சிறீலங்கா அரசினதும், கருணாநிதி குடும்பத்தினதும் பொருளாதாரத்தை முடக்குங்கள்: பேராசிரியர் பி. இராமசாமி

[p.Ramasamy.jpg]
சிறீலங்கா அரசினதும், தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினதும் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகளை உலகில் வாழும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங் மாநிலத்தின் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி இராமசாமி தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணைகள் அவசியம் என தெரிவித்து அமைக்கப்பட்ட குழு தொடர்பில் நேற்று (12) மலேசியாவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அபிவிருத்தி என்ற போர்வையில் மலேசியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் சிறீலங்கா அரசுக்கு உதவி வருகின்றனர். சிறீலங்கா அரசின் பொருட்களையும், தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்ப வியாபார நடவடிக்கைகளையும் உலகத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எந்திரன் திரைப்படம் மலேசியாவில் திரையிடுவதை புறக்கணிப்பதுடன், அதனை உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் மலேசியா அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இந்திய பிரதமர், இந்திய காங்கிரஸ் தலைவர், உள்த்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரின் பங்குகளையும் ஆராய வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய நாடகத்தால் பெருமளவான அப்பவித் தமிழ் மக்கள் வன்னியில் கொல்லப்பட்டிருந்தனர். போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இராணுவம் தாக்குதலை நடத்தாது என கருணாநிதி தெரிவித்திருந்தார். இது தொடர்பிலான தீர்மானம் ஒன்று எமது மாநில அவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

சிறீலங்கா படையினர் பல ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்து மிகப்பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், தமிழக சூழல்துறை செயற்பாட்டாளர்கள் ரி. சுpறீனிவாசன் ராவ், குணசேகரம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மீதான அனைத்துலக விசாரணைகளை வலியுறுத்தும் குழு பேராசிரியர் பி இராமசாமி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments