இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி

இந்தியா எதைச்சொல்லவேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள்.


சமீபத்தில் கே.பியினால் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்பாக தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வை.கோ மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் ஆகியோரின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனது. இதன் விளைவே பல்லாயிரம் உயிர்கள் சாக காரணமாகிவிட்டது என்று கேபி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.பி ஒரு அணுகுண்டையே தமிழக அரசியல் புள்ளிகள் மீது போட்டுவிட்டார். குறிப்பாக கே.பி கூறியதாவது: “இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்தது. எனினும், இந்தத் தகவல்கள் வை.கோவிடம் பரிமாறப்பட்டதாகவும் இதனை வை.கோ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை."

கே.பியின் இந்த குற்றச்சாட்டுக்கள் எதற்காக இப்பொழுது குறிப்பாக மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் பசில் ராஜபக்ச இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவதற்கு சில தினங்களுக்கு முன்னராகவரும் அத்துடன் இந்தியாவின் வெளியுறவு மந்திரி தான் செப்டம்பர் இறுதியில் சிறிலங்கா செல்ல உள்ளதாகவும் மேலும் இந்தியாவின் வெளியுறவுச்செயலாளர் நிருபமா றாவ் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மந்திரியான சிதம்பரம் கலைஞர் கருணாநிதியை சந்தித்த சில தினங்களுக்குப் பின்னராக வந்திருக்கும் இந்த குற்றச்சாட்டைப்பார்க்கும்போது நிச்சயம் கே.பி இந்தியாவின் நடுவன் அரசின் வேண்டுதலினாலையே இப்படியான தகவலை கூறியிருக்கக்கூடும் என்று தமிழக அரசியல் வல்லுனர்கள் சந்தேகங்களை தெரிவிக்கின்றார்கள்.

இந்திய நடுவன் அரசு மற்றும் அதன் உளவுத்துறையான றோவின் ஆலோசனைகள் இல்லாமல் கே.பி இப்படியான தகவல்களை அளித்திருக்க சந்தர்ப்பமில்லை. புலிகளின் ஆதரவு கட்சிகளை எப்படியேனும் ஓதுக்கிவிடவேண்டும் என்று இந்திய நடுவன் அரசும் மற்றும் சிறிலங்கா அரசும் கங்கணம் கட்டி செயல்படுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை. இந்தியாவின் அறிவுறுத்தலின்படி கே.பி வெளியிடும் தகவல்கள் பொய் என்று எதிர்ப்பிரச்சாரங்களை வை.கோ மற்றும் நெடுமாறன் போன்ற தலைவர்கள் புலம்பெயர் ஈழத் தமிழர் மத்தியில் கூறிவருகின்றதானது இந்தியா மற்றும் சிறிலங்கா ஈழத்தமிழருக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எதிராக இருப்பதனால் எப்படியேனும் இவர்களை பொய்க்குற்றச்சாட்டுக்கள் மூலமாக ஓரங்கட்டி, தேவைப்பட்டால் சிறைக்குள் தள்ளி இவர்களின் வாயை அடைத்துவிடலாமென்று நினைக்கின்றது புலிகளுக்கு எதிரான சக்திகள்.

வை.கோ மற்றும் மகேந்திரன் என்னதான் கூறுகின்றார்கள்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கூறியுள்ளதாவது: “பத்மநாதன் கொடுத்த பேட்டியில், அவரது கூற்றையே அவர் முரண்பட்டு இன்னொரு இடத்தில் சொல்கிறார். 2008 டிசம்பர் 31இல் பிரபாகரன் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, முக்கியத் தலைவர்களை வெளிநாட்டுக்கு வெளியேற்றி, சில வெளிநாடுகளின் உதவியோடு போர்நிறுத்தம் ஏற்படுத்தும் யோசனையைத் தாம் கூறியதாகவும், அதற்கு பிரபாகரன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார். ஆயுதங்களைக் கீழே போடவே ஒப்புக்கொள்ளாத பிரபாகரன், சிதம்பரத்தின் யோசனைப்படி ஆயுதங்களையும் கீழே போட்டு, சரணடைந்து தமிழ் ஈழத்தையும் கைவிட்டு விட, கனவிலாவது உடன்படுவாரா? நான் இதில் எதிர்ப்புத் தெரிவித்து, அதனால் முயற்சி நின்று போனதாக அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.

“அதே பேட்டியில், இன்னொரு இடத்தில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி, தன்னிடம், தனது தந்தை, தாய், தங்கை, தம்பியைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும், ஹெலிகாப்டர் மூலமும், பின்னர் கப்பல் மூலமும் அவர்களைத் தப்புவித்து, வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல, ஒரு ஆசிய நாட்டுடனும், இரண்டு ஆபிரிக்க நாடுகளுடனும் தான் திட்டமிட்டதாகவும், நோர்வேயில் உள்ள நெடியவன் அதற்குப் பணம் கொடுக்காமலும், புலிகளின் வெளிநாட்டு விமானப்பிரிவுத் தலைவர் அச்சுதன், விமானிகளை அனுப்பாமல் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறி உள்ளார். ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் செல்ல பிரபாகரன் சம்மதிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு, பிறிதொரு இடத்தில் கடைசியாக தப்பிச் செல்ல வருவார் என்றும் கூறியுள்ளார்.

“குமரன் பத்மநாதன் கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர்வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேயின் சகோதரன், தமிழ் ஈழ மக்களின் படுகொலைக்குக் காரணமான கொடியோருள் ஒருவனான ராணுவச் செயலாளர் கொத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு ராஜபக்சே தம்மை அன்போடு கைகுலுக்கி வரவேற்று கேக்கும், தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக்க கனிவோடு தம்மிடம் பேசியதாகவும், அதன்பின் தான் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

“சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் சொல்லி உள்ளார். கோத்தபாயவிடம், நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறினாராம். கடல்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவுச் செயலாளராக இருந்த தமிழ்செல்வன், நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோர் அமைப்பிலே ஆதிக்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், 2002 கடைசியில் பிரபாகரன் தன்னைப் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார்."

அவர் மேலும் கூறியதாவது: “இமாலய ஆபத்துகளே தன்னைச் சூழ்ந்தாலும், பிரபாகரன் இலட்சியத்தைக் கைவிட மாட்டார், சரண் அடைய மாட்டார் என்பதை, புலிகளின் எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள். தமிழ் ஈழ விடுதலையைத் தன் உயிரினும் மேலான இலட்சியமாகக் கொண்டு இருந்த பிரபாகரனை, அதைக் கைவிடச் சொல்லி, இந்திய அரசினர் யோசனை சொன்னார்களாம். விஸ்வரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில், இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், இந்திய அரசு ஏன் ஒப்புக்குகூட போர் நிறுத்தம் என்ற சொல்லை இலங்கை அரசிடம் கூறவில்லை?

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் போர் நிறுத்தத்துக்கு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து விட்டு வந்தபோது, பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிக்கையாளர்கள் இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் வேண்டினாரா? என்று கேட்டனர். ஆத்திரத்தோடும், எரிச்சலோடும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது; விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று உடம்பை முறுக்கிக் கொண்டு திமிராகப் பேசும் தைரியம் அந்த அதிபருக்கு எப்படி வந்தது? இந்திய அரசு கொடுத்தத ஊக்கம்தான் காரணம். இதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். இலங்கையில், சிங்கள அரசு புலிகளுக்கு எதிராக நடத்தும் போரை இயக்கியதும், திட்டமிட்டதும், ரடார்களும், ஆயுதங்களும், ஆயிரம் கோடி வட்டி இல்லாத பணமும் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான்.

“ராஜபக்சே அறிவித்த ஒரு மூவர் குழுவும், மன்மோகன் சிங் அறிவித்த மூவர் குழுவும், டெல்லியில் ஐந்து முறையும் கொழும்பில் மூன்று முறையும் சந்தித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வெற்றி பெறத் திட்டமிட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளைப் போரில் முடித்துவிட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக, இலங்கை அமைச்சர் ஒருவரே கூறிவிட்டார். இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய உதவியால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றே அதிபர் ராஜபக்சே அறிவித்தார். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பிஞ்சுக் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசும் ஒரு காரணம். ராஜபக்சேவின் போர்க்குற்றத்தில், இந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும் பங்கு உண்டு என்று தொடர்ந்து நான் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறேன். அதற்காக என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகளை கருணாநிதி அரசு ஏவி உள்ளது.

“தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இரத்தப் பழிக்கு இந்திய அரசு ஆளாகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்; எங்கள் எதிர்காலச் சந்ததிகள் இன்றைய இந்திய அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று எழுத்து மூலமாக பிரதமரிடம் குற்றம் சாட்டி உள்ளேன். இந்தத் தமிழ் இனத் துரோகச் செயலுக்கு, கலைஞர் கருணாநிதி உடந்தையாகச் செயல்பட்டார் என்பதே என் குற்றச்சாட்டு. இந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும், என் மீதே பழி சுமத்தவும், கடந்த ஆண்டிலேயே உளவுத்துறையின் ஏற்பாட்டில், பத்மநாதன் இப்போது அவிழ்த்து விட்டு உள்ள கோயபல்ஸ் பொய்களை அப்போதே சொன்னார்கள். அது எடுபடவில்லை. அனைத்து உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள என்னைக் களங்கப்படுத்த, இராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட குமரன் பத்மநாதனைத் தற்போது பயன்படுத்தி உள்ளார்கள். இதில் வேதனை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிகள் என்னை நாடிவந்தபோதும் நிராகரித்தவன், 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்தவன் நான்," இவ்வாறு வை.கோ கூறியுள்ளார்.

மேலும் ஒரு படிமேல் சென்று வை.கோ கூறுகையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிரிகளுக்குப் பிடித்துக் கொடுத்தான் ஜூடாஸ். 30 வெள்ளிக் காசுகளுக்காக இத்துரோகத்தைச் செய்த ஜூடாஸ், தனது குற்றத்தை உணர்ந்தவனாக உள்ளம் உடைந்து, முப்பது காசுகளை வீசி எறிந்துவிட்டு, மரக்கிளையில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். ஆனால், தன் துரோகத்தை உணர்ந்து வருந்தி தற்கொலை செய்து கொண்டான் என்று உலகில் எவரும் சொல்வது இல்லை. தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால் குமரன் பத்மநாதன்இ கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. துரோகிகளும், எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார். ராஜபக்சே கூட்டம் வை.கோவையும், நெடுமாறனையும் தூற்றுகின்றபோது அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்கள் என்பதை, தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள், இப்படியாக கொதித்திருக்கின்றார் வைகோ.

இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்பூர் எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் கூறியுள்ளதாவது: “விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தனக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து குமரன் பத்மநாதனை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நடேசன் யுத்தநிறுத்த யோசனை குறித்து என்னுடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை எமது கட்சி எப்போதும் எதிர்த்துவந்தது. இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருந்தோம். மறுபுறத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்பதை நாம் ஆதரவாக இருந்து வருகிறோம்.”

இப்படியாக சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் தெரிவித்திருக்கையில் தமிழக முதலமைச்சரோ தனது நாடகத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி, தமிழகத் தலைவர்களுக்கு எதிரான தகவல் வந்த அடுத்த கணமே அடுத்த கட்ட நாடகத்திற்கான அரங்கை தயார்படுத்தினார்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கருணாநிதி

சிறிலங்காவில் இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே.பி விளக்கமளிக்கவேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்தார். கே.பி கூறியிருக்கும் தகவல்களை ஆராய்ந்து எது உண்மை என்பதை கண்டறிய கேபி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் கலைஞர் தனக்கு ஒன்றும் தெரியாது மாதிரியான அறிக்கையை விட்டு, தான் ஒன்றும் தெரியாத பாப்பா என்ற தோரணையில் நாடக படப்பிடிப்புக்கு இடம் தேடத்தொடங்கிவிட்டார் போலும்.

இந்தியா நினைத்திருந்தால் பல ஆயிரம் உயிர்களை சிங்;களக் காடையர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியும்இ ஆனால் இந்தியா தனது முழு ஆதரவையும் அளித்து புலிகளை எப்படியேனும் அழித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது என்பது தான் உண்மை. மேலும், இந்தியாவின் பரம எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் நேரடியாகவே சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது. ஆனால், இந்தியாவோ அவர்களுடன் கைகோர்த்து நின்று தமிழர்களை அழிக்க காரணமாகி இருந்தது. இதனை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ தயாராகவில்லை.

ராஜீவ் என்ற ஒரு மனிதனுக்காக பல ஆயிரம் உயிர்களை காவுகொண்ட இந்தியா இன்று சிங்களத்துடன் நின்றுகொண்டு தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களில் செயல்படுகின்றது என்பது தான் உண்மை. இன்றைய யாழ்ப்பாண நிலவரம் என்னவென்றால், முப்பதிற்கும் அதிகமான பேருந்துகளில் சிங்களவர்களை ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்குள் விடப்பட்டுள்ளார்கள். தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்க பல பிரயத்தனங்களை சிங்கள அரசு செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவோ இவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு சிங்கள அரசிற்கு முழு ஆதரவையும் அளிக்கின்றது என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையிலையே தான் நடைபெறுகின்றது.

இந்தியாவின் தமிழினத்திற்கு எதிரான செயல்கள் என்பது இன்று நேற்றல்ல நடைபெறுகின்றது. இந்தியா தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக பல காலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. அந்தமான்இ நிகோபார் தீவுகளில் ஒருகாலத்தில் தமிழர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஆனால், இந்திய நடுவண் அரசு இதனைச் சகிதித்துக்கொள்ள முடியவில்லை. பல ஆயிரக்கணக்கான பங்காளிகளை இந்த தீவுகளுக்கு அனுப்பி தமிழர்களிலும் விட பல மடங்கு அதிகரித்து ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இன்று தமிழ்நாடு இழந்து நிற்கின்றது.

இதைப்போல பல உதாரணங்களை சொல்லலாம். குறிப்பாக, மொரீசியஸ், பிஜி, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகளில் பல தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இன்று அவர்களின் மொழி தெரியாமல் தமது அடையாளத்தையையே தொலைத்து நிற்கின்றார்கள். இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக, இவர்களுக்கு ஹிந்தி வகுப்புக்களை நடாத்தி இவர்கள் இன்று தம்மை ஹிந்திக்காரர்கள் என்று சொல்லுமளவு இந்திய நடுவன் அரசு வெற்றிகண்டுவிட்டது. இப்படியாக இந்தியாவின் போக்கு இருக்கையில், தான் ஏதோ தமிழர்களின் காவலன் என்று தம்பட்டம் அடிக்கும் கலைஞரோ தமிழர்களை அழிக்க நடுவன் அரசிற்கு துணைபோகின்றார்; என்று சொன்னால்;, தாம் இராஜதந்திரங்களை பாவித்து தமிழரின் வாழ்வில் ஒரு புத்தெழுச்சியை கொண்டுவரப்போவதாக அரட்டை அடிக்கின்றார்கள். கேட்கும் ஏமாளிகள் இருக்கும் வரை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். பாவப்பட்ட தமிழ்ச்சாதியின் குணம் என்னவென்றால், உணர்சிகளுக்கு ஆளாவதும் மற்றும் ஒருவர் சொல்வதைக் கேட்டு அதனை ஏற்று ஏமாறுவதுமே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.

சிலவருடங்களுக்கு முன்னர் கே.பியை இந்தியா பிடித்துவந்து ராஜீவ் கொலைக்கு அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறிய இந்தியா இன்று அவருக்கு விருந்துபசாரங்கள் அளிப்பதும் மற்றும் அவருக்கு தேவையான அத்தனை வசதியையும் செய்து அவர் மூலமாக தமது திட்டங்களை செய்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் இந்திய நடுவன் அரசிட்கும் மற்றும் சிறிலங்கா அரசிட்கும் ஊதுகுழலாக இருக்கும் கலைஞர் நிச்சயம் ஒருநாள் தாம் செய்வதையறிந்து வெட்கித்தலைகுனியும் நாள் வெகுதொலைவிலில்லை என்பது மட்டும் உண்மை. அரசியல் பழிவாங்களுக்காக தமிழின விடுதலையை விலைபேசும் எட்டப்பர்களை தூண்டி விட்டு அவர்களை வளர்ப்பதன் மூலமாக மென்மேலும் தவறுகளை இழைக்கின்றார்கள் போலும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments