மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும்


சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு, ஐரோப்பியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்பட்ட நாளில் சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரம்பும் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளது.

சீனாவின் அரவணைப்பில் மிதக்கும் சிறீலங்கா மேற்குலகத்தை சீண்டிப்பார்க்கும் நோக்கத்துடன் தான் அம்பாந்தோட்டை விழாவை ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஒழுங்கு செய்திருந்தது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறியாதது அல்ல. வரிச்சலுகையின் நிறுத்தம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று மேற்கொண்ட நேர்காணலுக்கு பதில் வழங்கிய கொழும்புக்கான ஐரோப்பிய ஒன்றிய து£துவர் பேர்னாட் சவேஜ் வழங்கிய பதில்களில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுக்க
மான நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்பது 14 வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் வரிச்சலுகையாகும். சிறீலங்காவை பொறுத்தவரையில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு இது வழங்கப்பட்டிருந்தது. தனது 7,200 பொருட்களுக்கான வரிச்சலுகையை சிறீலங்கா இதன் மூலம் பெற்றிருந்தது.

இந்த வரிச்சலுகைகளை வழங்குவதன் மூலம் அந்த நாடுகளில் மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தவும், ஒரு நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதற்குமான பொருளாதார சூழல்களை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தியிருந்தது. அதாவது பொருளாதார மேம்பாடுகளில் இந்த நாடுகள் தமது ஆதரவில் தங்கிநிற்கும் நிலையை மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.

2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த வரிச்சலுகையை பெற்றுவரும் சிறீலங்கா அரசு அதன் மூலம் வருடம் ஒன்றிற்கு 750 மில்லியன் ரூபாய்களை சம்பாதித்தும் வருகின்றது. தற்போது இந்த வரிச்சலுகையை அது இழந்துள்ளது. சிறீலங்கா அரசு இந்த வருமானத்தை இழந்துள்ளதுடன், தென்னிலங்கையில் பல இலட்சம் மக்களும் தொழில்வாய்ப்புக்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏறத்தாள இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், ஒரு மில்லியன் சிங்களவர்கள் நேரிடையற்ற விதத்திலும் தொழில் பாதிப்புக்களை சந்திக்கவுள்ளனர். சிறீலங்காவின் பொருளாதாரம் பெருமளவில் அதன் ஏற்றுமதித்துறையில் தான் தங்கியுள்ளது. அதில் 76 சதவிகிதம் உற்பத்திப் பொருட்களும், 23 சதவிகிதம் விவசாயப் பொருட்களும் அடங்கியுள்ளன. இந்த உற்பத்திப் பொருட்களில் 43 விகிதம் புடவைப் பொருட்களாகும்.

சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களில் 60 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கே எற்றுமதி செய்யப்படுகின்றன. அது சிறீலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 46 சதவிகிதமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் தமக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என சிறீலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநரும், அமைச்சர்களும் கருத்துக்களை தெரிவித்துவரும் போதும் உண்மையான நிலமை மாறுபட்டது.

சிறீலங்கா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அழுத்தம் சிறீலங்காவின் ஆடை வர்த்தக போட்டியை நெருக்கடிக்குள் தள்ளும்.

சிறீலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் வரிகள் 9 தொடக்கம் 10 விகிதம் அதிகரிப்பதால், பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு கொள்முதலாளர்கள் தள்ளப்படுவதால், அவர்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வேறு நாடுகளையே நாடுவார்கள். இதனைச் சிறீலங்காவின் சுதந்திர வர்த்தக வலையத்தைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையானது சிறீலங்காவின் பங்குச்சந்தையை உடனடியாகப் பாதிக்காதபோதும் அதன் கடன்சுமையை அதிகரிப்பதுடன், முதலீட்டாளர்களையும் விலகி ஓடச் செய்யும்.

ஆடை உற்பத்தியை பொறுத்தவரையில் சிறீலங்காவுக்கு போட்டியாக இந்தியா, சீனா, தாய்லாந்து, பங்களாதேஷ் என அதன் பட்டியல் நீளம். எனவே சிறீலங்காவின் பொருட்களின் வரிகள் அதிகரிக்கும் போது அதனை கொள்வனவு செய்யும் ஐரோப்பிய நிறுவனங்கள் மேற்கூறப்பட்ட நாடுகளை நாடலாம்.
இவ்வாறான நிலமையில் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களை சிறீலங்கா அரசு இழந்தால் அதனை மீண்டும் பெறுவது மிகவும் கடினமானது. இந்த நாடுகளில் கொள்வனவு செய்து பழக்கப்பட்ட நாடுகள் மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பப் போவதில்லை.

சிறீலங்காவின் இந்த நெருக்கடியான நிலமையை தணிப்பதற்கு அதன் நட்பு நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் உதவலாம். ஆனால் ஏற்றுமதித்துறை, தொழில்வாய்ப்புக்கள் என்பன இதில் இருந்து வேறுப்பட்டது. தமது முடிவு பொதுமக்களை பாதிக்கும் என்றபோதும் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளில் இருந்து விலக முடியாது எனவும், அவ்வாறு விலகினால் தமது விதி முறைகளை தாமே மீறிவிட்டதாக ஏனைய நாடுகள் குறைகூறலாம் எனவும் கொழும்புக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் து£துவர் பேர்னாட் சாவேஜ் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

மேற்குலகத்திற்கும் - சிறீலங்காவுக்குமான மோதல்களை வரிச்சலுகையின் நிறுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் அதனை மேலும் அதிகரிக்க சிறீலங்கா முற்படுவது அமெரிக்காவின் வரிச்சலுகையையும் அது எதிர்காலத்தில் இழக்கும் நிலையை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் வரிச்சலுகையானது மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்ல ஆட்சி என்பவற்றில் தங்கியிராது, தொழிலாளர்களின் உரிமைகளில் தங்கியுள்ளபோதும் அதுவும் ஒருவகையில் மனித உரிமைகளுடன் தொடர்புள்ளதே.

அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் வர்த்த குழு அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து ஆராய்ந்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேற்குலகத்தின் இந்த அழுத்தங்களில் இருந்து தப்பிப்பிழைத்து, தமது பொருளாதாரத்தை தக்கவைப்பதற்கு சிங்கள புத்திஜீவிகளும், பேரினவாத ஊடகங்களும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நீக்கம் வடக்கு - கிழக்கில் உள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும் என கடந்த மாதம் வெளிவந்த த லக்பிம வாரஏடு தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 30 வருடங்களாக வடக்கு - கிழக்கில் தமிழ் மீனவர்களை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்காது, அவர்களின் வாழ்வை நாசமாக்கி, கடலில் கண்ட மீனவர்களை படுகொலை செய்த சிங்கள அரசு தற்போது தனது பொருளாதார நலன்களுக்காக வடக்கு - கிழக்கு மீனவர்களை தனக்குத் துணையாக அழைப்பது நகைப்புக்கிடமானது.

சிங்கள பேரினவாத ஊடகங்கள் மேற்குலகத்தை ஏமாற்ற மேற்கொள்ளும் இந்த தந்திரமான நடவடிக்கைகளை நோக்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. அதனைபோலவே கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் என்ற ஊடகம் கடந்த வாரம் ஒரு காணொளி பதிவையும், பத்தி ஒன்றையும் வரைந்திருந்தது. எட்டுப் பிள்ளைகளின் தந்தையான அஜித் பெர்ணன்டோ என்பவரின் வாழ்கையை மனதை கவரும் வண்ணம் செய்தியாக்கி அது வெளியிட்டிருந்தது.

அவரின் மனைவிக்கு தற்போதும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நிறுத்தத்தால் அவர் தொழிலை இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சோகத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது.
டெய்லி மிரர் பத்திரிகையில் பணியாற்றும் சிங்கள மற்றும் அரச சார்ப்புள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து அதனை மேற்கொண்டிருந்தனர். ஆனால் இதனை பார்க்கும்போது தமிழ் மக்களின் மனங்களில் எழும் சில கேள்விகளும், கருத்துக்களும் இவை தான்.

அதாவது யார் இந்த அஜித் பெர்ணான்டோ?

போர் வெறிகொண்ட ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தின் ஒரு இனவெறியன் தான் அவன். வன்னியில் வீழ்ந்த ஒவ்வொரு குண்டும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என பல அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை பலிகொண்டபோது தென்னிலங்கை வீதிகளில் இறங்கி ஆனந்த நடனம் ஆடிய
வர்களில் ஒருவனாகவே இந்த சிங்கள வெறியனை தமிழினம் பார்க்கின்றது.

போர்க் குற்றங்களை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலிகொண்டு பல ஆயிரம் தடவை மனி உரிமை மீறல்களை மேற்கொண்ட சிங்கள சமூகத்திற்கு கிடைத்த சிறு தண்டனை தான் இந்த வரிச்சலுகையின் நீக்கம். 75,000 அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து, மனித உரிமை மீறல்களில் சிங்கள பேரினவாதிகள் ஈடுபட்டபோது அதனை ஆதரித்த சிங்கள சமூகம், இந்த எதிர்வினை தொடர்பில் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். மேலும் சிங்களவர்களின் இனவெறி நடவடிக்கைக்கு உதவிய சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் பெர்ணான்டோ உதவியை கேட்கலாம்.

மேற்குலகத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு பூரணமாக ஆதரவாக இருக்கும் என தற்போது கூறமுடியாது. எனினும் தென்ஆசியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பூகோள பிராந்திய ஆதிக்க நெருக்கடிகளில் சிறீலங்காவில் உள்ள இரு இனங்களும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சிங்கள இனம் முற்று முழுதாக சீனா - இந்தியா கூட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு உள்ள மற்றுமொரு சமூகத்தை தனக்கு சார்பாக கொண்டுவர மேற்குலகம் முயலலாம், அல்லது அதிக பொருளாதார அழுத்தங்கள் மூலம் சிறீலங்கா அரசை தனக்கு அடிபணிய அல்லது ஆட்சியில் இருந்து அகற்ற அவர்கள் முயலலாம்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த முனைவாக்கத்தை வலுவிழக்க செய்வதற்கு சிங்கள புத்திஜீவிகளும், பேரினவாத ஊடகங்களும், சிங்கள சமூகமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடித்து அதனை மேலும் முனைவாக்கம் பெறச்செய்யும் கடமை தமிழ் சமூகத்திற்கு உண்டு.

சந்தர்ப்பத்தை தவறவிடுவதும் ஒரு வகையில் நாம் சந்திக்கும் தோல்வி தான். எனவே சிங்கள ஊடகங்களினினதும், புத்திஜீவிகளினதும் பெய்யான பரப்புரைகளை முறியடிப்பதற்கு வலுவான பிரச்சார மற்றும் ஊடக பலம் எமக்கு அவசியமானதுடன், அதனை நாம் விரைவாக மேற்கொள்ளவும் வேண்டும்.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு (21.08.2010)

Comments