இன்றைய யாழ்ப்பாணம் தனித்துவத்தினை மெல்ல இழந்து வருகிறது

ஈழத் தமிழர்களது கலாச்சாரத் தலைநகரம் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்விடுவோமா என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்துகின்றது.

image030


குடாநாட்டில் நிலையாக இருப்பவர்களை விட பிற மாவட்டங்களிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்பவர்கள் இந்த மாற்றத்தினை இலகுவில் உணர்ந்துகொள்கிறார்கள். அண்மையில் பணி நிமிர்த்தமாக ஐந்து நாட்கள் குடாநாட்டில் தங்கியிருந்த நான் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தேன். இதன்போது அங்கு ஏகப்பட்ட மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை நான் விளங்கிக்கொண்டேன்.

இந்த மாற்றங்களில் பொரும்பாலானவை ஆக்கபூர்வமானதாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. இருப்பினும், நேரெதிர் மாறான விளைவுகளைத் தரவல்ல குறித்த சில அம்சங்களையும் அவதானிக்கமுடிந்தது.

இதுநாள் வரைக்கும் நாட்டினது தென்பகுதிகளில் மாத்திரம் இருந்த தனியார் வங்கிகள், வாடகைக்கொள்வனவு (லீசிங்) நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தக ஸ்தாபனங்கள் என்பன குடாநாட்டின் பல பாகங்களிலும் தங்களது கிளைகளைத் திறந்துவருகின்றன.

வழமைபோலவே குடாநாட்டு மக்களிடத்தே செல்வம் நிறைந்து கிடக்கிறது. தங்க ஆபரணங்களாகவும், நிலையான வைப்பிலுள்ள பணமாகவும் அசையும், அசையாச் சொத்துக்களாகவும் இவை இருக்கின்றன. புலம்பெயர்வாழ் நாடுகளில் யாழ்ப்பாணத்தவர்கள் அதிகம் இருப்பதும் குடாநாட்டுக்கு அந்நியச் செலாவணி வந்து குவிவதற்கான பிரதான காரணம். புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் அண்ணளவாக 750,000 ஈழத்தமிழர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்களே என புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.

image032

குடாநாட்டில் துரித கதியில் கடைவிரிக்கும் இந்தத் தனியார் வங்கிகளின் குறி அங்கு குவிந்திருக்கும் தங்க நகைகளிடத்திலும், அவர்களது பணத்திலுமே இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

குடாநாட்டில் களவுகள் அதிகரித்துவிட்டமையினால் தங்களது நகைகள் மற்றும் பணத்தினை வங்கிகளில் பத்திரப்படுத்தவே மக்கள் வரும்புகிறார்கள்.

மக்களுக்கான சேவை என்பதற்கு அப்பால், தங்களது வருமானத்தினைப் பெருக்கிக்கொள்வதற்கான ஒரு உபாயமாக தனியார் மற்றும் அரச வங்கிகள் தங்களது கிளைகளை வேகமாகத் திறந்து வருகின்றன. இருப்பினும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த வங்கிகள் தொழில் முயற்சிகளுக்கான கடன்திட்டங்களையும் குடாநாட்டில் முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

குடாநாட்டுக்குச் செல்லும் யாழ் கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பல்வேறுபட்ட பொருட்களின் பிரமாண்டமான விளம்பரக் கட்டவுட்களைக் காண முடிகிறது. குடாநாட்டில் தமக்கான சந்தை வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் அனைவருமே யாழ்ப்பாணத்துச் சந்தையில் தமக்கென்றோர் இடத்தினைப் பிடிப்பதற்கு முண்டியடிக்கிறார்கள்.

இது தவிர, குடாநாட்டில் தற்போது உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணம் தொடக்கம் பருத்தித்துறை வரையிலான வீதி அகலமாக்கப்பட்டு தாரிடப்பட்டு வருகிறது.

image032


காங்கேசன்துறைச் சீமெந்து ஆலையினை மீளவும் இயக்குவதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இது தவிர, குடாநாட்டுக்கான தொடரூந்துப் பாதையினை மீளவும் அமைக்கும் வகையில் தொடருந்துப் பாதையினை அண்மித்த பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தவர்களைப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவைக்கும் ஒரு முனைப்பாக கொழும்புப் பங்குச் சந்தையின் கிளையொன்று அண்மையில் யாழ் நகரத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் முதலிடுவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் மற்றும் மக்களின் வேண்டுகையினை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே கொழும்பு பங்குச்சந்தை யாழ்ப்பாணத்தில் தனது கிளையினைத் திறக்கும் முடிவினை எடுத்ததாக அதன் அலுவலர் ஒருவர் கூறுகிறார்.

குடாநாட்டு மக்கள் மத்தியிலிருக்கும் பணத்தினைக் கறப்பதற்கான இன்னொரு முனைப்பே இது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

image034


இந்த ஆண்டு சனவரியில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக குடாநாட்டு உற்பத்திப்பொருட்கள் தெற்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சின்னவெங்காயம், வாழைக்குலை, புகையிலை, திராட்சைப்பழம் மற்றும் பனம்பொருள் உற்பத்திகள் போன்ற குடாநாட்டு உற்பத்திகள் தெற்கின் சந்தைகளுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

2009ஆம் ஆண்டு 52 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட திராட்சைப்பழம் இந்த ஆண்டு 56 ஹெக்ரெயராக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டினது முதற்காலாண்டுப் பகுதியில் குடாநாட்டில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைப்பழங்கள் ஏ9 நெடுஞ்சாலை மீளவும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிற மாவட்டச் சந்தைகளிலும் பெருமளவில் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது. தற்போது குடாநாட்டில் அதிக சுவைகொண்ட திராட்சை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டினது ஏனைய பாகங்களிலிந்து குடாநாடு துண்டிக்கப்பட்டிருந்தமையினால் திராட்சைப்பழத்திற்கான கிராக்கி குடாநாட்டில் குறைவடைந்திருந்தது. இதன்விளைவாக திராட்சைப்பழச் செய்கையினை மேற்கொள்வதில விவசாயிகள் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.

தற்போது குடாநாட்டில் பரவலாக அறுவடைசெய்யப்படும் சின்னவெங்காயம் பெருமளவில் தம்புல்லை பொருளாதார மையத்திற்கு வந்துசேர்கிறது. இந்த அறுவடைக் காலத்தில் குடாநாட்டிலிருந்து தினமும் 110,000 கிலோ சின்ன வெங்காயம் தம்புல்லைச் சந்தைக்கு வந்துசேர்வதாக தம்புல்லைப் பொருளாதார அபிவிருத்திச் சமூகத்தின் தலைவர் தயானந்தசிறி கூறுகிறார். குடாநாட்டில் விவசாயிகளிடமிருந்து 20 தொடக்கம் 30 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யப்படும் சின்ன வெங்காயம் தம்புள்ளைச் சந்தையில் 45 தொடக்கம் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்பகுதிச் சிங்களவர்களின் வடக்கு நோக்கிய படையெடுப்புத் தொடர்பில் சொல்லவே தேவையில்லை. தினமும் 300 தொடக்கம் 350 பேருந்துகளிலும் சிற்றூர்திகளிலும் இவர்கள் குடாநாட்டுக்குச் செல்கிறார்கள். இவர்களுக்காகவே ஏ9 வீதியோரங்களில் படையினர் உணவகங்களைத் திறந்திருக்கிறார்கள். ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான 132 கி.மீ நீளமான வீதியோரத்தில் 35க்கும் மேற்பட்ட படையினரின் உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களுக்கு அருகே இவர்களுக்காகக் கழிப்பிட வசதிகளையும் குளித்து உடைமாற்றுவதற்கான வசதிகளையும் படையினரே ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் சந்திரன் பூங்கா அமைந்திருந்த இடத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் நினைவுத்தூபி, ஆனையிறவின் உல்லாசவிடுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் கவசவாகனமாகப் பயன்படுத்திய புள்டோசர் இருக்கும் பகுதி, ஆனையிறவுக் கோட்டைக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் படையினரின் பிரமாண்டமான நினைவுத்தூபி, யாழ் நூலகம், நயினாதீவிலுள்ள நாக விகாரை, ஆரியகுளம் சந்தியிலுள்ள விகாரை, நல்லூர் கந்தசுவாமி கோவில், வடமராட்சியின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது சிறுபராய வீடு, படையினரால் இடித்தழிக்கப்பட்டிருக்கும் துயிலகங்கள் என்பன தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள உல்லாசப்பயணிகைளப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

இவை தவிர புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் தற்போது குடாநாட்டுக்கு வருவது பெரிதும் அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்கு 60க்கும் அதிகமான குடும்பங்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து குடாநாட்டுக்குள் வருகிறார்கள்.

இவ்வாறாக உள்ளூர் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதனால் குடாநாட்டில் சிறு வியாபாரம் என்றுமில்லாதளவிற்கு அதிகரித்திருக்கிறது. இவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரைகுறை வசதிகளுடன் கூடிய தங்ககங்கள் பல முளைத்திருக்கின்றன. குடாநாட்டுக்குப் படையெடுக்கும் சிங்கள உல்லாசப் பயணிகள் இரவில் படுத்துறங்குவதற்கே இடமின்றி, துரையப்பா விளையாட்டரங்கில் இராப் பொழுதைக் கழிப்பதை அவதானிக்க முடிகிறது.

இவை தவிர, தென்பகுதியினைச் சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லீம் வியாபாரிகள் பலர் குடாநாட்டின் நகர வீதியோரங்களில் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. பேருந்து நிலையத்தில் கைகளில் சில அலங்காரப் பொருட்களுடன் சிங்கள வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது.

குடாநாட்டு வீதிகளில் முன்னர் இருந்த சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடிகள் தற்போது பெரிதும் குறைந்திருப்பதாக நகர மக்கள் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் சோதனைச் சாவடிகளின் அளவுகள் பெரிதும் குறைந்திருக்கின்றன. எது எவ்வாறிருப்பினும் குடாநாட்டில் தனியார் மற்றும் பொதுக் கட்டங்கள் மற்றும் நிலங்களில் இன்னமும் படையினர் குந்தியிருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொதுமக்களது சொத்துக்களைப் படையினர் தொடர்ந்தும் தம்வசப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வசிக்கும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒருங்கிணைத்த முனைப்புக்கள் எதுவும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. வலிகாமம் வடக்கில் மாத்திரம் 24,000க்கும் அதிகமானவர்கள் தற்போதும் இடம்பெயர்ந்து வசிக்கிறார்கள்.

குடாநாட்டில் மொத்தமாக உள்ள பெண்களில் விதவைகள் மற்றும் அங்கவீனமடைந்த பெண்கள் 46 சதவீதம் இருப்பதாக அண்மையில் சிறிலங்காவினது சமூக சேவைகள் அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். குடாநாட்டில் மாத்திரம் 26300 யுத்த விதவைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்களைக் குடும்பத் தலைமையாகக் கொண்ட இந்தக் குடும்பங்கள் தமக்கான தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சுயதொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறாக குடாநாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பது என்னவோ உண்மைதான். வேலையில்லாப் பிரச்சினை, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமை, சுதந்திரமான நடமாட்டம் என பல பிரச்சினைகள் இன்னமும் குடாநாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. குடாநாட்டினைப் பொறுத்தவரையில் பலநூற்றுக்கணக்கான பல்லைக்கழகப் பட்டதாரிகள் கூட இன்றும் வேலையில்லாமல் இருக்கிறார்.

image060


சமூகச் சீர்கேடுகள் பெரிதாக வெளியே தெரிவதில்லை என்றாலும், குடாநாட்டில் இதுபோன்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் காணப்படுகிறது. இளம் தலைமுறையினர் பெரிதும் மாறிவிட்டார்கள் என யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த கல்விமான் ஒருவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். மேற்கத்தேய உடையணிந்த உள்ளூர் பெண்களை நகர வீதிகளில் தற்போது அதிகம் காணமுடிகிறது.

குடாநாட்டில் உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருக்கும் பேருந்துகளின் பின் இருக்கைகளில் திருமணமாகாத இளம் சோடிகளை அதிகம் காணமுடிகிறது. அந்தரங்கமானதொரு இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், பேருந்தில் பிரயாணம் செய்யும் ஏயைவர்களின் முகம் சுழிக்கும் படி இவர்கள் நடத்துகொள்வது அருவருப்பானது.

குடாநாட்டில் இளம் வயதினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்குப் பலவேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. போர் தந்த இழப்புக்களால் ஏற்பட்ட மன அழுத்தமும் இதற்கானதொரு காரணம்.

எது எவ்வாறிருப்பினும் குடாநாடு பெரிதும் மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், கலாச்சார ரீதியிலான அதன் தனித்துவத்தினை யாழ்ப்பாணம் மெல்ல இழந்து வருகிறது என்பதுதான் உண்மை.

- யாழினி

Comments