வடக்கில் புதிதாக முளைவிடும் அரசியல் காய் நகர்த்தல்கள்

மரம், செடி, கொடிகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நீண்ட அரசியல் உறவுண்டு. பேரினம் என்கிற பெரு விருட்சத்தில் பற்றிப் படரும் கொடிகளென்று, தமிழ்ப் பேசும் மக்களைக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் ஒருவர்.

அரச மரங்களை தமிழர் தாயகச் சந்து பொந்துகளில் நட்டு, தமது பூர்வீக நிலங்களென்ற இன்னமும் இறைமைச் சொந்தம் கொண்டாடுகின்றனர் பேரினவாதிகள். ஆனாலும், ஏதுமறியா மரங்களும், மனிதர்கள் உயிர்வாழ பகலில் பிராணவாயுவை வழங்கும் வள்ளல்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.இதேவேளை, சமுர்த்திப் பணியாளர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, மரத்தில் கட்டி வைத்த விவகாரம், மரங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்குமிடையே நீண்டு செல்லும் உறவினை வெளிப்படுத்தியுள்ளது.சமுர்த்திப் பணியாளர் மட்டுமல்ல, ஊடக சுதந்திரமும் அடிப்படை மனித உரிமைகளும் அதிகார துஷ்பிரயோகம் என்கிற பெரு விருட்சமொன்றில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை இதனூடாகப் புரிந்து கொள்ளலாம்.

மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பலர் இன்னமும் மரங்களின் கீழேயே வாழ்கின்றார்கள். அண்மையில் மீள் குடியேற்றப்பட்டதாகக் கூறப்படும் வன்னி மக்களைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீதரன் போன்றோர் புகைப்படச் சான்றுகளோடு வெளியிட்ட செய்திகள், மிகுந்த மன வேதனையைத் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. சாந்தபுரத்தில் மீள் குடியேற்றப்பட்ட மலையக மக்களின் வாழ்நிலை, தோட்டப்புற லயன் வாழ்வை விட மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

83 கலவரத்தின் போது வன்னியில் அடைக்கலம் புகுந்த இந்த நாட்டின் பாட்டாளி வர்க்க முதுகெலும்புகளின் வாழ்வில் இன்னமும் நிமிர்வு ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க, அரசுடன் இணைந்துள்ளோமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும் தன்னிலை விளக்கமளிக்கிறார்கள். இதைவிட தேர்தலில் வெற்றி பெற்றால், அதிகாரக் கட்டிலில் அமரும் ஆட்சியாளருடன் இணைந்து கொள்வோம் என்ற அறிவித்தலை வாக்குப் பதிவு நடைபெறும் முன்பாக மக்களிடம் இவர்கள் கூறியிருக்க வேண்டும்.

வாக்களித்த மக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகவே இதனைக் கருத வேண்டும்.அதிகாரம் படைத்தோருடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் போலியான ஜனநாயகவாதிகளிடமிருந்து இதனைவிடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. சலுகைகளை விட சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளையாவது உறுதிப்படுத்துங்கள் என்று கூறும் சுமந்திரன் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நாட்டில் வாழ்கின்றார்கள்.50,000 தமிழ் மக்கள், செட்டிகுள முகாம்களில் இன்னமும் அடைப்பட்டு வாழும் அவலச் செய்தியினை நாடாளுமன்றில் சுமந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.இவை தவிர ஒரு இலட்சம் சிங்களவர்களை வட பகுதியில் குடியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் அரசு தமிழ் மக்களின் குடிசனப் பரம்பலை சிதைத்து தமிழர் தாயகத்தில் பெரும்பான்மையினராக வாழும் தமிழ் பேசும் மக்களை, சிறுபான்மையினராக்கும் சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் எச்சரிக்கை, நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

ஒலுவில், இறக்காமம் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் இராணுவ முகாம்கள், தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கும் செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனாலும், கல்லோயாவிலிருந்து ஒலுவில் வரை, பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக் கரங்கள் நீண்டு செல்வதைக் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உணரவில்லை போல் தெரிகிறது.சிங்களக் குடியேற்றம் பற்றிப் பேசுவதை விடுத்து அரசோடு இணைந்து சலுகைகளை பெற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அவர் அறிவுரைகளை வழங்க முற்படுகிறார். மாகாண சபைக்குரிய அதிகாரங்களை வழங்க அரசு மறுக்கிறது என்கிற விவகாரத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வந்தவரே இந்த முதலமைச்சர்.

கோயில் காணிக்கான உரிமை கூட வழங்கப்படவில்லையென்று அதிருப்தியடைந்த வரதராஜப்பெருமாள் ஒன்றரை இலட்சம் இந்திய அமைதி காக்கும் படை அணி வகுத்து நிற்க, ஈழப் பிரகடனம் செய்த வரலாற்றை கிழக்கு மக்கள் மறக்கமாட்டார்கள். சலுகைகளைப் பெற்றுத் தர அரச தரப்பிலுள்ள எம்.பி.க்களே போதும். மாகாண சபைத் தீர்வினை விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளும் எம்மீது திணிக்கப்பட்டிருக்காது என்று வாதிடுவோர் அரசின் ஆதரவோடு இயக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அதிகாரங்களின் வரையறை குறித்து விவாதிக்க முன்வர வேண்டும்.

வட, கிழக்கு மாகாணம் மீதான பெரும்பான்மை இனத்தின் ஆதிபத்திய உரிமையை அல்லது அதன் இறைமையை பூர்வீக தமிழ் பேசும் குடிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அரசியலமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ள பேரினவாதிகள், சலுகைகள் குறித்து மட்டுமே தமிழர்களோடு பேச விரும்புகிறார்கள். இதைத்தான் கருணாவும், பிள்ளையானும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும், புதிதாக புனர்வாழ்வு செய்யப் புறப்பட்டுள்ள கே.பி.யும் கூறுகின்றார்கள்.

இவைதவிர, வடக்கில் தற்போது அரசால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் குறித்து அவதானிக்க வேண்டும். வடக்கின் அபிவிருத்திப் பணிக்காக கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் தலைமையில் வட, கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகமொன்றை புதிய அரங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திலிருந்து இந்த அபிவிருத்தி அரங்கமானது முற்றிலும் மாறுபட்டவகையில் ஒரு அரசியல் சாராத அரங்கமாக தோற்றமளித்தாலும், அடிப்படையில் இதுவொரு அரச சார்புள்ள நிறுவனமாகச் செயற்படுமென எதிர்பார்க்கலாம்.

அண்மைக்காலமாக வடக்கின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்தியா தீவிரமாகச் செயற்படுவதை நாம் அறிவோம். அதேவேளை, நாடாளுமன்றிலும் ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும் முனைப்படையும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புள்ளிவிவரச் சான்றுகள் மற்றும் புகைப்படச் சாட்சிகளோடு பல நிதர்சனங்களை அம்பலமாக்குவதையும் மக்கள் அறிவார்கள். ஆகவே, அபிவிருத்தி ஊடாக கால்பதிக்க முனையும் இந்திய நகர்வுகளை முறியடிப்பதற்கும், கூட்டமைப்பின் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை நீர்த்துப் போக வைப்பதற்கும் கே.பி. என்கிற பெரிய கோடொன்றை வரைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலை கையகப்படுத்தும் இந்திய இலங்கைக்கிடையிலான நீண்டகாலப் பனிப்போரின் ஒரு பரிமாணமாகவே இதனைப் பார்க்கலாம். இந்த அபிவிருத்தி, அரசாங்கத்தின் ஊடாக அடிபணிவு அரசியலின் நீட்சியை, வடக்கிற்கும் விஸ்தரிப்பதற்கு ஆட்சியாளர்கள் வியூகம் அமைக்கிறனர். 17 வருடகாலமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் சிறப்பு முகாமிலுள்ள விடுதலைப் புலிகளையும், செட்டிக்குள தடுப்பு முகாம் மக்களையும் உடனடியாக விடுதலை செய்யும் அதிகாரம் எல்லாம்வல்ல அரச அதிபருக்கு உண்டு.

ஆனாலும், கே.பி. ஊடாகவே இவ்விடுதலைக்கான சாத்தியம் உண்டென்பது நகைப்பிற்கிடமானது. இத்தகைய நகர்வுகளின் பின்புலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை உடைக்கும் வியூகங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம். இந்த அபிவிருத்தி அரசாங்கத்தின் மின்னஞ்சல்கள், நிதியுதவி கோரி, புலம்பெயர் மக்களின் கணனிகளில் புகுந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.

அதேவேளை, இந்தியா முன்னெடுக்கும் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் யாவும் இந்த வட கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக செயற்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை, இந்தியச் சிறப்புத் தூதரிடம் இலங்கை அரசு முன்வைக்கும் சாத்தியப்பாடுகளும் உண்டு.ஆனாலும், பிராந்திய அரசியலில் வல்லரசாளர்களுக்கிடையே முகிழ்ந்து வரும் முறுகல் நிலை அரசின் நிபந்தனைகளைப் புறக்கணிக்கக் கூடிய சூழலை உருவாக்கலாம்.

அதிகரிக்கும் சீனத் தொழிலாளர்களின் ஊதியம், முதலீட்டார்களை வியட்நாம் போன்ற நாடுகளை நோக்கி நகர்த்துகின்றது. அதேவேளை, சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருங்கிய உறவு உருவாக்கம் சிக்கல்கள் மேற்குலகின் பன்னாட்டு நிறுவனங்களை கிழக்கு ஆசியாவை நோக்கி நகர்த்தும்.

இந்நிலையில் நெருக்கமடையும் அமெரிக்க இந்திய உறவினையும், எதிர்காலத்தில் இவ்விளைவு உருவாக்கப்போகும் தாக்கங்களையும் இலங்கை கருத்தில் கொள்ளவில்லை போல் தெரிகிறது. வடக்கில், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பயிற்சி நிலையங்களை அமைக்க அமெரிக்கத் தொண்டு நிறுவமான யூ.எஸ்.எய்ட் முன்வந்திருப்பது வல்லரசாளர்களின் போட்டிக் களமாக மறுபடியும் வடபகுதி மாறி வருவதை உணர்த்துகிறது.

இதயச்சந்திரன்

நன்றி்:வீரகேசரி

Comments