திரு. கே.பி. அவர்கள் புலம்பெயர் தமிழர்களிடம் யாசகம் செய்து, தனது எஜமான் கோத்தபாயவுக்கும், சிங்கள தேசத்திற்கும் மகிழ்ச்சி சேர்ப்பதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அவர் அந்தக் கடிதத்தை எழுதும்போது, அவர் உண்மையை மட்டும் எழுதியிருந்தால், அந்தக் கடிதம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்த மடல் இது.
அன்பான தமிழ்ச் சொந்தங்களே,
அனைவருக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த வணக்கமும் வாழ்த்தும்.
மகத்தான இந்த மனித வாழ்க்கையை அவனது சிந்தனை அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள் நமது சான்றோர்கள். இருப்பவர்கள் - வாழ்பவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுகிறார்கள்.
ஒன்று, என்னைப்போல் எனக்காக எல்லாவற்றையும் எதிரியிடம் கையளித்துவிட்டு, அவன் போடுவதை ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ்வது. அப்படியானவர்களை 'இருப்பவர்கள்' என்கறார்கள்.
தம்மைப் போலவே மற்றவர்களும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் சுதந்திரமாக வாழவேண்டும் என்கிற நல் எண்ணம் கொண்டவர்களாகத் தம் உயிரையும் தன் இனத்திற்காக அர்ப்பணித்தவர்கள், அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மட்டும் தான் 'வாழ்பவர்கள்' என்கிற வரிசையிலேயே சேர்க்கிறார்கள்.
இறுதிவரை களமாடிய விடுதலைப் போராளிகளையும், மாவீரர்களையும், தம் மண்ணிற்காக அனைத்தையும் இழந்த மக்களையும், அந்த மண்ணின், மக்களின் சுதந்திர நல் வாழ்விற்காக அர்ப்பணிப்புடன் இன்றுவரை செயற்படுபவர்களையும் இந்த 'வாழபவர்கள்' என்ற சொல்லுக்குள் அடக்குகிறார்கள்.
இதில் நாங்கள் பெருமைப்படத்தக்க விடயம் என்னவென்றால், உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் நமது தமிழ்ச் சொந்தங்கள் அனைவருமே மனிதநேயத்தோடும், சமூகச் சிந்தனையோடும், விடுதலை உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.
ஆனால், எனது இருப்புக்கும், உயிர் வாழ்தலுக்குமாக நான் மாண்புமிகு கோத்தபாய அவர்களுடன் கண்ட இணக்கத்தின்படி, 'வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்புக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான ஆதரவை உங்களிடம் கோரி வருகின்றேன். நமது உறவுகளைக் காப்பாற்றும் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சியில் ஒற்றுமை உணர்வோடு உதவிக்கரம் நீட்டுவதற்கு நமது புலம்பெயர் மக்கள் முன்வந்தால், மாண்புமிகு கோத்தபாய அவர்களுக்கும், எனக்கும், சிங்கள தேசத்திற்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம், இது ஒரு நல்ல தொடக்கம். நமக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு வரம். எனது உயிர் வாழ்தலுக்கான ஆதாரம். என்னைக் காப்பாற்றினால், நடைபெற்று முடிந்த விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இராணுவத்திருக்கும், அதனால் பாதிக்கப்பட் சிங்கள உறவுகளுக்கும் நாம் செய்யும் பிராயச்சித்தமாக அமையும்.
நாம் காப்பாற்ற வேண்டியது ஒருவர் அல்ல. இருவர் அல்ல. லட்சக்கணக்கானவர்கள். புலிகளின் முட்டாள்த்தனத்தால் பலியான, ஊனமுற்ற சிங்களச் சிப்பாய்கள் ஒருவர், இருவரல்ல... பல்லாயிரக்கணக்கானவர்கள்! வாழ்வா சாவா என்கின்ற மிகத்துயரமான நிலையிலேதான் தமிழ் மக்களும் தமது ஒவ்வொரு இரவையும் கடந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிங்கள தேசத்தை எதிர்த்து புலிகள் நடாத்திய அர்த்தமற்ற போரினால்தான் இந்த அனர்த்தங்கள் அனைத்தும் நிகழ்ந்துள்ளது. சிறிலங்கா அரசையும், சிங்கள மக்களையும். என்னையும் நினைத்துப் பாருங்கள், நாங்கள் எத்தனை கனவுகளை ஆசைகளை எங்கள் நெஞ்சுக்குள்ளேயே புதைத்திருக்கின்றோம்???
உடலாலும் உள்ளத்தாலும் ஊனமானவர்கள், உறவுகளைத் தொலைத்தவர்கள், இயல்பையே இழந்தவர்கள் இப்படி எல்லா வகையிலும் பாதிக்கப் பட்டிருக்கிற இந்த மக்களை இயல்பாக வாழ வைப்பதற்கு சிங்கள தேசத்தை நிர்ப்பந்திப்பதில் எந்த நியாயமும் இல்லை. சிங்கள தேசத்திற்கு நாம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது நமக்கு இருக்கிற பெரிய பாரிய பொறுப்பு. ஒரே இரவுக்குள் முடிந்த விடுகிற எளிதான பணியல்ல. நீணடகாலத் திட்டம் தான். ஆனால், மனித நேயத்தோடு நாம் செய்து முடிக்கவேண்டிய தவிர்க்க இயலாத மிகப் பெரிய கடமையாகும். கண்ணீரில் ஒருவன் மூழ்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்குக் கை கொடுத்து கரையேற்றுவதற்கத்தான் வழி தேடுவோம்.
இந்த தண்ணீர் எதனால் வந்தது? தெரிந்து விழுந்தானா? தெரியாமல் விழுந்தானா? ஏன்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது அறிவுள்ள செயலும் அல்ல மனித நேயமும் அல்ல. நான் எப்படித் தண்ணீரில் மூழ்கினேன், நான் எப்படி சிங்கள அரசின் விருந்தினனானேன்? என்னெல்லாம் ஆராய்ச்சி செய்து காலத்தைக் கழிக்காமல் என்னை மீட்பதன் மூலம் தமிழ் மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.
ஆம் சொந்தங்களே,
உங்களுடைய துக்கமெல்லம் படுகுழியில் விழுந்து கிடக்கிற என்னையும், போர்க் குற்றங்களைப் புரிந்து, ஈழத் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரிந்த குற்றச்சாட்டிற்குள்ளாகி. சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ள சிங்கள தேசத்தை என் மூலமாக மீட்டெடுப்பதையும் குறித்ததாகவே இருக்க வேண்டும்.
இந்த ஓராண்டு காலமாக மட்டுமல்ல, இதற்கு முன்னைய காலங்களில் போர் நடைபெற்ற போதெல்லாம் குண்டுகள் விழத் தொடங்கிய போது. வாழ்ந்த இடங்களைவிட்டு வீடு வாசல்களை விட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு காடுகாடாகத் திரிந்து இறுதியில் முள்ளிவாய்காலுக்கு வந்து சேர்ந்தவர்கள் இப்போது முகாம்களில் அவலப்பட்டுக்கொண்டிருப்பதற்கு சிறிலங்கா அரசு காரணமல்ல. அவர்களிடமிருந்து விடுதலை என்ற பெயரில் போரை நடாத்திய புலிகளே காரணம்.
எல்லாவற்றையும் இழந்து வாழ்வதற்கு இனி எந்த வழியும் இல்லாதவர்களாக துக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக சிறிலங்கா அரசு மீதும், அரச தலைவர் மகிந்த மீதும், அவரது சகோதரர்கள் மீதும் குற்றம் சாட்டுவதன் மூலம் அவர்களை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, என் மூலமாக அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழர்களுக்கான புனர்வாழ்வுப் பணியை மாண்புமிகு எனது நண்பர் கோத்தபாய அவர்களுடன் இணைந்து பல்வேறு கட்டங்களாகப் பிரித்து, திட்டமிட்டு, படிப்படியாக நிறைவேற்ற முயற்சிகள் செய்து கொண்டிருக்கிற எங்களுடன் நீங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாத, விரக்தி அடைந்த நிலையிலேயே தான் இன்னமும் இருக்கிறார்கள். நம்பிக்கை இழந்து போன அந்த மக்களை சிங்களக் கலை விழாக்கள் வழியாக முதலில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரவேண்டும். அவர்கள் சிங்கள அரசை ஏற்றுக்கொண்டு, சிங்கக் கொடியின் கீழ் சுந்தோசத்தையும் வாழவேண்டும் என்கின்ற உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
அவர்கள் சிங்கள மக்கள் அதிருப்தி கொள்ளாத வகையில், சிங்கள மக்கள் குடியேறாமல் எஞ்சியிருக்கும் காணிகளில் வீடு, சிங்கள மாணவர்களுக்கு ஏறாத அல்லது விருப்பமில்லாத துறைகளில் படிப்பு, சிங்கள மக்கள் விட்டுத் தரும் தொழில், மிருக வதைச் சட்டத்திற்குள் சிங்கள தேசம் சிக்காத வகையிலான மருத்தவவசதி என இவை ஒவ்வொன்றையும் படிப்படியாக செய்தது கொடுத்து உயிர் வாழ்தலுக்கு அவர்களைத் தயார் படுத்தவேண்டும்.
மிஸ்டர் கே.பி. நாதன்
சிறிலங்கா
கரிகாலன் - தமிழீழம்
Comments