சூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை வ.உ.சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.
திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது!
கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், "பிரபாகரன் வாழ்க" போன்ற முழக்கங்களும் "சீமானை விடுதலை செய்!" என்றும் உணர்வின் உச்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழக்கமிட்டு வந்தனர்!
அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பார்வையாளர்கள் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று, "தமிழ்நாடு தமிழருக்கே" என்று குரலெழுப்பி பெருத்த ஆராவரமும் தொடர் முழக்கமும் செய்தனர்! பின்னர் அறிஞர் குணா முன்னிலையில் திரு. அரிமாவளவனின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது!
முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு. பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் திரு,. செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் திரு. நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரைகள் ஆற்றினர்.
அனைத்து உரைகளும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தமிழருக்குச் செய்த இரண்டகங்க¬ள் பச்சையாக பச்சையாகத் தோலுரித்துக் காட்டின! இறுதியில் தலைமையுரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள் "தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.க. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே திரு. சீமானின் கைது! இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வையும் காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்" என்று சூளுரைத்தார்.
தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்! "வந்தேறி வடுக ஆட்சியாளர்களின் கொட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையாது" என்றார். ஈழம் பற்றிப் பேசத் தடைவிதிக்கும் காவல்துறையையும் அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். "தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டள்ள நிலையில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியையை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்" என்ற தீர்மானத்தை அரிமாவளவன் முன்மொழிந்தபோது கூடியிருந்தோர் நடுவில் அது பெரும்ஆதரவைப் பெற்றது.
இனவிடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர்ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக திரு. அரிமாவளவன் அறிவித்தார்! "ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.
இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்! ஈழப்போரில் மலையாள அதிகாரிகள் முன்னின்று முனைப்போடு ஈழத்தமிழரில் பல்லாயிரம் பேரைக் கொன்றொழித்த அதே நாட்களில்தான் மலையாளிகள் தமிழகத்திற்குள் அணுவளவும் அச்சமின்றி வணிக நிறுவனங்களை அமைத்துக்கொண்டு கால்பரப்பி நின்றனர்.
திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது நின்றனர். இன எதிரிகளின் மீது நாம் எதிர்த் தாக்குதல் நடத்தியிருந்தால் தமிழினத்தின் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பு ஆற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம்" என்று அழைப்பு விடுத்தார்.
Comments