புலம்பெயர் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்களை மிரட்டுகிறார் கே.பி!

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர் தம்வசம் வைத்திருப்பதாக கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAMHoMDUMu04VfMLIuJHQA4nxWVJ0Oqzo4B_Nxn2K8uMEVT-nM9uCBfJH4npV0RGwcR1LxfnsqY38W21YTgdqLGJZXDhjoP7z-I79UVwfOU3pGv83yWsUIr8mT0cHlWnBBYTfF0sn5EBaa/s1600/kp+traitor.jpg
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமைகளை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் என்பவற்றை இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மீட்டுள்ளதாகவும், இந்த தரவுகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பிலான வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நிதி வழங்கியவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் புலனாய்வுத்தரப்பினர் அறிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் எழுதிய நாட்குறிப்புகள் கூட இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கே.பி. அவாகளுடைய சுயரூபம் மெல்ல மெல்ல வெளியாகி வரும் நிலையில், புலம்பெயர் நாடுகளில் மனது கட்டுக்குள் அடங்க மறுத்துவரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும், அவர்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைத் தளத்தில் செயற்பட விடாது தடுப்பதற்குமான விதத்திலேயே இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிப் போர்க் காலத்தில், சிங்களப் படைகள் தாம் கைப்பற்றிய அத்தனை ஆதாரங்களையும், ஆவணங்களையும், புகைப்படங்களையும் அவசர கதியில் வெளியிட்டு, தமிழ் மக்கள் மத்தியில் உளவுப் போரை அப்போதே நடாத்தியிருந்தது. அவற்றை மறைப்பதற்கோ, பாதுகாக்கவோ சிங்கள அரச தரப்பிற்கு எந்தக் காரணமும் எஞ்சியிருக்கவில்லை.

கே.பி.யின் கைது நாடகத்திற்குப் பின்னர், சிங்கள தேசத்தின் மிகக் கௌரவமான மனிதராக நடாத்தப்படும் கே.பி. அதற்காக என்ன விலை செலுத்தியிருப்பார் என்பதை ஈழத் தமிழர்கள் உணர்ந்தே உள்ளார்கள். இந்த நிலையில், தன்னால் வழங்கப்பட்ட தரவுகளையும், ஆதாரங்களையும் 'எப்போதோ மீட்டெடுக்கப்பட்டதாக' கே.பி. புதிதாகத் தமிழர் காதில் பூ சுற்ற முற்படுகின்றார்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை வேண்டுமானால், அவர்கள் வாழும் நாடுகளின் சட்டப் பிடிக்குள் சிக்க வைப்பதற்கு மட்டுமே சிங்கள தேசத்தால் அதிக பட்சமாக முடியும். அது தவிர, அவர்களையும் 'கைது, கடத்தல், தடுத்தல்' என்ற தனது பாணி நாடகத்தினுள் அடக்க முடியாது என்பதும் கே.பி.க்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், காட்டிக் கொடுப்புத் துரோகக் குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவிக்க அவர் புதிது புதிதாகக் கதை வசனம் எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார் என்பதையே அவரது இந்த அறிவிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

கே.பி. போட்ட திட்டம் பக்காவாக நடந்து முடிந்திருந்தாலும், சிங்கள அரசுடனான அவரது எல்லை கடந்த நெருக்கம் அவரைத் தமிழ் மக்களிடமிருந்து வெகு தூரத்திற்கு அந்நியப்படுத்தியுள்ளது. ஒட்டுக் குழுத் தலைவர்களில் ஒருவராகவே தமிழ் மக்கள் அவரை நோக்க ஆரம்பித்து விட்டார்கள். அமைச்சர் பதவிகளையும், அட்டகாசமான வாழ்வையும் பெற்றுவிட்ட போதும், தமிழ் மக்களது வெறுப்பிற்குரிய மனிதர்களாக உள்ள டக்ளஸ், கருணாவைப் பார்த்தாவது கே.பி. தன்னுடைய திட்டத்தை மாற்றி அமைத்திருந்தால் தமிழர் காதில் பூ சுற்றுவது அவருக்கு இலகுவாக இருந்திருக்கும். இப்போது அதற்கும் காலம் கடந்து விட்டது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள கே.பி.யின் சீடர்களுக்கும் தற்போது போதாத காலம் ஆரம்பித்து விட்டது. கே.பி.யால் அழைத்து அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சீடர்களும் முக்காட்டுடன்கூட தமிழ் மக்கள் மத்தியில் முகம் காட்ட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். தனது திட்டங்களை பிரான்சில் வாழும் வேலும்மயிலும் மனோகரன் என்பவரே தலைமை ஏற்று நடாத்துகிறார் என்ற அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்து அவரது பிழைப்பும் நாற்றமெடுக்க ஆரம்பித்துள்ளது. ஏனைய கே.பி. தாசர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடும் நிலைக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கோபச் சுனாமி உருவாகி வருகின்றது.

தற்போது புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து, கோத்தபாயவுடன் இணைந்து கே.பி. உருவாக்கியுள்ள வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்புக் கழகம் என்ற துரோக அமைப்பும் புலம்பெயர் தமிழர்களின் கல்லெறிகளுக்கு உள்ளாகியுள்ளது. சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் சிக்க மறுக்கும் புலம்பெயர் தமிழர்கள், இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதோ, பங்களிப்பு வழங்குவதோ தேசிய ஆன்மாக்களுக்குத் தாம் செய்யும் துரோகமாகக் கருதுகின்றார்கள்.



சில வர்த்தக நிறுவனங்களது விளம்பரங்களை இந்த அமைப்பு தனது இணைய தளத்தில் இலவசமாக இணைத்துள்ள போதும், அதனை அதிலிருந்து எடுத்துவிடும்படி வர்த்தக நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விட்டு வருகின்றனர். பாரிசில் பிரபல வர்த்தக நிறுவனமான வி.ரி. மளிகை நிறுவனம் தமது விளம்பரத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விட்டுள்ளதுடன், தங்களது விளம்பரம் அந்த இணையத்தளத்தில் வெளிவந்ததற்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழ் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுத்தும் வருகின்றனர்.

ஆக, மொத்தத்தில், பிள்ளையார் பிடிக்கக் குரங்கு ஆனது போல், கே.பி. பிடிக்கும் எல்லாமே அவருக்குத் தொடர் அவமானங்களையே ஏற்படுத்தி வருகின்றது.

கரிகாலன் - தமிழீழம்

Comments