கருணாவை விஞ்சும் அளவிற்கு, தற்பொழுது கே.பி வழங்கி வரும் ஊடகச் செவ்விகள்


அண்மைக் காலமாக சிங்கள ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவராக கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் திகழ்கின்றார். தனது மோசடிகளையும், ஒழுக்கவீனத்தையும் மறைப்பதற்காக பிரதேசவாதம் என்ற பூதத்தைக் கிளப்பி, சதிக்கிளர்ச்சியில் ஈடுபட்ட பொழுது கருணா வழங்கிய ஊடகச் செவ்விகளை விஞ்சும் அளவிற்கு, தற்பொழுது கே.பி வழங்கி வரும் ஊடகச் செவ்விகள் அமைந்துள்ளன.

ஒரு விதத்தில், போர்க்காலத்தில் சிங்கள அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பரபரப்பாக ஊடகச் செவ்விகளை வழங்கியமை போன்று, பல்வேறு கோணங்களில் தற்பொழுது சிங்கள ஊடகங்களை கே.பியும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார். உண்மையில் சிங்கள அரசின் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரப் பேச்சாளராக கே.பி பதவி வகிக்கின்றாரா? என்று எண்ணும் அளவிற்கு கே.பியின் செவ்விகள் அமைந்துள்ளன.

தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவிற்கு வந்திருப்பதாக பிரகடனம் செய்தும், கடந்த ஆண்டு கே.பி அறிவித்த பொழுது, அதனைக் கடுமையாக விமர்சித்து பழ.நெடுமாறன், வைகோ போன்ற தமிழகத் தலைவர்கள் விடுத்த அறிக்கைகள், கே.பியின் சுயரூபத்தை உலகத் தமிழர்களிடம் பட்டவர்த்தனமாக்கியிருந்தன.

வைகோ அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், ‘கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகவே’ தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் விளைவிக்கும் அறிவிப்பை அக்காலப் பகுதியில் கே.பி வெளியிட்டிருந்தார். இன்று கே.பி வழங்கும் ஊடகச் செவ்விகளை நாம் மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் பொழுது, வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் எவ்வளவு கீழ்த்தரமான அயோக்கியத்
தனத்தை கே.பி புரிந்தார் என்பது வெள்ளிடைமலையாகின்றது. இதில் நகைப்புக்கிடமான விடயமாக தனது சுயரூபத்தை கே.பி வெளிப்படுத்தத் தொடங்கிய பின்னரும், அவருக்குச் ‘சூழ்நிலைக் கைதி’, ‘அரசியல் கைதி’ போன்ற அடைமொழிகளைச் சூட்டி, அவரை நியாயப்படுத்தும் செய்கையில் அவரது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒன்றை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, மே 18இற்குப் பின்னர் ஒரு குழுவாக - ஒற்றை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கிய கே.பி குழுவினர், தற்பொழுது தம்மை இரு அணிகளாக மக்களிடையே அடையாளப்படுத்தி, சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை கனக்கச்சிதமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இவர்களில் ஒரு அணியினர் பகிரங்கமாகவே சிங்கள அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிசேகரிப்புக்களை முன்னெடுத்த வண்ணமிருக்க, மற்றைய அணியினர் நாடுகடந்த அரசு என்ற போர்வைக்குள் மறைந்திருந்து, உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் நாசகார சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மையில் கே.பி குழுவின் உருவாக்கம் என்பது மே 18இற்கு முன்னரே திரைமறைவில் அரங்கேறியிருந்தது. கடந்த கட்டுரைகளில் (இக்கட்டுரையாளர்) குறிப்பிட்டமை போன்று, இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் எவ்விதமான தொடர்பாடல்களையும் கே.பி பேணியிருக்கவில்லை.

மே 17ஆம் நாளன்று தமிழீழ தேசியத் தலைவருடன் நான்கு மணிநேரத்திற்கு உரையாடியதாக சனல்-4 தொலைக்காட்சியில் கே.பி தெரிவித்ததுகூட ஒரு அப்பட்டமான பொய். இதனை கடந்த வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில்கூட கே.பி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதேபோன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரின் முன்மொழிவிற்கு அமைய, போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதை மையப்படுத்தியே கே.பியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பாளராக நியமிப்பதற்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இணங்கியிருந்ததாக, கடந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்தேன். இதனையும் கடந்த வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் கே.பி ஒப்புக் கொண்டுள்ளார்.

அத்துடன், 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சகல பொறுப்புக்களில் இருந்தும் தனக்கு ஓய்வு அளிக்கப்பட்ட பின்னர், தன்னுடன் செயற்பட்ட பலரும் இயக்க செயற்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டதாகவும், எனினும் அனைத்துலக தொடர்பாளராக தான் பொறுப்பேற்றதும், இவர்கள் அனைவரும் தனது தலைமையில் அணிதிரண்டதாகவும், டெய்லி மிரர் நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் கே.பி குறிப்பிட்டுள்ளார். இதனையே, கடந்த தடவைகள் வெளிவந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த வகையில், போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் ஏகோபித்த அதிபதியாக அராஜக ஆட்சிபுரிந்த கே.பி, அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன் என்பவரையும், அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேஸ்வரன் என்பவரையும் நியமித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளை தனது ஆதிக்கத்தின் கீழ் இயக்கி வந்திருந்தார்.

எனினும் 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, இயக்கத்தின் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்தும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய வெளிநாட்டு செயற்பாடுகள், தமிழீழ தாயகத்தில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய துறைகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதனை கடந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்ததோடு, டெய்லி மிரர் நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் இதனையும் கே.பி ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் 2003ஆம் ஆண்டு அனைத்துலக தொடர்பகத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பொழுது, கே.பியின் அனைத்துலக செயலகத்தினால் அரங்கேற்றப்பட்ட பல நிதிமோசடிகள் வெளிச்சத்திற்கு வந்திருந்தன. குறிப்பாக ஊடகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற
வற்றில் முதலீடு செய்யப்பட்ட நிதி தொடர்பான கணக்குகளை திட்டமிட்ட வகையில் கே.பியின் அனைத்துலக செயலகத்தினர் இருட்டடிப்பு செய்திருந்தனர்.

இது தொடர்பாக தகுந்த முறையில் விளக்கமளிக்கத் தவறிய நிலையிலும், தமிழீழ தாயகத்திற்கு திரும்பிச் செல்ல மறுத்த பின்புலத்திலும், கே.பியின் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் மனோ, அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் சர்வே ஆகியோர் சகல இயக்கப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு பல்வேறு குழறுபடிகளுடன் தொடர்புடைய இவர்களின் சகாக்களும் இயக்க செயற்பாடுகளில் இருந்து முற்றாக அகற்றப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்களே, 2009ஆம் ஆண்டு அனைத்துலக தொடர்பாளராக கே.பி நியமிக்கப்பட்ட பொழுது அவரது பின்னால் அணிதிரளத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பொழுது சிறிது காலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவின் உதவியாளர்களாக விளங்கிய கலாநிதி ஜோய் மகேஸ்வரன், விசுவநாதன் உருத்திரகுமாரன் போன்றோரும் இணைந்து கொண்டிருந்தனர்.

இவர்களை உள்ளடக்கிய குழுவாகவே கே.பி குழு உருவாக்கம் பெற்றிருந்தது. இவ்வாரம் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை ஒப்புக் கொண்டிருக்கும் கே.பி, இறுதிப் போரின் பொழுது தானும், மகேஸ்வரனும், உருத்திரகுமாரனும் இணைந்து நோர்வே உட்பட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தடவைகள் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினருக்கும், வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், கே.பி அவர்களுக்கும் வரையப்பட்ட திறந்த மடல்களில் இதனை சுட்டிக் காட்டியிருந்தோம். குறிப்பாக இறுதிப் போரில் அமெரிக்க ஈருடகக் கடற்படையினரை வன்னிக்கு அனுப்பி மக்களைப் பாதுகாப்பதற்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை ஊடாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு, கே.பி - உருத்திரகுமாரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் வாக்குறுதியளித்ததையும் கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம்.

எனினும் இதற்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட வி.உருத்திரகுமாரன், சேரமானின் திறந்தமடல், கே.பி மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக கண்டனம் வெளியிட்டிருந்தார். அக்காலப்பகுதியில் இது தொடர்பாக கே.பியிடமிருந்து எவ்விதமான பிரதிபலிப்புக்களும் வெளிவராதது வி.உருத்திரகுமாரனுக்கு சாதகமாக அமைந்தது உண்மைதான்.

எனினும் இறுதிப் போரின் பொழுது தானும், வி.உருத்திரகுமாரனும், தனது குழுவினரும் இணைந்து நிகழ்த்திய மோசடி நாடகத்தை தற்பொழுது கே.பி பகிரங்கமாக ஒப்புவித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து வி.உருத்திரகுமாரன் மௌனம் சாதித்து வருகின்றார். இதேபோன்று கே.பியின் இரு கரங்களாக விளங்கும் மனோ, சர்வே போன்றோருடன் தனக்குள்ள தொடர்புகள் குறித்தும் வி.உருத்திரகுமாரன் மௌனம் சாதிக்கின்றார்.

இவையெல்லாவற்றையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆயுதங்களை ஒப்படைத்து, சிங்களப் படைகளிடம் சரணடையுமாறும், தமிழீழ தேசியத் தலைவரை தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு செய்தியன்றை கே.பி அனுப்பி வைத்தமை தொடர்பாக, கே.பிக்கு வரையப்பட்ட திறந்தமடலில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

அத்தோடு, கே.பியின் இந்தத் திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் நிராகரிக்கப்பட்டமை குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். தற்பொழுது இதனையும் ஒப்புவித்து கே.பி செவ்வி வழங்கியுள்ளார். குறிப்பாக ஆயுதப் போராட்டம் இனிமேல் சாத்தியமில்லை என்றும், யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிபெற முடியாது என்றும், தானும், தனது அருமை நண்பர் வி.உருத்திரகுமாரனும், ஜோய் மகேஸ்வரனும், கனடாவில் வசிக்கும் சிலரும் திடமாக நம்பியதாகவும் தனது செவ்வியில் கே.பி ஒப்புவித்துள்ளார்.

மேலும், வி.உருத்திரகுமாரனுடன் தனக்கு தொடர்பு இருப்பதையும், நாடுகடந்த அரசை தானும், வி.உருத்திரகுமாரனும் உருவாக்கிய நோக்கம் வேறு என்றும், கே.பி குறிப்பிடுகின்றார்.
இந்த உண்மையையே எனது கட்டுரைகளிலும், தமிழீழ தேசிய ஊடகங்களிலும் கடந்த ஓராண்டாக அடிக்கடி சுட்டிக் காட்டி வருவதை இத்தருணத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது. அதாவது, தவறான நோக்கத்துடனேயே நாடுகடந்த அரசை அமைக்கும் அறிவிப்பை கே.பி வெளியிட்டார் என்பதே அந்த மெய்யுண்மையாகும்.

அதேநேரத்தில், நாடு கடந்த அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை கே.பி வெளியிட்டதன் பின்னணியையும், அதன் இணைப்பாளராக வி.உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டதன் பின்புலத்தையும் இவ்விடத்தில் ஆராய்வது பொருத்தமாக இருக்கும். மே 18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், உடனடியாக வெளிநாடுகளில் உள்ள தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளையும், தமிழகத் தலைவர்களையும் தொடர்பு கொண்ட கே.பி, தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றும், இனிமேல் ஆயுதப் போராட்டம் பற்றியோ அன்றி தமிழீழம் பற்றியோ கதைப்பது அர்த்தமற்றது என்றும் கூறியிருந்தார்.

எனினும் கே.பியின் தலைமைத்துவ முயற்சியையும், அவரது கருத்துக்களையும் பல செயற்பாட்டாளர்களும், போராளிகளும், தமிழகத் தலைவர்களும் நிராகரித்திருந்த நிலையில், உலகத் தமிழர்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன், வி.உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசை அமைப்பதற்கான அறிவிப்பை கே.பி வெளியிட்டிருந்தார்.

கே.பியின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை பிரான்சில் உள்ள மனோ, நோர்வேயில் உள்ள சர்வே போன்றோர் ஏற்றுக்கொண்டதோடு, இவர்களின் தலைமையில் மதியுரைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, தமிழீழ தேசியக் கோட்பாட்டை சிதறடிக்கும் கருத்துக்களைக் கொண்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது.

இதில் குறிப்பாக தமிழீழ தாயகத்தை மதரீதியில் இந்து - கிறிஸ்துவ - முஸ்லிம் தாயகங்களாகத் துண்டாடும் நாசகார நிகழ்ச்சித் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனைவிட வி.உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த அரசை ஒருங்கிணைப்பதற்கு, மனோவின் தலைமையில் அனைத்துலக செயலகம் ஒன்றும் கே.பியால் நிறுவப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிங்கள அரசுடன் கே.பி பகிரங்கமாக இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, நாடுகடந்த அரசை நேரடியாக இயக்கும் பொறுப்பு மனோ அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் தமது ஆட்களை தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கி நாடுகடந்த அரசு என்ற போர்வையில் உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு கே.பி குழுவினர் எடுத்த முயற்சி, தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டமை வேறு கதை.

இதில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் விடயமாக, நாடுகடந்த அரசமைப்புக் குழுவில் ஆலோசகராக விளங்கிய அருட்தந்தை சந்திரகாந்தன், சிங்கள அரசுடன் கே.பி இணைந்து செயற்படுவதை வரவேற்று அண்மையில் நிகழ்த்திய சொற்பொழிவு அமைகின்றது. இதேபோன்று இவ்வாரம் கே.பியின் பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருக்கும் மனோ, சிறீலங்கா அரசை மீறித் தாயகத்தில் எதனையும் எவரும் செய்ய முடியாது என்று கூறுகின்றார்.

இதனை நாம் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினால், சிங்கள அரசுடன் இணைந்து கே.பி செயற்படுவதை மனோ நியாயப்படுத்துகின்றார் என்று நாம் கற்பிதம் செய்துகொள்ள முடியும். இதேபோன்று கே.பியை ஒரு சூழ்நிலைக் கைதியாக வர்ணித்து வி.உருத்திரகுமாரன் மௌனம் சாதிப்பது, அவரது உண்மை முகத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தொடங்கியுள்ளது என்றே நாம் கற்பிதம்செய்து கொள்ள முடியும்.

இந்த வகையில், கடந்த ஓராண்டாக இருளில் மறைந்திருந்த கே.பி, தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து தனது முகமூடியைக் களைந்திருப்பது போன்று, வெளிநாடுகளில் உள்ள கே.பியின் நிழல் மனிதர்களும் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்பதை மட்டும் இப்பொழுது உறுதியாகக்கூற முடியும். அப்பொழுது அவர்கள் வழங்கப் போகும் ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்களின் முகமூடிகளையும் களைந்தெறியும் என்பது திண்ணம்.

-சேரமான்-
நன்றி: ஈழமுரசு (21.08.2010)

Comments