புகழேந்தி ஒரு ‘ஒவியப்போராளி’

ஈழப்போராட்டத்தில், ஓவியர் புகழேந்தி அவர்களின் ஒவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா. அது எனக்குமட்டுமல்ல ஈழவிடுதலையை நேசிக்கும் அனைத்து ஈழ அபிமானிகளுக்கும் இருக்கும் ஒரு ஆத்மாத்தமான உணர்வின் வெளிப்பாடு.

இன விடுதலைப்போராட்டத்தை மையப்படுத்திய படைப்புகள், எப்போதும் போராட்டத்தின் நியாயத்தை எடுத்தியம்பியும், அப்போராட்டத்தின் வீச்சை வலுப்படுத்தியும் நிற்பதுடன், அந்தப் போராட்டம் தொடர்பான உண்மை நிலையை பலதரப்பட்ட மக்களிடம் பதிவு செய்வதனூடாக போராட்டத்திற்கான ஆதரவுப் பரப்பை விஸ்தரிக்கக்கூடிய கருத்தியல் ரீதியான தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். அத்தகைய பலம் பொருந்திய படைப்பாயுதங்களில் ஒன்று ஓவியம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தை ஓவியங்களில் உயிர்ப்பித்துக் காட்டிய ஓவியர் புகழேந்தி அவர்களைப் பொறுத்தவரை, அப்போராட்டத்தை நீண்டகாலமாக நேசிப்பவர், தேசியத்தலைவர் பால் மிகுந்த அபிமானம் கொண்டவர், ஈழமக்களின் போராட்டம் பற்றிய தெளிவான உணர்வுடனும் பற்றுறுதியுடனும் தளராத நம்பிக்கையுடனும் செயற்பட்டு வருகின்றவர் என்பதற்கு அப்பால், முள்ளிவாய்க்கால் யுத்தப்பேரிடிக்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட தளர்வு நிலையை கணித்து தனக்கான பொருத்தமான நிகழ்ச்சிநிரலை ஒழுங்குபடுத்தி செயற்பட்டுவருகின்ற ஒரு தலைசிறந்த படைப்பாளி. எப்பாடுபட்டேனும் தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் கனதியைக் குறையவிடக்கூடாது என்பதற்காக, அந்தப் பாரத்தையும் தலைவரின் சிந்தனைகளையும் மனதில் கொண்டு தனது ஆயுதமாகிய தூரிகையை கையில் எடுத்து ஈழமக்களின் விடுதலைக்காக பாடுபடும் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஈழத்தமிழருக்குக் கிடைத்த ஒரு உன்னத ‘ஒவியப்போராளி’ என்று கூறினால் மிகையாகாது.

1956 ம் ஆண்டு இங்கினியாகலையில் சிங்கள இராணுவம் சிங்களக்காடையர்களுடன் இணைந்து நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது. அப்படுகொலையுடன் தொடங்கி முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை வரை கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு காணமால் போயுள்ளனர். ஊனமடைந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்கள் என ஈழத்தமிழினத்தின் அவலங்கள் தொடர்கின்றன. அடையாளம் தெரியாமல் இறந்தவர்களினதும், காணமல் போனவர்களினதும் படங்களுடன் கண்ணீருடன் அலையும் பெற்றோர்கள் இன்னும் அவர்கள் இருப்பார்கள் என்ற சிறிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதுபோல் பலவகைகளில் தொடரும் ஈழத்தின் அவலம் சொல்லிமாளாது.

சுpங்கள ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் போருடன் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சொல்லிவருகின்றனர். வெற்றி மமதையில் ஈழத்தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திவருகின்றனர். பெரும்பான்மை இனத்திற்கு சாதகமாக அரசியல், பொருளாதார, நீதிச் சட்டதிட்டங்களை மாற்றியமைத்து இனி எப்போதும் ஈழத்தமிழ் மக்களை பாதுகாக்க குரல் கொடுக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்களம் தனித்து போரிட்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பின்னடைவு நிலைக்கு தள்ளவில்லை என்பது மட்டும் வெளிப்படையான உண்மை.

சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்கும், வலுவிழக்கச் செய்வதற்கும் பல்வேறு தந்திரோபாயங்களை கையாள்கின்றது. இதுதான் ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்நோக்குகின்ற இன்றைய இக்கட்டான காலகட்டம்.

இத்தருணத்தில் ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீச்சு வலிமை இழந்து போகாமல் பாதுகாத்து, விடுதலையுணர்வை வலுப்படுத்தி புதிய சந்ததிக்கு உணர்வை ஊட்டுவது மிகவும் முக்கியமானது. இந்த முக்கிய இலக்கு ஓவியர் புகழேந்தி அவர்களின் ‘போர்முகங்கள்’ என்னும் காலப்படைப்பில் மிகவும் பிரதானப்பட்டிருக்கின்றது.

அவரின் துரிகையில் ஈழப்போராட்டம், மக்களின் உணர்வலைகள், அவர்கள் அடைந்த அவலங்களின் வெளிப்பாடு என ஈழப்போராட்டத்தின் பல்வேறுபட்ட பரிணாமங்களையும்; கவனத்திலெடுத்து படைப்பாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
அவருடைய படைப்புகள் மிகவும் ஆழமாகவும் அனுபவம் மிக்கதாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக அவரது தூரிகை ஈழத்தமிழரின் வேதனைகளை, போராளிகளின் போர்ப் பங்கேற்புகளையும் போரியல் வடிவங்களையும் யதார்த்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் உயிரோட்டமாகவும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

அதேவேளை ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்காக பல அறவழித்தியாகங்களையும் போராட்டங்களையும் செய்து எப்போதும் உறுதுணையாகவும் நம்பிக்கையுடன் தோள் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம் ஒரு பாரிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் அவரது ஓவியங்களில் அதிகமாகவே உண்டு. அதுவே அரசியல் ரீதியான ஒரு ஒருங்கிணைவிற்கும், மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

படைப்பில் குறிப்புணர்த்தும் விடயமாக உலகத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழவிடுதலையை வென்றெடுக்க அயராது பாடுபடவேண்டும். முள்ளிவாய்க்கால் கரையில் தமிழனின் வீரம் வீழ்ந்ததாக சிங்களம் பறைசாற்றினாலும் சாம்பல் மேட்டிலிருந்து எழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல தமிழீழம் மலர்ந்தே தீரும் என்ற எண்ண அலையையும், விடுதலையானது ஈழத்தமிழனுக்கு ஏன் அவசியமானது என்பதையும், மக்கள் இதற்காக கொடுத்த விலை சந்தித்த அவலத்தையும் தமிழனின் வீரத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதையும் பதிவு செய்ததனூடாக தமிழ் மக்களிடையே தளர்வு நிலையை போக்கி தன்நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் இந்த ஓவியங்கள் தமிழர்களிற்கு கிடைத்த அருமையான வரலாற்று ஆவணங்கள்.

துவண்டுவிடாதே தமிழா!அவலங்களையும் அழிவுகளையும் தாங்கிய ஈழத்தமிழினம் சிங்களத்தின் கொடும்பிடிக்குள் அகப்பட்டுள்ளது. அவர்களின் மௌனம் இயலாமையின் வெளிப்பாடல்ல.!காலம் கனியும் என்ற நம்பிக்கையில், அதற்கான களத்தை உலகத் தமிழ் மக்கள் ஏற்படுத்தித் தருவார்கள், வருவார்கள், என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் தளராது வேதனைகளைத்தாங்கி காத்திருக்கிறது என்ற மன உணர்வே புகழேந்தி அவர்களின் ஓவியங்களை பார்த்துவிட்டுவரும் போது ஏற்படுகின்றது.

அத்தருணத்தில் ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா!வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா!உரிமையை இழந்தோம்! உடமையும் இழந்தோம்!உணர்வை இழக்கலாமா? என்ற பாடல் வரிகள் எமது உணர்வுகளின் நினைவுகளை மீட்டெழுப்புகின்றன.

ஈழத்தவன் eelapakkam@gmail.com


Comments