தமிழ்நெட் ஆங்கில இணையத் தளமானது வாராந்த வீடியோ நிகழ்ச்சியான பலகணி என்பதை வெகுவிரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தனது வாசகர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வரும் கோரிக்கைகளுக்கு தமிழில் சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் விவகாரங்களின் கலந்துரையாடல்கள் உள்ளடங்கவுள்ளன. தமிழ்நெட் இணையம் பல இடையூறுகளை எதிர்கொள்ளுகின்ற போதிலும், காலத்தின் தேவை கருதி இம்முயற்சியை நடைமுறைப்படுத்தவுள்ளது. தமிழ்நெட் இணையத்தளமானது இன்றுவரை இயங்கிவருவதற்கு ஒரே காரணமாக உள்ள அதன் வாசகர்களுக்காக தொடர்ந்து தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தமிழ்நெட் எப்போதுமே தயாராக உள்ளது. மாறுபட்ட ஒரு ஊடகமாக தமிழ்நெட்டானது தனது சுதந்திரம், தன்னுரிமை மற்றும் கடப்பாட்டைப் பேணும்பொருட்டு மாறுபட்ட வழிகளில் தொடர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது எனவும் அவ்விணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நெட் இணையத்திடம் அதன் வாசகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளாவன: தமிழ்நெட்டின் உரிமையாளர் யார்?, எங்கிருந்து இது இயங்குகிறது?, இதன் ஆசிரியர்கள் யார்?, இதன் தொடர்பாளர்கள் யார்?, எங்கிருந்து இதற்கு நிதி வருகின்றது? எதற்கான அனைத்துத் தரப்பு செய்திகள், கருத்துக்கள் சேர்க்கப்படுவதில்லை?, புலிகளுடன் இதற்குள்ள உறவு என்ன? இதன் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களுக்கான எழுத்தாளர் பெயர்கள் ஏன் குறிப்பிடப்படுவதில்லை?, மின்னஞ்சல் முகவரி தவிர வேறு தொடர்பு விவரங்கள் ஏன் இல்லை?,
இதன் ஒட்டுமொத்த நோக்கம் என்ன?, சர்வதேச விவகாரங்களில் இதன் நிலைப்பாடு என்ன? ஆகியவையாகும்.
இவ்வாறான கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நெட் இணையமானது கூடிய விரைவில் தனது
வாராந்த வீடியோ நிகழ்ச்சியான பலகணி மூலம் குழு கலந்துரையாடல்களை வழங்கவுள்ளது.
Comments