வன்னிப் போரின் உறங்காத உண்மைகள்

வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது இவர்கள் திண்டாடுவதை அண்மைய நாட்களில் சடுதியாகக் கட்டவிழத் தொடங்கியுள்ள பல்வேறு நிகழ்வுகள் நிதர்சனப்படுத்துகின்றன.

முள்ளிவாய்க்காலில் களமாடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் சிலர், மே 17 வரை புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் கடமையாற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசித் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். எனினும் மே 17ஆம் நாள் காலையுடன் இந்த நிலை சற்றுத் தலைகீழாக மாறியிருந்தது.

அன்று காலையுடன் முள்ளிவாய்க்காலில் நின்ற முக்கிய போராளிகளுடனான வெளித்தொடர்புகள் ஏறத்தாள முடக்கநிலையை எய்தியிருந்ததோடு, ஒவ்வொரு மணித்துளிகளையும் பதற்றத்துடனேயே உலகத் தமிழர்கள் அனைவரும் கழித்த வண்ணமிருந்தனர். அதேநேரத்தில் அன்று முற்பகல் உலகத் தமிழர்களுக்கான செய்தியன்றை வழங்கிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, ‘கடைசி மணித்தியாலங்கள்’ நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டதோடு, ‘கடைசிவரைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்றும் சூளுரைத்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் தளபதி சூசை அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், திடீரென அன்று மாலை பிரித்தானியாவின் சணல்-4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய கே.பி, ‘ஆயுதங்களை மௌனிப்பதற்கும், அவற்றைக் கீழே போடுவதற்கும்’ தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாகவும், ‘பிரபாகரனுடன் நான்கு மணிநேரம் கதைத்த பின்னர்’ இந்த முடிவைத் தான் எடுத்ததாகவும் அறிவித்திருந்தார்.

உண்மையில் கே.பி விடுத்த இந்த அறிவித்தல், புகலிட தேசங்களிலும் சரி, தமிழகத்திலும் சரி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயுதங்களை கீழே போடுவதோ அன்றி சரணடைவது என்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு அல்ல என்பதை முழு உலகமும் நன்கு அறிந்திருந்தது.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை தொடர்ந்து, இந்தியப் படைகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்த பொழுதும், அது ஒரு வெறும் சம்பிரதாயபூர்வ ஆயுத ஒப்படைப்பாகவே அமைந் திருந்தது.

அதனை விட, தமிழீழ மக்களின் பாதுகாப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தியப் படைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ரஜீவ் காந்தி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள். இது தொடர்பாக சுதுமலைப் பிரகடனத்தில் பின்வருமாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்: ‘இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது.

எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங் களாக, இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

திடீரென கால அவகாசமின்றி எமது போராளி களின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனம் திறந்து பேசினேன்.

சிங்கள இனவாத அரசில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார்.

எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம் பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை.

எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.’ இவ்வாறான முடிவைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எடுத்தமைக்கான காரணிபற்றியும், இதுவிடயத்தில் ரஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பாகவும், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பின்வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்:

‘அடுத்ததாக, விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றிப் பேசப்பட்டது. ‘உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லாப் படையணிகளையும் கலைத்துவிடு மாறும் நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாகச் சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும்.

இந்திய - இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என சிறீலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்பவைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது முக் கியம். தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும்.

அத்துடன் சிங்கள ஆயுதப் படைகள் போர்நிறுத்தம் பேணியவாறு முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்று கூறினார் ரஜீவ் காந்தி.பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார் பண்டுருட்டி. “எதற்காகக் கடுமையாக யோசிக்க வேண்டும்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த, பாவிக்கமுடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றைக் கையளித்தால் போச்சு” என்றார் பண்டுருட்டி இராமச் சந்திரன். “இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவை எல்லாமே பழுதடைந்த, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள்தான்” என்று கிண்டலாகப் பதிலளித்தார் பிரபாகரன்.“பரவாயில்லையே, அந்தப் பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம்.” என்றார் அமைச்சர்.தமிழ் மொழியில் நிகழ்ந்த இந்த சுவையான உரையாடலின் அர்த்தத்தை அறிய விரும்பினார் ராஜீவ். அதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் பண்டுருட்டி.

அதை ஆமோதித்தபடி புன்முறுவலுடன் தலையசைத்தார் பிரதம மந்திரி.’தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனத்திலும், தேசத்தின் குரல் எழுதிய ‘போரும் சமாதானமும்’ நூலிலும் குறிப்பிடப்படும் செய்தி ஒன்றுதான்: தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், வெறும் சம்பிரதாய ரீதியிலு மேயே 1987ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கையளிப்பு நிகழ்ந்தேறியிருந்தது என்பதே அது.

பின்னாளில் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பொழுது ஆயுதக் களைவு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய பொழுது அதற்குப் பதிலளித்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்: ‘எங்கடை ஆயுதங்கள்... புலிகள் வைச்சிருக்கிற ஆயுதங்களும், எங்கடை இராணுவப் படைகளும்... இது மக்களின்ரை சொத்தாகப் பார்க்கிறம். மக்கள் வாங்கித் தந்த சொத்து.

17,000 போராளிகள் தங்களைப் பலிகொடுத்துச் சேர்த்த ஆயுதப் பலம். இதுதான் எங்கட மக்களது பலம். நாங்கள் இந்த ஆயுதங்களைப் பாவிக்கிறம். ஆனால் உரி மையாளர்கள் எமது மக்கள். ஆகவே, எங்கட மக்களுக்குச் சுதந்திரம் கிட்டாமல், கரும்புலிகளைக் கலைக்கச் சொல்லுவதோ, ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம்.’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த மேற்குலக அரசுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடித்தளமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமை அமைந்ததே இதற்குக் காரணமாக இருந்தது.

எனினும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமான முறையில் சிங்கள அரசு முறித்துக் கொண்டு, வன்னி மீதான தனது கொடூர இனவழித்தொழிப்பு - நில ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்திய பொழுது, இந் தியாவும், அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளும், தமிழீழ விடுலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாகப் பேசத் தொடங்கியிருந்தன.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக அமையவில்லை. இந்தியாவினதும், மேற்குலக வல்லரசுகளின் ஆயுதக் களைவு வலியுறுத்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் அடியோடு நிராகரித்ததோடு, சரணாகதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்திருந் தனர். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும் வரை, ஆயுதக் களைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஆயுதக் களைவு - சரணாகதி வலியுறுத்தலை, எவ்வித தயக்கமும் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு சமர்ப்பித்த கே.பி, பின்னர் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார் என்பதை, இறுதிப் போரில் அவர் வெளியிட்ட அறிக்கைகளும், வழங்கிய ஊடகச் செவ்விகளும், தற்பொழுது அவர் வழங்கும் செவ்விகளும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இதில் ஒருபடி மேலே சென்று கடந்த வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் கே.பி, ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிப்பது தொடர்பான அறிவித்தலை தானே வெளியிட்டதாகவும், இது தொடர்பாக சிறப்புத் தளபதி சூசை அவர்களுடன் மட்டுமே தான் உரையாடியதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதேநேரத்தில் பிறிதொரு முனையில் பா.நடேசன் அவர்களும், புலித்தேவன் அவர்களும் வெளிநாடுகளுடன் தொடர்பாடல்களைப் பேணியதாகவும் கே.பி குறிப்பிடுகின்றார். முதலில் தமிழீழத் தேசியத் தலைவரும் உரையாடியே ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பான முடிவை தான் எடுத்ததாகக் கூறிய கே.பி, தற்பொழுது இது தன்னால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஒப்புக்கொள்கின்றார்.

இறுதிவரை அடிபணியப் போவதில்லை என்றும் தளபதி சூசை அவர்கள் வழங்கிய செவ்வியுடன் இதனை ஒப்புநோக்கும் பொழுது, தளபதி சூசை அவர்களின் ஒப் புதல்கூட இன்றி தன்னிச்சையாக இந்த முடிவை கே.பி எடுத்ததாகவே நாம் கொள்ள முடியும். இதனைவிட, ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி செவ்வி வழங்கிய ஒருசில மணிநேரங்களில், மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சிங்களப் படைகளுடன் பேசுவதற்காக வெள்ளைக் கொடியுடன் சென்ற பா.நடேசன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.

சிங்களப் படைகளிடம் சரணடைவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சென்றார் என்று பல ஊடகங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகின்ற பொழுதும், உண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாகச் சென்றார் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த உண்மை.

இதுபற்றி முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவின் சண்டே ரைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதிய மேரி கொல்வின் அம்மையார், தன்னுடன் இறுதிவரை பா.நடேசன் அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், ‘சரணடைதல்’ என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்கு இறுதிவரை அவர் மறுத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

இதேநேரத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி அவர்களின் அறிவித்தல் வெளியாகிய சில மணிநேரங்களில் பா.நடேசன் அவர்கள் சிங்களப் படைகளால் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தோடு, அதற்கு முன்னர் எத்தருணத்திலும் கே.பியின் ஆயுத மௌனிப்பு அறிவித்தலை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் எதனையும் பா.நடேசன் அவர்கள் வெளியிடவில்லை.

இதில் நாம் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அதாவது சரணடைபவர்களைப் படுகொலை செய்வது மட்டும் போர்க்குற்றம் ஆகாது. சமாதானம் பேசச் செல்லும் நிராயுபாணிகளைப் படு கொலை செய்வதும் அதற்கு ஒப்பான போர்க்குற்றமே. இந்த வகையில் நிராயுதபாணியாகப் பேசச் சென்ற பா.நடேசன் அவர்களை சிங்களப் படைகள் படுகொலை செய்தமை என்பது ஒரு போர்க்குற்றமே. இதனை சரணாகதி நிலையுடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது. இதனை விட, ஆயுதங்களை மௌனிப்பதற்காக அறி வித்தலை கே.பி வெளியிட்ட பின்னரும், மே 19ஆம் நாள் இரவு வரை முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடைபெற்றதாக சிங்களப் படைத்துறை தலைமையத்தின் முன்னைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய செய்தி யாதெ னில், ஆயுதங்களை மௌனித்தலும், கீழே போடுதலும் என்ற முடிவு கே.பி என்ற தனிநபரால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும் எவ்வித தொடர்புமே இருக்கவில்லை. இதனைக் கே.பி கூட பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

க.வே.பாலகுமாரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இறுதிக் கணங்களில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த பொழுதும், இதனை அவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருத முடியுமே தவிர, தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதல் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ முடிவாக இதனை நாம் கருதிவிட முடியாது.

இதனை சுட்டிக் காட்டியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ, எந்தக் கணத்திலும் சரணாகதி என்ற முடிவைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எடுத்திருக்க மாட்டார் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில், இறுதிப் போரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் எவ்விதமான தொடர்பாடல்களையும் கொண்டிருக்காத கே.பி, இறுதிக் கணங்களில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், தனது தனிப்பட்ட தொடர்புகள் ஊடாகப் போர்க்களத்திலும், புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் பெரும் குழப்பத்தை விளைவித்து போராட்டத்தை சிதைத்தார் என்றே நாம் கொள்ள வேண்டும்.

இதற்கு வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும், புகலிட தேசங்களில் உள்ள தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களும் இணங்க மறுத்த நிலையில், இவர்களை ஓரம்கட்டி தமிழீழக் கனவை சிதைக்கும் நோக்கத்துடனேயே வி.உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசை அமைப்பதற்கான முடிவை கே.பி எடுத்தார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாமெல்லாம் விண்வெளி விஞ்ஞானம் கற்றவர்களாக இருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஒப்புதலுடன் தமிழீழ தேசியத் தலைவர் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தான் எடுத்த முயற்சியை, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் குழப்பியதாக கே.பி கூறியிருப்பது, கே.பியும், அவருடன் இணைந்து வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், வே.மனோகரன், த.சர்வேஸ்வரன் போன்றோர் இறுதிப் போரில் ஏற்படுத்திய குழப்பங்களையே வெளிப்படுத்துகின்றது.

தமிழீழம் இனிமேல் சாத்தியமில்லை என்றும், மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமில்லை என்றும் தொலைபேசி உரையாடல் ஒன்றில் வி.உருத்திரகுமாரன் கூறியமை தொடர்பான ஒலிப்பதிவு வடிவம் ஒன்று, கடந்த சில நாட்களாக இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழர்களை வலம் வந்த வண்ண முள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் அதிபதி என்ற கோதாவில், இவ்வாறு உலகத் தமிழினத்தை ஏமாற்றும் செய்கையில் வி.உருத்திரகுமாரன் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் இயங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பினால் இவ்வாரம் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் இப்பத்தியில் எதிர்வுகூறப்பட்டமை போன்று, கே.பியின் நிழல் மனிதர்கள் தற்பொழுது பட்டவர்த்தனமாகக் தொடங்கியுள்ளார்கள்.

இந்த வகையில் இவ்வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு கே.பி வழங்கப் போகும் செவ்வி, வெளிநாடுகளில் உள்ள அவரது குழுவினர் தொடர்பான மேலும் பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்பதை மட்டும் இங்கு உறுதியாக எதிர்வுகூற முடியும். ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்கிக் கொண்டிருக்கப் போவதில்லை அல்லவா?
-சேரமான்-

நன்றி: ஈழமுரசு (27.08.2010)

Comments