எஸ் வி சண் சீ கப்பலில் வந்தோருக்கும் மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் மற்றம் தகவல்களை வழங்கி வருகிறோம். தற்போது வன்கூவர், விக்ரோறியா நகரில் இருந்து வந்த செய்திகளின்படி பெண்களும் குழந்தைகளும் தற்காலிக வதிவிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் தங்கள் தாய்மாருடன்; தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்திறங்கிய தமிழ் ஏதிலிகளுக்கான ‘தடுத்து வைப்பதற்கான மீளாய்வு’ எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறலாம் எனத் தெரிய வருகிறது. கனடிய எல்லைச் சேவைகள் முகவத்தின் (CBSA) ஊடகச் சந்திப்பு வன்கூவர் நேரப்படி இன்று மாலை 3:00 மணிக்கு இடம்பெற உள்ளது. கனடியத் தமிழர் பேரவை பங்கேற்கும் இந்நிழ்வின் பின்னர் இது பற்றிய கருத்துக்களை தெரிவிக்க கனடியத் தமிழர் பேரவையின் ஊடகப் பிரிவு தாயர் நிலையில் உள்ளது.

தவறான மற்றும் எதிரான செய்திகள் கப்பலில் வந்தோரையும் கனடியத் தமிழரையும் பாதிக்கும் எனக் கனடியத் தமிழர் பேரவை அதிக கவலை கொண்டுள்ளது. கனடியருக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க வேண்டியது எமது கடடையாகும். இப் பணியிலும் ஏதிலிகளுக்கு உதவும் இன்னும் பல செயற்பாடுகளிலும் தொடந்து கனடியத் தமிழர் பேரவையோடு இணைந்து செயற்படுமாறு கனடிய மற்றும் புலம்பெயர் தமிழரை அன்போடு வேண்டுகிறோம்.

Comments